என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எஸ்.எம்.கிருஷ்ணா தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்.
    • கர்நாடக முதல்வராக, வெளியுறவு அமைச்சராக நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எஸ்.எம்.கிருஷ்ணா.

    கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    எஸ்.எம்.கிருஷ்ணா தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் மற்றும் இந்திய அரசியலில் தலைசிறந்தவர்.

    கர்நாடக முதல்வராக, வெளியுறவு அமைச்சராக நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எஸ்.எம்.கிருஷ்ணா.

    எஸ்.எம்.கிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் பட்சத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டி நிலநடுக்கோட்டையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

    இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (புதன்கிழமை) இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். நாளை தமிழக கடலோர பகுதியை நெருங்கி வரும்.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இன்று (செவ்வாய்க்கிழமை), திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே மாவட்டங்களில் நாளை (11-ந்தேதி) மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த நாளில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட் டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை (புதன்கிழமை) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழைக்கும், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    12-ந்தேதி (வியாழக்கிழமை) திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்.

    13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    14-ந்தேதி (சனிக்கிழமை) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (11-ந்தேதி), நாளை மறுநாள் (12-ந்தேதி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே புயல் சின்னம் காரணமாக இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தமிழக கடற்கரையை நோக்கி வரும் புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் பட்சத்தில் நாளை (11-ந்தேதி) டெல்டா மாவட்டங்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரங்கம்பாடி-அதிராம்பட்டினம் இடையே அது கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    அதே சமயத்தில் நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் பட்சத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தை கடந்த பிறகு அது அரபிக்கடல் சென்றடையும்.

    அதே சமயம் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாகவே நகர்ந்து வந்தால் தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா வழியாக தெற்கு நோக்கி நகர்ந்து, கரையையொட்டிய படி கடலிலே நகர்ந்து குமரிக் கடல் வழியாக அரபிக் கடல் நோக்கி பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • லாடபுரம் மயிலூற்று அருவி பிரசித்தி பெற்றது.
    • அருவி பகுதிகளில் சென்று பொதுமக்கள் குளிப்பதற்கு பெரம்பலூர் மாவட்ட வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்துடன் மேற்கு எல்லையாகவுள்ள பச்சைமலைத் தொடர்ச்சியில் மலையாளப்பட்டி அருகே எட்டெருமைப்பாழி அருவி, தொண்டமாந்துறை அருகே கோரையாறு அருவி, பூலாம்பாடி அருகே இரட்டைப் புறா அருவி போன்றவை உள்ளன.

    அதுப்போல லாடபுரம் மயிலூற்று அருவியும் பிரசித்தி பெற்றது. லாடபுரத்தின் அருகேயுள்ள பச்சை மலையில், பாறை மீதிருந்து அருவியாகக் கொட்டுகிற மழைநீர், பாறை மீது அமர்ந்துள்ள மயில் தனது தோகையை விரித்துத் தொங்க விட்டது போல் காணப்பட்டதால் இந்த அருவிக்கு மயிலூற்று அருவி எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

    லாடபுரம் அருவிக்கு லாடபுரத்தில் இருந்து, சரவணபுரம் வழியாக பைக்கிலோ, காரிலோ 3 கிமீ தூரம் சென்றபிறகு 10 நிமிடத்தில் பால்போல் கொட்டும் அருவிக்குச் சென்று விடலாம் என்பதாலேயே எளிதில் சுற்றுலா அந்தஸ்து பெற்றுத் திகழ்கிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வனத்துறையால் அனுமதி வழங்கப்பட்ட மலையேற்ற பாதைகள் பட்டியலின்படி லாடபுரம் மயிலூற்று அருவி மலையேற்ற பாதைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பெரம்பலூர் வனச்சரகம், மயிலூற்று அருவி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருப்பதால் கரடு முரடான மலைப்பாதை வழியாக மேலே ஏறிச்செல்லும்போது நிலச்சரிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படலாம்.

