என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Electricity Board"

    • மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது.
    • கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு கடந்த ஜனவரி 24-ந் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (டான்ஜெட்கோ) மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என 3 ஆக பிரிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி, 4 ஆயிரத்து 320 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது. அதேபோல், 2 ஆயிரத்து 321 மெகாவாட் திறன் கொண்ட குந்தா மற்றும் கொல்லிமலை நீர்மின் நிலையங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 41 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவனங்கள் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துக்கு மாற்றப்படுகிறது.

    கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். ஊழியர்கள் இரு நிறுவனங்களுக்கு அயபணில் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

    • திமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது.
    • மின்சார வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுவது தான் இழப்புக்கு காரணம் ஆகும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2022-23ஆம் ஆண்டு வரை ரூ.1.62 லட்சம் திரண்ட இழப்புடன், இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த மின்வாரியங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த இழப்புக்கு மத்திய அரசால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் நிலவும் ஊழல்களும் , முறைகேடுகளும் தான் இத்தகைய இழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

    இந்தியாவில் உள்ள அனைத்து மின்வாரியங்களும் சேர்ந்து 2022-23ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 6.47 லட்சம் கோடி இழப்பை சந்தித்திருக்கின்றன. அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு மட்டும் 25% ஆகும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தை இந்தியாவின் முதன்மை மின்வாரியமாக மாற்றப் போவதாகக் கூறியவர்கள், இழப்பை சந்திப்பதில் முதல் நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தை உயர்த்திருப்பது அவமானகரமான சாதனையாகும்.

    2015-16ஆம் ஆண்டில் ரூ.63,162 கோடியாக இருந்த மின்சார வாரியத்தின் திரண்ட இழப்பு 2022-23ஆம் ஆண்டில் ரூ. 1.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் எந்த மின்சார வாரியமும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக இழப்பை சந்திக்கவில்லை.

    திமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022&23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் 10,000 கோடியாக அதிகரித்தது. 2023&ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023&24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் இயங்கிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மின்சார வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுவது தான் இழப்புக்கு காரணம் ஆகும். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தினால் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியிருக்காது. ஆனால், தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கினால் தான் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதற்காகவே, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்தாமலேயே ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றனர். தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தும் வரை மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க முடியாது.

    2022-23ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.82,400 கோடி மட்டும் தான். ஆனால், அதில் ரூ.51,000 கோடி, அதாவது கிட்டத்தட்ட 62% வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதற்காக மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இது தவிர மின்சார வாரியம் வாங்கிக் குவித்த கடனுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி செலுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் மின்சார வாரியத்தை எப்படி லாபத்தில் இயக்க முடியும்? என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

    எனவே, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்; தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும். மின் வாரியத்தில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய வேண்டும். அதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொண்டும், புரியாதவரை போல நடித்துக் கொண்டிருக்கிறார்.
    • சிக்கல் குறித்து பேசுவதற்கே தமிழ்நாடு அரசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அஞ்சுவதும், பதில் கூற மறுப்பதும் ஏன்?

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடமிருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு குறிந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத முதலமைச்சர் மு.கஸ்டாலின், இந்த விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் பேசியிருக்கிறார்.

    தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இதுகுறித்து பாமக உறுப்பினர்கள் எழுப்பிய சிக்கலுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.கஸ்டாலின், "அதானி குழுமம் தொடர்பாக வெளியில் பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டார். இதுதொடர்பாக, பாமகவுக்கும், பாஜகவுக்கும் நான் எழுப்பும் கேள்வி என்னவென்றால், அதானி ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க இந்த இரு கட்சிகளும் தயாரா? என்பதுதான்" என வினவியுள்ளார்.

    அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையோ, அல்லது வேறு எந்த விசாரணையோ அனைத்தையும் ஆதரிக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது. இதில் பாமகவுக்கு எந்த தயக்கமும் இல்லை.

    ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் எழுப்ப விரும்பும் வினா என்னவென்றால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து அவருடைய பதில் என்ன? என்பதுதான்.

    இந்த வினாவிற்கு விடையளிக்க முடியாத மு.க.ஸ்டாலின் அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டார் என்று கூறி மோசடி-ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொள்வது என்?

    அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய பதில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், அதானி குழுமத்திற்கும் இடையே நேரடியாக எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படவில்லை என்பதுதான்.

