என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் ஏரிக்கரை தெரு, செல்வ விநாயகர் தெரு, திருக்கழுக்குன்றம் சாலை, முதல் குறுக்கு தெரு, 2வது மற்றும் 3வது குறுக்கு தெருக்களை உள்ளடக்கிய பகுதியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இப்பகுதிக்கு ஏரிக்கரை தெருவை ஒட்டியுள்ள தரைமட்ட கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மூலம் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. பின்னர் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு தேவையான குடிநீரை வடகடம்பாடி ஊராட்சி நிர்வாகம் தடையின்றி வழங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள ஏரிக்கரை தெருவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கலங்கிய நீருடன், கருப்பு துருக்கள் கலந்து குடிநீர் வந்து கொண்டிருந்தது. தற்போது 'ஃபெஞ்ஜல்' புயல் கனமழைக்கு பிறகு இது அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த, குடிநீரை மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    இதனால், அப்பகுதி மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதற்கு காரணம் அங்கு உள்ள தரைமட்ட கிணறு மூடி இல்லாமல் ஆபத்தான நிலையில் கிடப்பதால் தூசிகளும், சிற்பப்பட்டறை துகள்களும் கிணற்று நீரில் கலப்பதாக கூறப்படுகிறது.

    இந்த மாசடைந்த குடி நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் போது தொண்டை மற்றும் உடலில் அரிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் குடிநீர் மாசு ஏற்படுத்தும் இந்த கிணற்றை மூடி பாதுகாத்து, நீர்தேக்க தொட்டியையும் சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது,

    தொடர்ந்து இப்படி மாசடைந்த குடிநீரை குடிப்பதால் இப்பகுதி முதியவர்கள், சிறுவர்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், வாந்தி, தொண்டை தொற்று, பேதி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்நிலை தொடர்ந்தால் அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தண்ணீரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்க உள்ளோம், தற்போது பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் பலியாகி 60 பேர் பாதிக்கப்பட்ட சம்பவத்தால் இன்னும் கூடுதல் பயமாக உள்ளது என்றனர்.

    • இறுதி தேர்வு தயாராவதற்கும் மாணவர்களுக்கு போதுமான காலத்தை வழங்க வேண்டும்.
    • 2025 ஜனவரி முதல் வாரத்தில் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 9-ந்தேதி நடத்த இருந்த தேர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

    மருத்துவ மேற்படிப்பு (PG) மாணவர்கள் சூரஜ் குமார், செந்தில் குமார், ஸ்வேதா உள்ளிட்ட 85 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கடந்த 2021-22 ஆண்டுகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பை தொடங்கிய தங்களுக்கு டிசம்பர் 9-ந் தேதி இறுதித் தேர்வை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிவித்தது.

    இதற்கு முன்பாக இணையதளம் வழியாக ஆராய்ச்சி கட்டுரைகளை தாக்கல் செய்து அதை மருத்துவ இதழில் வெளியிட்டு இருக்க வேண்டும் எனவும் ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்ய நவம்பர் 29-ந்தேதி கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோசமான இணையதள சேவை காரணமாக ஆன்லைனில் உரிய நேரத்தில் ஆய்வுக் கட்டுரைகளை பதிவேற்றம் செய்வதில் கால விரயம் ஏற்படுவதால், தங்களால் இறுதி தேர்வுக்கு தயாராக முடிவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்வதற்கும் இறுதித் தேர்வுக்கும் போதுமான இடைவெளி இல்லாததால் தேர்வு எழுதும் மருத்துவ மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான இறுதித் தேர்வை 2025-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.

    அந்த அடிப்படையில் தங்களுக்கான இறுதித் தேர்வை டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 3 வருட உழைப்பு வீணாகி விடும் என்பதால் ஆய்வு கட்டுரைகளை தாக்கல் செய்வதற்கும், இறுதி தேர்வு தயாராவதற்கும் மாணவர்களுக்கு போதுமான காலத்தை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் டிசம்பர் 9-ந்தேதி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவ மேற்படிப்புக்காக அறிவித்திருந்த மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இறுதி தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவினை பின்பற்றி மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வை டிசம்பர் இறுதி வாரத்தில் அல்லது 2025 ஜனவரி முதல் வாரத்தில் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
    • சட்டம்-ஒழுங்கை காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உத்தரவுகளையும் அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர் போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவது, ரவுடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி உத்தரவுகளையும் அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.

