என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • விஜய் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பலர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வரிசையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "பொங்கல் திருநாள்!

    உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.

    2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!

    இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.

    அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தேசிய கீதமே பாட முடியாது என்று சொன்னதாக புரளி கிளப்புகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
    • ஆளுநர் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரீகத்தோடும் நடந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்

    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அவரது அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தன்னுடைய எக்ஸ் பதிவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது முதலமைச்சர் பதவியை குறிப்பிடாமல் ஒரு தனி மனிதராக பாவித்து ஒரு பதிவிட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

    தமிழ்நாட்டின் மரபின்படி தான் நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் பாட முடியுமென்று சொன்னதை, தேசிய கீதமே பாட முடியாது என்று சொன்னதாக புரளி கிளப்புகிறார். நாளை வருகிற இன்னொரு ஆளுநர் இன்னொரு நேரம் பாட வேண்டுமென்று கேட்டால் அப்படி செய்ய முடியுமா?

    மேலும், இதனால் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பு செய்துவிட்டார்கள். அவர்கள் தத்துவமே அப்படித்தான் என்று பதிவிடுவது எல்லாம் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பாணி திசைதிருப்பல் வேலையே. ஆளுநரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், 'திராவிட மாதிரி என்று எதுவும் இல்லை, திராவிடத் தத்துவம் காலவாதியாகிவிட்டது' என்று ஒரு நாளிதழுக்கு கொடுத்த பேட்டியை முதன்மைப்படுத்தி வைத்திருக்கும் அளவிற்கு அத்துமீறி நடந்து கொள்பவர் என்பதையும் அதைப் பெருமையாக கருதிக் கொண்டிருப்பவர் என்பதையும் காண முடிகிறது. ஆளுநராக நியமிக்கப்பட்டாலே வானளாவிய அதிகாரம் இருப்பதாக கருதிக் கொண்டு அடாவடி செய்வதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் சங்பரிவாரம் ஏற்கவோ மதிக்கவோ மாட்டோம் என்று சொன்னதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

    எனவே, ஆளுநர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு தான் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரீகத்தோடும் நடந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவருக்கு அத்தகைய குணமில்லை எனில் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    • இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

    சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

    இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.

    இத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகள் வழங்க உள்ளனர். இவற்றுடன் கேரளாவின் தைய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்ராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய அயல் மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

    சென்னை சங்கமம் திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவின் கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே. நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் நடைபெறுகிறது. திருவிழா மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். 

    • புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் மூடப்படவுள்ளன.
    • வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜனவரி 15) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 15.012025 புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன.

    எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் ஞாயிறு அட்டவணையின்படி இயக்கப்படும்.
    • ஜனவரி 17 ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் சேவை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிக்கிழமையின் அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணை:

    1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள்இயக்கப்படும்.

    4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    சனிக்கிழமை அட்டவணை:

    1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    2. காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    3. காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

    • பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் ரெயில் சேவை நாளை ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருக்கிறது.

    இதே போல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், சூளுர், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து மற்றும் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. 

    • தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் நகையையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டார்
    • தெலுங்கானா, ஆந்திராவில் 7-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

     நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி சிவா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன். இவர் மூலைக்கரைப்பட்டி பஜார் பகுதியில் ஒரு வணிக நிறுவனத்தின் மாடியில் அடகு கடை நடத்தி வந்தார். கீழ் தளத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி அதிகாலையில் அடகு கடைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்து ரூ. 3 லட்சம் பணம் மற்றும் 250 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்த போது மங்கி குல்லா அணிந்து வந்த மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து நெல்லை சரக டி.ஜ.ஜி. மூர்த்தி ஆலோசனையின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில் நாங்குநேரி டி.எஸ்.பி. பிரசன்னகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜகுமாரி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ரெட்டார் குளத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் ராமகிருஷ்ணன் (வயது 35) என்பவர் இந்த கொள்ளையை நிகழ்த்தியதும், அவர் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 137 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

    விசாரணைக்கு பின்னர் நாங்குநேரி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி இன்று காலை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த ராமகிருஷ்ணனின் தாய் மீனாட்சி (65) விசாரணைக்கு பயந்து நேற்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இந்த சம்பவத்தில் ராமகிருஷ்ணன் ஈடுபட்டது எப்படி?. வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.

