என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு விஜய் நேற்று வாழ்த்து தெரிவிக்காத நிலையில், சீமானுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • விஜய் கமல்ஹாசனுக்கு மட்டும் வாழ்த்து கூறாதது ஏன் என அரசியல் பார்வையாளர்களிடையே கேள்வியாக எழுந்துள்ளது.

    சென்னை:

    மக்கள் நிதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு விஜய் நேற்று வாழ்த்து தெரிவிக்காத நிலையில், சீமானுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்புமணி, திருமாவளவன் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய் கமல்ஹாசனுக்கு மட்டும் வாழ்த்து கூறாதது ஏன் என அரசியல் பார்வையாளர்களிடையே கேள்வியாக எழுந்துள்ளது.

    ஒருவேளை தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக கமல் செயல்படுவதால், தி.மு.க.-வை எதிர்த்து அரசியல் செய்ய எத்தனிக்கும் த.வெ.க. தலைவர் விஜய், கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்த்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

    • குரங்குகள் சேதப்படுத்தியதற்காக புதிய வீடு எவ்வாறு கட்டித்தர முடியும் என தெரிவித்துள்ளனர்.
    • மக்கள் நத்தம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி கணவாய்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்பாண்டியன் (36). இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்குகள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களையும், வீட்டையும் சேதப்படுத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புதிய வீடு கட்டித் தருமாறு சதீஸ்பாண்டியன் புகார் அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை. மேலும் குரங்குகள் சேதப்படுத்தியதற்காக புதிய வீடு எவ்வாறு கட்டித்தர முடியும் என தெரிவித்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஸ்பாண்டியன் இன்று காலை மங்கம்மாள் சாலை பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறினார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அவரை கீழே இறங்குமாறு சத்தம் போட்டனர். ஆனால் தனது வீடு சேதம் அடைந்து விட்டது. அதற்கு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்று கோஷமிட்டபடி உச்சி பகுதிக்கு ஏறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் போலீசார் மைக் மூலம் அவரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அதனை அவர் கேட்கவில்லை. அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர் கீழே வர சம்மதித்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சதீஸ்குமார் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    • பட்டியலின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பாட்டாளி மக்கள் கட்சியினர் பேசவில்லை.
    • திமுக அரசின் அடக்குமுறைகளையும், பொய் வழக்குகளையும் முறியடிக்கும் திறனும் உறுதியும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு.

    சென்னை:

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட செல்லத்துரை என்ற இளைஞரின் குடும்பத்தினரையும், ஊர்மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற பா.ம.க, மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது எஸ்.சிஎஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் மக்களாட்சிக்கு பதிலாக களப்பிரர்கள் ஆட்சியின் நீட்சியை விட மிக மோசமான ஆட்சி நடைபெறுவதைத் தான் அற்பத்தனமான இந்த அடக்குமுறைகள் நிரூபிக்கின்றன.

    மஞ்சக்கொல்லையை அடுத்த பு.உடையூர் கிராமத்தில், பாதையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை வழியை விடும்படி கூறியதற்காக செல்லத்துரை என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டரை அவர்கள் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லத்துரை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் நிலையில், அவளது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களை சந்தித்து பா.ம.க மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறியுள்ளார். செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இதைத் தவிர வேறு எந்த செயலிலும் பா.ம.க.வினர் ஈடுபடவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைக் கடந்து, பட்டியலின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பாட்டாளி மக்கள் கட்சியினர் பேசவில்லை.

    ஆனால், அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கொடிக் கம்பத்தை தாக்கும்படி மஞ்சக்கொல்லையை சேர்ந்த அருள் செல்வி என்பவரை செல்வமகேஷ் தூண்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வ மகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது வன்கொடுமை வழக்கை கடலூர் மாவட்ட காவல்துறை பதிவு செய்திருக்கிறது. காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு அளிக்கப்படும் அடிப்படைப் பயிற்சியே முதல் தகவல் அறிக்கையை எவ்வாறு பதிவு செய்வது? எவ்வாறு புலன் விசாரணை மேற்கொள்வது? என்பது குறித்தது தான். அத்தகைய பயிற்சியை கடலூர் மாவட்ட காயல்துறையினர் முறையாக பெற்றிருந்தால் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்திருக்கவே மாட்டார்கள்.

