என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இன்று நீர் வரத்து அதிகரித்து 4 ஆயிரத்து 371 கன அடியாக உயர்ந்தது.
- தண்ணீர் முழுவதும் காவிரியில் 4121 கனஅடி, தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் திறக்கப்பட்டு வருகிறது.
கரூர்:
கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 1.5 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டு உள்ளது. இங்கு மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானிசாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டு, கிளை வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.
இங்கு தண்ணீர் திறந்து விட்டால் கரூர், திருச்சி, தஞ்சையை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.
தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
நேற்று மாயனூர் கதவணைக்கு 371 கன அடி நீர் வந்தது. இந்த நிலையில் இன்று நீர் வரத்து அதிகரித்து 4 ஆயிரத்து 371 கன அடியாக உயர்ந்தது. இதனால் மாயனூர் கதவணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
இந்த தண்ணீர் முழுவதும் காவிரியில் 4121 கனஅடி, தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் திறக்கப்பட்டு வருகிறது.
கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சாகுபடி வயல்கள் பாதிக்கப்படும் என்பதால் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
- அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள்புரிந்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோவில் கொண்டு அருள்பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 வஸ்திரங்கள் சாற்றப்படும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்துக்கு அனைத்து தெய்வங்களும் எழுந்தருளுவார்கள். இங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 வஸ்திரங்கள் சாற்றப்பட்டது.
இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. சாரல் மழை, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் பாலாஜி பட்டர் ஸ்தானிகம் என்ற ரமேஷ் பட்டர், அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, கோவில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் மற்றும் கோவில் அலுவ லர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
- வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் காலடி தடத்தை பதிவு கண்டுபிடித்தனர்.
- கடந்த 9-ந் தேதி இரவு அதியமான் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ளது ஜாகீர் வெங்கடாபுரம். இதன் அருகில் உள்ள குல்நகர், அதியமான்நகர், பாஞ்சாலியூர், கொண்டே பள்ளி, பையனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இதையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன், வனவர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, அதியமான் நகரில் உள்ள வெற்றிச்செல்வன் என்பவரது வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது சிறுத்தை ஒன்று சுற்றி திரிவது பதிவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் காலடி தடத்தை பதிவு கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து வனச்சரக அலுவலர் முனியப்பன் கூறியதாவது:
கடந்த 9-ந் தேதி இரவு அதியமான் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இரவு முழுவதும் பட்டாசுக்கள் வெடித்தும், சத்தம் எழுப்பியவாறு சிறுத்தை தேடும் பணி நடந்தது. காலையில் சிறுத்தையின் காலடித்தடம் உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக சிறுத்தை யாரும் கண்ணிலும் தென்படவில்லை. அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களிலும் பதிவாகவில்லை. பட்டாசு வெடித்தால், அங்கிருந்து இடம் பெயர்ந்து இருக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். விழிப்புடன் இருந்து, சிறுத்தை நடமாட்டம் கண்டறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்காக கிருஷ்ணகிரி முழுவதும் தேடும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அப்பகுதியிலும், சமூக வலைதளத்திலும் வேகமாக பரவியது. மேலும், ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்க கூடிய மாணவ, மாணவிகள் பள்ளி நேரத்தில் வகுப்பறைவிட்டு வெளியே செல்வதற்கு ஆசிரியர்கள் தடை விதித்துள்ளனர். காலை, மாலையில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர ஏதுவாக உரிய நடவடிக்கைகளை பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்திட வேண்டும். மேலும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- மழையை பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர்.
- மழையில் நனைந்தபடியே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காயாமொழி, பரமன்குறிச்சி, தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மழை பெய்தது.
இதனால் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

கோவில் நடை இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலில் குவிந்தனர். அவர்கள் மழையை பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர். பின்னர் மழையில் நனைந்தபடியே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம்:
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 310-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசால் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவு வேளையில், தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கையில் பயணம் செய்வதற்கான பைகளுடன் நின்று கொண்டிருந்த 4 இலங்கை தமிழர்களை தங்கச்சிமடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிகுமார் (வயது 28), கோகிலவாணி (44), வேலூர் அகதி முகாமைச் சேர்ந்த சேகர் என்ற ராஜ்மோகன் (39), சிதம்பரம் அகதி முகாமைச் சேர்ந்த நாகராஜ் (68) என்பதும், சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்டதும் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து முறையான பாஸ்போர்ட் இன்றி சட்ட விரோதமாக கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்த தங்கச்சிமடம் போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் அவர்கள் படகில் தப்பிச்செல்ல உதவி செய்தவர்கள் யார், எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்றும் தங்கச்சிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிபடுத்தினர்.
