என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "uthirakosamangai"
- இலங்கையில் மண்டோதரி ஒரு மிகப்பெரிய சிவ பக்தை.
- மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கு வேண்டி ஈசனிடம் தவம் செய்தாள்.
இலங்கையில் மண்டோதரி ஒரு மிகப்பெரிய சிவ பக்தை. மண்டோதரிக்கு மாங்கல்ய தோஷம் ஏற்பட்டது. இதனால் நீண்ட நெடுங்காலமாக திருமணத் தடை உண்டாகியது. அவள் திருமணம் நடைபெறாமல் தடைபட்டு நின்று விட்டது.
சிவ சக்தியின் அருள் நிறைந்து இருக்கும் இடங்களெல்லாம் அழகு நிறைந்த இடங்களாகும் என்று மண்டோதரிக்கு தெரியவந்தது. இதனால் மண்டோதரி உத்திரகோசமங்கை மங்களநாதன் திருத்தலத்திற்குச் சென்று மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கு வேண்டி ஈசனிடம் தவம் செய்தாள்.
மங்களநாதன் மண்டோதரி முன் தோன்றி மாங்கல்ய தோஷத்தை முற்றிலும் நீக்கி விட்டார். பின்பு மண்டோதரிக்கும் ராவணனேஸ்வரனுக்கும் இனிதே திருமணம் நடைபெறுகிறது.
மாணிக்கவாசகர் பெயர் பெற்ற தலம்
உத்தரகோசமங்கை சிவபெருமானுக்கு ஆயிரம் சிவவேதியர்கள் சிஷ்யர்களாக இருந்தனர். அவர்களிடம் சிவபெருமான் மண்டோதரிக்கு அருள்புரிந்து வருகின்றேன் `சிவாகம நூலை' காத்துக்கொண்டு இருங்கள் என்று கூறி விட்டு இலங்கை சென்றார்.
சிவபெருமானிடம் 1000 சீடர்களும், ராவணன் அரக்கனால் உங்களுக்குத் துன்பம் உண்டானால் என்ன செய்வோம் என்றார்கள். அதற்கு சிவபெருமான், எனக்கு துன்பம் ஒன்றும் வராது. அப்படி அவனால் துன்பம் வந்தால் இந்த தெப்பக் குளத்தில் அக்கினி தோன்றும் என்று கூறி மறைந்தார்.
சிவபெருமான் அசோகவனத்தில் மண்டோதரிக்கு அருள் அளிப்பதற்கு வேண்டி சென்றபோது ராவணன் ஈசனடியார் என்று உணராமல் சினமடைந்து அவரைப் பின்புறம் தலையில் அடித்து விடுகிறான். அதனால் தெப்பக்குளத்தில் அக்கினி தோன்றியது.
இது கண்ட ஆயிரம் வேதியர்களில் ஒருவர் நீங்கலாக எஞ்சிய 999 வேதியர்கள் ஈசனுக்கு ஆபத்து என்று அலறியவாறு அந்த அக்கினியில் இறங்கி விட்டனர். ஈசன் மண்டோதரிக்கு அருள் வழங்கி விட்டு உத்திரகோசமங்கை திரும்பி வந்தார்.
ஒரே ஒரு வேதியர் மட்டும் சிவாகம நூலைக் கட்டி அணைத்து நிற்பதை கண்டார். அந்த சிவவேதியர் அக்கினி தெப்பக்குளத்தில் தீ எரிந்தது மற்ற வேதியர்கள் எல்லாம் அக்கினியில் இறங்கி விட்டார்கள் நான் ஆகமநூலை காப்பாற்றினேன் என்று ஈசனிடம் கூறினார்.
நீ ஆகம நூலை காப்பாற்றிய உம் பக்தியை மெச்சினோம். சிவாகம நூலை தோத்திரப் பாக்களாகப் பாடி நம்மை மீண்டும் வந்து, மாணிக்கவாசகராக கி.பி.823-ம் ஆண்டு உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தோன்றி திருவாசகத்தை எழுதுவாய் என்று சிவபெருமான் கூறி மறைந்தார்.
அதன்படி மீண்டும் கி.பி.823-ம் ஆண்டு உத்திரகோச மங்கை திருத்தலத்தில் மாணிக்கவாசகர் தோன்றி திருவாசகத்தை எழுதினார்.
இலங்கையில் நடந்த போரில் ராமன் பிரம்மாஸ்திரத்தில் தெய்வீக சக்தியை அதன்கண் ஆவாஹனம் பண்ணினான். அந்த அஸ்திரத்தை ராமன் ஏவினான்.
ராவணன் இருதயத்தை அது துளைத்தது. பிறகு அது தலையைத் தொட்டது. அவன் கரங்களை துண்டித்தார்.
