மதுரை செல்லூரில் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மகன் கொடூர கொலை- தந்தை கைது

லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். வாசுதேவனும் மது போதையில் இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை செல்லூரில் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மகன் கொடூர கொலை- தந்தை கைது
Published on

மதுரை:

மதுரை செல்லூர் நந்தவனம் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 62). இவருக்கு ராமன், லட்சுமணன் என இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் லட்சுமணன் (22) படித்துவிட்டு, எந்தவித வேலைக்கும் செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி சுற்றித்திரிந்தார்.

மேலும் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தந்தை மற்றும் உறவினர்களிடையே தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பலமுறை பெற்றோர் அவரை கண்டித்தும் லட்சுமணன் திருந்தவில்லை. பல சமயங்களில் மது பாட்டிலை வாங்கி வந்து வீட்டிலேயே குடிக்கும் நிலைக்கு வந்ததால் அவரது பெற்றோர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் நள்ளிரவில் வீடு திரும்பிய லட்சுமணன், மேலும் தனக்கு மது வேண்டும் என்று வற்புறுத்தி தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவன் தனது வீட்டில் உள்ள கிரைண்டர் கல்லை எடுத்து லட்சுமனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் நிலைகுலைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து இறந்த லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மகனை கொடூரமாக கொலை செய்த வாசுதேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் வாசுதேவனும் மது போதையில் இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் செல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com