என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை- வட மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழை பெய்யும்- தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
- அட்லாண்டிக் பெருங்கடலில் செப்டம்பர் மாதம் உருவாக வேண்டிய சூறாவளி புயல்கள் அக்டோபர் மாதம் தாமதமாக உருவானது.
- நவம்பர் மாதத்தில் மேற்கு பசிபிக் பெருங்கடல் அதிகமான சூறாவளி புயலை உருவாக்கி உள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-
வருகிற 10-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது.
அக்டோபர் 1-ந் தேதி முதல் கடந்த 6-ந் தேதி வரை தமிழகத்தில் கிட்டத்தட்ட 44.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இயல்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 44 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால் தற்போதே இயல்பான மழை அளவு பெய்து விட்டது.
இனி வரக்கூடிய நாட்களில் பெய்யக்கூடிய மழை இயல்புக்கு அதிகமான மழையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஃபெஞ்சல் புயலுடன் சேர்த்து இதுவரை 3 கால கட்டங்களில் மழை பெய்திருக்கிறது. ஃபெஞ்சல் புயலால் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
இந்த சூழலில் வருகிற 10-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளது.
டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் மழை பொழிவு குறைந்து விடும். ஆனால் இப்போது மழை பொழிவு ஏன் தீவிரமடைகிறது? அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
அட்லாண்டிக் பெருங்கடலில் செப்டம்பர் மாதம் உருவாக வேண்டிய சூறாவளி புயல்கள் அக்டோபர் மாதம் தாமதமாக உருவானது. நவம்பர் மாதத்தில் மேற்கு பசிபிக் பெருங்கடல் அதிகமான சூறாவளி புயலை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாகவே டிசம்பர் மாதத்திலும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி மழை பொழிவை கொடுத்து வருகின்றன.
சுமத்ரா தீவு அருகே தற்போது காற்று சுழற்சி நிலவுகிறது. இந்த காற்று சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் பயணிக்கும். இந்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றாலும் கடற்கரைக்கு அருகே செல்லும் போது தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற 11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையில் 4-ம் கட்ட வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 11-ந்தேதி இரவு தொடங்கும் மழை 15-ந்தேதி வரை நீடிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நல்ல மழையை கொடுக்கும். தென் மாவட்டங்களிலும் மழை பொழிவு இருக்கும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஃபெஞ்சல் புயல் மழையால் நீர் நிலைகளில் 45 சதவீதமாக இருந்த தண்ணீர் அளவு 65 சதவீதம் உயர்ந்துள்ளது.
எனவே வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இதன்பிறகு 5-ம் கட்ட வடகிழக்கு பருவமழை வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதிக்குள் பெய்வதற்கான சூழலும் உள்ளது. 18-ந்தேதிக்கு பிறகு உருவாக உள்ள தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு சாதகமான சூழல் உள்ளது.
எனவே அடுத்து வரும் நாட்களில் ஏற்கனவே நிரம்பியுள்ள நீர் நிலைகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமாகும்.
இவ்வறு அவர் கூறினார்.






