என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆத்தூர் அருகே உள்ள கரியகோவில், கருமந்துறை உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.
- வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வீரபாண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
சேலம்:
வங்கக்கடலில் மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.
ஏற்காட்டில் பெய்யும் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்படுமோ? என்ற அச்சம் அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்காட்டில் நேற்றிரவு முதல் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதால் அந்த கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர். ஏற்காடு செங்காடு கிராமத்தில் மின்கம்பத்தில் செல்லும் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்தூர் அருகே உள்ள கரியகோவில், கருமந்துறை உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கரியகோவில் அணை நிரம்பிய நிலையில் தற்போது இந்த மழையால் 2-வது முறையாக அணை நிரம்பி உள்ளது. இதனால் அணையில் இருந்து 190 கன அடி உபரி நீர் வசிஷ்ட நதியில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மழை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளதால் வசிஷ்ட நதியின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கிய மழை தொடர்ந்து சாரல் மழையாக நீடிக்கிறது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதே போல வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வீரபாண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் கல்லூரிகள் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார். வழக்கமாக சில தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் காலை 6.30 மணி முதல் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்வார்கள். தாமதமாக விடுமுறை அறிவித்ததால் இதுபற்றி தெரியாமல் பள்ளிக்கு சென்ற பெரும்பாலான மாணவ-மாணவிகள் மீண்டும் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு திரும்பினர். சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இதே போல கல்லூரிகள் மற்றும் அலுவலக வேலைகளுக்கு சென்றவர்கள் குடை பிடித்த பிடியும், ஸ்வெட்டர்கள் அணிந்த படியும் சென்றதை காண முடிந்தது.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
- இன்று காலையில் இருந்து கனமழை பெய்துவருகிறது.
- பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தும் குடை பிடித்தும் சென்றனர்.
திருச்சி:
வட கிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
தற்போது இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன் படி நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பல இடங்களில் மழை கொட்டியது.
இன்று காலையில் இருந்தும் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கரூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
கரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இரவு நேரத்தில் பிடித்த மழையானது விடாமல் கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஒரு சில இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலைகள் பாதிக்கப்பட்டது.
திருச்சியில் நேற்று இரவு 11 மணி முதல் விடிய விடிய இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. திருச்சி மாநகரில் இடைவிடாத மிதமான மழை பெய்து வருகிறது.
இரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் நீடித்தது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தும் குடை பிடித்தும் சென்றனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கள்ளக்குடியில் 45.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தின் இதர பகுதிகளான லால்குடி 8, நந்தியாறு அணைக்கட்டு 37.4, புள்ளம்பாடி 42 ,தேவி மங்கலம் 19.8, சமயபுரம் 22.4, சிறுகுடி 20.2, வாத்தலை அணைக்கட்டு 18, மணப்பாறை 13.4 , பொன்னணி ஆறு அணை 13, கோவில்பட்டி 17.2 , மருங்காபுரி 4.2, முசிறி 2, புலிவலம் 5, தாப்பேட்டை 5, நவலூர் கொட்டப்பட்டு 16, துவாக்குடி 24, கொப்பம்பட்டி 3, தென்பர நாடு 10, துறையூர் 10, பொன்மலை 15, திருச்சி ஏர்போர்ட் 24.4, திருச்சி ஜங்ஷன் 26.6, திருச்சி டவுன் 18 என மழை அளவு பதிவானது.
மாவட்டம் முழுவதும் 419. 8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் சராசரி மழை அளவு 17.49 ஆகும்.
கரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வெங்கமேடு, சர்ச் கார்னர், தாந்தோணி மலை, காந்தி கிராமம், மாயனூர், தோகைமலை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் கன காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கரூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு, கரூர் 4, அரவக்குறிச்சி 1.20, அணைப்பாளையம் 2, குளித்தலை 9.60, தோகைமலை 23.20, கிருஷ்ணராயபுரம் 8.40, மாயனூர் 7, பஞ்சப்பட்டி 10.40, கடவூர் 4, பாலவிடுதி 6, மைலம்பட்டி 8 மி.மீ மழையும், மாவட்டம் முழுவதும் 83.80 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆவுடையார் கோவில் 74.80, மணமேல்குடி 44.40, மீமிசல் 40.60, கீரனூர் 35.40, பெருங்களூர் 34, விராலிமலை 34, நாகுடி 33.60, அன்னவாசல் 33.20, அறந்தாங்கி 33.20, கந்தர்வகோட்டை 32.60, ஆலங்குடி 27.20, ஆதனகோட்டை 27, ஆயின்குடி 26.20, புதுக்கோட்டை 24.60, கறம்பக்குடி 21.50, இலுப்பூர் 20, திருமயம் 18.50, உடையாளிபட்டி 15.20, அரிமளம் 15, மழையூர் 14, பொன்னமராவதி 14, கரையூர் 12.60, குடுமியான் மலை 12.40, கீழாநிலை 8.30.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 652.30 மில்லி மீட்டர் மழை பத்வாகி உள்ளது. இதன் சராசரி 27.18 ஆகும்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை தொடர்ந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜெயங்கொண்டத்தில் 54.8 மி.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் குருவாடி 41, திருமானூர் 37.2, செந்துறை 36.6, சித்தமலை டேம் 34, அரியலூர் 25, தா.பழூர் 13.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 266.4 மி.மீ.மழை பெய்துள்ளது. இதன் சராசரி 33.30 ஆகும்.
- குளம் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுவதாகவும் குடி நீர் கலங்கலாக வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
- வீடு, வீடாக சென்று குடிநீர் கலங்கலாக வருகிறதா என ஆய்வு செய்தனர்.
திண்டிவனம்:
கடந்த 30-ந் தேதி ஃபெஞ்ஜல் புயல் கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பொழிவை சந்திக்க நேரிட்டது.
விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டி போடும் அளவிற்கு கொட்டி தீர்த்த அதிகன மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டோக்கன் வழக்கப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுவருகிறது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்படாத இடங்களில் உள்ள வீடுகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது, அதே சமயம் வெள்ளதால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வரும் இந்த குளறுபடிகள் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண நிதி கிடைக்காத பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டிவனம் அருகே உள்ள மேல்பேரடிக்குப்ப கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களுக்கு நிவாரண வழங்க கோரியும், நிவாரண வழங்காததை கண்டித்தும் ஆத்திரமடைந்த அந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மேல் பேரடிக் குப்பம் குளம் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுவதாகவும் குடி நீர் கலங்கலாக வருவதாகவும் குற்றம் சாட்டினர். திருவண்ணாமலை செல்லும் சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டு வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் திண்டிவனம் தாசில்தார் சிவா, டி.எஸ்.பி. பிரகாஷ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும் வீடு, வீடாக சென்று குடிநீர் கலங்கலாக வருகிறதா என ஆய்வு செய்தனர். இந்த மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
- பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் வசதி நிறைவேற்றப்பட்டு வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதேபோல் கல்லாபுரம், ராம்குளம், வாய்க்கால்கள் மூலமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
இதன்மூலம் அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் வசதி நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் நூற்றுக்கணக்கான கிராம பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த அணையில் 4.04 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
இன்று காலை அணையின் நீர்மட்டம் 87.60 அடியாக உள்ள நிலையில், அப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு 372 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது அணையில் இருந்து 953 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- சாலைகளில் காட்டு பன்றி ஒன்று தனது குட்டியுடன் உலா வந்தது.
- குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி உள்ளது.
அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூர் நகர பகுதியிலான திருவிக நகர், கோவிந்தசாமி நகர் ஆகிய குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சாலைகளில் குட்டிகளுடன் உலா வந்த வண்ணம் உள்ளன.
அதனை தொடர்ந்து நேற்று இரவும் திருவிக நகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் காட்டு பன்றி ஒன்று தனது குட்டியுடன் உலா வந்தது.
அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனத்தை இயக்கி சென்றனர். எனவே ஊருக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடரும் கனமழையால் முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் ஃபெஞ்ஜல் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீண்டு வராத நிலையில், கனமழை நீடிக்கும் என்ற தற்போதைய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.
மழை பாதிப்புக்கு பின்பு, வரலாறு காணாத மழை, கணித்ததை விட அதிகளவிலான மழைப்பொழிவு என காரணத்தை தேடாமல், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.
எனவே, ஆற்றங்கரையோரம், தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, முறையான எச்சரிக்கைக்கு பின்னரே அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒரு கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்றிருப்பது இதுவே முதல் முறை.
