என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க உள்ளனர்.
    • கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க உள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டி உள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

     

    அந்தந்த ஏரியாவில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வரும் டோக்கனில் எப்போது பொருட்கள் வாங்க வர வேண்டும் என்பதை நாள் நேரம் குறிப்பிட்டு எழுதி கொடுக்கின்றனர்.

    டோக்கன் வழங்கும் பணியை 4 நாட்களுக்குள் முடித்து தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இதற்கிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பை வினியோகம் செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார். இதில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ரேஷனில் பொதுக்களுக்கு கரும்பு வழங்கும்போது கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழுக் கரும்போடு, அப்படியே வழங்க வேண்டும் என்றும் தரமான பச்சரிசி, சர்க்கரை வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இதற்கிடையே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு டோக்கன் வழங்குவதற்கு பதிலாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்ப அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

    இதன் மூலம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அலைச்சல் மிச்சமாவது மட்டுமின்றி கடைகளில் பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு வெளியே செல்வது தவிர்க்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    • அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
    • சோதனையை அடுத்து வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமைச்சர் துரைமுருகன் வீடு, அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதோடு வேலூரில் எம்.பி. கதிர் ஆனந்த் வசிக்கும் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கும்பலிடம் இருந்து 5 நாட்டுத்துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலோடு தொடர்பு வைத்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னையில் போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுக்க தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதவரத்தில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்ப்டடனர். இவர்கள் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்ததாகவும் தெரிய வந்தது.

    இந்நிலையில் மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கும்பலிடம் இருந்து 5 நாட்டுத்துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 5 நாட்டு துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள், 4 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

    இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலோடு தொடர்பு வைத்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    போதைப்பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த பெரும்பாக்கம் ராஜா, சத்யசீலன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    போதைப்பொருள் விற்பனை மட்டுமின்றி ஆயுதங்கள் விற்பனையிலும் ஈடுபட்டார்களா? எங்கிருந்து துப்பாக்கி வாங்கினர் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும்.
    • முழு விளக்கத்தையும் அமைச்சர் தர வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு தனியார்ப் பள்ளிகள் சங்கத்தின் துவக்க விழாவில், தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார்ப் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானத்திற்கு வரவேற்றுப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்துக்கு தேமுதிக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தேசிய கல்விக் கொள்கையில் ஒன்றான அரசு பள்ளிகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநில கல்வி உரிமைகலைப் பாதுகாத்திடும் அரசாக இந்த அரசு இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்குத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சாப்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார்ப் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார்ப் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைப் பலப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசுப்பள்ளிகளைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்களுக்குத் தாரைவார்க்க நினைப்பது, தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.

    அரசு பள்ளிகளைத் தனியார் மயமாக்கப்படும் என்பது வீணான வதந்தி என்று அமைச்சர் அன்பில் மகேஷ் சப்பை கட்டுக் காட்டினாலும் இதன் உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். இல்லை என்றால் இந்த வதந்தி உண்மையாகக் கூடும் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகமாக இருக்கிறது. எனவே இதற்கான முழு விளக்கத்தையும் அமைச்சர் தர வேண்டும். எனவே தமிழக அரசு தனியார்ப் பள்ளிகளின் தரத்திற்குச் சமமாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    • விபத்துக்குள்ளான டேங்கரில் கியாசை பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள பழைய மேம்பாலம் நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கி வருகிறது.

    கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக தான் ரெயில்கள் அனைத்தும் சென்று வரும். ரெயில்கள் எளிதில் சென்று வரும் வகையிலும், வாகனங்கள் அந்த இடத்தை கடந்து செல்லும் வகையிலேயே அந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    மேம்பாலத்தை சுற்றி நாலா புறமும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், ஆலயங்கள் என ஏராளமான உள்ளன. இந்த மேம்பாலத்தை தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு கொச்சியில் இருந்து கோவைக்கு சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது. 18 டன் சமையல் கியாசை ஏற்றிக்கொண்டு வந்த அந்த லாரி, பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள கியாஸ் சிலிண்டர் பிரித்தனுப்பும் நிலையத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது.

