என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளில் ஆய்வு செய்தனர்.
    • குழந்தைகளின் உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு 2 குழந்தைகள் யாருடைய அரவணைப்பின்றி சுற்றித் திரிந்தனர்.

    நீண்ட நேரமாக 2 குழந்தைகளும் சுற்றி வந்ததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் மற்றும் போலீசார் 2 குழந்தைகளை அழைத்து விசாரணை செய்ததில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு-நந்தினி தம்பதியினரின் குழந்தைகளான ராகவஸ்ரீ(5), முகேஸ்(3) என்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து குழந்தைகளை மருத்துவமனையில் விட்டுச் சென்றவர் யார்? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளில் ஆய்வு செய்தனர்.

    இதில் குழந்தைகளின் தாயார் நந்தினியே மருத்துவமனையில் குழந்தைகளை விட்டுச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இந்த குழந்தைகளின் உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நந்தினியின் அண்ணன் பாலாஜியிடம் 2 குழந்தைகளையும் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் சேட்டுக்கும், நந்தினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதும், இதனால் தாயார் நந்தினி தனது 2 குழந்தைகளை மருத்துவமனையில் விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது.
    • தென்பெண்ணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை பார்வையிட்டனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடு புதைந்தது. வீட்டில் இருந்த குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மத்திய குழுவினர் டாக்டர் பொன்னுசாமி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் சரவணன் (ஐதராபாத்), கே எம் பாலாஜி (சென்னை) ஆகியோர் உட்பட அதிகாரிகள் மண் சரிவு ஏற்பட்ட இடத்திற்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்று மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் கீழ்பென்னாத்தூர் அடுத்த கோனாகல், சின்ன காகினூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலம், தென்பெண்ணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

    ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

    • சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிய மறுத்த சார் பதிவாளர் தாக்கப்பட்டு அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது.
    • பதிவுத்துறை அலுவலர்கள் தங்கள் பாதுகாப்பினை வலியுறுத்தி, நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் என்ற வரிசையில் தற்போது பதிவுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் சார் பதிவாளர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

    கடந்த வாரம், கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட ஆவணத்தை சார் பதிவாளர் பதிவு செய்ய மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் தானும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, சார் பதிவாளர் மீதும் ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதே போன்று, மதுரை மாவட்டம், பேரையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிய மறுத்த சார் பதிவாளர் தாக்கப்பட்டு அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே, பதிவுத்துறை அலுவலர்கள் தங்கள் பாதுகாப்பினை வலியுறுத்தி, நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏலம் முறையை வரவேற்பதாக தான் தம்பிதுரை தெரிவித்தார்.
    • தமிழ்நாட்டில் அனுமதியின்றி கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்றார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை வளாகத்தில் டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    * அதிமுக எம்பி தம்பிதுரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    * ஏல முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் வரவேற்பதாக தம்பிதுரை தெரிவித்தார்.

    * ஏலம் முறையை வரவேற்பதாக தான் தம்பிதுரை தெரிவித்தார்.

    * தமிழ்நாட்டில் அனுமதியின்றி கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்றார். 

    • தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.
    • ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியின் பிடி இருக்கிறது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இன்று மதியம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மதுரை பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய டங்ஸ்டன் சுரங்கம் அமைவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.

    ஆனால், நாங்கள் இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். வருகிற 12-ந்தேதி டெல்லி செல்கிறோம். திரும்பி வரும்போது நிச்சயம் வெற்றி செய்தியோடு வருவோம் என்றார்.

    தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மேடை ஏறி முதலமைச்சர் குறித்து பேசி உள்ளார். இதனை கேட்ட மக்கள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியின் பிடி இருக்கிறது.

    மன்னர் ஆட்சி என்றால் தந்தைக்கு பின்னால் மகன், மகனுக்கு பின்னால் மகன் என்பது தான். அவர்களை துடைத்தெரியும் காலம் வந்துவிட்டது. ஆதவ் அர்ஜுனா பேச்சும், வி.சி.க. தலைவர் பேச்சும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.
    • மயங்கி விழுந்த மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.

