என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    விழுப்புரம்:

    ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வுசெய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வீசினர்.
    • மேலும் அவர்களை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    விழுப்புரம்:

    ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. எனவே ஆளும் கட்சி மற்றும் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வுசெய்து, ஆறுதல் கூறியும், நிவாரணங்கள் அளித்தும் வருகின்றனர்.

    இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு பகுதிக்கு சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக நிர்வாகிகள் மீது சேற்றை வாரி இறைத்து, சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதள செய்தியில் கூறியுள்ளதாவது:

    இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னையின் தெருக்களில் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். அதேநேரம், சென்னை மாநகரில் மிகக் குறைந்த மழையே பெய்தது.

    சென்னையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிக்கத் தேவையில்லை என அவர்கள் எண்ணிவிட்டனர். திமுகவின் ஊடகப் பிரிவாக டிஐபிஆர் (TN DIPR) நடந்துகொள்வதுடன், வெள்ளத்தின் உண்மைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப கோபாலபுரம் வாரிசுகளை விளம்பரப்படுத்துவதில் அது மும்முரமாக உள்ளது.

    இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஊழல் திமுக அமைச்சர் பொன்முடியால், பொதுமக்களின் விரக்தி உச்சநிலையை எட்டியது. திமுகவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு நினைவூட்டல் என பதிவிட்டுள்ளார்.

    • சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.
    • புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

    புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    புயலின் தாக்கத்தை வானிலை மையமே கணிக்க முடியாமல்தான் இருந்துள்ளது.

    சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    சென்னையில் கடந்த காலங்களில் 13 செ.மீ மழைக்கே 3 நாட்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில், தற்போது மழை பெய்த 12 மணி நேரங்களில் இயல்பு நிலைக்குச் சென்னை திரும்பியுள்ளது.

    இதற்கு முதலமைச்சரின் போர்க்கால மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம்.

    சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் முன் 5 முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. படிப்படியாகத்தான் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    உரிய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால்தான் இன்று உயிர்ச்சேதங்கள் இல்லை

    தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல்வேறு உயிர்கள்

    எடப்பாடி பழனிசாமி வாய்ச்சவடால் விடாமல், ஒன்றிய அரசிடம் இருந்து அரசு கேட்ட நிவாரணத்தை வாங்கித் தரட்டும்.

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏற்பட்டுள்ள சேதங்கள் இரு நாட்களில் சரிசெய்யப்படும்.

    திருவண்ணாமலையில் வழக்கம்போல் கார்த்திகை மகா தீபத்திருவிழா நடைபெறும் என தெரிவித்தார்.

    • ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப உதவிகளுடன் இதனை நாங்கள் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
    • பார்வையற்றோர் தங்களது சுற்றுப்புறத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

    சூலூர்:

    பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி உள்ளிட்டவற்றை கோவை அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

    சூலூர் அருகே உள்ள அரசூரைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் ஐசக் ஜெபக்குமார், மருதீஷ் மற்றும் ஜே. வீரமணி ஆகியோர் பள்ளியில் செயல்படும் கற்றல், கற்பித்தல் ஆய்வுக் கூடத்தில், எளிய பொருட்களைப் பயன்படுத்தி பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில்நுட்பத்தில், ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக், ஸ்மார்ட் கண்ணாடி ஆகிவற்றை உருவாக்கி உள்ளனர்.

    சென்சார் மற்றும் சிப் போர்டுகளைப் பயன்படுத்தி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வாக்கிங் ஸ்டிக்கானது அதிர்வுகளை உணர்ந்து பயனாளருக்கு எச்சரிக்கை செய்கிறது.

    இதன் மூலம் பார்வையற்றோர் தடைகள் மற்றும் படிக்கட்டுகள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி, பேட்டரி மூலம் இயங்குகிறது. இது பயனாளருக்கு முன்னால் உள்ள தடைகளை அடையாளம் கண்டு, ஒலி மூலம் எச்சரிக்கையும் செய்கிறது.

    தங்களது ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி இந்த கருவிகளை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த கருவிகள் பார்வையற்றோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப உதவிகளுடன் இதனை நாங்கள் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பார்வையற்றோர் தங்களது சுற்றுப்புறத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

    அரசு பள்ளி மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு, பிற மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

    • புதுச்சேரி மாநிலத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்க உள்ளனர். புதுச்சேரி மாநிலத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5-ந் தேதி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

    அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் திரண்டு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    அதனையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அவரவர் பகுதிகளில் அன்னதானம் வழங்குகிறார்கள்.