    உக்கடத்தில் இருந்து வந்த டேங்கர் லாரி அவினாசி சாலை மேம்பாலம் வழியாக வந்து மேம்பாலத்தை கடக்க முயன்றது. லாரி மேம்பாலத்தின் மத்தியில் உள்ள ரவுண்டானாவை சுற்றி வந்தது. அப்போது திடீரென லாரியில் ஆக்சில் துண்டாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. நிலைதடுமாறிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    லாரியில் கியாஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் டேங்கர் கழன்று தனியாக விழுந்தது. விழுந்த வேகத்தில் சிலிண்டரின் கியாஸ் கசிவு ஏற்பட்டது. லாரியை ஓட்டிய டிரைவர் கீழே குதித்து தப்பினார். இதுபற்றி விவரம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். கியாஸ் கசிந்து கொண்டே இருந்ததால் பதட்டம் ஏற்பட்டது. சிறு தீக்கங்கு அங்கு விழுந்ததாலோ, சூரிய ஒளி பட்டு விட்டாலோ டேங்கர் வெடித்து பெரும் சேதம் ஏற்படும் அபாயம் நிலவியது.

    இதனால் முதற்கட்டமாக சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவை நிறுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன. மாநகராட்சி சார்பில் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. கியாஸ் டேங்கரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அதனை குளிர்விக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆகியோர் நேரில் வந்து பணிகளை துரிதப்படுத்தினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பின் டேங்கர் லாரியில் ஏற்பட்ட கசிவை ஊழியர்கள் நிறுத்தினர்.

    மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மேம்பாலத்துக்குள் பொதுமக்கள் யாரும் வராமல் இருக்க நாலாபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பாலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உஷார்படுத்தப்பட்டனர். 500 மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அந்த பகுதியில் உள்ள 37 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    இதற்கிடையே விபத்துக்குள்ளான டேங்கரில் கியாசை பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக திருச்சியில் இருந்து மீட்பு டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு உள்ளது. அந்த லாரியில் விபத்துக்குள்ளான டேங்கரில் இருந்து கியாசை நிரப்பி அப்புறப்படுத்த ஏற்பாடுகள் நடந்தது.

    இந்த சம்பவம் கோவையில் இன்று பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தென்காசியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
    • போராட்டத்தில் பங்கேற்பவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக பஸ்களும் முன்னேற்பாடாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்தன.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    எனினும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பா.ம.க.வினர் நேற்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே குவிந்தனர். போராட்டத்திற்கு வந்திருந்தவர்களை விட 2 மடங்கு போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், போராட்டத்தில் பங்கேற்பவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக பஸ்களும் முன்னேற்பாடாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்தன.

    இதற்கிடையே ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு சவுமியா அன்புமணி காலை 10.45 மணியளவில் காரில் வந்தார். அவர் காரைவிட்டு இறங்கியவுடன் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாநில பொருளாளர் திலகபாமா உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட பா.ம.க.வினர் நுங்கம்பாக்கத்தில் ஒரு சமுதாயநலக் கூடத்திலும், திருவல்லிக்கேணியில் ஒரு சமுதாயநலக் கூடத்திலும் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    • மதுரை சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையம் செல்லாது.
    • சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20628), அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

    சென்னை:

    திருச்சி - திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), இன்று (வெள்ளிக்கிழமை), 6, 8, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். மதுரை சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையம் செல்லாது.

    * கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயில் (12666), நாளை (சனிக்கிழமை) மற்றும் 11-ந்தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.

    * எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), வரும் 7, 11 ஆகிய தேதிகளில் திருச்சி- மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 7-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

    * எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும்.