- மகன் கொலையில் குற்றவாளிகளையும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.
இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிபடுத்தினர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் சிறுவனின் தந்தை கார்த்திக் முருகன், தாய் பாலசுந்தரி, தாத்தா கருத்த பாண்டி என 3 பேரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் அதனை தடுத்தது மட்டுமின்றி, அவர்கள் எழுதிய கடிதத்தையும் வாங்கி கிழித்து போட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த கடிததத்தில், எங்களது மகன் ஏன் இறந்தான் என்று தெரியவில்லை. பாசமாக வளர்த்த மகனே போய் விட்டான். நாங்கள் இருந்து என்ன செய்ய? மகன் கொலையில் குற்றவாளிகளையும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இனி நாங்கள் வாழ்வதில் எங்களுக்கு அர்த்தம் இல்லை என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.
- சென்னை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- கோவை, நீலகிரி, திருப்பூர் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேயிலை தோட்டங்களில் பணியாற்றியவர்கள் பிளாஸ்டிக் கவர் அணிந்தபடியே தங்கள் வேலையில் ஈடுபட்டனர்.
- சாரல் மழையுடன் கடும் குளிரும் காணப்பட்டது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரம் பரவலாக மழை பெய்தது. அதனை தொடர்ந்து சில நாட்கள் மழை குறைந்து இருந்தது.
மழை குறைந்தாலும் கடும் நீர்பனியும், மேகமூட்டமும் காணப்பட்டது. பகல் நேரங்களிலேயே கடுமையான பனிமூட்டமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வண்ணாரபேட்டை, வண்டிச்சோலை, ஆழ்வார்பேட்டை, அட்டடி, பர்லியார், அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
விட்டு, விட்டு மழை தூறல் போட்டு கொண்டே இருந்தது. இன்று காலையும் சாரல் மழை தொடர்ந்தது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அவர்கள் குடைகளை பிடித்தபடி சென்றனர்.
தேயிலை தோட்டங்களில் பணியாற்றியவர்கள் பிளாஸ்டிக் கவர் அணிந்தபடியே தங்கள் வேலையில் ஈடுபட்டனர். சாரல் மழையுடன் கடும் குளிரும் காணப்பட்டது. குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
குன்னூரில் வருவாய் துறை சார்பில் பேரிடர் மீட்பு குழுவினர், புயல் நிவாரணக்கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. மேலும் தீயணைப்பு, நெடுஞ்சாலை, வனத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உரிய உபகரணங்களுடன் தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம்வழுதி ஒலிபெருக்கி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக நகராட்சி சார்பில் பாரதியார் மண்டபம், காந்திபுரம், டென்ட் ஹில், வண்ணாரப்பேட்டை, அட்டடி, வண்டிச்சோலை, ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று தங்கி கொள்ளலாம்.
முகாமில் தங்குபவர்களுக்கு உணவு, கம்பளி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க வாய்ப்பு. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் நீர் நிலைகள், நீர் வழித்தடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாய ஏற்படும். தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நேற்று இரவு முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
- தென்பெண்ணை ஆற்றுப்பகுதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து கடந்த டிசம்பர் 1-ந்தேதி நள்ளிரவு மற்றும் 2-ந் தேதி அதிகாலை விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறை தெரிவித்திருந்தது.
பின்னர், மழையின் தாக்கம் குறைந்ததால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.75 அடியாக உள்ளது. அணையில் 7,041 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
இதனால், தென்பெண்ணையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும். இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றுப்பகுதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
- நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.
சென்னை:
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.
- இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
- அக்கம்பக்கத்தினர் உடனே கவியழகனை மீட்டு ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செம்பியன்மகாதேவியை சேர்ந்தவர் முருகதாஸ்.
இவரது மகன் கவியழகன் (வயது 13). இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நள்ளிரவு முருகதாஸ் குடும்பத்தினருடன் தனது கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் மாணவன் கவியழகன் இடிபாடுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனே கவியழகனை மீட்டு ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கவியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மதியழகன், அவரது மற்றொரு மகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