    • பள்ளி திறக்கப்பட்டு 1 வருடம் ஆகியும் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
    • உடனடியாக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது பரளிபுதூர் ஊராட்சி. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் படிப்பதற்காக 1 கி.மீ. தூரத்தில் பரளிபுதூரில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வந்தனர்.

    இதனால் தங்கள் பகுதிக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க தொடக்கப் பள்ளி அமைக்க கோரி கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் 2023-ம் ஆண்டு டிசம்பரில் பரளிபுதூரில் ரூ.39 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கொண்ட பள்ளி கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது.

    ஆனால் பள்ளி திறக்கப்பட்டு 1 வருடம் ஆகியும் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் இன்று காலை பள்ளி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்தும், உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் மாணவ-மாணவிகளை வகுப்பறைக்குள் அமரவைத்து கிராமத்து இளைஞர்களே பாடம் நடத்தினர். போராட்டம் நடப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,

    1 வருடமாக குழந்தைகள் எந்தவித படிப்பறிவும் இல்லாமல் வெறுமனே பள்ளிக்குச் சென்று வீடு திரும்பி வருகின்றனர். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • ஃபெஞ்சல் புயல் மழையால் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது.
    • ராமக்காள் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறுகிறது.

    தருமபுரி:

    தருமபுரி நகர எல்லையில் கிருஷ்ணகிரி சாலையில் ராமக்காள் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 265 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சின்னாற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது.

    இங்கிருந்து வெளியேறும் உபரிநீர், சனத்குமார நதியின் கால்வாயில் கலந்து, கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் சேரும். தற்போது ஃபெஞ்சல் புயல் மழையால் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது.

    இந்த மழையால் தருமபுரியை சுற்றியுள்ள இலக்கியம்பட்டி ஏரி, பிடமனேரி உள்ளிட்ட ஏரிகள் நிறைந்து வெளியேறும் உபரி நீர் அருகே உள்ள ராமக்காள் ஏரிக்கு செல்வதால் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறுகிறது.

    இந்த உபரிநீரில் ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் வெளியேறுவதால் அப்பகுதியில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை வலைகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர்.

    • ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பல கோடி ரூபாய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

    கடலூர்:

    வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பியது.

    அணையில் இருந்து 2.40 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தென்பெண்ணையாறு கரையோரம் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடங்கியது.

    இது மட்டும் இன்றி ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தும் பல கோடி ரூபாய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பனை எம்.எல்.ஏ. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் அனு மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.

    மேலும் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு தண்ணீர் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கிக்கொண்ட பொதுமக்களை தீயணைப்பு துறையினர் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.



    நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அண்ணா கிராமம் ஒன்றிய தி.மு.க. சார்பில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு புடவை, பெட்ஷீட் போர்வை, 5 கிலோ அரிசி மற்றும் உணவு பொருட்கள் ஆகிய தொகுப்புகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

    அப்பொழுது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பாளர் ராமன், எம்.எல்.ஏ.க்கள் சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு தலைவர் ஜானகிராமன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.கே. வெங்கட்ராமன் செய்திருந்து அனைவரையும் வரவேற்றார்.

    மேல்பட்டாம்பாக்கத்தில் ஆய்வை முடித்து கொண்டு துணை முதலமைச்சர் கடலூருக்கு வந்தார். குமாரபுரத்துக்கு வந்த போது மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலின் காரை பார்த்ததும் கையை காண்பித்தனர்.

    உடனடியாக காரை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் அப்பகுதியில் தேங்கிய மழைநீரை பார்வையிட்டார்.

    பொதுமக்கள் அவரிடம் இந்த பகுதியில் அடிக்கடி மழைநீர் தேங்குகிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    அதற்கு உதயநிதி ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அதன் பின்னர் அவர் கடலூர் புறப்பட்டு வந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களை வழங்கியும் வருகின்றனர்.
    • வேஷ்டி, சட்டை, பெட்ஷீட் , மளிகை சாமான்கள் என ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.

    சென்னை:

    ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களை வழங்கியும் வருகின்றனர்.

    இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார்.

    ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண பொருட்களை விஜய் வழங்கினார்.

    நிவாரண பொருட்களில் வேஷ்டி, சட்டை, பெட்ஷீட் , மளிகை சாமான்கள் என ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வழங்கினார். 

