என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு டெண்டர்கள் விடப்பட்டது.
- தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன தொடர்பு.
சென்னை:
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த 2023-ம் ஆண்டு முதல் அவ்வப்போது தி.மு.க. அரசில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார்.
இந்த பைல்ஸ் வெளியாகும் போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பும்.
முதல் முதலில் 2023 ஏப்ரல் 14-ல் தி.மு.க. பைல்ஸ் முதல் பாகத்தை வெளியிட்டார். அதில் தி.மு.க. எம்.பி.ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன் மற்றும் முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரது சொத்துப் பட்டியல் இடம் பெற்று இருந்தது.
அதே ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். அதில் அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்த முறைகேடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு எம்.பி., முன்னாள் டி.ஜி.பி. ஜாபர் சேட் பேசிய தொலை பேசி உரையாடல் மற்றும் ஜாபர் சேட்டும், ஆ.ராசாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் பற்றிய ஆடியோக்களை வெளியிட்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-வது ஆடியோவை வெளியிட்டார். அதில் ஆ.ராசாவும் ஜாபர்சேட்டும் பேசிய உரையாடல் இடம் பெற்று இருந்தது.
ரெய்டு பற்றியும் தகவல் முன்கூட்டியே பகிரப்பட்டதால் 2 ஜி வழக்கின் அனைத்து முக்கிய ஆதாரங்களும் அழிக்கப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
சொத்து பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து அவர் மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார்.
இதற்கிடையில் 3 மாதங்கள் வெளிநாட்டுக்கு மேல்படிப்புக்கு சென்றிருந்த அண்ணாமலை திரும்பி வந்த பிறகு மீண்டும் தனது அதிரடி அரசியலை தொடங்கியிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதானி விவகாரத்தில் ரூ.568 கோடி லாபம் ஈட்ட அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக கொள்கை முடிவையே மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் தி.மு.க.வின் 3-வது பைலை வெளியிட அண்ணாமலை தயாராகி வருகிறார். குறிப்பிட்ட சில துறைகளில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய ஆதாரங்களை அண்ணாமலை திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
அவைகளை மையமாக வைத்து தி.மு.க. பைல்ஸ் -4ஐ தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
பனையூரில் இதுபற்றி அவர் கூறும்போது, தி.மு.க. பைல்ஸ்-1 மற்றும் 2ஐ வெளியிட்டோம். இப்போது 3-வது பகுதி பெரிய அளவில் தயாராகி வருகிறது.
இந்த முறை கூட்டணி கட்சிகளையும் தப்பிக்க விட மாட்டோம். ஏனெனில் பல டெண்டர்களை கூட்டணி கட்சியினரே எடுத்துள்ளார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு டெண்டர்கள் விடப்பட்டது? அது யார் யாருக்கு போய் உள்ளது. அதை எடுத்த நிறுவனங்கள் எது? அந்த நிறுவனங்களுக்கும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன தொடர்பு...?
அதாவது அந்த நிறுவனங்களை நடத்துவதே அவர்களின் மாமன், மச்சான் என்று ஏதாவது ஒரு உறவினராகத்தான் இருப்பார். இவ்வளவு கோடி டெண்டர்கள் கடைசியாக உள்ளூர் அமைச்சரின் உறவினருக்குத் தான் போய் இருக்கிறது.
எனவே முழு அளவில் ஆதாரங்களை திரட்டி தயார் செய்கிறோம். இதுவரை வெளியிட்ட பைல்களை விட மக்கள் மத்தியில் இனி வெளிவரும் 'பைல்' பெரிய அளவில் பேசப்படும். இந்த புதிய பைல் 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முல்லைப்பெரியாறு அணை அதிமுக ஆட்சியில் ஆண்டுதோறும் முறையாக பராமரிக்கப்பட்டது.
- 'இடையூறு' என்ற வார்த்தையை இபிஎஸ் பயன்படுத்தியதற்கு சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
முல்லைப்பெரியாறு அணை அதிமுக ஆட்சியில் ஆண்டுதோறும் முறையாக பராமரிக்கப்பட்டது.
பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் கேரள முதலமைச்சரை சந்திக்கும்போது அதுகுறித்து முதலமைச்சர் பேச வேண்டும் என்று கூறினார்.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக 'இடையூறு' என்ற வார்த்தையை இபிஎஸ் பயன்படுத்தியதற்கு சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார்.
கேரள அரசு தடுத்தால் 'இடையூறு' என்று தான் பொருள் என அவை முன்னவர் துரைமுருகன் இபிஎஸ் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார்.
- அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
- மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2024-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் நாளை உள்ளூர் விடுமுறையாக அனுபவிக்கும் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களும் மேற்படி அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக 2024-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21 ஆம் நாள் சனிக்கிழமை அன்று இயங்கும். மேலே அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை தினம் மாற்றியல் தாள்முறி கூடம் 1881 (மத்திய சட்டம் XXVI/1881) ன் கீழ் வரும் பொது விடுமுறை இல்லை என்பதால், 2024ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13-ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் கால்வாய்களை தூர்வார மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.
- தடுப்பணைகளை அதிகம் கட்டி தண்ணீரை சேமித்தால் வரும் காலங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்பது உண்மை.
சென்னை:
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் பேசும்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்றார்.
இது போன்று பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் கால்வாய்களை தூர்வார மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
தடுப்பணைகளை அதிகம் கட்டி தண்ணீரை சேமித்தால் வரும் காலங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்பது உண்மை. எனவே நிதி அமைச்சர் எனது துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சருடன் கலந்து பேசி 1000 தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, தடுப்பணைகள் அதிகம் கட்டினால் 100 ஆண்டுகள் தண்ணீர் பிரச்சனை வராது என்றார்.
- பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- அரசு பஸ்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
சேதராப்பட்டு:
புதுவை அருகே அரசு நிவாரண தொகை வழங்காததை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரியக்கோட்டகுப்பம் பகுதியில் 10 மற்றும் 11-வது வார்டு உள்ளது. பெஞ்ஜல் புயல் மற்றும் கனமழைக்கு இந்தப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை எனவும், புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூபாய் 2 ஆயிரம் தொகை மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகை தொகுப்பு இந்த இரண்டு வார்டு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து இந்த பகுதி மக்கள் நேற்று இரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தி சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு கோட்டகுப்பம் ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டம் தீவிரமடைந்தது.
அப்போது அரையாண்டு தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் தனியார் பள்ளி பஸ்சில் வந்த நிலையில் மறியல் போராட்டத்தால் சுமார் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் பஸ் நிறுத்தப்பட்டது.
ஆட்டோக்களில் வந்த பள்ளி மாணவர்களும் மறியலில் சிக்கித் தவித்தனர். காலாப்பட்டு பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கனரக வாகனங்கள் அரசு பஸ்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
கோட்டகுப்பம் ரவுண்டானாவில் இருந்து சிவாஜி சிலை வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெஞ்ஜல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து வீடுகள் சேதம் அடைந்தது. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 16 வார்டுகளுக்கு மட்டுமே நிவாரணத் தொகையை அரசு அறிவித்துள்ளது.
10 மற்றும் 11-வது வார்டு பகுதியில் சேதம் மதிப்பு குறித்து கணக்கெடுப்பு கூட நடத்தப்படவில்லை. முற்றிலும் 2 பகுதி மக்களும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.
நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அரசு நிவாரணத்திற்கான எந்த அறிவிப்பு வெளியிடவில்லை.
அதிகம் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கு உடனே தமிழக அரசு வழங்கும் நிவாரண நிதியை பாதிப்புக்கு ஏற்றார் போல் வழங்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என கோஷங்கள் எழுப்பினர்.
தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக வழி விடுங்கள் என கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டதன் பேரில் பள்ளி வாகனங்களை மட்டும் போராட்டக்காரர்கள் விரைவாக செல்ல அனுமதித்தனர்.