    மஞ்சக்கொல்லை கிராமத்தில் செல்வமகேஷ் கலந்து கொண்ட அனைத்து நிகழ்வுகளும் காணொலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எந்த இடத்திலும் பட்டியலினத்தவருக்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவ்வாறு இருக்கும்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அடுத்ததாக, விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பத்தைத் தாக்கிய அதே பெண்மணி தான், பா.ம.கவின் கொடிக் கம்பத்தையும் கடப்பாரைக் கொண்டு தாக்கியிருக்கிறார். அவ்வாறு இருக்கும்போது அவர பாமக மாவட்ட செயலாளர் செய்வ மகேஷ் தான் தூண்டி விட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கூறியதை நம்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஆறாம் அறிவு இல்லையா?

    எஸ்.சிஎஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்வதற்கு முன் முறையாக புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருக்கிறது. ஆனால், அவற்றை மதிக்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினால் தாக்கப்பட்ட தரப்பினர் மீதே காவல்துறை வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்த ஒட்டுமொத்த சதியிலும் காவல்துறையும் பங்காளியாக இருக்குமோ? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 1996-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கலைஞர். அன்றைய காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில் விமர்சிக்கும்போது காவல்துறையினாரின் ஈரல் முக்கால்வாசி அழுகி விட்டது என்று கூறினார். ஆனால், கடலூர் மாவட்ட நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது காவல்துறையினரின் ஈரல் மட்டுமல்ல.. இதயம், மூளை ஆகியவையும் முழுமையாக அழுகி விட்டது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் சட்டத்திற்கு ஒவ்வாத இப்படி ஒரு கட்டப்பஞ்சாயத்தை காவல்துறை செய்திருக்காது.

    பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை அறுப்போம் என்று கொக்கரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க துப்பற்ற காவல்துறை, எந்தத் தவறும் செய்யாத பா.ம.க. மாவட்ட செயலாளர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கொடுமைப்படுத்துகிறது. இது அடக்குமுறையின் உச்சமாகும்.

    கடலூர் மாவட்டத்தில் வன்னிய மக்கள் மீது இப்படி ஒரு வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல கோவையில் செந்தில் பாலாஜியின் 'கம்பேக்'கை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டின் குடிமகன் என்ற முறையில் செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முதல் ஆளாக கண்டித்திருக்க வேண்டும்; நீதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வன்னியர் விரோத நெருப்பு அதைத் தடுத்து விட்டது. கடலூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், காவல்துறையினரின் செயல்பாடுகளையும் வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது கனப்பிரர்கள் ஆட்சியின் நீட்சியாகவே தோன்றுகிறது.

    ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், பொய் வழக்குகளையும் எதிர்கொள்வது பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு எனது திண்டிவனம் வீட்டில் காவல்படைகளை குவித்து எனது வீட்டை சோதனை செய்ததாக செய்தி பரப்பியது, பு.தா. அருள்மொழி உள்ளிட்ட பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது, விழுப்புரத்தில் பாட்டாளி தொழிற்சங்கம் நடத்திய பேரணியில் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. கடலூர் புதுச்சத்திரத்தில் இராஜேந்திரன் என்ற தொண்டரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது உள்ளிட்ட ஏராளமான அடக்குமுறைகளை 1989-ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கட்டவிழ்த்து விட்டார். அன்று தந்தை செய்ததை இன்று தனயன் செய்கிறார். அவ்வளவு தான்.

    திமுக அரசின் அடக்குமுறைகளையும், பொய் வழக்குகளையும் முறியடிக்கும் திறனும் உறுதியும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. அதேநேரத்தில் வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை வன்னியர் வன்ம மனநிலையுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
    • இந்நாளின் இனிப்பு இது என்று குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்தி அளித்ததோடு, தொலைபேசியிலும் வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் இனிய நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி. இந்நாளின் இனிப்பு இது என்று குறிப்பிட்டுள்ளார்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், விஜய் வசந்த், ரவிக்குமார் ஆகியோருக்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

    • சூரசம்ஹாரம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • பக்தர்கள் செந்தில் குறவஞ்சி பாடல் பாடி வந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந்தேதி யாகசாலை பூஜை யுடன் தொடங்கி நடை பெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    7-ம் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது 3.30-க்கு விஸ்வ ரூப தரிசனம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 6 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பட்டு சன்னதி தெரு, வீரராகவ புரம் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்குரதவீதி வழியாக தெப்பக்குளம் அருகே உள்ள தபசு மண்ட பத்திற்கு வந்து சேர்ந்தார்.