    * நாகர்கோவிலில் இருந்து வரும் 9, 11 ஆகிய தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20628), அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 மாடி கட்டிடம் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
    • தீவிபத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த பல்வேறு உபகரணங்கள், மின்சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநோயாளிகளாக தினமும் சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 மாடி கட்டிடம் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2-வது மாடியில் பேட்டரி, இன்வெர்ட்டர் வைக்கப்பட்டு இருந்த அறையில் திடீரென தீப்பிடித்தது. ஒயர்களில் தீப்பற்றி மளமளவென தீ பரவிக்கொண்டே சென்றது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

    உடனே 2-வது தளத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். புகை மூட்டத்தில் சிக்கிய சில நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள், நர்சுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    புகைமூட்டம் 3-வது மற்றும் 4-வது தளங்களுக்கும் பரவியது. இதனால் அங்கிருந்தவர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். முண்டியடித்துக் கொண்டு ஓடியதால் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி முழுவதும் இருள் சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்களுடன் இணைந்து செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர். மறுபுறம் தீயை அணைக்கும் பணியும் தீவிரமாக நடந்தது.

    சம்பவம் குறித்து அறிந்த ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அதிரடிப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டு, துரிதமாக செயல்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.

    சற்று நேரத்தில் தீ மற்றும் புகை பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர். அதன்பின்னரே அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது.

    பேட்டரி வைக்கப்பட்டு இருந்த பகுதியில் புகைமூட்டம் வெளியேற நேரமானதால் அந்த பகுதிகளில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியேற்றினர்.

    இதுகுறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ஆகியோர் கூறுகையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தானியங்கி தீயணைப்பான் உடனடியாக இயங்கியதால் பெரும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மீட்பு படையினரும் தீயை வேகமாக கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்துவிட்டனர். நோயாளிகள் மாற்று இடத்திற்கு உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டனர் என்றனர்.

    இந்த தீவிபத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த பல்வேறு உபகரணங்கள், மின்சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக இன்வெர்ட்டர் அறையில் இருந்த 25-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் கருகிவிட்டன. சேத விவரம் குறித்து விசாரணை நடத்து வருகிறது.

    • வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுகிறது.
    • தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45,855 கோடி வருவாய் கிடைக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளுடன் இணைந்த நிலையில் 2,919 மது அருந்தும் பார்களும் இருக்கின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுகிறது.

    அந்த வகையில், இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் 2 நாட்கள் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

    38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மேலாளர்கள் அந்தந்த பகுதிகளில் மது விற்பனை நிலவரத்தை தெரிவித்த நிலையில், சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை ஆகிய 5 மண்டல மேலாளர்கள் விற்பனை விவரத்தை வெளியிடவில்லை. இதேபோல், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்தும் புத்தாண்டு மது விற்பனை தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

    இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, துறையின் அமைச்சர் (செந்தில் பாலாஜி) புத்தாண்டு மது விற்பனை தொடர்பாக எந்தவித தகவலையும் வெளியிட்டுவிடக்கூடாது என்று உத்தரவு போட்டிருப்பதாக தெரிவித்தார்.

    ஆனாலும், டிசம்பர் 31, ஜனவரி 1-ந்தேதிகளில் சுமார் ரூ.430 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது புத்தாண்டு மது விற்பனையில் தமிழ்நாடே முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, தெலுங்கானாவில் ரூ.402 கோடிக்கும், ஆந்திராவில் ரூ.328 கோடிக்கும், கர்நாடகாவில் ரூ.308 கோடிக்கும், கேரளாவில் ரூ.108 கோடிக்கும் (டிசம்பர் 31-ந்தேதி மட்டும்), புதுச்சேரியில் ரூ.50 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45,855 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆயத்தீர்வை மற்றும் கலால் வரிகள் மூலம் இந்த அளவுக்கு பணம் கிடைக்கிறது என்றாலும், தமிழக அரசு வாங்கியுள்ள கடனுக்கு ஆண்டு வட்டித் தொகைக்கு கூட இந்தப் பணம் போதுமானது அல்ல.

    அதாவது, தமிழக அரசு வாங்கியுள்ள கடனுக்கு வட்டியாக ரூ.63,722 கோடியை ஆண்டுதோறும் கட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த இடத்தில் கேரளா, கர்நாடகம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
    • தமிழகத்தில் வாகனங்கள் பதிவில் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதலிடத்தில் உள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் 1,373 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு (2024) மட்டும் 2 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023-ம் ஆண்டு 2.40 கோடியாகவும், 2022-ம் ஆண்டு 2.15 கோடியாகவும், 2021-ம் ஆண்டு 1.89 கோடியாகவும் உள்ளன.

