என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாத்தனூர் அணை நீர் திறப்பு- முதலமைச்சர் விளக்கம்
- சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்திருந்தால், மக்கள் பாதிப்பை சந்தித்திருக்க மாட்டார்கள்.
- செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். ஆனால் சாத்தனூர் என்பது மிகப் பெரிய அணை.
சென்னை:
சட்டசபையில் இன்று துணை பட்ஜெட் மீதான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி (அ.தி.மு.க.) பேசினார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை மையம் அறிவித்து இருந்தும் அதனை முறையாக மக்களிடம் கொண்டு சேர்த்து இருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.
உணவு-குடிநீர் கோரி மக்கள் போராட்டமும் நடந்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்தபோது குற்றம்சாட்டிய தி.மு.க., சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்திருந்தால், மக்கள் பாதிப்பை சந்தித்திருக்க மாட்டார்கள்.
எனவே இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டை வழங்க வேண்டும்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்:- 5 முறை எச்சரிக்கை கொடுத்த பிறகே சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டோம். ஒவ்வொரு முறை தண்ணீர் திறக்கும் போதும் லட்சகணக்கான மக்களுக்கு தகவல் தெரிவித்த பின்பு தண்ணீரை திறந்தோம்.
முதலமைச்சர் இதனை கண்காணித்து கொண்டே இருந்தார். ஆனால் நீங்கள் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டது போல் நடைபெறவில்லை.
எடப்பாடி பழனிசாமி:- சாத்தனூர் அணையில் நீங்கள் தண்ணீர் திறக்கும்போது அதிகாலை 2.45 மணிக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு கால் மணிநேரத்தில் சாத்தனூர் அணையை திறந்துவிட்டு இருக்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால்தான் பாதிப்பு என்று தவறான தகவல் தெரிவிக்கிறீர்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் உள்ளன. கனமழை காரணமாக அங்கிருந்து வரும் உபரி தண்ணீர் அடையாறு ஆற்றில் சென்றதால் தான் பாதிப்பு ஏற்பட்டது.
அடையாறு ஆற்றில் 1 லட்சம் கனஅடி நீர் செல்லக்கூடிய அளவுக்கு வழிபாதை இருக்கிறது. கனமழை பெய்து கொண்டிருந்தால் என்ன செய்ய முடியும்?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:- செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டதால்தான் பாதிப்பு என்று சொல்கிறோம். இந்திய கணக்காயர் அறிக்கையில் கூட செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டதை குறிப்பிட்டுள்ளார்கள். அதனை விட என்ன சாட்சி வேண்டும்?
எடப்பாடி பழனிசாமி:- செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். ஆனால் சாத்தனூர் என்பது மிகப் பெரிய அணை. அதனை சொல்லாமல் திறந்து விட்டீர்கள். செம்பரம்பாக்கம் ஏரி குடிநீருக்காக கட்டப்பட்ட ஏரி. அதில் 29 ஆயிரம் கனஅடி திறந்து விட்டபோது எப்படி பாதிப்பு ஏற்படும்? இதன் கீழே உள்ள 100 ஏரிகள் நிரம்பி உபரி தண்ணீரும், அடையாற்றுக்கு சென்றதால்தான் பாதிப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- எவ்வளவு அடி என்பது பிரச்சனை இல்லை. திறப்பதற்கு யாரிடம் அனுமதி வாங்குவது என்பதுதான் பிரச்சனை. அதனால்தான் வேறு வழியின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டீர்கள். இதை நான் சொல்லவில்லை. உங்கள் ஆட்சியின்போது தாக்கல் செய்த ஆடிட் ரிபோர்ட் சொல்கிறது.
இது மனித தவறின் காரணமாக ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. (அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் சவால்விட்டு பேசினார்கள்).
அமைச்சர் தா.மோ.அன்பரசன்:- செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். 100 ஏரி எங்கே இருக்கிறது? நாங்கள் இந்த ஏரிக்கு அருகில்தான் வசிக்கிறோம். இந்த ஏரிக்கு ஆதனூரில் இருந்து தண்ணீர் வருகிறது. யாருக்கும் தெரியாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டீர்கள். அதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது. 100 ஏரிகள் இருப்பதாக சொன்னீர்கள். செம்பரம்பாக்கம் ஏரியை பற்றி எங்களுக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் வந்து பார்த்தால் தானே உங்களுக்கு தெரியும்.
இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.






