என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விரக்தியில் முத்திருளன் ஏற்கனவே ஒருமுறை தனது ஊரான வேம்பங்குடி பகுதியில் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வேம்பங்குடி காலனி பகுதியை சேர்ந்தவர் முத்திருளன் (வயது30), தனியார் வங்கி ஊழியர். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி (29) என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    தற்போது மனைவி-குழந்தைகளுடன் மறையூர் காலனி பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி சிலைமான் பகுதியிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முத்திருளன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் தனியார் வங்கி வேலையையும் விட்டார். இதனால் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் மேலும் குடிக்கு அடிமையான நிலையில் எந்நேரமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதில் ஏற்பட்ட விரக்தியில் முத்திருளன் ஏற்கனவே ஒருமுறை தனது ஊரான வேம்பங்குடி பகுதியில் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முத்திருளன் மறையூர் காலனி வீட்டில் இருந்த வந்த நிலையில் அக்கம் பக்கம் யாருமில்லாத நேரம் பார்த்து திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் முத்திருளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மனைவியான விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்திய எல்லையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பாய்மர கப்பல் நின்று கொண்டிருந்தது.
    • மியான்மர் மீனவர்களிடம் இருந்து பாய்மர படகு பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கடல்பகுதியில் இந்திய கடற்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது இந்திய எல்லையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பாய்மர கப்பல் நின்று கொண்டிருந்தது. உடனே கடற்படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பாய்மர கப்பலை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அதில் 4 மீனவர்கள் இருந்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், மியான்மர் நாட்டை சேர்ந்த விம்சோ, ஹான் சோ, கிய் லூரின், லங்சன் ஏஜ் என்பதும், எல்லை தாண்டி இந்திய எல்லையில் மீன் பிடித்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து நாகை துறைமுகத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது 'இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட உள்ளனர். மேலும் பாய்மர படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீ அருகில் இருந்த நாட்டுக்கோழிகள் இருந்த கீற்று மற்றும் தகர கொட்டகைக்கு பரவியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம் பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (58). இவர் அருணகிரிபாளையம் ஊஞ்சல்கொடை தோட்டம் என்ற இடத்தில் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை வைத்து அதில் சுமார் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஆடுகளுக்கு விறகு அடுப்பில் கூழ் காய்ச்சினார். பின்னர் அடுப்பை அணைக்காமல் கந்தம்பாளையத்தில் உள்ள வங்கிக்கு சென்று விட்டார். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அருகில் இருந்த நாட்டுக்கோழிகள் இருந்த கீற்று மற்றும் தகர கொட்டகைக்கு பரவியது. இதில் தீப்பிடித்து நாட்டுக்கோழிப்பண்ணை முழுவதும் எரிந்தது.

    இது குறித்து அருகில் இருந்தவர்கள் திருச்செங்கோடு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் நாட்டுக்கோழி பண்ணையில் இருந்த சுமார் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகள் தீயில் கருகி எரிந்து இறந்து போனது. இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    • 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    மண்டபம்:

    ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களது படகுகளை சிறைபிடிப்பதும் தொடர் கதையாகி உள்ளது.

    இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 4-ம் தேதி மிக்கேல் ராஜ், நிஜோ ஆகியோருக்கு சொந்தமான 2 விசை படகுகளில் 14 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த மீனவர்கள் ரிபாக்சன், ராஜபிரபு, அரவிந்த், ராபின்ஸ்டன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்ரிக் நாதன், யோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 பேரை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    அவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ரபீக் உத்தரவிட்டார். இதையடுத்து 14 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். சகாயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 14 மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடித்ததை கண்டித்தும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து இன்று (7-ந் தேதி) ஒரு நாள் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    • வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
    • சொகுசு கார் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை சித்தோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கேரள மாநிலத்திற்கு சொகுசு காரில் நாமக்கல் மாவட்ட எல்லையை கடந்து ஈரோடு மாவட்ட எல்லையான லட்சுமி நகர் பைபாஸ் வாகன சோதனை சாவடி வழியாக கடத்தி செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்த தகவலை அடுத்து சித்தோடு அடுத்த லட்சுமி நகர் வாகன சோதனைச் சாவடியில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை செய்து வந்தனர். அப்போது கேரளா பதிவு எண் கொண்ட ஒரு கார் அந்த வழியாக வந்தது. அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை கண்டதும் காரில் வந்தவர் காரை தேசிய நெடுஞ்சாலையில் விட்டு சர்வீஸ் சாலையில் திருப்பி செல்ல முயன்றுள்ளார்.

