என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.
- பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய மு.க.ஸ்டாலின் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.
பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய மு.க.ஸ்டாலின் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?
#யார்_அந்த_SIR என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் இதுபோன்ற "சார்"கள் காப்பாற்றப்படுவதால் தான், மேலும் பல "சார்"கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறு பாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும்.
- பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.
சென்னை:
தமிழக உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண், பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்), இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும் "தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறு பாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும்.
மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் வீதம், மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.
மேற்கண்ட அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு பதக்க அணிவகுப்பு விழாவில் முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் இன்று மேலும் ஒரு சிறப்பு ரெயிலை அறிவித்தது.
- இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்லும் தென் மாவட்ட பகுதி மக்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே ஏற்கனவே பல சிறப்பு ரெயில்களை அறிவித்து இயக்கி வருகிறது. ஆனாலும் ரெயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் இன்று மேலும் ஒரு சிறப்பு ரெயிலை அறிவித்தது.
எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இந்த ரெயில் இன்று இரவு 11.45 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், சென்ட்ரல் வழியாக கொச்சுவேலி சென்றடைகிறது. இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறது.
இந்த ரெயிலில் 3 அடுக்கு பெட்டிகள் 2-ம், இரண்டாம் படுக்கை வசதி பெட்டிகள் 2-ம், பொது 2-ம் வகுப்பு பெட்டிகள் 10-ம், 2-ம் வகுப்பு பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
- ரெயிலில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு குளிர் காய்ச்சலால் அவரது உடல் நிலை சோர்வடைந்தது.
- ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன். திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து ரெயிலில் திருச்சி சென்றார். நேற்று அதிகாலையில் ரெயிலில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு குளிர் காய்ச்சலால் அவரது உடல் நிலை சோர்வடைந்தது.
இதையடுத்து ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தேர்தல் அலுவரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி முஸ்தபா என தெரிய வந்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி வாங்க வந்திருப்பதாக கூறினார். எனினும் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தேர்தல் அலுவரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட குமலன்குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ. 1.22 லட்சம் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த பா.ம.க கவுன்சிலர் பப்லு உள்பட 3 பேர் என தெரியவந்தது. அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் வார்டில் உள்ள பொதுமக்களுக்கு வழங்குவதற்காக புத்தாடை வாங்க ஈரோடு வந்ததாக தெரிவித்தனர்.
எனினும் அவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஏற்கனவே அரசு ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் பணமும், லேத் பட்டறை உரிமையாளரிடம் ரூ.1.80 லட்சமும், பெண் ஒருவரிடம் ரூ.50 ஆயிரத்து 860 என மொத்தம் இதுவரை ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 860 பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- முற்பகல் மீண்டும் புதிய சந்தனம் பூசப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
- ஆருத்ரா தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
ராமநாதபுரம்:
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் மரகத நடராஜரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்தனர். இன்று காலை மீண்டும் சந்தனம் பூசப்பட்டு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு மரகத நடராஜர் காட்சி அளித்தார்.
ராமநாதபுரம் அடுத்துள்ள திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் முதல் சிவ ஸ்தலமாக மங்களநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வடக்கு பகுதியில் தென்முகத்துடன் பச்சை கல்லினால் ஆன மரகத நடராஜர் சன்னதி உள்ளது. இந்த சிலை ஒளி, ஒலியால் அதிர்வு ஏற்பட்டால் சேதமடைந்து விடும் என்பதால் ஆண்டுதோறும் முழுமையாக சந்தனம் பூசப்பட்டு நடை சாத்தப்பட்டிருக்கும்.
ஆருத்ரா தரின தினத்தன்று மட்டும் சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து, நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு கோவில் சிவச்சாரியர்கள் கோவில் நடை திறந்து மரகத நடராஜர் தீபாராதனை செய்தனர். இதன் பின்னர் சிலையில் உள்ள சந்தனம் களையப்பட்டு பால், பழம், பன்னீர், திருநீறு, சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசன திரவியங்கள் மூலம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதன் பின்னர் முற்பகல் மீண்டும் புதிய சந்தனம் பூசப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திரை விலக்கப்பட்டு அதிகாலை 4 மணி முதல் தரிசனம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கான பக்தர்கள் விடிய, விடிய தரிசனம் செய்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர்லால் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பும் செய்தனர்.