    • சரிந்து விழுந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
    • 12 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு நேற்று மாலை வீட்டில் புதைந்து இருந்த 5 பேர் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது. கடந்த 1-ந்தேதி காலை தொடங்கி விடாமல் மழைக் கொட்டியது. திருவண்ணாமலை வ.உ.சி.நகர் பகுதியில் மகாதீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து பெரிய பாறை உருண்டது.

    அதனை தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் முற்றிலுமாக சிக்கிக் கொண்டது. அதில் ஒரு வீட்டுக்குள் இருந்தவர்கள் ஏற்கனவே வெளியேறி விட்டதால் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

    ஆனால் மற்றொரு வீடு கண்ணிமைக்கும் நேரத்தில் மண் சரிவில் முழுமையாக மூடியது. அதோடு பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன.

    அந்த வீட்டுக்குள் இருந்த கூலித் தொழிலாளி ராஜ்குமார் (வயது 32) அவருடைய மனைவி மீனா (26) மற்றும் அவர்களது மகன் கவுதம் (9) மகள் இனியா ( 7) உறவினர்களான சுரேஷ் என்பவரது மகள் மகா (12) சரவணன் மகள் ரம்யா (12) மஞ்சுநாதன் மகள் வினோதினி (14) ஆகிய 7 பேரும் மண்சரிவில் சிக்கினர். அவர்கள் வீட்டுக்குள் உயிரோடு புதைந்து சமாதியானார்கள்.

    இதனைக்கண்டு பதறிய அந்த பகுதி பொதுமக்கள் போலீசார், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

    அரக்கோணம் பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த வீரர்கள் 30 பேர் மாநில பேரிடர் குழுவை சேர்ந்த 50 பேர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உட்பட 200 பேர் மீட்பு பணியில் களமிறங்கினர். மோப்ப நாய் உதவியுடன் மீட்பு பணி நடந்தது.

    சரிந்து விழுந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. ஆனாலும் சேறும் சகதியுமாக வீட்டின் மீது குவிந்து கிடந்த மண்ணையும் பாறை கற்களையும் அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. மலைப்பகுதியில் பெரிய பொக்லைன் எந்திரங்களை கொண்டு செல்ல முடியவில்லை.

    இதை தொடர்ந்து சிறிய பொக்லைன் எந்திரத்தை குறுகலான பாதையின் வழியே செங்குத்தாக படிப்படியாக கொண்டு செல்லும் முயற்சி நடந்தது. அதனை வைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    12 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு நேற்று மாலை வீட்டில் புதைந்து இருந்த 5 பேர் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.

    இதில் ஒரு உடல் மண்ணில் ஆழத்தில் சிக்கியிருந்ததால் வெளியே எடுக்க முடியவில்லை. அதனை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த உடல் மீட்கப்பட்டது.

    மேலும் 2 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

    • ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளம் புகுந்ததால் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • அதிர்ச்சியில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவே சில நாட்களாகும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது.

    சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பற்ற அரசின் மிக மோசமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    தென்பெண்ணை ஆறு ஓடும் 4 மாவட்டங்களிலும் ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளம் புகுந்ததால் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு மீட்புக் குழுவினரே இன்னும் செல்ல முடியாததால் அங்குள்ள மக்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை.

    4 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல் உள்ளிட்ட பயிர்களும், ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்ற கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி முற்றிலுமாக அழிந்து விட்டன. இந்த இழப்புகளில் இருந்து மீள்வதற்கு அப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகள் ஆகக்கூடும். அதிர்ச்சியில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவே சில நாட்களாகும்.

    சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 2.50 லட்சம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், நிலைமை ஒவ்வொரு மணி நேரமும் மோசமடைந்து வருகிறது. நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். சாத்தனூர் அணையை நள்ளிரவில் திறந்து பேரழிவை ஏற்படுத்தியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். சாத்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறந்து விடப்பட்டதற்கு காரணம் என்ன? இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிய உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கும், உயிரிழந்த கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வேண்டும். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த காலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஒன்றிய அரசிடம் நிதி கேட்ட போது தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள்.
    • தமிழக முதலமைச்சர் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் புயல் மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடைக்கால நிவாரண நிதியாக ரூபாய் 2000 கோடியை ஒதுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

    கடந்த காலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஒன்றிய அரசிடம் நிதி கேட்ட போது தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள். அதேபோல, இம்முறையும் பிரதமர் மோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட தொகையை ஒதுக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது.

    இத்தகைய இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள வேண்டும். எனவே, தமிழக முதலமைச்சர் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×