    ஆனால் இந்த கேள்வியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொண்டும், புரியாதவரை போல நடித்துக் கொண்டிருக்கிறார்; பதிலளிக்க மறுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினால், தேசிய அளவில் நடைபெற்ற அதானி ஊழல் குறித்து பா.ம.க. வலியுறுத்தவில்லை? அதானிக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கமில்லை? என்று தி.மு.க. அதன் கூலிப்படையினரை வைத்து எதிர்க்கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் கடன் கமையில் சிக்கித் தவிக்கிறது. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக வட்டி செலுத்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும், தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் நீந்திக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் அதானி குழுமம் போன்ற பல நிறுவனங்களிடம் இருந்து, தங்களுக்குக் கிடைக்கும் பயன்களுக்காக, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை ஆட்சியாளர்கள் வாங்குவதுதான்.

    ஆட்சியாளர்கள் இலாபம் பெறுவதற்காக மின்சார வாரியத்தை நஷ்டமாக்கி, அதை சரி செய்வதற்காக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் பணத்தைப் பிடுங்குவதை அனுமதிக்க முடியாது. அதற்காகத்தான் அதானி குழுமத்திடம் இருந்து மின்சார வாரியம் கையூட்டு பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்துகிறது.

    மடியில் கணமில்லை என்றால், வழியில் பயம் தேவையில்லை. அதானி குழுமத்திடம் இருந்து, இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்தின் வாயிலாக மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கையூட்டு பெறவில்லை என்றால், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணைக்கு ஆணையிடலாம். அவ்வாறு செய்யாமல், இந்த சிக்கல் குறித்து பேசுவதற்கே தமிழ்நாடு அரசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அஞ்சுவதும், பதில் கூற மறுப்பதும் ஏன்?

    அதானி குழுமத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கோ, அல்லது உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு பிரிவின் விசாரணைக்கோ ஆணையிடுவதற்கு தயாரா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு முழு மின் உற்பத்திக்கு தினசரி தேவைப்படும் 72 ஆயிரம் டன் நிலக்கரியை வழங்குமாறு மத்திய மந்திரி பியுஷ் கோயலிடம் அமைச்சர் பி.தங்கமணி கேட்டு கொண்டார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் மத்திய ரெயில், நிலக்கரி மற்றும் நிதித்துறை மந்திரி பியுஷ் கோயலை, தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் சில கோரிக்கைகளை மத்திய மந்திரிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து பின்னர் அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:-

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் முழு மின் உற்பத்தி செய்வதற்கு தினசரி 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதனை முழுமையாக வழங்க வேண்டும். நிலக்கரி வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தினமும் 16 சரக்கு ரெயில்கள் மூலம் நிலக்கரி வழங்க வேண்டிய நிலையில் தற்போது 13 சரக்கு ரெயில்கள் மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 7 சரக்கு ரெயில்களில் நிலக்கரி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    வடசென்னை அனல் மின்நிலையம் நிலை-2 (600 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள்) மற்றும் மேட்டூர் நிலை-2 (600 மெகாவாட் திறன் கொண்ட 1 அலகு) ஆகிய மின்நிலையங்களில் முழு கொள்ளளவு மின்உற்பத்தி செய்வதற்கு உரிய நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர கடந்த ஆண்டு மே 24-ந்தேதி அன்று மராட்டிய மாநிலம் நாக்பூரிலுள்ள பொதுத் துறையை சேர்ந்த ‘வெஸ்டர்ன்’ நிலக்கரி உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் டன் நிலக்கரியை ரெயில் மூலமாக கொண்டு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மீண்டும் ஒடிசா மாநிலத்தில் உள்ள மகாநதி நிலக்கரி நிறுவனத்திற்கு மாறுதல் செய்து ஆணை வழங்க, மத்திய ரெயில் மற்றும் நிலக்கரிதுறை மந்திரி பியுஷ் கோயலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி ஆர்.கே.சிங்கை, அமைச்சர் பி.தங்கமணி சந்தித்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு மின்திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோரிக்கை விடுத்தார். பின்னர் இது பற்றி அமைச்சர் பி.தங்கமணி கூறுகையில், “காற்றாலை மின்சாரத்தை பிறமாநிலங்களுக்கு விற்பனை செய்ய பசுமை மின் வழித்தடம் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடல் காற்று மூலம் மின்உற்பத்தி செய்ய முன்வரும் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்.

    அதேபோல் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2-வது அணுமின் நிலையத்தையும், செய்யூர் அனல் மின்திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்” என்றார்.

    அப்போது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர் உடன் இருந்தார். 
    ×