என் மலர்
நீங்கள் தேடியது "pg exam"
- இறுதி தேர்வு தயாராவதற்கும் மாணவர்களுக்கு போதுமான காலத்தை வழங்க வேண்டும்.
- 2025 ஜனவரி முதல் வாரத்தில் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 9-ந்தேதி நடத்த இருந்த தேர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்பு (PG) மாணவர்கள் சூரஜ் குமார், செந்தில் குமார், ஸ்வேதா உள்ளிட்ட 85 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கடந்த 2021-22 ஆண்டுகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பை தொடங்கிய தங்களுக்கு டிசம்பர் 9-ந் தேதி இறுதித் தேர்வை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிவித்தது.
இதற்கு முன்பாக இணையதளம் வழியாக ஆராய்ச்சி கட்டுரைகளை தாக்கல் செய்து அதை மருத்துவ இதழில் வெளியிட்டு இருக்க வேண்டும் எனவும் ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்ய நவம்பர் 29-ந்தேதி கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோசமான இணையதள சேவை காரணமாக ஆன்லைனில் உரிய நேரத்தில் ஆய்வுக் கட்டுரைகளை பதிவேற்றம் செய்வதில் கால விரயம் ஏற்படுவதால், தங்களால் இறுதி தேர்வுக்கு தயாராக முடிவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்வதற்கும் இறுதித் தேர்வுக்கும் போதுமான இடைவெளி இல்லாததால் தேர்வு எழுதும் மருத்துவ மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான இறுதித் தேர்வை 2025-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.
அந்த அடிப்படையில் தங்களுக்கான இறுதித் தேர்வை டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 3 வருட உழைப்பு வீணாகி விடும் என்பதால் ஆய்வு கட்டுரைகளை தாக்கல் செய்வதற்கும், இறுதி தேர்வு தயாராவதற்கும் மாணவர்களுக்கு போதுமான காலத்தை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் டிசம்பர் 9-ந்தேதி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவ மேற்படிப்புக்காக அறிவித்திருந்த மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இறுதி தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவினை பின்பற்றி மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வை டிசம்பர் இறுதி வாரத்தில் அல்லது 2025 ஜனவரி முதல் வாரத்தில் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.







