தண்ணீர் கேட்பது போல் நடித்து செல்போன் கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு

தண்ணீர் கேட்ட நபர் கல்லாப்பெட்டிக்குள் கைவிட்டு பணத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீர் கேட்பது போல் நடித்து செல்போன் கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு
Published on

சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் பகுதியில் வசிப்பவர் செந்தில் (40). இவர் அதே ஊரில் தனது வீட்டின் முன்புறம் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

செந்தில் இல்லாத சமயங்களில் இந்த கடையை அவரது மனைவி மோனிகா (35) கவனித்து வந்தார். நேற்று மதியம் மோனிகா கடையில் இருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்தார். அவர் தனக்கு தாகமாக இருப்பதாகவும், குடிக்க தண்ணீர் கொடுக்குமாறும் கேட்டார். உடனே மோனிகா தண்ணீர் எடுப்பதற்காக பின்புறம் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அந்தசமயத்தில் தண்ணீர் கேட்ட நபர், கல்லாபெட்டியில் இருந்த பணத்தை லாவகமாக திருடி தப்பிச் சென்று விட்டார்.

மோனிகா தண்ணீர் எடுத்து வந்தபோது அங்கிருந்த நபரை காணவில்லை. பின்னர் தனது கடையின் கல்லாப்பெட்டியை சோதித்தபோது அதில் இருந்த ரூ.60 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. இதுபற்றி மோனிகா தனது கணவர் செந்திலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கடைக்கு நேரில் வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்.

தண்ணீர் கேட்ட நபர் கல்லாப்பெட்டிக்குள் கைவிட்டு பணத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர் அடையாளம் தெரியாமல் இருக்க முக கவசம் அணிந்து வந்துள்ளார். செல்போன் கடையை பல நாட்களாக நோட்டமிட்ட நபர், தண்ணீர் கேட்பது நடித்து மோனிகாவின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து செந்தில் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். திருடிய மர்ம நபர் அதே பகுதியைச் சேர்ந்தவரா, அல்லது வேறு எங்காவது இருந்து வந்து கைவரிசை காட்டினாரா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com