    • தண்ணீர் கேட்ட நபர் கல்லாப்பெட்டிக்குள் கைவிட்டு பணத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் பகுதியில் வசிப்பவர் செந்தில் (40). இவர் அதே ஊரில் தனது வீட்டின் முன்புறம் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    செந்தில் இல்லாத சமயங்களில் இந்த கடையை அவரது மனைவி மோனிகா (35) கவனித்து வந்தார். நேற்று மதியம் மோனிகா கடையில் இருந்தார்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்தார். அவர் தனக்கு தாகமாக இருப்பதாகவும், குடிக்க தண்ணீர் கொடுக்குமாறும் கேட்டார். உடனே மோனிகா தண்ணீர் எடுப்பதற்காக பின்புறம் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அந்தசமயத்தில் தண்ணீர் கேட்ட நபர், கல்லாபெட்டியில் இருந்த பணத்தை லாவகமாக திருடி தப்பிச் சென்று விட்டார்.


    மோனிகா தண்ணீர் எடுத்து வந்தபோது அங்கிருந்த நபரை காணவில்லை. பின்னர் தனது கடையின் கல்லாப்பெட்டியை சோதித்தபோது அதில் இருந்த ரூ.60 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. இதுபற்றி மோனிகா தனது கணவர் செந்திலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கடைக்கு நேரில் வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்.

    தண்ணீர் கேட்ட நபர் கல்லாப்பெட்டிக்குள் கைவிட்டு பணத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர் அடையாளம் தெரியாமல் இருக்க முக கவசம் அணிந்து வந்துள்ளார். செல்போன் கடையை பல நாட்களாக நோட்டமிட்ட நபர், தண்ணீர் கேட்பது நடித்து மோனிகாவின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து செந்தில் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். திருடிய மர்ம நபர் அதே பகுதியைச் சேர்ந்தவரா, அல்லது வேறு எங்காவது இருந்து வந்து கைவரிசை காட்டினாரா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    • முல்லைப் பெரியாறு அணையை நம்பியுள்ள ஐந்து மாவட்ட மக்களும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
    • முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாய தேவைக்காகவும், பல மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில், தமிழக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் (பொதுப்பணித்துறை) ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

    அம்மாவின் அரசு ஆட்சியில் 2020-21 வரை, முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கோள்ள கேரள வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, பராமரிப்புப் பணிகள் எந்தவிதமான இடையூறுமின்றி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில், இந்த ஆண்டு வழக்கம் போல் முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கட்டுமானப் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பு இரு லாரிகளில் கொண்டு செல்லும்போது வல்லக்கடவு என்ற இடத்தில், கேரள வனத்துறை சோதனைச் சாவடியில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டுசென்ற இரு லாரிகளும் தடுத்து நிறுத்தப்பட்டன என்று செய்திகள் வருகின்றன.

    கேரள நீர்வளத் துறையிடம் (பொதுப்பணித்துறை) அனுமதி பெற்ற பின்னரே கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தங்களுக்கு இதுகுறித்து எந்தத் தகவலும் வராததால், அவற்றை அனுமதிக்க மாட்டோம் என்று நேற்று வரை கேரள வனத்துறை, கட்டுமானப் பொருட்கள் கொண்டு சென்ற லாரிகளை முல்லை பெரியாறு பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

    இச்செய்தியை அறிந்த, முல்லைப் பெரியாறு அணையை நம்பியுள்ள ஐந்து மாவட்ட மக்களும் இன்றைக்கு கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டம், லோயர்கேம்ப் பகுதியில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதை, தமிழக காவல் துறை தடுத்து நிறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்குத் தேவையான அனுமதி பெறாமல் வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசுக்கும் எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தீபாவளிக்கு முன்பாக தைத்துக் கொடுத்த துணிகளுக்கு இன்னும் பணம் தரவில்லை.
    • எனது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் அடுத்த எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்சாமி (வயது 53) . இவர் தனது மனைவியை பிரிந்து மகனுடன் வசித்து வந்தார். இவர் பெரிய ஏற்றுமதி பனியன் நிறுவனங்களிடமிருந்து துணிகளை பெற்று ஆடையாக தைத்து கொடுக்கும் கார்மெண்ட்ஸ் சார்பு தொழில் செய்து வந்தார்.