    அதேபோல் வாகன பதிவு உள்ளிட்ட பரிமாற்றங்கள் மூலம் அரசுக்கு ரூ.98 ஆயிரத்து 494 கோடியே 99 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டான 2023-ம் ஆண்டு ரூ.87 ஆயிரத்து 670 கோடி வருமானம் வந்திருந்தது.

    தேசிய அளவில் வாகன பதிவில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதன்பின் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடக, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

    ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனப்பதிவு, வாகனப்பதிவை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளில் அதிக பரிமாற்றங்கள் என்ற அடிப்படையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 98 லட்சத்து 47 ஆயிரத்து 334 பரிமாற்றங்கள் நடந்துள்ளன. அடுத்த இடத்தில் கேரளா, கர்நாடகம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

    வாகனங்கள் பதிவு உள்ளிட்டவை மூலம் வருமானம் ஈட்டியதில் வாகனங்கள் முதல் இடத்திலும், 2-வது இடத்தில் கர்நாடகமும், 3-வது இடத்தில் தமிழகமும், 4-வது இடத்தில் உத்தரபிரதேசமும், 5-வது இடத்தில் கேரளாவும் உள்ளன. இந்த பட்டியலின்படி, நாட்டிலேயே தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

    தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 148 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. அதில் கடந்தாண்டு (2024) 19 லட்சத்து 53 ஆயிரத்து 513 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-ம் ஆண்டு 18.26 லட்சமும், 2022-ம் ஆண்டு 17 லட்சமும், 2021-ம் ஆண்டு 15.15 லட்சமும் பதிவாகி இருக்கின்றன. அதேபோல் தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.10 ஆயிரத்து 76 கோடியே 64 லட்சம் வருவாய் இருந்தது. இது முந்தைய ஆண்டினை (2023) விட 33.29 சதவீதம் ஆகும். கடந்த 2023-ம் ஆண்டு ரூ.7 ஆயிரத்து 560 கோடியும், 2022-ம் ஆண்டு ரூ.6 ஆயிரத்து 449 கோடியும், 2021-ம் ஆண்டு ரூ.5 ஆயிரத்து 10 கோடியும் வருவாய் இருந்தது.

    தமிழகத்தில் வாகனங்கள் பதிவில் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் பூந்தமல்லி, 3-ம் இடத்தில் கோவை வடக்கு, 4-வது இடத்தில் தாம்பரம், 5-வது இடத்தில் கோவை தெற்கு உள்ளது. ஆனால் அதேநேரத்தில் வருவாய் ஈட்டி தருவதில் சென்னை மேற்கு முதலிடத்திலும், 2-வது இடத்தில் சென்னை தெற்கு, 3-வது இடத்தில் சென்னை மத்தியம், 4-வது இடத்தில் தாம்பரம், 5-வது இடத்தில் பூந்தமல்லி ஆகிவையும் இருக்கின்றன.

    • இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது.
    • மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்க காரணம் என்றார் சவுமியா அன்புமணி.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க. சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களை கைதுசெய்த போலீசார் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். மாலை 6 மணிக்கு சவுமியா மற்றும் அவரோடு கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் விடுவித்தனர்.

    இந்நிலையில், சவுமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    எங்களை கைது செய்ய முதல் ஆளாக வருகிறார்கள். எங்களை கைது செய்ய வந்த காவல்துறை பெண் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாமே.

    பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

    வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டிலும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. எங்கள் குழந்தைகளை எப்படி வெளியே அனுப்புவது? உங்களுக்கும் பெண் குழந்தை உள்ளது.

    இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது.

    எங்கள் போராட்டத்தால் தான் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மறுபடி மறுபடியும் குற்றம் செய்யக்கூடிய மனநோயாளி ஞானசேகரன். இதுவரை ஏன் குண்டர் சட்டத்தில் அவரை அடைக்க வில்லை.

    மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்க காரணம் என தெரிவித்தார்.

    ×