என் மலர்
உள்ளூர் செய்திகள்

தைத்து கொடுத்த துணிக்கு பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த பனியன் நிறுவன உரிமையாளர்
- தீபாவளிக்கு முன்பாக தைத்துக் கொடுத்த துணிகளுக்கு இன்னும் பணம் தரவில்லை.
- எனது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது.
திருப்பூர்:
திருப்பூர் அனுப்பர்பாளையம் அடுத்த எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்சாமி (வயது 53) . இவர் தனது மனைவியை பிரிந்து மகனுடன் வசித்து வந்தார். இவர் பெரிய ஏற்றுமதி பனியன் நிறுவனங்களிடமிருந்து துணிகளை பெற்று ஆடையாக தைத்து கொடுக்கும் கார்மெண்ட்ஸ் சார்பு தொழில் செய்து வந்தார்.
இவர் திருப்பூரில் இயங்கும் ஒரு பனியன் நிறுவனத்திற்கு பல விதமான ஆடைகளை தைத்துக் கொடுத்து கூலித்தொகை பெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் தைத்து கொடுத்த துணிகளுக்கு ரூ.1.50 லட்சம் வரை பணத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
தொடர்ந்து பலமுறை கேட்டும் கொடுக்காத நிலையில் அவரிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வெளியே நண்பர்களிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து பணம் வராததால் அடுத்தடுத்து தொழில் செய்ய முதலீடு இல்லாமலும்,கடன் பெற்றவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாமலும் கடும் மன உளைச்சலில் இருந்தார். பலமுறை தனக்கு சேர வேண்டிய பணத்தை பனியன் நிறுவனத்திடம் கேட்டும், அவர்கள் அலட்சியமாக பதில் கூறி பணத்தை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பார்த்திபன் சாமி தனது சாவுக்கு தனியார் பனியன் நிறுவனம் தான் காரணம் , அவர்களிடம் வேறு யாரும் ஆடைகள் தைத்து ஏமாற வேண்டாம் , அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் பெயரை கூறி அவர்தான் தனது சாவுக்கு காரணம் என வீடியோ பதிவிட்டதுடன், அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் பார்த்திபன்சாமி பேசுகையில்,
என் சாவுக்கு காரணம் 2 பேர். அவர்களை சும்மா விடாதீர்கள். நான் கட்டிடத்துக்கு ரூ. 60,000 வாடகை பாக்கி கொடுக்க வேண்டியது உள்ளது. ரூ.1.50 லட்சம் பணம் வந்திருந்தால் நான் தப்பித்திருப்பேன். நொச்சிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் யாரும் பிசினஸ் செய்ய வேண்டாம்.
தீபாவளிக்கு முன்பாக தைத்துக் குடித்த துணிகளுக்கு இன்னும் பணம் தரவில்லை. பணத்தை கேட்டு நடையாக நடந்தேன், இன்று போடுகிறோம் நாளை போடுகிறோம் என ஏமாற்றிவிட்டே இருந்தார்கள்.
எனது சட்டை பாக்கெட்டில், பேண்ட் பாக்கெட்டில் எனது சாவுக்கு காரணமானவர்கள் குறித்து லெட்டர் எழுதி வைத்துள்ளேன். அவர்களது போன் நம்பரையும் எழுதி வைத்துள்ளேன். அதை போலீசில் எடுத்துக் கொடுங்கள். எனது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது. கூட இருந்து கொண்டே கழுத்தை அறுத்து விட்டார்கள். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை, பொய்யும் பேசவில்லை என அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார்.