    ராமகிருஷ்ணன் பல ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கே தன்னுடன் பணிபுரிந்த ஒரு இளம்பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மீது தெலுங்கானா, ஆந்திராவில் 7-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

    இவர் ஏற்கனவே மங்கி குல்லா அணிந்து நாசரேத் பகுதியில் திருட்டை நிகழ்த்தியதை அடிப்படையாக கொண்டு நடத்திய விசாரணையில் தற்போது அவர் சிக்கினார்.

    இவர் திட்டமிட்டோ, கூட்டாளிகளோடு சேர்ந்தோ எங்கும் கொள்ளையடிக்க செல்வதில்லை. தனியாக சாதாரணமாக சென்று பூட்டிய வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு பின்னர் 1 வருடம் வரை தெலுங்கானாவில் போய் தங்கி கொள்வார். பின்னர் சொந்த ஊருக்கு வந்து மீண்டும் கைவரிசை காட்டி விட்டு சென்றுவிடுவதாக அவர் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அடகு கடையில் கொள்ளை அடிக்கும் நாளுக்கு முந்தைய நாள் கோவில் கொடை விழாவுக்காக அவர் சொந்த ஊர் வந்துள்ளார். வந்த இடத்தில் தான் அடகு கடையில் கொள்ளையடிக்க அவர் உள்ளே சென்றுள்ளார். அப்போது பணத்திற்கு அருகிலேயே லாக்கரின் சாவியும் இருந்துள்ளது.

    அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் நகையையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டார். அன்றைய தினமே அந்த நகைகளில் பாதியை தனது தாய் மீனாட்சியிடம் கொடுத்துவிட்டு மீதி நகைகளுடன் தெலுங்கானா சென்றுள்ளார்.

    இந்நிலையில் அங்கு தனது வழக்குகளை நடத்தி வரும் தெலுங்கானாவை சேர்ந்த வக்கீலிடம் பாதி நகைகளை கொடுத்துள்ளார். இவ்வாறாக நகைகளை மேலும் 2 பேரிடமும் கொடுத்து விட்டு அவ்வப்போது அதனை வாங்கி விற்று சொகுசாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

    மீனாட்சியிடம் கொடுத்த நகைகளை அவர் தனது மற்ற குழந்தைகளுக்கு பங்கு வைத்து கொடுத்துள்ளார். இதனை அறிந்த ராமகிருஷ்ணன் தனது தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த சம்பவங்கள் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே பல்வேறு துப்புகளின் அடிப்படையில் ராமகிருஷ்ணனை போலீசார் நெருங்கிய நிலையில் இந்த சம்பவமும் அவர்களது சந்தேகத்தை உறுதியாக்கியது. தொடர்ந்து அவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய வக்கீல் மற்றும் 2 பேரை போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். மீதமுள்ள 113 பவுன் தங்க நகைகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமுன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.
    • இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்.

    தினமும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில், தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.

    இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.

    வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது, சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர்- வள்ளலார் அதனை மீட்டார்.

    தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்படுவது எனக்கு வலியை தருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழரின் தனிப்பெரும் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.
    • உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, ஊரார் உடன் கொண்டாடிக் களித்திடும் விழா.

    உலகத் தமிழர் அனைவருக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர் முக்கொடி கொண்ட தமிழரின் தனிப்பெரும் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

    நானிலம் போற்றும் இந்த நன் நாளினை எழுச்சியோடு இந்தப் புத்தாண்டில் கொண்டாட எதிர்நோக்கியுள்ள உலகத் தமிழர் அனைவருக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! பொங்கல் விழா என்பது உழவை, உழைப்பை, சமத்துவத்தை, இயற்கையின் சிறப்பைப் போற்றும் விழா!

    தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, வீரத்தைப் பறைசாற்றும் பெருவிழா! விளைச்சலின் இன்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் விழா!

    உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, ஊரார் உடன் கொண்டாடிக் களித்திடும் விழா!

    பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வனர், வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி அவர்தம் ஆற்றலையும் அறிவிளையும் பெருக்கிட நாள் முதல்வன் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி மாணவக் கண்மணிகளுக்குத் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் வளர மூன்றாண்டுகளில் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்துள்ளது தமிழ்நாடு! பத்தாண்டு காலமாக உறங்கியிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு வீறநாட போட்டு, அனைத்துத் துறைகளிலும் உயர்ந்து நிற்கிறது.

    எந்தப் பிரிவிளரும் ஒதுக்கப்படவில்லை; எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்படவில்லை; எந்தத் துறையும் பின்தங்கி நிற்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறும் அளவுக்குப் பாவலான சமத்துவமான வளர்ச்சியை அடைந்து காட்டியிருக்கிறோம். நெருக்கடிகள் இல்லாமல் இல்லை: சோதனைகளை எதிர்கொள்ளாமல் இல்லை; இயற்கைப் பேரிடர்கள் தாக்காமல் இல்லை: பாரபட்சத்தால் பாதிக்கப்படாமல் இல்லை! அத்தனையையும் எதிர்கொண்டு சாதித்து வருகிறோம் என்பதுதான் நம் பெருமை! இன்றைக்கு மக்களின் பேராதரவோடு, கருத்தியம் காத்திலும், தேர்தல் களத்திலும் தொடர் வெற்றிகளைக் குவித்து, எதிரிகளின் கனவுகளைத் தவிடுபொடி ஆக்கி வருகிறோம்.

    திராவிட மாடல் எனும் பாதுகாப்பு வளையம் அமைதி, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், முற்போக்குச் சிந்தனை, முன்னேற்றப் பாதை, கல்வி வளர்ச்சி எனத் தமிழ்நாட்டை இந்திய அளவில் முன்னணி மாநிலமாக மாற்றி வருகிறது.

    வெறும் கொண்டாட்ட நிகழ்வாக இருந்த பொங்கல் திருநாளைப் பண்பாட்டுப் படைக்கலளாகவுமே மாற்றிப் பண்படுத்திய இயக்கத்தின் வழிவந்த அரசு நமது அரசு. ஒற்றாமபோடும், வரலாற்று ஓர்மையோடும் நாம் ஒன்றிணைந்து நிற்கும் வரை தமிழ்நாட்டின் தனித்துவமும் மகத்துவமும் இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து மின்னிடும். 'எழில் திராவிடம் எழுக! என்று எழுபதாண்டுகளுக்கு முன் முழங்கினார் தமிழ்நாட்டின் தலைமகள் அண்ணா! அத்தகைய எழுச்சியை இன்றைய திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது.

    அவ்வெழுச்சி எந்நாளும் தொடர, தமிழ்நாடு எல்லா நிலையிலும் ஏற்றம் பெற உழைப்போம்! உள்ளபெங்கும் இல்லமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும். தங்கட்டும்!

    "உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார் இதை உணர்ந்த நமது அரசு, "உழவுத் தொழில் போற்றுதும்; உழவாளப் போற்றுதும்!" என்ற அடிப்படையில், உழவர்களின் பயர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் தொடர்ந்து துணை நிற்கும். இச்சிறப்புமிகு நன்னாளில் விவசாய பெருங்குடி மக்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குவோம். அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் தமிழர் திருநாள் -திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த 7 மீனவர்களும் இடம்பெற்று இருந்தனர்.
    • விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் ஆழ்கடல் மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாதக்கணக்கில் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து திரும்புவது வழக்கம்.

    அப்போது கடல் எல்லையை தாண்டி வந்ததாக வெளிநாடுகளால் கைது செய்யப்படுவதும் உண்டு. இதுபோல தற்போது 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    குமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷார்ஜின். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி 15 மீனவர்கள் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றனர்.

    தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த 7 மீனவர்களும் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் டிக்கோகார்சியா தீவு அருகே ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்தனர். அப்போது அங்கு வந்த வெளிநாட்டு கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து 15 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் குமரி மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நலம், வளம், நன்மை, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை செழிக்க வேண்டும்.
    • ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாள் நன்மைகளை வழங்கட்டும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்து இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று வாழ்த்துகிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:-

    உழைப்பின் உயர்வினை உலகிற்கு உரைத்திடும் அறுவடைத் திருநாளாகவும், இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாகவும் திகழ்ந்திடும் பொங்கல் திருநாளை தமிழினத்தின் பெருமையை மீட்டெடுக்கும் விழாவாக கொண்டாடுவது மகிழ்ச்சியை தருகிறது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தமிழ்நாட்டில் அனைத்து தீமைகளும் விலக வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நலம், வளம், நன்மை, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாள் நன்மைகளை வழங்கட்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி:-

    தமிழ்நாட்டின் எதிர்காலத்தை இருள் சூழ்ந்திருக்கிறது. அந்த இருள் அகற்றப்பட வேண்டும். தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும். பொங்கல் விழாவை கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்:-

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. பிறந்திருக்கும் தை அனைத்து பகுதி மக்களின் நல்வாழ்விற்கான வழிகளை திறந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    இந்துத்துவா சக்திகளையும், சனாதன கூட்டங்களையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் பூமியில் அடியோடு முறியடிப்போம். தமிழ்க்குடி மக்கள், ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    உழவுத்தொழிலை பாதுகாக்கும் வகையில், உழவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம். இனி வரும் காலம் இனிப்பான வசந்தகாலமாக அமைய, வளமான தமிழகம், வலிமையான பாரதம் ஏற்பட பொங்கல் வழி காட்டட்டும்.

    முன்னாள் மத்திய மந்திரி சு.திருநாவுக்கரசர்:-

    எல்லைக்கோடுகள் அனைத்தையும் கடந்த எல்லையில்லா மகிழ்வு அளிக்கும் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற்று வாழ மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    அண்டை வீட்டார்களுடன் அன்பை பகிர்ந்து, தங்கள் இல்லங்களில் செய்த பலகாரங்களை பகிர்ந்து உண்டு, ஒருவருக்கொருவர் அன்பையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தி மகிழ்ச்சி பொங்க கொண்டாடி மகிழ அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    பொங்கல் கொண்டாடும் இந்த நன்னாளில் கார்கால குளிரும் மார்கழி பனியும் விலகி வாழ்வில் மாற்றம் வருவது போல் உலகத்தமிழர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என பொங்கலிடும் பொங்கல் போல் மகிழ்ச்சி பொங்கி நல்லறம் தழைத்தோங்க வாழ்த்துகள்.

    இன்று பிறக்கின்ற "தைத்திருநாள்" உழவர்களுக்கு நலம் சேர்க்கும் ஆண்டாக அமைய வேண்டும். இயற்கை அன்னை, நமக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தேவையான அளவு மழையை பொழிந்து, நாம் தண்ணீருக்காக எவரிடத்திலும் கையேந்தி நிற்காத தன்னிறைவு காண அருள வேண்டும்.

    கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர்:-

    இனி நடப்பதெல்லாம் நன்மையாக இருக்க சபதமேற்று, அரசியல் அறியாமை விலகி, இழந்த இட ஒதுக்கீடுகளை பெற்று, பழையன கழிந்து புதியன புகுந்து இனிவரும் காலம் நமதே என்ற முழு நம்பிக்கையோடு எதிர்கொள்ள இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன்:-

    உழவு செழிக்கட்டும், உழவர்கள் மகிழட்டும், மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன், கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கே.வி.எஸ்.சரவணன் ஆகியோர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    15-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    16-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    18-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    19-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:-

    இன்று முதல் 16-ந்தேதி வரை தென்தமிழக தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    ×