பின்னர் மீண்டும் சாலை மறியல் ஈடுபட்ட அவர்களிடம் கோட்டக்குப்பம் துணை போலீஸ் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தங்களுடைய பாதிப்புகளை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
அப்போது போலீசாருக்கும் மறியல் ஈடுபட்ட ஒரு சில இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் கோட்டக்குப்பம் ரவுண்டான பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
சுமார் 1:30 மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தில் அந்த வழியாக அலுவலகம் சென்றவர்கள் சென்னை சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது போலீசார் வருவாய்த்துறை அதிகாரியிடம் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 2 வார்டு மக்களுக்கும் அரசு வழங்கும் நிவாரணத் தொகையை வழங்குவதாக2 வார்டு பெயர்களையும் நிவாரண பட்டியலில் இடம் பெறச் செய்தனர். இதனை போலீசார் பொதுமக்களிடம் காண்பித்தனர். இதன் அடிப்படையிலேயே பொதுமக்கள் தற்காலிகமாக தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கோட்டக்குப்பம் பெஞ்ஜல் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு 50-க்கும் மேற்பட்ட நபர்களை படகுமூலம் மீட்டனர்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. நிறைய கால்நடைகள் இறந்து போயின. நான்கு நாட்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
எனவே கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கும் தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை உடனே வழங்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- அதானி மீதான விசாரணையை பாமக, பாஜக ஆதரிக்குமா?
- அதானி விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. அப்போது அதானி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவில்லை.
* பாமக தலைவர் இந்த விவகாரத்தில் ஆழமாக பேசுகிறார். அதற்காக தான் இந்த அவையில் வைத்து விளக்கம் அளிக்கிறேன்.
* அதானி மீதான விசாரணையை பாமக, பாஜக ஆதரிக்குமா?
* தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
* அதானி விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார்.
* அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தவர்.
- எப்போது கோவைக்கு சென்றாலும், இரா.மோகனை சந்திக்கத் தவறியதில்லை.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.மோகன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவப் பருவத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், தன்னுடைய 13 வயதிலேயே நகர்மன்றத் தேர்தலில் கையில் இருவண்ணக் கொடியேந்தி, கழக வேட்பாளர்களுக்காக வீதிவீதியாக வாக்கு சேகரித்தவர்.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தவர். எமர்ஜென்சிக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் பேரன்பிற்குப் பாத்திரமான அவர், 1980-ம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989-ம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி, தன்னுடைய தொண்டால் பொதுமக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றார்.
கொள்கை மறவராக வாழ்ந்த இரா.மோகனுக்கு, கடந்த 15.9.2022 அன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில், "அண்ணா விருது" வழங்கி, அவரது பொதுவாழ்வைப் போற்றினேன்.
நான் எப்போது கோவைக்குச் சென்றாலும், இரா.மோகனைச் சந்திக்கத் தவறியதில்லை. இன்று அவர் மறைந்த வேதனை மிகுந்த செய்தியால் கலங்கி நிற்கிறேன். இரா. மோகன் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கழகத் தோழர்கள், கோவை மக்கள் என அனவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- அதிக மூச்சு திணறல் ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுஜாதாவை அழைத்து செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர்.
- செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜாதாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிக மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிகாலை 3 மணியளவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுஜாதாவை அழைத்து செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜாதாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சங்ககாலத்தில் இருந்து திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடந்து வருவது வழக்கத்தில் இருக்கிற ஒன்று.
- தீபத்திருவிழாவை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.
சென்னை:
சட்டசபையில் உறுப்பினர் பிச்சாண்டி கேட்ட கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் கூறியதாவது:-
சங்ககாலத்தில் இருந்து திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடந்து வருவது வழக்கத்தில் இருக்கிற ஒன்று.
இந்த ஆண்டும் இந்த தீப திருவிழாவில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கின்றது.
துணை முதலமைச்சர் 18-10-2024 அன்று நேரடியாக திருவண்ணாமலைக்கு சென்று கார்த்திகை தீபத்திற்கு கிரிவலப் பாதையிலே கள ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து சமீபத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
தீபத் திருவிழா என்பது மலையின் உச்சியின் மீது ஏற்றப்படுகின்ற கொப்பரை தீபம் என்பது இன்றியமையாத ஒன்று.
சான்றோர்கள் காலத்தில் இருந்து நடத்தப்படும் இந்த விழா தடைபடக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார்.