ஆருத்ரா தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் பொது தரிசனம் ரூ.10, 100, 250 என டிக்கெட் விற்பனை செய்வதில் மட்டுமே கோவில் நிர்வாகம் முழு கவனத்துடன் செயல்பட்டது. இக்கோவிலில் கட்டணமில்லா தரிசனம் அனுமதிக்கப்படவில்லை. சந்தனம் பாக்கெட் விற்பனை கடந்த ஆண்டு ரூ 100, இந்த ஆண்டு ரூ.250, ரூ.150 என உயர்த்தி விற்பனை செய்தனர். இக்கோவில் மரகத நடராஜர் தரிசனம் செய்வது ஆண்டுக்கு ஒருமுறை என்பதால் வரும் பக்தர்கள் அனைவரிடமும் கட்டணம் எவ்வளவு வசூல் செய்ய முடியும் என்ற நோக்கத்துடன் கோவில் நிர்வாகம் செயல்பட்டதாக பக்தர்கள் வேதனையடைந்தனர்.
- மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோவில் வழக்கு தொடரப்பட்டது.
- சிறுமியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா பாலியல் தொந்தரவு என புகார் எழுந்தது.
பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் தனது மகளின் செல்போனுக்கு பா.ஜ.க. பிரமுகர் எம்.எஸ்.ஷா தொடர்ந்து ஆபாசமான உரையாடல்களை அனுப்பி வந்துள்ளதாகவும், இதுபற்றி தனது மகளிடம் கேட்டபோது எம்.எஸ்.ஷா அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிய வந்தது.
மேலும், புகார் கொடுத்தவரின் மனைவி பா.ஜ.க. பிரமுகர் இருக்கும் இடத்திற்கு மகளை தனியாக அழைத்துச் சென்று தங்க வைத்ததாகவும், வாட்ஸ்அப் மூலம் அவர் கூப்பிடும் இடத்திற்கு சென்று அவருடன் தங்கி னால் ஸ்கூட்டர், புதிய ஆடைகள் வாங்கித் தருகிறேன், கடனை அடைக்கி றேன் என ஆசை வார்த்தை களை கூறி அழைத்து சென்று பாலியல் துன்பு றுத்தல் அளித்துள்ளார். இதற்கு தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. நிர்வாகி எம்.எஸ்.ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பா.ஜ.க. மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா இன்று மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
- அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் பெரிய அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது இல்லை.
- ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருட்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு முறையும் 3 டன்கள் வரை சரக்குகள் கையாளப்படுவது வழக்கம். மேலும் காய்கறிகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் முன்பதிவு செய்யப்படும்.
இந்த நிலையில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் கரும்புகளை கொண்டு செல்வதற்கான புக்கிங் பணிகள், கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்றன.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் விமான சேவை வழங்கப்படும் போதும் ஒவ்வொரு முறையும் ஒரு டன் வீதம் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகிறது.
அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் பெரிய அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது இல்லை. ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருட்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10, 11-ந்தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் கோவை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 டன் கரும்புகள் புக்கிங் செய்யப்பட்டு, ஷார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கோவை விமான நிலையத்தில் தினமும் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டமும் அதிகரித்து உள்ளது.
அதிலும் குறிப்பாக ஜனவரி 9-ந்தேதி மட்டும் உள்நாட்டு பிரிவில் 9893 பேரும், வெளிநாட்டுப்பிரிவில் இருந்து 1279 பேரும் என மொத்தம் 11,172 பேர் பயணித்து உள்ளனர். மேலும் அன்றைய தினம் 33 விமானங்கள் இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
- பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) உலகம் முழுவதும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். சிலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து கடல் மற்றும் நாழிகிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. அவர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணதிர தரிசனம் செய்தனர்.
இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டது. 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர், அலங்கார தீபாராதனைக்கு பிறகு சுவாமி நடராஜர், மாணிக்கவாசகர் பெருமான் ஆகியோர் தனித்தனி தங்க சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள் பிராகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கழி படைத்து வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருச்செந்தூர் நகர எல்லையில் இருந்து கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகியது. போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் சிரமப்பட்டனர். போக்குவரத்து நெருக்கடியால் திருச்செந்தூர் சன்னதி தெரு, பட்டர் குளம் தெரு, அக்ரகாரம், ரதவீதிதளில் உள்ள பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கோ அல்லது அத்தியாவசிய தேவைக்கோ வெளியே வரமுடியாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோவிலுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் ராணிமகராஜபுரத்தில் உள்ளது. திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். எனவே வரும் காலங்களில் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொங்கல் கொண்டாட சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர்.
- பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செல்ல வசதியாக 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
10-ந்தேதி தொடங்கி இன்று வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் மற்றும் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
இன்று அரசு வேலை நாளாக இருந்தாலும் மதசார்பு விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்பதால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் இன்று ஆர்.எச். விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊர் சென்றனர். பொங்கலை கொண்டாட வும் சுற்றுலா மையங்களுக்கு செல்லவும் திட்டமிட்டு பயணம் மேற்கொண்டதால் பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி சென்றன.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
கடந்த 3 நாட்களில் சுமார் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள், கோவை, திருவனந்தபுரம், மும்பை நகரங்களுக்கும் எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் பிற நகரங்களுக்கும் இயக்கப்பட்ட வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்களில் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்களில் 3 நாட்களில் பொது பெட்டிகளில் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பயணித்தனர்.
முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் பல மணி நேரத்துக்கு முன்பாக காத்திருந்தனர். படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். முன்பதிவு பெட்டிகளிலும் ஆங்காங்கே அமர்ந்து பயணம் செய்தனர்.
அரசு பஸ்களில் நேற்று வரை 11,463 பஸ்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர்.
இன்று 4-வது நாளாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. காலையில் இருந்தே மக்கள் பயணத்தை தொடங்கினார்கள். கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு மக்கள் படையெடுத்தார்கள். இன்று நள்ளிரவு வரை வெளியூர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்ல வசதியாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 2 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்னி பஸ்களில் கடந்த 3 நாட்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று 60 ஆயிரம் பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பதாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சஙக தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
இது தவிர கார்களிலும் சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பயணத்தை தொடர்ந்து உள்ளனர். பஸ், ரெயில்களில் இட நெருக்கடியை பார்த்து 3 நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், புதுச்சேரி, வந்த வாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னையில் இருந்து மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தனர்.
பொங்கல் பண்டிகையை யொட்டி கடைசி நேர பயணம் மேற்கொள்பவர்கள் இன்று தொடங்கினர். இத னால் சென்னையில் மக்கள் நடமாட்டம், வாகன ஓட்டம் குறைந்தது. சென்னையில் இருந்து இன்றுடன் சேர்த்து சுமார் 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
- பெரியார் பற்றி சீமான் தொடர்ந்து விமர்சிப்பது அவரது முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது.
- ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் மக்களிடம் ஆதரவு திரட்டலாம். அவர்களை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கைகளில் உள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணித்து உள்ளது. பெரியார் பற்றி விமர்சிப்பதால் சீமான் பிரசாரத்துக்கு சென்றால் தடுப்போம் என்று அந்த மாவட்ட காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது.
இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தேர்தலை புறக்கணித்து இருப்பது அவர்கள் கட்சியின் முடிவு. மற்ற கட்சிகள் உள்விவகாரத்தில் தலையிட முடியாது.
நான் முடிவெடுப்பதில்லை என்று அண்ணாமலை என்னைப் பற்றி விமர்சித்துள்ளார். அவரும் தேசிய கட்சியில்தான் இருக்கிறார். தேசிய தலைமை சொல்லாமல் முடிவெடுப்பாரா? தலைமை இடதுபுறமாக செல் என்றால் இடது புறமாக செல்வார். வலது புறமாக செல் என்றால் வலது புறமாக செல்வார். அவர் என்னை விமர்சிப்பது ஆச்சரியமாக உள்ளது.
பெரியார் பற்றி சீமான் தொடர்ந்து விமர்சிப்பது அவரது முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. இதனால் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்து இருக்கிறது.
அதற்காக ஈரோடு தொகுதியில் பிரசாரம் செய்ய விடாமல் தடுப்போம் என்பது கட்சியின் முடிவு அல்ல. அந்த மாவட்ட தலைவரின் தனிப்பட்ட கருத்து.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் மக்களிடம் ஆதரவு திரட்டலாம். அவர்களை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கைகளில் உள்ளது.
ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. உண்மைகள் தானாகவே வெளிவரும். அதை ஒரு போதும் மறைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
- தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க,, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன.
இதனால் தி.மு.க.வுக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இதுவரை பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் இது போன்று பிரதான கட்சியுடன் அந்த கட்சி நேரடி மோதலில் ஈடுபட்டது இல்லை. தற்போது முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க.வை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்கிறது.
தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அப்போதெல்லாம் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் களத்தில் நின்று போட்டியை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் போட்டியில் இருந்து பின் வாங்கியதால் தி.மு.க. வேட்பாளருக்கும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும் இடையே மட்டுமே போட்டி ஏற்பட்டிருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்பர பரப்பின்றியே காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார். தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.
தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதன் மூலமாகவும், முக்கிய எதிர்க்கட்சிகள் களத்தில் இல்லாததாலும் தி.மு.க. வேட்பாளரை இதுவரை இல்லாத வகையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க முடியும் என்று தி.மு.க. தலைவர்கள் நம்புகிறார்கள்.
இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அது போன்று யாரும் பிரசாரம் செய்ய செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் உள்ளூர் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மட்டுமே அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.