    இவர் திருப்பூரில் இயங்கும் ஒரு பனியன் நிறுவனத்திற்கு பல விதமான ஆடைகளை தைத்துக் கொடுத்து கூலித்தொகை பெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் தைத்து கொடுத்த துணிகளுக்கு ரூ.1.50 லட்சம் வரை பணத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தொடர்ந்து பலமுறை கேட்டும் கொடுக்காத நிலையில் அவரிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வெளியே நண்பர்களிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து பணம் வராததால் அடுத்தடுத்து தொழில் செய்ய முதலீடு இல்லாமலும்,கடன் பெற்றவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாமலும் கடும் மன உளைச்சலில் இருந்தார். பலமுறை தனக்கு சேர வேண்டிய பணத்தை பனியன் நிறுவனத்திடம் கேட்டும், அவர்கள் அலட்சியமாக பதில் கூறி பணத்தை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த பார்த்திபன் சாமி தனது சாவுக்கு தனியார் பனியன் நிறுவனம் தான் காரணம் , அவர்களிடம் வேறு யாரும் ஆடைகள் தைத்து ஏமாற வேண்டாம் , அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் பெயரை கூறி அவர்தான் தனது சாவுக்கு காரணம் என வீடியோ பதிவிட்டதுடன், அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மேலும் அந்த வீடியோவில் பார்த்திபன்சாமி பேசுகையில்,

    என் சாவுக்கு காரணம் 2 பேர். அவர்களை சும்மா விடாதீர்கள். நான் கட்டிடத்துக்கு ரூ. 60,000 வாடகை பாக்கி கொடுக்க வேண்டியது உள்ளது. ரூ.1.50 லட்சம் பணம் வந்திருந்தால் நான் தப்பித்திருப்பேன். நொச்சிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் யாரும் பிசினஸ் செய்ய வேண்டாம்.

    தீபாவளிக்கு முன்பாக தைத்துக் குடித்த துணிகளுக்கு இன்னும் பணம் தரவில்லை. பணத்தை கேட்டு நடையாக நடந்தேன், இன்று போடுகிறோம் நாளை போடுகிறோம் என ஏமாற்றிவிட்டே இருந்தார்கள்.

    எனது சட்டை பாக்கெட்டில், பேண்ட் பாக்கெட்டில் எனது சாவுக்கு காரணமானவர்கள் குறித்து லெட்டர் எழுதி வைத்துள்ளேன். அவர்களது போன் நம்பரையும் எழுதி வைத்துள்ளேன். அதை போலீசில் எடுத்துக் கொடுங்கள். எனது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது. கூட இருந்து கொண்டே கழுத்தை அறுத்து விட்டார்கள். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை, பொய்யும் பேசவில்லை என அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார்.

    • அட்லாண்டிக் பெருங்கடலில் செப்டம்பர் மாதம் உருவாக வேண்டிய சூறாவளி புயல்கள் அக்டோபர் மாதம் தாமதமாக உருவானது.
    • நவம்பர் மாதத்தில் மேற்கு பசிபிக் பெருங்கடல் அதிகமான சூறாவளி புயலை உருவாக்கி உள்ளது.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

    வருகிற 10-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது.

    அக்டோபர் 1-ந் தேதி முதல் கடந்த 6-ந் தேதி வரை தமிழகத்தில் கிட்டத்தட்ட 44.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இயல்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 44 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால் தற்போதே இயல்பான மழை அளவு பெய்து விட்டது.

    இனி வரக்கூடிய நாட்களில் பெய்யக்கூடிய மழை இயல்புக்கு அதிகமான மழையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஃபெஞ்சல் புயலுடன் சேர்த்து இதுவரை 3 கால கட்டங்களில் மழை பெய்திருக்கிறது. ஃபெஞ்சல் புயலால் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

    இந்த சூழலில் வருகிற 10-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது.

    டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் மழை பொழிவு குறைந்து விடும். ஆனால் இப்போது மழை பொழிவு ஏன் தீவிரமடைகிறது? அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

    அட்லாண்டிக் பெருங்கடலில் செப்டம்பர் மாதம் உருவாக வேண்டிய சூறாவளி புயல்கள் அக்டோபர் மாதம் தாமதமாக உருவானது. நவம்பர் மாதத்தில் மேற்கு பசிபிக் பெருங்கடல் அதிகமான சூறாவளி புயலை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாகவே டிசம்பர் மாதத்திலும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி மழை பொழிவை கொடுத்து வருகின்றன.

    சுமத்ரா தீவு அருகே தற்போது காற்று சுழற்சி நிலவுகிறது. இந்த காற்று சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் பயணிக்கும். இந்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றாலும் கடற்கரைக்கு அருகே செல்லும் போது தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற 11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையில் 4-ம் கட்ட வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 11-ந்தேதி இரவு தொடங்கும் மழை 15-ந்தேதி வரை நீடிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நல்ல மழையை கொடுக்கும். தென் மாவட்டங்களிலும் மழை பொழிவு இருக்கும்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஃபெஞ்சல் புயல் மழையால் நீர் நிலைகளில் 45 சதவீதமாக இருந்த தண்ணீர் அளவு 65 சதவீதம் உயர்ந்துள்ளது.