    மலைப்பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக அருவிப்பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக வரும்போது அபாயகரமான நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு நலன்கருதி அருவி பகுதிகளில் சென்று பொதுமக்கள் குளிப்பதற்கு பெரம்பலூர் மாவட்ட வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி உள்ளே செல்பவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் 1882 பிரிவு 22 (டி)-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • திமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது.
    • மின்சார வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுவது தான் இழப்புக்கு காரணம் ஆகும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2022-23ஆம் ஆண்டு வரை ரூ.1.62 லட்சம் திரண்ட இழப்புடன், இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த மின்வாரியங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த இழப்புக்கு மத்திய அரசால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் நிலவும் ஊழல்களும் , முறைகேடுகளும் தான் இத்தகைய இழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

    இந்தியாவில் உள்ள அனைத்து மின்வாரியங்களும் சேர்ந்து 2022-23ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 6.47 லட்சம் கோடி இழப்பை சந்தித்திருக்கின்றன. அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு மட்டும் 25% ஆகும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தை இந்தியாவின் முதன்மை மின்வாரியமாக மாற்றப் போவதாகக் கூறியவர்கள், இழப்பை சந்திப்பதில் முதல் நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தை உயர்த்திருப்பது அவமானகரமான சாதனையாகும்.

    2015-16ஆம் ஆண்டில் ரூ.63,162 கோடியாக இருந்த மின்சார வாரியத்தின் திரண்ட இழப்பு 2022-23ஆம் ஆண்டில் ரூ. 1.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் எந்த மின்சார வாரியமும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக இழப்பை சந்திக்கவில்லை.

    திமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022&23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் 10,000 கோடியாக அதிகரித்தது. 2023&ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023&24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் இயங்கிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மின்சார வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுவது தான் இழப்புக்கு காரணம் ஆகும். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தினால் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியிருக்காது. ஆனால், தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கினால் தான் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதற்காகவே, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்தாமலேயே ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றனர். தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தும் வரை மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க முடியாது.

    2022-23ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.82,400 கோடி மட்டும் தான். ஆனால், அதில் ரூ.51,000 கோடி, அதாவது கிட்டத்தட்ட 62% வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதற்காக மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இது தவிர மின்சார வாரியம் வாங்கிக் குவித்த கடனுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி செலுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் மின்சார வாரியத்தை எப்படி லாபத்தில் இயக்க முடியும்? என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

    எனவே, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்; தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும். மின் வாரியத்தில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய வேண்டும். அதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ் தாத்தா உ.வே.சாமி நாத அய்யருக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
    • உறுப்பினரின் கோரிக்கை பற்றி முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசியபோது தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலை சுவடிகளை பதிப்பகங்களாக மாற்றி உள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி தமிழ் புலவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி விருதுகளும் வழங்கப்பட்டன.

    பிப்ரவரி 19 அவரது பிறந்தநாள். அந்த நாளை இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவித்து கொண்டாட வேண்டுகிறேன் என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

    தமிழ் தாத்தா உ.வே.சாமி நாத அய்யருக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளில் கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

    உறுப்பினரின் கோரிக்கை பற்றி முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

    இதைத் தொடர்ந்து முதலச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்துபேசினார். அவர் கூறும்போது, உ.வே.சாமி நாத அய்யருக்கு தமிழக அரசு உரிய மரியாதையை செலுத்தி வருகிறது. உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று அவரது பிறந்தநாள் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்றார்.

    • செல்வப்பெருந்தகை என்னிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.
    • வரதராஜபுரம் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை அரசு எடுக்கும்.

    தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறுகையில்,

    வரதராஜபுரம் பகுதியில் மழை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் இல்லையெனில் நான் எம்எல்ஏவாக தொடர முடியாது.

    நான் எம்.எல்.ஏ.வாக தொடர்வது அமைச்சர் துரைமுருகன் கையில் தான் உள்ளது என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை என்னிடம் வசமாக சிக்கிக்கொண்டார். இனி அவர் எம்.எல்.ஏ.வாக ஆகுவது என் கையில் தான் உள்ளது.

    வரதராஜபுரம் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை அரசு எடுக்கும் என்று அவர் கூறினார்.

    • விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவிர்த்தார்.
    • ஆதவ் அர்ஜூனா வி.சி.கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை :

    சென்னை விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய திருமாவளவன் விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் என தெரிவித்தார்.

    மேலும், எதிர்காலத்தில் விஜயுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவர் எனக்கு தெரியாது என்று பதில் அளித்துள்ளார்.

