என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புதிய விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
- வியாழன், ஞாயிறு ஆகிய இரு நாட்களில் விமான சேவை இயக்கப்படுகின்றன.
கே.கே.நகர்:
திருச்சியிலிருந்து சவூதி அரேபியாவிற்கு புதிய விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
வார நாள்களில் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் திருச்சி-தமாம் இடையே விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
அட்டவணையின்படி, திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்குப் புறப்பட்டு (அங்குள்ள நேரப்படி) காலை 9.10 மணிக்கு தமாம் சென்றடையும் விமானம் மறு மாா்க்கத்தில் தமாம் கிங் பஹத் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து (அந்த நாட்டு நேரப்படி) காலை 10.10 மணிக்கு விமானம் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.
திருச்சி-தமாம் இடையிலான முதல் பயணத்தில் 123 போ் பயணித்தனா். ஞாயிற்றுக்கிழமை செல்ல இதுவரையில் 130 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
திருச்சியிலிருந்து, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபை, சாா்ஜா என இதுவரை மொத்தம் 10 சா்வதேச நகரங்களுடன் விமான போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது 11-ஆவது நகரமாக தமாம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமாம் ஒரு தொழில்துறை மையமாக இருப்பதால், இந்தியாவின் சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையிலும், இந்த விமான சேவை முக்கியத்துவம் பெறும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர்.
- பை-பாஸ் சாலையில் வந்த வாகன ஓட்டிகள் காலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை கனமழையாக கொட்டியது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நீர் நிலைகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் வழக்கத்தை விட இந்தாண்டு அதிக அளவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்தது. மேலும் பனி பொழிவு அதிகரிப்பால் மரங்கள், செடி, கொடிகளில் பனிகள் படர்ந்து வெள்ளை நிறத்தில் முத்துக்கள் போல காட்சி அளிக்கிறது.
குறிப்பாக ஏற்காட்டில் ஏற்கனவே கடும் குளிர் நிலவி வந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு மேலும் அதிகரித்து அது காலை 11 மணி வரை நீடிப்பதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள். குளிரில் இருந்து தப்பிக்க குளிர் தாங்கும் உடைகளை அணிந்து நடமாடுகின்றனர்.
மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் நடப்பாண்டில் அதிக அளவில் உள்ளதால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் குளிரில் தவித்து வருகிறார்கள்.
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக குளிர்ச்சி யான சீதோஷ்ண நிலை நிலவி வந்த நிலையில் நேற்று இரவு பனிப்பொழிவு மேலும் அதிகரித்தது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து பொதுமக்களை வாட்டியது. இதனால் பெரும்பாலான வீடுகளில் நேற்றிரவு மின் விசிறிகளை நிறுத்தி விட்டு போர்வைகளை போர்த்தியபடியே மக்கள் தூங்கினர். மேலும் இன்று அதிகாலை முதல் இரு சக்கர வாகனங்களில் வெளியில் சென்றவர்கள் கடும் குளிரால் நடுங்கினர்.
இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குளிச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் காலை நேரங்களில் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. வெயில் அடித்த பிறகும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே நிலவியதால் மக்கள் தவித்தனர். மாவட்டம் முழுவதும் கடும் பனிமூட்டமும் நிலவியது. இதனால் பை-பாஸ் சாலையில் வந்த வாகன ஓட்டிகள் காலை நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர்.
- சில ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
- கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர்:
வேலூர் காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளது.
மேலும் ஆந்திர எல்லையோரம் உள்ள கிறிஸ்டியான் பேட்டையில் கிங்ஸ்டன் என்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரிக்கு வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடு மற்றும் கல்லூரியில் சோதனையை தொடங்கினர்.
அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரி கதவுகள் மூடப்பட்டன. 2 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன்.
இவர் காட்பாடி அடுத்த பள்ளி குப்பத்தில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் இவரது உறவினருக்கு சொந்தமான சிமெண்டு குடோன் பகுதிகளிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர். இந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் நடந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரியில் இருந்து சில ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோதனை நடந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டார்.