    மயங்கி விழுந்த மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மாணவி உயிரிழந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திடீரென மாணவி உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்திருந்தால், மக்கள் பாதிப்பை சந்தித்திருக்க மாட்டார்கள்.
    • செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். ஆனால் சாத்தனூர் என்பது மிகப் பெரிய அணை.

    சென்னை:

    சட்டசபையில் இன்று துணை பட்ஜெட் மீதான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி (அ.தி.மு.க.) பேசினார்.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை மையம் அறிவித்து இருந்தும் அதனை முறையாக மக்களிடம் கொண்டு சேர்த்து இருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.

    உணவு-குடிநீர் கோரி மக்கள் போராட்டமும் நடந்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்தபோது குற்றம்சாட்டிய தி.மு.க., சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்திருந்தால், மக்கள் பாதிப்பை சந்தித்திருக்க மாட்டார்கள்.

    எனவே இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டை வழங்க வேண்டும்.

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்:- 5 முறை எச்சரிக்கை கொடுத்த பிறகே சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டோம். ஒவ்வொரு முறை தண்ணீர் திறக்கும் போதும் லட்சகணக்கான மக்களுக்கு தகவல் தெரிவித்த பின்பு தண்ணீரை திறந்தோம்.

    முதலமைச்சர் இதனை கண்காணித்து கொண்டே இருந்தார். ஆனால் நீங்கள் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டது போல் நடைபெறவில்லை.

    எடப்பாடி பழனிசாமி:- சாத்தனூர் அணையில் நீங்கள் தண்ணீர் திறக்கும்போது அதிகாலை 2.45 மணிக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு கால் மணிநேரத்தில் சாத்தனூர் அணையை திறந்துவிட்டு இருக்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால்தான் பாதிப்பு என்று தவறான தகவல் தெரிவிக்கிறீர்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் உள்ளன. கனமழை காரணமாக அங்கிருந்து வரும் உபரி தண்ணீர் அடையாறு ஆற்றில் சென்றதால் தான் பாதிப்பு ஏற்பட்டது.

    அடையாறு ஆற்றில் 1 லட்சம் கனஅடி நீர் செல்லக்கூடிய அளவுக்கு வழிபாதை இருக்கிறது. கனமழை பெய்து கொண்டிருந்தால் என்ன செய்ய முடியும்?

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:- செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டதால்தான் பாதிப்பு என்று சொல்கிறோம். இந்திய கணக்காயர் அறிக்கையில் கூட செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டதை குறிப்பிட்டுள்ளார்கள். அதனை விட என்ன சாட்சி வேண்டும்?

    எடப்பாடி பழனிசாமி:- செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். ஆனால் சாத்தனூர் என்பது மிகப் பெரிய அணை. அதனை சொல்லாமல் திறந்து விட்டீர்கள். செம்பரம்பாக்கம் ஏரி குடிநீருக்காக கட்டப்பட்ட ஏரி. அதில் 29 ஆயிரம் கனஅடி திறந்து விட்டபோது எப்படி பாதிப்பு ஏற்படும்? இதன் கீழே உள்ள 100 ஏரிகள் நிரம்பி உபரி தண்ணீரும், அடையாற்றுக்கு சென்றதால்தான் பாதிப்பு ஏற்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- எவ்வளவு அடி என்பது பிரச்சனை இல்லை. திறப்பதற்கு யாரிடம் அனுமதி வாங்குவது என்பதுதான் பிரச்சனை. அதனால்தான் வேறு வழியின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டீர்கள். இதை நான் சொல்லவில்லை. உங்கள் ஆட்சியின்போது தாக்கல் செய்த ஆடிட் ரிபோர்ட் சொல்கிறது.

    இது மனித தவறின் காரணமாக ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. (அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் சவால்விட்டு பேசினார்கள்).