- தமிழ்நாடு அரசில் மொத்தம் 55 துறைகள் உள்ளன.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் இதுவரை இல்லாத வகையில் இரு நாட்கள் மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. விடுதலைக்கு பிந்தைய தமிழக சட்டப்பேரவையின் 72 ஆண்டு கால வரலாற்றில், சிறப்புத் தீர்மானங்களை நிறைவேற்றும் நோக்குடன் ஒரு நாள் மட்டும் கூட்டப்பட்ட கூட்டங்களைத் தவிர, ஒரு கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்றிருப்பது இதுவே முதல் முறை.
அதேபோல், நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக 18 நாட்களுக்கு மட்டும் தான் பேரவைக் கூடியிருக்கிறது. கடந்த 72 ஆண்டுகளில் மிகக்குறைந்த நாட்களுக்கு சட்டப்பேரவை நடைபெற்ற ஆண்டும் இது தான்.
தமிழ்நாடு அரசில் மொத்தம் 55 துறைகள் உள்ளன. அவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது வெறும் 8 நாட்களில் விவாதம் நடத்தப்பட்டால், அது எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும்? ஆண்டுக்கு வெறும் 14 நாட்கள் மட்டுமே விவாதம் நடத்தப்பட்டால் 234 தொகுதிகளின் உறுப்பினர்களும் தங்கள் தொகுதியின் பிரச்சனைகள் குறித்தும் எந்த அளவுக்கு பேச முடியும்? என்ற அக்கறை திமுக அரசுக்கு சிறிதும் கிடையாது. அதிக நாட்களுக்கு அவைக் கூட்டம் நடைபெற்றால் தாங்கள் அதிக அளவில் அம்பலப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மிகக்குறைந்த நாட்களுக்கு அவையை நடத்துகிறது.
சட்டப்பேரவைகள் தான் ஜனநாயகத்தின் நாற்றங்கால்கள். அங்கிருந்து தான் ஜனநாயகம் தழைக்க வேண்டும். ஆனால், நாற்றங்கால்களையே கருகச் செய்து ஜனநாயகத்தை வளர விடாமல் அழிக்கும் பணியைத் தான் தி.மு.க. அரசு செய்கிறது. அனைத்தையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில், சரியான முறையில், சரியான தண்ட னையை அவர்கள் தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளிவரும் ரசாயனங்களால் மாவட்டம் முழுவதும் உள்ள 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து நிலம் எடுப்பு முயற்சிகளையும் விட முதன்முதலில் எதிர்க்கப்பட வேண்டியது என்.எல்.சி சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டம் தான். அங்கு தான் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமான கொடுக்கக்கூடிய, ஏக்கருக்கு ரூ.2 கோடி விலை பெறக்கூடிய நிலங்கள் என்.எல்.சி.க்காக அடிமாட்டு விலைக்கு பறிக்கப்படுகின்றன.
நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளிவரும் ரசாயனங்களால் மாவட்டம் முழுவதும் உள்ள 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளிக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டாவுக்கும், மேலூருக்கும் ஆதரவாக வீராவேசம் காட்டுவதில் இருந்தே அவருடைய மாற்றாந்தாய் மனப்பான்மையை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால், நானும் டெல்டாக்காரன், மேலூருக்கு சிக்கல் என்றால் பதவி விலகுவேன் என்று முழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வட மாவட்டங்கள் என்றால் மட்டும் வன்மத்துடன் நடந்து கொள்வது சரியல்ல. டங்ஸ்டன் சுரங்கமாக இருந்தாலும், என்.எல்.சி நிறுவனமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். என்.எல்.சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் முழுவதையும் மீண்டும் உழவர்களுக்கே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சரத் பவாருக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
- நல்ல உடல்நலத்துடனும் வலுவோடும் தாங்கள் திகழ விழைகிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். பொதுவாழ்விலும் நாட்டின் வளர்ச்சியிலும் தங்களது அளப்பரிய பங்களிப்புகள் பெரும் ஊக்கமாக விளங்குகின்றன. தங்களது சீரிய தலைமை தொடர, நல்ல உடல்நலத்துடனும் வலுவோடும் தாங்கள் திகழ விழைகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியது.
- நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பின் அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பூண்டி அணையின் நீர்மட்டம் 34.05 அடியை எட்டிய நிலையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியது.
அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி நிலவரப்படி பூண்டி அணைக்கான நீர்வரத்து 1,290 கனஅடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பிற்பகல் 1.30-க்கு 1000 கனஅடி உபரிநீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் நீர்திறப்பு படிப்படியாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பின் அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பூண்டி நீர்தேக்கத்தில் நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆட்ராம்பாக்கம், ஒத்தப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரத்தில வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குப்பம், மணலி, இடையான்சாவடி, எண்ணூர், வெள்ளிவாயல்சாவடி உள்ளிட்ட தாழ்வான பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கடலுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தனுஷ்கோடியில் கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
ராமநாதபுரம்:
தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாநிலம் முழுவதும் பெரும் பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
கடலோர பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. ராமநாதபுரம் நகர், பரமக்குடி, திருப்புல்லாணி, தொண்டி, ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையும் சாரல் மழை பெய்தது.
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தொடர் சாரல் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளித்து கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் உத்தரவிட்டார்.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்- 24
மண்டபம்- 11.80
ராமேசுவரம்- 8.50
திருவாடானை- 35.60
தொண்டி- 38.20
வட்டாணம்- 32.20
பரமக்குடி- 32.40
வாலிநோக்கம்- 24.60
மாவட்டத்தில் பெய்த மொத்த மழையின் அளவு 349.20 மில்லி மீட்டர் ஆகும்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்து வருகிறது. சிவகங்கை நகர், காளையார்கோவில், தேவகோட்டை, கல்லல், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காலையில் தொடர்ந்து மழை பெய்ததால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என பெற்றோர்கள் எதிர் பார்த்தனர். ஆனால் 9 மணி வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு காரணமாக பள்ளிக ளுக்கு விடுமுறை அளிக்கப் படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் மழை யில் நனைந்தபடி பள்ளி களுக்கு சென்றனர். பொது மக்கள் தொடர் மழை கார ணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
புயல் காரணமாக சிவ கங்கை மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையிலும் மாவட்ட நிர்வா கம் குளறுபடியால் பள்ளி களுக்கு விடுமுறை அறி விப்பு வெளியிடவில்லை. அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் கொட்டும் மழையிலும் மாணவ-மாணவிகள் நனைந்தே செல்கின்றனர். தற்பொழுது பருவநிலை காரணமாக காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவி வருகிறது. தற்பொழுது மாணவ மாணவிகள் மழை யில் நனைந்தபடி பள்ளி களுக்கு செல்வதால் தொற்று நோய் பரவுமோ என அச்சமடைந்துள்ளனர்.
விருதுநகர், மதுரை மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிதமான முதல் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிக ரித்தது. சிவகாசியில் மழை காரணமாக பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டது. மதுரையில் காலை 8 மணி முதல் தொடர்ந்து மழை பெய்ததால்மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
- கோவிலில் அமாவாசை நாளில் நடைபெறும் பூஜை விசேஷமானது.
- கும்பாபிஷேகத்தை காண இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சயனகோலத்தில் காட்சி அளிப்பதால் இங்கு வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்த கோவிலில் அமாவாசை நாளில் நடைபெறும் பூஜை விசேஷமானது. இதனால் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபடுவார்கள். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இத்தகைய சிறப்புமிக்க மாசாணியம்மன் கோவிலில் கடைசியாக கடந்த 2010 டிசம்பர் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து 14 ஆண்டுகள் ஆனதைத்தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 6-ந் தேதி விக்னேஷ்வர பூஜையும் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து பிரமாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலை மண்டபத்தில் யாக பூஜைகளும் தொடங்கி நடந்து வந்தது. கோபுரம் மற்றும் விமானங்களில் பொருத்துவதற்காக 52 புதிய கும்பங்கள் தயார் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் நடந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. காலை 7.35 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், 8.45 மணிக்கு பூர்ணாகுதி பூஜையும் நடந்தது. தொடர்ந்து 9.15 மணிக்கு மாசாணியம்மன் கோவில் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு கோவில் அர்ச்சகர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். கும்பாபிஷேகம் நடந்தபோது அம்மா தாயே மாசாணி என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தின் போது மழை தூறிக்கொண்டே இருந்தது. ஆனால் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் கும்பாபிஷேகத்தை கண்டு ரசித்தனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை காண இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர். அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. கோவை, பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 1100 போலீசார், 500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு கண்காணித்தனர். மருத்துவக்குழுவினர், தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனைமலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக 14 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.