ராவணன் தரையில் விழுந்து புரண்டு உயிர்துறந்தான். அன்று நடந்த இறுதிப் போரில் குரங்கு படைகளுக்கும் அசுரப்படைகளுக்கும் கடும்போர் நடைபெற்றது. இருபடைகளிலும் பல கோடிக்கணக்கான போர் வீரர்கள் மாண்டு மடிந்தார்கள்.
இப்படி இறந்தவர்களின் உடல்கள் மாமிச மலைபோல் குவிந்து கிடந்தது. ரத்தம் பெருகி காட்டாறுபோல ஓடியது. அந்தரத்த ஆறு கடலில் கலந்தது. மாமிசத்தையும், உதிரத்தையும் பேய்கள், பிசாசுகள், இரத்தக்காட்டேரிகள் போன்றவைகள் உண்டு செரிக்காததால் குட்டிக்கரணம் அடித்து விளையாடி கொண்டிருந்ததன.
இறந்தவர்களின் ஆவிகள் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோர்களுக்கு பிரம்மஹத்தி தோஷமாகப் பற்றிக் கொண்டது. அதனால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குறித்த நேரத்துக்குள் ராமேஸ்வரத்தில் வழிபட வேண்டும் என்று மகரிஷிகள் அறிவுறுத்தினார்கள்.
லிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கு கைலாசத்தில் இருந்து லிங்கம் கொண்டு வரும்படி ராமன் அனுமனை அனுப்பி வைத்தார். ஆனால், நெடுந்தொலையில் உள்ள கைலாசத்திலிருந்து ஆஞ்சநேயர் லிங்கம் கொண்டு வருவதற்குக் காலதாமதம் ஆகிவிட்டது.
விபீஷணனின் வேண்டுகோளுக்கு இணங்கி மண்டோதரியின் குடிக்கோவிலான ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்தரகோச மங்கை தலத்தில் மண் எடுத்து வந்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம், உயிர்களின் ஆவி அனைத்தும் நீங்கும் என்று கூறிய அறிவுரையின்படி உத்தரகோச மங்கைக்கு வாலியின் மகன் அங்கதனை ராமர் அனுப்பினார். அங்கதன் அங்குள்ள மண்ணை எடுத்து வந்தான். சீதை சிவன் தலத்தில் உள்ள மண்ணை வைத்து லிங்கம் உருவாக்கி ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்து அனைவரும் வழிபட்டார்கள்.
கைலாசம் சென்று லிங்கத்தை எடுத்து திரும்பி வந்த அனுமன் அங்கு மண் லிங்கம் பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து இருப்பதைக் கண்டு கோபம் கொண்டு அதை தன வாலால் சுற்றி அகற்ற முயன்றான். வால் லிங்கத்திலிருந்து உருவி அனுமனுடைய முகம் தரையில் இடித்து ரத்தம் வழிந்தது. அதனால் ராமேஸ்வரத்தில் இருக்கும் அனுமன் முகம் எப்பொழுதும் சிவந்திருக்கும்.
இந்த லிங்கத்தில் அனுமன் வாலால் உருவிய தழும்பு இப்பொழுதும் காணலாம். இந்த லிங்கத்தில் தீபாராதனை காட்டும்பொழுது லிங்கத்தின் பின்புறம் ஒளி தெரியும். உத்தரகோசமங்கை ஸ்தலத்தில் மண்ணெடுத்து உருவாக்கிய லிங்கத்திற்கு ராமலிங்கம் என்று பெயர்.
இதன் மூலம் ராமேசுவரம் தலத்தில் உள்ள லிங்கம் உத்தரகோச மங்கையில் எடுத்து செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.
இந்த ராம லிங்கத்திற்கு பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விஸ்வலிங்கத்தை ஸ்தாபித்து, அந்த லிங்கத்திற்கு காசிலிங்கம் என்று பெயரிட்டு, அதற்கே முதல் பூஜை செய்ய வேண்டும் என்று ராமர் உத்தரவிட்டாராம்.
பின்னர் ராமர் தேவிப்பட்டனத்தில் கடலில் ஒன்பது கல்களை ஊன்றி தோஷத்தை கழித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருபத்தி மூன்று தீர்த்தங்கள் உள்ளன. ராமர் ஊன்றிய ஒன்பது கற்களை விட்டு பகலில் கடல் தண்ணீர் ஓடிவிடும். மாலையில் தண்ணீரில் கற்கள் மூழ்கிவிடும்.
எனவே தேவிபட்டணம் இருப்பதி நான்காவது தீர்த்தமாகும். இந்த ஊர் ராமநாதபுரத்தில் இருந்து வடக்கே 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.
ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்தரகோசமங்கை இருபத்தைந்தாவது கடைசி தீர்த்தமாகும். இந்த ஊர் ராமநாட்டில் இருந்து தெற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு இந்து, காசி சென்று ராமேஸ்வரம் தீர்த்தமாடி இறுதியாக கடைசி தீர்த்தம் உத்தரகோசமங்கையில் ஆடினால் காசி யாத்திரை பூர்த்தியாகி சொர்க்கத்திற்குச் செல்வதற்கு வழிவகுக்கும் என்பது ஐதீகமாகும்.
இந்து மத வேதங்களிலும் புராணங்களிலும் உலகில் சிவபெருமான் உறையும் முதல் திருத்தலம் இதுதான் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தகோவில் ஆதிசிதம்பரம், பூலோக கைலாயம், சிற்றம்பலம், பொன்னம்பலம் என்றெல்லாம் புகழ்ந்து போற்றப்படுகிறது. இந்த புண்ணிய தலமான திருஉத்தரகோசமங்கை ராமநாதபுரத்தில் இருந்து தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது.
உயர்ந்து நிற்கும் கோபுரம், மாட வீதிகள், மணிமண்டபங்கள், எழிற்கூடங்கள், நீண்ட நெடிய தாழ்வாரங்களுடன் கண்ணைக்கவரும் வகையில் காட்சி தருகிறது. மண்எட்டும் புகழ் பரப்பும், விண் எட்டும் கோபுர விமானம், கர்ப்ப கிரகம் அன்றைய தமிழர்களின் நுண்ணிய கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. தமிழ் வளர்த்த சமயக்குரவர்கள் நால்வர்களில் ஒருவரான மாணிக்க வாசகர் அவருடைய தெய்வீக பாடல்களில் ‘மண் முந்தியோ மங்கை (திரு உத்தரகோசமங்கை) முந்தியோ’ என்று பாடல்களில் குறிப்பிட்டு கூறுவதில் இருந்து இந்த ஊர் பிரபஞ்சத்தின் முதல் பூபாகம் என்று உறுதிபட நம்புகிறார்கள்.
இந்த திருத்தலத்தின் வேதகால புராண நிகழ்வுகளும், இறைவனின் திருவிளையாடல்களும் இந்த உத்தரகோசமங்கை மண்ணில்தான் நடைபெற்றுள்ளன என்று இந்து சமய ஆன்மிக அறிஞர்கள் உறுதிபட நம்புகிறார்கள்.இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. ராமபிரானின் மூதாதையர்களினால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் பகுதியில் முனிவர்களும், ரிஷிகளும் தங்கி இறைவனை வழிபட்டதாக வேத வரிகளில் காணப்படுகின்றன. இறை வழிபாட்டை துறக்காத 1000 முனிவர்கள் சிவபெருமானை துதிக்கவும், தவம் செய்யவும் இந்த இடத்தை தான் தேர்வு செய்தார்கள்.
புராண புகழ்பெற்ற இந்த கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த கோவிலின் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகத கல்லினால் ஆன ஆளுயர ஆடும் திருக்கோலத்தில் உள்ள விலை மதிக்க முடியாத அபூர்வ நடராஜர் சிலை உள்ளது. தமிழர்களின் கலைத்திறனுக்கும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுக்கும், கட்டியம் கூறும் வகையில் கண்கவர் காட்சியளிக்கும் அபூர்வ சிலை இது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சைக்கல் இயல்பாகவே மென்மையானது.
ஒளி, ஒலி அதிர்வுகளை தாங்க முடியாத தன்மை உடையது. இதன் காரணமாக மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்று சொல்வார்கள். எனவே இந்த நடராஜர் சிலையை ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து பாதுகாக்க சந்தனக்கலவையை பூசி வருகிறார்கள். வருடத்தில் ஒருநாள் அதுவும் சிவனுக்கு உகந்த நாளான திருவாதிரை நாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனக்கவசம் களையப்படும்.
இதன்படி ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று(சனிக்கிழமை) காலை சந்தனம் களையும் அற்புத நிகழ்ச்சி 10.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. காலை 11.30 மணி முதல் அபூர்வ மரகத நடராஜருக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சந்தனாதி தைலம் பூசப்படும். தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்கு மரகத நடராஜர் வைக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா அன்று மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படும்.
இதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை நடத்தப்பட்டு அருகில் உள்ள கல்தேர் மண்டபத்தில் கூத்தர்பெருமான் எழுந்தருளும் ஆருத்ரா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஆருத்ரா தரிசன விழாவில் ராமநாதபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய வந்து அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் ராமு ஆகியோர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