    அமைச்சர் தா.மோ.அன்பரசன்:- செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். 100 ஏரி எங்கே இருக்கிறது? நாங்கள் இந்த ஏரிக்கு அருகில்தான் வசிக்கிறோம். இந்த ஏரிக்கு ஆதனூரில் இருந்து தண்ணீர் வருகிறது. யாருக்கும் தெரியாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டீர்கள். அதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது. 100 ஏரிகள் இருப்பதாக சொன்னீர்கள். செம்பரம்பாக்கம் ஏரியை பற்றி எங்களுக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் வந்து பார்த்தால் தானே உங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டார்.
    • அரசியலில் நீங்கள் ஈடுபடாவிட்டால், அரசியல் உங்கள் வாழ்க்கையில் ஈடுபடும் என்ற வரிகளுடன் கூடிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ' என்ற புத்தக வெளியிட்டு விழாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார். இதற்கு கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து, ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!

    'அதிகாரத்தை அடைவோம்' என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன் என்று அறிக்கை ஒன்றை ஆதவ் அர்ஜூனா நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், இன்று 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்! என்று ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மேலும் அரசியலில் நீங்கள் ஈடுபடாவிட்டால், அரசியல் உங்கள் வாழ்க்கையில் ஈடுபடும் என்ற வரிகளுடன் கூடிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 



    • கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர்.
    • கொலைக்கு உடந்தையாக இருந்த 4 பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவமணிகண்டன் (வயது 28).

    இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் குறித்து அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி இரவு புகார் அளித்தார். இந்நிலையில் 7-ம் தேதி மாலை 5 மணிக்கு அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சிவ மணிகண்டன் நடுரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசில் புகார் அளித்ததன் காரணமாக சிவ மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும் புகார் அளித்த சமயத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த சிறுவன் உள்பட 4 பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவ மணிகண்டன் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் காரணமாக தான் குற்றவாளிகள் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாகவும், புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதியை பணி இடைநீக்கம் செய்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாஉல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.

    • மாடுகளை பொறுத்தவரை தெருவில் சுற்றும் மாடுகளை பிடித்து பட்டியில் கட்டி அபராதம் வசூலித்து வருகிறார்கள்.
    • தொடர்ந்து மாடுகளையும், நாய்களையும் கட்டுப்படுத்தும் பணி நடக்கிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் பேசும்போது, தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் மாடுகள், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெரு நாய்கள் கடித்து பலர் காயம் அடைகிறார்கள். மாடுகள் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் மரணம் அடையும் நிலையும் ஏற்படுகிறது.

    எனவே மாடுகள், நாய்கள் தெருவில் சுற்றுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    உறுப்பினர் குறிப்பிட்டதை போல மாடுகள், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பது உண்மைதான். அவைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். நேற்று கூட சென்னையில் 3 இடங்களில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் நிகழ்ச்சி நடந்துள்ளது. பிராணிகள் நலச்சட்டத்தால் நாய்களை முழுமையாக ஒழிக்க வழியில்லை.

    மாடுகளை பொறுத்தவரை தெருவில் சுற்றும் மாடுகளை பிடித்து பட்டியில் கட்டி அபராதம் வசூலித்து வருகிறார்கள். சென்னையில் இதுபோன்று 15-க்கும் மேற்பட்ட முறை நடந்துள்ளது.

    ஆனால் மாடுகளை பிடிப்பதால் பொதுமக்கள் கோபப்படும் நிலையும் உள்ளது. அதே நேரம் மாடுகளை பிடித்த பிறகு எம்.எல்.ஏ.க்களிடம் சிபாரிசுக்கு வருகிறார்கள். தொடர்ந்து மாடுகளையும், நாய்களையும் கட்டுப்படுத்தும் பணி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு டெண்டர்கள் விடப்பட்டது.
    • தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன தொடர்பு.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த 2023-ம் ஆண்டு முதல் அவ்வப்போது தி.மு.க. அரசில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார்.

    இந்த பைல்ஸ் வெளியாகும் போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பும்.

    முதல் முதலில் 2023 ஏப்ரல் 14-ல் தி.மு.க. பைல்ஸ் முதல் பாகத்தை வெளியிட்டார். அதில் தி.மு.க. எம்.பி.ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன் மற்றும் முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரது சொத்துப் பட்டியல் இடம் பெற்று இருந்தது.