    எனவே வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

    இதன்பிறகு 5-ம் கட்ட வடகிழக்கு பருவமழை வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதிக்குள் பெய்வதற்கான சூழலும் உள்ளது. 18-ந்தேதிக்கு பிறகு உருவாக உள்ள தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு சாதகமான சூழல் உள்ளது.

    எனவே அடுத்து வரும் நாட்களில் ஏற்கனவே நிரம்பியுள்ள நீர் நிலைகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமாகும்.

    இவ்வறு அவர் கூறினார்.

    • தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
    • அமைச்சர் கூறும் ரூ.568 கோடி என்பதன் கணக்கு விவரங்கள் என்ன?

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதானியை சந்திக்கவே இல்லை, இந்த விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சிறையில் இருந்து வெளிவந்து அமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் இரவு, பகல் எனக் கால நேரம் பாராமல் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு, சங்க காலப் பாடல் வரிகளைப் பாடி சமூக வலைத்தளங்களில் புகழ்பாடிக் கொண்டிருந்த ஜாமின் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு, தற்போதுதான் தனது துறைகள் குறித்த ஞாபகம் வந்திருக்கிறது.

    திமுக அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை வழக்கு தொடருவோம் என்ற பூச்சாண்டி காட்டி மிரட்டும் அதே காலாவதியான தொனியில், தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

    ஒரு வகையில், அதானி நிறுவனத்துக்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படாமல், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தமிழக மின்சார வாரியத்துடனான வழக்கு காரணமாக அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் இருந்த கட்டணத்தை திமுக ஆட்சியில் வழங்கியுள்ளதை ஒப்புக்கொண்ட ஜாமின் அமைச்சரைப் பாராட்டியே தீர வேண்டும்.

    அதானி நிறுவனத்துடன் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதானி நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை.

    மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவின்படியே ரூ.568 கோடி கட்டணம் செலுத்தியதாகக் கூறும் ஜாமின் அமைச்சர், கடந்த 2019 ஆம் ஆண்டு, மேல்முறையீட்டு ஆணையத்தின் இதே உத்தரவை, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2021 ஆம் ஆண்டு நிராகரித்ததை மறந்து விட்டார்.

    அதானி நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக, ரூ.544 கோடி ஒரு முறை வருவாயும், ரூ.205 கோடி தாமதக் கட்டணமும் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து பெற்றதாகக் கூறப்பட்டிருப்பதை மறந்து விட்டாரா அல்லது மறைக்க முயற்சிக்கிறாரா? உண்மையில் அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய மொத்தக் கட்டணம் என்ன என்பதை, ஜாமின் அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிப்பாரா? அமைச்சர் கூறும் ரூ.568 கோடி என்பதன் கணக்கு விவரங்கள் என்ன?

    அதானி நிறுவனத்திடம் தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையான ரூ.7.01 விலையிலேயே மின்சாரம் வாங்கிக் கொண்டு, அதற்காக, கடந்த நிதியாண்டில் ரூ.99 கோடி கூடுதல் கட்டணம் பெற்றிருப்பதாக அதானி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்போது. எந்த அடிப்படையில் ரூ.5.10 க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்று திமுக ஆட்சியில் கொள்முதல் செய்வதாகக் குறிப்பிடுகிறார் அமைச்சர்? என்று தெரிவித்துள்ளார்.

    • ஆத்திரம் அடைந்த 2 கைதிகளும் போலீசாரை சரமாரியாக தாக்கினர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ள ஒரு கைதி நேற்று மாலை டவர் பிளாக் பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசிடம், நான் மேலதிகாரியை பார்க்க வேண்டும் என கூறினார். இதனை அவர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

    தொடர்ந்து அந்த வாலிபர் ஜெயில் அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை மீண்டும் அறைக்குள் செல்லும்படி போலீசார் கூறினர். அப்போது அவருடன் மேலும் ஒரு கைதியும் சேர்ந்து கொண்டார்.

    தொடர்ந்து அவர்கள் ஜெயிலில் இருந்து தப்ப முயன்றனர். அப்போது அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 2 கைதிகளும் போலீசாரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து தகவலறிந்த சிறை வார்டன்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து கைதிகளை சமரசப்படுத்தி மீண்டும் சிறை அறையில் அடைந்தனர்.