    முன்னதாக, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியிட்டு விழாவில் விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவிர்த்தார். அதற்கு அவருக்கு கூட்டணியில் ஏற்பட்ட அழுத்தமும் காரணமாக இருக்கலாம் என்று விஜயே கூறியிருந்தார்.

    இதற்கு பதில் அளித்த திருமாவளவன் விழாவில் பங்கேற்பது தொடர்பாக எவ்வித அழுத்தமும் காரணம் இல்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும் தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே உள்ள வி.சி.க. புதிதாக உருவாகும் கூட்டணியில் இடம்பெறாது. புதிய கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டிய தேவை எழவில்லை என்று கூறியிருந்தார்.

    திருமாவளவன் கலந்து கொள்ளாமல் தவிர்த்த புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னராட்சி ஒழிக்க வேண்டும் என்று கூறியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் வி.சி.கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    • 13-ந்தேதி காலை பரணி தீபம், மாலை 6 மணிக்கு மகா தீபம்.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவை யொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.

    தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் 5 தேர்கள் வலம் வரும். மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.36 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெறும். மதியம் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடைபெறும்.

    தேரோட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் பராசக்தி அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

    பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    ரத வீதிகளில் அண்ணா மலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

    ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.


    கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள்.

    அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    தேரோட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.

    • மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
    • திமுக முன்னாள் எம்.பி. ராமோகன் உயிரிழந்த நிலையில் சட்டசபையில் இரங்கல் தீர்மான வாசிக்கப்பட்டது.

    தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திமுக முன்னாள் எம்.பி. ராமோகன் உயிரிழந்த நிலையில் சட்டசபையில் இரங்கல் தீர்மான வாசிக்கப்பட்டது.

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    இன்றைய கூட்டத்தில் சட்டசபை உறுப்பினர்களின் கேள்விக்கு துறை வாரியாக அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர். 2-வது நாளான இன்றைய கூட்டத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    • திடீரென லாரியின் உள்பகுதியில் இருந்து தீப்புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இரவு நேரத்தில் பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீப்புகை ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சங்ககிரி:

    ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் செல்வம் (40). இவர் கண்டெய்னர் லாரியில் சத்தியமங்கலத்தில் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கி சென்றார். இரவு 7 மணி அளவில் பவானி - சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் சங்ககிரி வி.என். பாளையம் என்ற இடத்தில் டிரைவர் செல்வம் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி லாரியின் சக்கரங்களில் காற்று சரியாக உள்ளதா? என சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென லாரியின் உள்பகுதியில் இருந்து தீப்புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி ரமேஷ் குமார் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து வந்து லாரியின் பின் கதவுகளை திறந்து தண்ணீர் பாய்ச்சி தீ பரவாமல் தடுத்தனர். மேலும் லாரியில் இருந்த பஞ்சு லோடுகளை கீழே இறக்கி தீப்பிடித்த பேல்களை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    லாரியில் தீப்புகை ஏற்பட்ட இடத்தின் அருகே தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி போலீசார் வாகன ங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் லாரியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீப்புகை ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,040 விற்பனையானது.
    • கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,040 விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,640-க்கும் கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,205-க்கும் விற்பனையாகிறது.



    கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ. 4000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040

    08-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

    07-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

    06-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

    05-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    08-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    07-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    06-12-2024- ஒரு கிராம் ரூ. 101

    05-12-2024- ஒரு கிராம் ரூ. 101

    • 1980-ம் ஆண்டு எம்.பி.யாக பணியாற்றியவர்.
    • மிசா கைதியாக ஒரு ஆண்டு ஜெயிலில் இருந்துள்ளார்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி. மோகன், இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. இவர் 1980-ம் ஆண்டு எம்.பி.யாக பணியாற்றியவர். இதுமட்டுமல்லாமல் 1989-ம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்துள்ளார்.

    தி.மு.க.வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர், மாநில தீர்மானக்குழு இணை செயலாளர் போன்ற பதவிகளில் இருந்துள்ளார். மிசா கைதியாக ஒரு ஆண்டு ஜெயிலில் இருந்துள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நெருங்கி பழகியவர். வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். முன்னாள் எம்.பி. மோகனுக்கு சுகுணா என்ற மனைவியும், டிவேதிரா என்ற மகளும், கவிதா என்ற மகனும் உள்ளனர்.

    ×