    அதே ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். அதில் அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்த முறைகேடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

    அதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு எம்.பி., முன்னாள் டி.ஜி.பி. ஜாபர் சேட் பேசிய தொலை பேசி உரையாடல் மற்றும் ஜாபர் சேட்டும், ஆ.ராசாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் பற்றிய ஆடியோக்களை வெளியிட்டார்.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-வது ஆடியோவை வெளியிட்டார். அதில் ஆ.ராசாவும் ஜாபர்சேட்டும் பேசிய உரையாடல் இடம் பெற்று இருந்தது.

    ரெய்டு பற்றியும் தகவல் முன்கூட்டியே பகிரப்பட்டதால் 2 ஜி வழக்கின் அனைத்து முக்கிய ஆதாரங்களும் அழிக்கப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

    சொத்து பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து அவர் மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார்.

    இதற்கிடையில் 3 மாதங்கள் வெளிநாட்டுக்கு மேல்படிப்புக்கு சென்றிருந்த அண்ணாமலை திரும்பி வந்த பிறகு மீண்டும் தனது அதிரடி அரசியலை தொடங்கியிருக்கிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு அதானி விவகாரத்தில் ரூ.568 கோடி லாபம் ஈட்ட அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக கொள்கை முடிவையே மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் தி.மு.க.வின் 3-வது பைலை வெளியிட அண்ணாமலை தயாராகி வருகிறார். குறிப்பிட்ட சில துறைகளில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய ஆதாரங்களை அண்ணாமலை திரட்டி வருவதாக கூறப்படுகிறது.

    அவைகளை மையமாக வைத்து தி.மு.க. பைல்ஸ் -4ஐ தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    பனையூரில் இதுபற்றி அவர் கூறும்போது, தி.மு.க. பைல்ஸ்-1 மற்றும் 2ஐ வெளியிட்டோம். இப்போது 3-வது பகுதி பெரிய அளவில் தயாராகி வருகிறது.

    இந்த முறை கூட்டணி கட்சிகளையும் தப்பிக்க விட மாட்டோம். ஏனெனில் பல டெண்டர்களை கூட்டணி கட்சியினரே எடுத்துள்ளார்கள்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு டெண்டர்கள் விடப்பட்டது? அது யார் யாருக்கு போய் உள்ளது. அதை எடுத்த நிறுவனங்கள் எது? அந்த நிறுவனங்களுக்கும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன தொடர்பு...?

    அதாவது அந்த நிறுவனங்களை நடத்துவதே அவர்களின் மாமன், மச்சான் என்று ஏதாவது ஒரு உறவினராகத்தான் இருப்பார். இவ்வளவு கோடி டெண்டர்கள் கடைசியாக உள்ளூர் அமைச்சரின் உறவினருக்குத் தான் போய் இருக்கிறது.

    எனவே முழு அளவில் ஆதாரங்களை திரட்டி தயார் செய்கிறோம். இதுவரை வெளியிட்ட பைல்களை விட மக்கள் மத்தியில் இனி வெளிவரும் 'பைல்' பெரிய அளவில் பேசப்படும். இந்த புதிய பைல் 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முல்லைப்பெரியாறு அணை அதிமுக ஆட்சியில் ஆண்டுதோறும் முறையாக பராமரிக்கப்பட்டது.
    • 'இடையூறு' என்ற வார்த்தையை இபிஎஸ் பயன்படுத்தியதற்கு சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார்.

    தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

    முல்லைப்பெரியாறு அணை அதிமுக ஆட்சியில் ஆண்டுதோறும் முறையாக பராமரிக்கப்பட்டது.

    பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் கேரள முதலமைச்சரை சந்திக்கும்போது அதுகுறித்து முதலமைச்சர் பேச வேண்டும் என்று கூறினார்.

    முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக 'இடையூறு' என்ற வார்த்தையை இபிஎஸ் பயன்படுத்தியதற்கு சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார்.

    கேரள அரசு தடுத்தால் 'இடையூறு' என்று தான் பொருள் என அவை முன்னவர் துரைமுருகன் இபிஎஸ் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    ×