    இதற்கிடையே கோவை சிறைச்சாலையில் போலீசார் தாக்கப்பட்டது குறித்து ஜெயில் வார்டன் மனோரஞ்சிதம் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் ஜெயில் அறையில் இருந்து வெளியே வந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டது ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் அருகே உள்ள முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீம் (வயது 32) என்பதும், அவருக்கு உடந்தையாக இருந்து போலீசாரை தாக்கியது கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, புதுத் தெருவை சேர்ந்த அப்துல் சலீம் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாக ஆசிப், அப்துல்சலீம் ஆகியோர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2½ ஏக்கர் விவசாய பூமியை பவர் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டார்.
    • மகாலிங்கம் அடியாட்களுடன் வந்து, டிராக்டர்கள் மூலம் மக்காச்சோளப்பயிர்களை அழித்து நாசம் செய்து விட்டார்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த வஞ்சிபுரம் செக்கான்தோட்டத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43) , விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள 2½ ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார்.

    இந்தநிலையில் தாந்தோணியைச் சேர்ந்த மகாலிங்கம் (43) உள்ளிட்ட சிலர் 2 டிராக்டர்கள் மூலம் குமார் பயிரிட்டிருந்த 20 நாட்கள் வயதான மக்காச்சோளப் பயிர்களை அழித்து நாசம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி குமார் கூறியதாவது:-

    கடந்த 2009 -ம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக தாந்தோணியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் ரூ.80 ஆயிரம் கடன் பெற்றேன். அதற்காக 2½ ஏக்கர் விவசாய பூமியை பவர் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டார். ஆனால் நாங்கள் அந்த பூமியில் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறோம். அதேநேரத்தில் இந்த நிலத்தை மகாலிங்கம் தனது மனைவி பெயரில் கிரையம் செய்து கொண்டார். அதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் மகாலிங்கம் அடியாட்களுடன் வந்து, டிராக்டர்கள் மூலம் மக்காச்சோளப்பயிர்களை அழித்து நாசம் செய்து விட்டார். அதனை தடுக்க முயற்சி செய்த என்னையும் என் குடும்பத்தினரையும் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அருகிலுள்ள தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து கிணற்றில் வீசி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கணியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்காச்சோளப்பயிர்களை அழிக்க பயன்படுத்திய டிராக்டர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கடன் பிரச்சனை தகராறில் மக்காச்சோளப் பயிர்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.78அடியாக இருந்தது.
    • அணையில் 86.89 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.78அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு நேற்று 14 ஆயிரத்து 404 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 9 ஆயிரத்து 601 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணையில் 86.89 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • கேரள நீர்பாசன துறையின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களும் சிரமத்திற்கு ஆளாகின.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கொண்டு செல்லப்படும் தளவாட பொருட்களை கேரளா தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து மத்திய கண்காணிப்புக் குழு அறிவுறுத்தியும் 7 மாதங்களாக அணைப்பகுதிக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்ல கேரளா அரசு மறுத்து வருகிறது.

    முல்லை பெரியாறு அணை தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டில் சென்றதால் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவும், துணைக்குழுவும் சமீபத்தில் கலைக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணிக்காக எம்சாண்ட் உள்ளிட்ட தளவாட பொருட்களை 2 லாரிகளில் ஏற்றிக்கொண்டு இடுக்கி மாவட்டம் குமுளி வட்டம் வல்லக்கடவு வழியாக முல்லை பெரியாறு அணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சோதனை சாவடியில் அந்த லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. கேரள நீர்பாசன துறையின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனால் இன்று 4-வது நாளாக சோதனை சாவடியிலேயே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நவம்பர் தொடக்கத்தில் தளவாட பொருட்களை கொண்டு செல்வது தொடர்பாக கடிதத்தை தமிழக நீர்வளத்துறையினர் கேரள வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை அந்த கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

    இச்சம்பவத்தை கண்டித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் லோயர் கேம்ப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை லோயர் கேம்ப்பிலேயே தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து 4வது நாளாக பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் கேரள அரசை கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் கேரள எல்லையில் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    நேற்று மாலை தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் லோயர் கேம்ப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் 1 கி.மீ. தூரத்திற்கு 2 புறமும் அணிவகுத்து நின்றன.

    சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களும் சிரமத்திற்கு ஆளாகின. இரவு 10 மணிக்கு பிறகும் போராட்டம் தொடர்ந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

    கடந்த 4 நாட்களாக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் யாரும் இதுகுறித்து பேசாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில்,

    தளவாட பொருட்களை கொண்டு செல்ல கேரளா அரசு அனுமதி வழங்காவிட்டால் குமுளியில் 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் நடைபெறும். தமிழக அரசு இப்பிரச்சனையில் மவுனத்தை கலைத்து கேரளா அரசு மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடையும். அணைப்பிரச்சனையில் சமரசத்திற்கே இடமில்லை என்றார்.

    விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் இருமாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    ×