அப்போது காட்பாடி காந்திநகரில் உள்ள அவர்களின் வீடு. கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம், சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து வள்ளிமலை சாலை பள்ளிக்குப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, பள்ளிக்குப்பத்தில் உள்ள அவரது சகோதரி விஜயா வீடு, சிமெண்ட் கிடங்கு, அதற்கு அடுத்த தெருவில் உள்ள தி.மு.க பிரமுகர் தாமோதரன் வீடு, வஞ்சூர், செங்குட்டை, கோட்டநத்தம் ஆகிய இடங்களில் உள்ள தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி விஜயாவின் சிமெண்ட் குடோனில் இருந்து சாக்கு மூட்டை, அட்டைப் பெட்டிகள், துணிப்பைகளில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை அனைத்தும் 200 ரூபாய் கட்டுகளாக இருந்தது. ஒவ்வொரு கட்டிலும் ஊரின் பெயர், வார்டு எண்கள் எழுதப்பட்டி ருந்ததால் இந்தப் பணம் தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கைப்பற்றப்பட்ட நோட்டுகள் அனைத்தும், வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் எந்திரத்தை வரவழைத்து எண்ணப்பட்டன. மொத்தம் ரூ.11.51 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட துரைமுருகன் வீடு, கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் குடோன் ஆகிய இடங்களில் இன்று அமலாக்க துறையினர் சோதனையை நடத்தினர்.
தேர்தலில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
காட்பாடியில் இன்று காலை 4 இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் வீட்டு முன்பு சுமார் 500-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.
அதேபோன்று அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
- சலீம் வீட்டிலிருந்து வெளியே சென்று இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்து திருடமுயன்றோம்.
- தலைமறைவாகியுள்ள சேர்மதுரையை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் ரஹ்மத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 58). இவரது மகன் மஸ்கட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மகனை பார்ப்பதற்காக கடந்த வாரம் சலீம் தனது குடும்பத்தினருடன் மஸ்கட்டுக்கு சென்றார்.
சலீம் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வைத்திருந்தார். கடந்த 31-ந்தேதி நள்ளிரவு வெளிநாட்டில் இருந்தபடியே தனது செல்போனில் உள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை சலீம் ஆய்வு செய்தார்.
அப்போது மர்மநபர்கள் 2 பேர் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று திருடி கொண்டிருந்தனர். இதை பார்த்த சலீம் இது குறித்து பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் திருடன்... திருடன்... என கூச்சலிடவே அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதில் 2 பேரின் உருவங்கள் தெளிவாக பதிவாகி இருந்தது.
அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதில் இருந்த ஒருவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் சேர்மத்துரை என்பது தெரியவந்தது. இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ஜெயலில் இருந்து வெளியே வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. மற்றொருவர் பணகுடியை சேர்ந்த முத்து (37) என்பது தெரியவந்தது.
இவர் மீது 5 திருட்டு வழக்குகள் உள்ளது. மேலும் கொள்ளை நடந்த வீட்டிலும் வெளியே ஒருவரும் நின்று கொண்டிருந்தது சி.சி.டி.வி.யில் தெரியவந்ததையடுத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் பணகுடியை சேர்ந்த வெட்டும் பெருமாள் (45) என்பதும் தெரியவந்தது. இவர் மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது.
போலீசார் 3 பேரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் முத்து, வெட்டும் பெருமாள் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாங்கள் ஜெயிலில் இருந்தபோது பாவூர்சத்திரத்தை சேர்ந்த சேர்மதுரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சேர்மதுரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார். 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் திட்டி நாகர்கோவிலுக்கு வந்தோம். நாகர்கோவிலில் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்க முடிவு செய்தோம். சலீம் வீட்டிலிருந்து வெளியே சென்று இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்து திருடமுயன்றோம்.
இதேபோல் பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் திருட முயன்றோம் என்று கூறினார்கள். கைது செய்யப்பட்ட முத்து, வெட்டும் பெருமாள் இருவரையும் ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள சேர்மதுரையை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது.
- இரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.