    அப்போது அம்மன் சப்பரத்திற்கு முன்பு ராமையா பாகவதர் நினைவு நிலை செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், நிர்வாகி மற்றும் பக்தர்கள் செந்தில் குறவஞ்சி பாடல் பாடி வந்தனர்.

    காலை 9 மணிக்கு உச்சி கால தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான நாளை இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.

    9,10,11 ஆகிய 3 திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவமும் 12-ம் திருவிழா மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • போலீசார் வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா சுமார் 25 கிலோ பறிமுதல்.
    • கைதான 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள சிதம்பரநகர் விலக்கு பகுதியில் தச்சநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். அதில் இருந்த 7 பேரிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த காரை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா சுமார் 25 கிலோ இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த 7 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அவர்கள், தச்சநல்லூர் கரையிருப்பு கிராமத்தை சேர்ந்த இசக்கிபாண்டி(42), மணிகண்டன்(38), ரகுநாதன்(41), முத்து பட்டன்(28), கணபதிமில் காலனியை சேர்ந்த ரகுநாதன் (41), சுந்தர் கணேஷ்(27), பழைய பேட்டையை சேர்ந்த பண்டாரம்(55), மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்த சுடலை(34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த கும்பல் பெங்களூரில் இருந்து குட்காவை இங்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பல் இதற்கு முன்பும் இதே போன்று காரில் குட்கா கடத்தி வந்து நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான திசையன்விளை, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வினியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக, கைதான 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • கமிலே டெக்னைன் கைடேயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை சாவடி தெருவை சேர்ந்தவர் சூரிய குமார். இவர், இத்தாலி நாட்டின் அருகே உள்ள லிதுவேனியா நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் படிக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார்.

    அப்போது அவருக்கு அதே பல்கலைக்கழகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு பட்டய படிப்பு படித்த அதே நாட்டைச் சேர்ந்த கமிலே டெக்னைன் கைடே என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    கமிலே டெக்னைன் கைடேக்கு வனவிலங்குகள் மீது பற்று அதிகம். அதே போல் சூரியகுமாருக்கும் வனவிலங்குகள் மீது ஆர்வம் அதிகம். இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். நாளடைவில் இது காதலாக மாறியது.

    படிப்பு முடித்ததும் அதே நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருவரும் வேலைக்கு சேர்ந்தனர். இதனால் இருவரது காதலும் மேலும் இறுகியது.

    இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து கமிலே டெக்னைன் கைடே-சூரிய குமாரின் திருமணம் இன்று காலை ஊத்துக்கோட்டை செட்டி தெருவில் உள்ள பெரிய ஆண்டவர் கோவிலில் தமிழக பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. கமிலே டெக்னைன் கைடேயின் கழுத்தில் சூரியகுமார் தாலிகட்டியதும் உற்சாக குரல் எழுப்பினர்.

    இதில் கமிலே டெக்னைன் கைடேயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாரம்பரிய உடையான பட்டுப் புடவை அணிந்து வந்து கலக்கினர்.

    • குதிரை பள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.
    • இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (9-ந்தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதையடுத்து அழிஞ்சிவாக்கம், ஸ்ரீநகர், எம்.ஜி.ஆர். நகர், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, கணேஷ் நகர், சாய் கிருபா நகர், ஸ்ரீநகர், இருளிப்பட்டு, எம்.கே. கார்டன் விருந்தாவனம் நகர்,போக்காரிய சத்திரம், ஜெகநாதபுரம், ஆமூர், நெடுவரம்பாக்கம் மாலிவாக்கம், சத்திரம், குதிரை பள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை இருளிப்பட்டு மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
    • அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

    ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    கூட்டத்தில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தை குறைப்பது, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    புத்தகம், சீருடை, மிதிவண்டி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் மாணவர்களை சென்றடைந்ததா என ஆய்வு நடத்தப்படும்.

    அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட இருந்தது.
    • இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.

    கனடாவில் இந்து கோவிலுக்குள் பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போராட்டம் நடத்த இருந்தார்.

    இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட இருந்தது.

    இந்நிலையில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டத்திற்கு முன்பே அர்ஜூன் சம்பத் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக, கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.

    இதற்கிடையே கனடாவின் பிரம்ப்டன் நகரில் இந்து கோவிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • சந்திரமோகன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்.

    சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர்.

    இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோர் ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் கடந்த சிலதினங்களுக்கு முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரின் ஜாமின் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    இதனையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில் அவர்களுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்திரமோகன் மட்டும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும் விடுக்கப்பட்டுள்ளது.

    ×