என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

என்.எல்.சி.க்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுக்காதது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி
- நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளிவரும் ரசாயனங்களால் மாவட்டம் முழுவதும் உள்ள 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து நிலம் எடுப்பு முயற்சிகளையும் விட முதன்முதலில் எதிர்க்கப்பட வேண்டியது என்.எல்.சி சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டம் தான். அங்கு தான் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமான கொடுக்கக்கூடிய, ஏக்கருக்கு ரூ.2 கோடி விலை பெறக்கூடிய நிலங்கள் என்.எல்.சி.க்காக அடிமாட்டு விலைக்கு பறிக்கப்படுகின்றன.
நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளிவரும் ரசாயனங்களால் மாவட்டம் முழுவதும் உள்ள 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளிக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டாவுக்கும், மேலூருக்கும் ஆதரவாக வீராவேசம் காட்டுவதில் இருந்தே அவருடைய மாற்றாந்தாய் மனப்பான்மையை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால், நானும் டெல்டாக்காரன், மேலூருக்கு சிக்கல் என்றால் பதவி விலகுவேன் என்று முழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வட மாவட்டங்கள் என்றால் மட்டும் வன்மத்துடன் நடந்து கொள்வது சரியல்ல. டங்ஸ்டன் சுரங்கமாக இருந்தாலும், என்.எல்.சி நிறுவனமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். என்.எல்.சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் முழுவதையும் மீண்டும் உழவர்களுக்கே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






