என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் உடுமலை அமராவதி அணை
- வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
- பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் வசதி நிறைவேற்றப்பட்டு வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதேபோல் கல்லாபுரம், ராம்குளம், வாய்க்கால்கள் மூலமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
இதன்மூலம் அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் வசதி நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் நூற்றுக்கணக்கான கிராம பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த அணையில் 4.04 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
இன்று காலை அணையின் நீர்மட்டம் 87.60 அடியாக உள்ள நிலையில், அப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு 372 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது அணையில் இருந்து 953 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.