அந்த உத்தரவுக்கு ஏற்ப புவியியல் கமிட்டி சரவணன் ராஜா தலைமையிலே ஒரு குழு அமைக்கப்பட்டு எட்டு பேர் கொண்ட குழு. 7, 8 ,9 ஆகிய மூன்று நாட்கள் ஆய்வு செய்து இருக்கின்றது.
அந்த ஆய்வின் அடிப்படையில் இன்றைக்கு அறிக்கை தந்துள்ளனர்.
அந்த அறிக்கையின்படி 350 கிலோ கொண்ட கொப்பரை அந்த திரிகளை மேலே எடுத்துச் செல்ல வேண்டும்.
40 டன் கொண்ட சுமார் 450 கிலோ நெய்யும் எடுத்துக் செல்லப்பட வேண்டும் எவ்வளவு மனித சக்திகளை பயன்படுத்த முடியுமோ அதை பயன்படுத்தி எந்தவிதமான ஒரு சிறு உயிரிழப்பும் இல்லாமல் எந்தவிதமான சிறு அசம்பாவிதம் ஏற்படாமல் இந்த தீபத்திருவிழாவை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.
ஆகவே சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மனித சக்திகளை பயன்படுத்தி இந்த கார்த்திகை மகா தீபம் சான்றோர்களால் தொடங்கப்பட்ட இந்த தீபம் இந்தாண்டு தீப திருவிழாவிலும் மலை உச்சியின் மீது தீபம் எரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் இருந்து 12-ந் தேதி 269, 13-ந்தேதி 643, 14-ந்தேதி 801, 15-ந்தேதி 269 பஸ்கள் திருவண்ணாமலைக்கு விடப்பட்டு உள்ளது.
- இணைய தளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கார்த்திகை தீபம் 12-ந்தேதியும் பவுர்ணமி 14-ந்தேதியும் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1982 பஸ்களும், சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களில் இருந்து 8127 பஸ்களும் என மொத்தம் 10,109 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து 12-ந் தேதி 269, 13-ந்தேதி 643, 14-ந்தேதி 801, 15-ந்தேதி 269 பஸ்கள் திருவண்ணாமலைக்கு விடப்பட்டு உள்ளது.
தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in மற்றும் tnstcofficial app. ஆகிய இணைய தளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பஸ் வசதியினை பயன்படுத்தி கொள்ளும்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
- எஸ்.எம்.கிருஷ்ணா தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்.
- கர்நாடக முதல்வராக, வெளியுறவு அமைச்சராக நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எஸ்.எம்.கிருஷ்ணா.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
எஸ்.எம்.கிருஷ்ணா தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் மற்றும் இந்திய அரசியலில் தலைசிறந்தவர்.
கர்நாடக முதல்வராக, வெளியுறவு அமைச்சராக நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எஸ்.எம்.கிருஷ்ணா.
எஸ்.எம்.கிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் பட்சத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது.
சென்னை:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டி நிலநடுக்கோட்டையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (புதன்கிழமை) இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். நாளை தமிழக கடலோர பகுதியை நெருங்கி வரும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை), திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே மாவட்டங்களில் நாளை (11-ந்தேதி) மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நாளில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட் டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (புதன்கிழமை) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழைக்கும், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12-ந்தேதி (வியாழக்கிழமை) திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்.
13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
14-ந்தேதி (சனிக்கிழமை) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (11-ந்தேதி), நாளை மறுநாள் (12-ந்தேதி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புயல் சின்னம் காரணமாக இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக கடற்கரையை நோக்கி வரும் புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் பட்சத்தில் நாளை (11-ந்தேதி) டெல்டா மாவட்டங்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரங்கம்பாடி-அதிராம்பட்டினம் இடையே அது கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அதே சமயத்தில் நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் பட்சத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தை கடந்த பிறகு அது அரபிக்கடல் சென்றடையும்.
அதே சமயம் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாகவே நகர்ந்து வந்தால் தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா வழியாக தெற்கு நோக்கி நகர்ந்து, கரையையொட்டிய படி கடலிலே நகர்ந்து குமரிக் கடல் வழியாக அரபிக் கடல் நோக்கி பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.