    இதை தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது காரின் பின்பக்க சீட்டுக்கு அடியில் ரகசிய அறை அமைத்து அதில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் காரை ஓட்டி வந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாருங்கமகி (வயது 28) என்பதும், அவர் ஆந்திர மாநிலம் நெல்லுருவில் இருந்து 50 கிலோ எடை உள்ள கஞ்சாவை வாங்கி காரின் பின்பக்க சீட்டில் ரகசிய அறை அமைத்து அந்த கஞ்சாவை கேரள மாநிலம் கொச்சிக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து சொகுசு கார் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை சித்தோடு போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சாருங்கமகியை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

    • வருகிற 12ந் தேதி முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும்.
    • திருக்கார்த்திகை தீபம், சொக்கபனை ஏற்றும் நிகழ்வுகள் மறுநாள் 13ந் தேதி நடைபெறுகிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

    இன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பிறகு மூலவருக்கும், சண்முகருக்கும் காப்பு கட்டப்படும். தொடர்ந்து துவார பாலகர்கள், நவவீரர்கள், மயில், தீபக்கம்பம் ஆகியவற்றுக்கு காப்பு கட்டப்படும். அதன்பின் மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனையும், சண்முகர்தீபாராதனையும் நடைபெறும்.

    இரவு 7 மணிக்கு தங்க ரத புறப்பாடு நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து 6 நாட்களும் பூஜைகள் நடைபெறும். வருகிற 12ந் தேதி முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும்.

    திருக்கார்த்திகை தீபம், சொக்கபனை ஏற்றும் நிகழ்வுகள் மறுநாள் 13ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஷ்வரூப தரிசனம் நடைபெறும். மாலை 4.45 மணிக்கு மேல் சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். தொடர்ந்து யாகசாலை தீபாராதனையும், மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கபனை கொளுத்தப்படும். அதனைத் தொடர்ந்து திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு வருகிற 13ந் தேதி பாதுகாப்பு கருதி பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது. அதாவது கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் யானைப்பாதை வழியாகவும், இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் மதியம் 2 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 6 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் செல்லலாம். கார்த்திகை தீபத்திருநாளன்று மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்று தருகின்ற ஆட்சி.
    • வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும்.

    சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே 'மைனஸ்' ஆக்கிவிடுவார்கள் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் தி.மு.க. பற்றி விஜய் விமர்சித்து பேசியதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    தமிழகத்தில் பெண்களுக்கான நலத்திட்டங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்ற முதலமைச்சரை பார்த்து இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்ற ஒரு கூட்டம் இருக்கிறது.

    பாலியல் வன்முறை என்றால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வழக்கை பதிவு செய்வதோடு விட்டுவிடாமல், குறிப்பிட்ட காலத்துக்குள் தவறு இழைத்தவனை தண்டனைக்கு உள்ளாக்குகின்ற நீதி தேவதையின் ஆட்சி தான் தமிழக முதலமைச்சரின் ஆட்சி.

    தமிழகத்தின் அரசியலை தெரியாமல் அறியாமையில் இருக்கின்ற ஒரு சிலர் கூறுகின்ற கூற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் நிச்சயம் 2026-ம் ஆண்டு 200 என்பதல்ல, 234 இடங்களையும் தி.மு.க. கைப்பற்றும்.

    இந்த ஆட்சியை பொருத்த அளவில் ஒரு சுதந்திரமான ஆட்சி. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்று தருகின்ற ஆட்சி. எனவே இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களுடைய நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் யாராவது குறைவு ஏற்படும் என்று நினைத்தால் அவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும். தி.மு.க. ஆட்சியில் பயனாளிகளின் வாக்குகளை வைத்து எடை போடுவதில்லை.

    சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200 இடங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக, களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    எங்களது நிலைப்பாடு 200 இடங்கள் அல்ல. வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் இதுபோல அவதூறுகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் 80 கி.மீ. வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற தி.மு.க. தொண்டர்கள் 100 கி.மீ. வேகத்தில் பயணிப்பார்கள்.

    2026-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் அரியணையில் ஏற்றும் வரை எங்களுடைய பயணம், எங்களுடைய வேகம் குறையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.56,920-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 2-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்தும், 3-ந்தேதி சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், 4-ந்தேதி விலை மாற்றமின்றியும், 5-ந்தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.56,920-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ. 7,115-க்கும் சவரன் ரூ.56,920-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

    05-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120

    04-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040

    03-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040

    02-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    05-12-2024- ஒரு கிராம் ரூ. 101

    04-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    03-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    02-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் மேலை நாட்டு மோகத்தில் சிக்கி வருகிறார்கள்.
    • சபல எண்ணம் ஏற்படும் இளைஞர்கள் இந்த ‘ஆப்'பை டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்து அடிமையாகி பணத்தை இழக்கிறார்கள்.

    சென்னை:

    தொழில்நுட்ப வளர்ச்சியின் புரட்சியால் அனைவரது கைகளிலும் செல்போன்கள் தவழ்கின்றன. விரல் நுனியில் உலகம் என்று சொல்லும் அளவு கையடக்க செல்போனில் புதுபுது 'ஆப்'கள் (செயலி) உருவாகி வருகின்றன. வங்கி, வணிகம், பயண டிக்கெட் உள்பட பல்வேறு சேவைகளை செயலிகள் எளிதாக்கி விட்டன. இதுபோன்ற பயனுள்ள செயலிகள் மத்தியில் கலாசார சீரழிவுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று பல்வேறு செயலிகளும் ஆக்கிரமித்து வருகின்றன.

    இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் மேலை நாட்டு மோகத்தில் சிக்கி வருகிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கில் 'டேட்டிங்' செயலிகள் பல்வேறு வடிவத்தில் சமூக வலைத்தளத்தை வசப்படுத்தி வருகிறது. கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் இளைஞர்களை மோக வலையில் விழவைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஆண் விபசாரம் என்ற மோசமான கலாசாரமும் பரவி வருகிறது. சமீபத்தில் சென்னையில் 'டேட்டிங்' செயலி மூலம் ஆண் ஒருவரை உல்லாசத்துக்கு அழைத்து இளம்பெண் ஒருவர் நகையை பறிகொடுத்து, போலீசில் புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செல்போனில் 'முகநூல்' (பேஸ்-புக்) பக்கத்துக்குள் நுழைந்தால், கலாசார சீரழிவு செயலியின் விளம்பரங்கள் கவர்ந்து இழுக்கின்றன. இந்த விளம்பரத்தில் வரும் மாடல் பெண்கள், 'நீங்கள் தனியாக இருக்கிறீர்களா?, உங்கள் 'சிங்கிள்' வாழ்க்கை போர் அடிக்கிறதா?, அப்ப, நம்ம தமிழ் பசங்களுக்காக உருவாக்கப்பட்ட 'ஆப்'பை 9 ரூபாய்க்கு 'ரீசார்ஜ்' செய்து டவுன்லோடு செய்யுங்கள். ஜாலியாக பேசுங்கள், அரட்டை அடியுங்கள்' என்று ஆண்களுக்கு தூண்டில் விடுகிறார்கள். சட்டென்று சபல எண்ணம் ஏற்படும் இளைஞர்கள் இந்த 'ஆப்'பை டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்து அடிமையாகி பணத்தை இழக்கிறார்கள்.

    கலாசார சீரழிவு செயலிகளுக்கு கடிவாளம் போடப்படாததால், இதுபோன்ற செயலிகள் புற்றீசல் போல் பெருக தொடங்கி உள்ளன. இந்த செயலியை எப்படி பதவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்? என்று சில யூடியூப்பர்கள் பாடம் நடத்துவது கலாசார சீரழிவின் உச்சமாக இருக்கிறது.

    வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் சிலர் கவர்ச்சியான உடை அணிந்து, வீட்டு வேலைகள் செய்வது போன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டு பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து பணம் பார்க்கிறார்கள். அதுபோன்ற கலாசாரம் தமிழ்நாட்டிலும் நுழைந்து விட்டது.

    முககவசம் அணிந்து, உடல் பாகங்கள் தெரியும்படி சேலையை கவர்ச்சியாக அணிந்து கொண்டு மயக்கும் குரலில் இனிக்க இனிக்க பேசி இளைஞர்களை மயங்கும் வகையில் தமிழ்பேசும் சில பெண்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. தன்னுடைய 'முகநூல்' கணக்கில் உறுப்பினரானால், அந்தரங்க புகைப்படங்களை பார்க்கலாம்' என்று இளைஞர்களை ஆபாச வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    பாலியல் குற்ற சம்பவங்களுக்கும் இதுபோன்ற செயலிகள்தான் அடித்தளமாக அமைகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. கலாசாரத்தை சீரழித்து, இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் இதுபோன்ற 'ஆப்'களுக்கு (செயலி) 'ஆப்பு' வைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பாகவும், வேண்டுகோளாகவும், வலியுறுத்தலாகவும் இருக்கிறது.

    • விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதே விசிக உடன் எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ...!
    • தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

    "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொள்வது உறுதியானது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர் விழாவில் பங்கேற்கமாட்டேன் என திருமாவளவன் தெரிவித்தார்.

    தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் விஜய் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த விழாவில் பங்கேற்காததற்கான காரணத்தை திருமாவளவன் நீண்ட அறிக்கையில் மூலம் விளக்கியிருந்தார்.

    இருந்தபோதிலும் நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது கூட்டணி கட்சி நெருக்கடியால் அவர் பங்கேற்வில்லை எனக் கூறினார்.

    இந்த நிலையில் திருமாவளவன் பற்றி விஜய் கூறியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "வி.சி.க. தலைவர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்கு பிறகும் விஜய் எங்கள் தலைவரை பற்றி பேசியதை பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விசிக உடன் எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது.

    தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

    • தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • அடுத்த 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே சொல்லப்பட்ட பெரிய நிகழ்வு தொடங்குகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் வரை தீவிரம் அடைந்து இருந்த நிலையில், அதன் பிறகு சற்று ஓய்வு கொடுத்து இருக்கிறது. ஆங்காங்கே சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகி வந்தாலும், பெரிய அளவுக்கு மழை இல்லை. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு பெரிய மழைப் பாதிப்பு வந்ததும், அதன் பிறகு பெரிய அளவில் மழை நிகழ்வுகள் எதுவும் இருக்காது. ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க இடைவெளி இருக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்பது போலவே அடுத்தடுத்து வரக்கூடிய வானிலை நிகழ்வுகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. அந்த வகையில் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக பகுதிகளை நோக்கி நகர உள்ளதாகவும், தமிழக கடற்கரை அருகே மெதுவாக நகர்ந்து செல்லவும், மையம் கொள்ளவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அவ்வாறு நகர்ந்து வரும்பட்சத்தில் வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பரவலாக இருக்கும் எனவும், இந்த மழை நிகழ்வு வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் பதிவாகக்கூடும் எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

    இந்த நிகழ்வு முடிந்த அடுத்த 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே சொல்லப்பட்ட பெரிய நிகழ்வு தொடங்குகிறது. அதுவும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி, புயலாகவும் வலுப்பெறக் கூடும் என சொல்லப்படுகிறது. புயலாக வலுப்பெற்றால், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும், சென்னைக்கும்-நாகைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும், காற்றுடன் மழையை கொடுக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இதன் மூலம் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய இருப்பதும், 'போதும்பா மழை' என கதறவிடும் அளவுக்கு மழையின் தாக்கம் இருக்க வாய்ப்பு அதிகமாகவே இருப்பதும் தெரியவருகிறது.

    நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு உயரவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படவும், நிலத்தில் ஈரப்பதம் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதால், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    ×