கோவை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தற்போது பனி கொட்டி தீர்த்து வருகிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் பனி கொட்ட தொடங்கி விடுகிறது. பின்னர் இது நள்ளிரவு நேரங்களில் மழை போல கொட்டி தீர்க்கிறது. காலையில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கோவை மாநகர போக்குவரத்து சாலைகளில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு மூடுபனியின் தாக்கம் உள்ளது. இதன்காரணமாக ரோட்டில் செல்லும் வாகனங்கள் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை தொடந்து அங்கு தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் கொட்டி தீர்த்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்களில் உறைபனி கொட்டி வருவதால், அங்கு பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும் மலர்கள் தற்போது கருக தொடங்கி உள்ளன.
மேலும் பூங்காக்களின் புல்வெளி பகுதிகளில் வெள்ளை கம்பளம் விரித்தது போல உறைபனி படிந்து காணப்படுகிறது. இதனால் பூங்கா புல்வெளியில் படிந்து கிடக்கும் உறைபனியில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது.இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் ஒருசில பயணிகள் வெம்மை ஆடைகளுடன் பூங்காக்களுக்கு வந்திருந்து அங்குள்ள பகுதிகளை சுற்றிப்பார்த்து செல்கின்றனர்.
நீலகிரியில் கொட்டி தீர்க்கும் உறைபனியால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரி மாணவிகள் ஆகியோர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.
மேலும்இரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.கோவை, நீலகிரி மாவட்டங்களில் பனிக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் வியாபார கடைகளில் கம்பளி, போர்வைகள் உள்ளிட்ட குளிர்கால ஆடை கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதேபோல சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலிலும் வைத்திருக்கிறது திமுக அரசு.
- திமுக அரசு, குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது, பொதுமக்களுக்குத் தெரிந்து விடும் என்ற பயமா?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி,
தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலிலும் வைத்திருக்கிறது திமுக அரசு.
இந்த திமுக ஆட்சியில், பாலியல் குற்றவாளிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஜனநாயக ரீதியில் போராட முற்படும் பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
திமுக அரசு, குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது, பொதுமக்களுக்குத் தெரிந்து விடும் என்ற பயமா? என்று கூறியுள்ளார்.
- விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினம்.
- வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
- நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,440-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,440-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080-க்கும் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,260-க்கும் விற்பனையாகிறது.
ஆங்கில புத்தாண்டு 3நாட்களே ஆகும் நிலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1200 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
02-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,440
01-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
31-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,880
30-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
29-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
02-01-2025- ஒரு கிராம் ரூ. 99
01-01-2025- ஒரு கிராம் ரூ. 98
31-12-2024- ஒரு கிராம் ரூ. 98
30-12-2024- ஒரு கிராம் ரூ. 100
29-12-2024- ஒரு கிராம் ரூ. 100
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 93.08 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டாவில் 13 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. இதனால் அணையில் தண்ணீர் கடல் போல் தேங்கி நிற்கிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 1871 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 1992 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டுஇருக்கிறது. இது தவிர நேற்று இரவு டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.08 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க உள்ளனர்.
- கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டி உள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

அந்தந்த ஏரியாவில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வரும் டோக்கனில் எப்போது பொருட்கள் வாங்க வர வேண்டும் என்பதை நாள் நேரம் குறிப்பிட்டு எழுதி கொடுக்கின்றனர்.
டோக்கன் வழங்கும் பணியை 4 நாட்களுக்குள் முடித்து தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதற்கிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பை வினியோகம் செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார். இதில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ரேஷனில் பொதுக்களுக்கு கரும்பு வழங்கும்போது கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழுக் கரும்போடு, அப்படியே வழங்க வேண்டும் என்றும் தரமான பச்சரிசி, சர்க்கரை வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதற்கிடையே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு டோக்கன் வழங்குவதற்கு பதிலாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்ப அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதன் மூலம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அலைச்சல் மிச்சமாவது மட்டுமின்றி கடைகளில் பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு வெளியே செல்வது தவிர்க்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
- அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
- சோதனையை அடுத்து வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் துரைமுருகன் வீடு, அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதோடு வேலூரில் எம்.பி. கதிர் ஆனந்த் வசிக்கும் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..






