என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போலீசார் பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனர்.
    • பணம் பறிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி.பூங்கா காய்கறி மார்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி சம்பவத்தன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 45), பாஸ்கர் ரெட்டி (60) ஆகிய இருவரும், ஈரோடு மார்கெட்டுக்கு லாரியில் தக்காளி கொண்டு வந்தனர்.

    பின்னர் அவற்றை இறக்கிவிட்டு, மார்கெட் அருகில் உள்ள ஏ.பி.டி.ரோடு பகுதியில் தங்களது லாரியை நிறுத்தி சமைத்து சாப்பிட்டு விட்டு லாரியிலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு சென்ற 4 வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த மகேந்திரன், பாஸ்கர்ரெட்டி இருவரையும் எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

    அப்போது லாரி டிரைவர்கள் இருவரும் தங்களிடம் பணம் இல்லை என கூறவே, கூகுள் பே மூலமாக தங்களது வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறி மகேந்திரன் வைத்திருந்த செல்போனை பறித்து அவர்களது வங்கிக் கணக்கிற்கு ரூ.18 ஆயிரத்து 700 அனுப்பவைத்து, பின்னர் மகேந்திரனின் செல்போனில் இருந்து கூகுள் பே ஆப்பையும் அழித்துவிட்டு சென்று விட்டனர்.

    இதையடுத்து, மகேந்திரன், பாஸ்கர் ரெட்டி இருவரும் தாங்கள் தக்காளி பாரம் இறக்கிய மண்டி உரிமையாளர் வைரவேலிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், ஆந்திர மாநில லாரி ஓட்டுனர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்தது, ஈரோடு வீரப்பன் சத்திரம், மிட்டாய்காரர் வீதியை சேர்ந்த சண்முகம் (19), சக்திவேல் (19) என்பது தெரியவந்த்து. இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர். மேலும், பணம் பறிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    • சண்முகர் ஆண்டு விழா நாளை நடக்கிறது.
    • பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதா லும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தைப்பூசம் என்பதாலும், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்தவாறு உள்ளனர்.

    மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.

    10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் மருத்துவ வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பக்தர்கள் வரும் வாகனங்கள் ஊருக்கு வெளியே பல்வேறு இடங்களில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மாரிமுத்து மயிலாடுதுறை உட்கோட்டத்தில் சாலை ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
    • சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 51). இவருக்கு சுபஸ்ரீதேவி, மோனிஷா என்ற இரண்டு பெண் பிள்ளைகளும் துளசேந்திரன், கலாநிதி ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

    இவர் சீர்காழி நெடுஞ்சாலைத்துறையில் 1997 ஆம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்திருந்த நிலையில் சாலை பணியாளராக பணியில் சேர்ந்து பணி புரிந்து வந்தார். மேலும் பதவி உயர்வு பெறுவதற்காக கடந்த 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டு தனது மூத்த மகள் சுபஸ்ரீ தேவி அரசு பொதுத்தேர்வு எழுதும்போது, இவரும் அதே நேரத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தனித்தேர்வராக தேர்வு எழுதி விடாமுயற்சியால் தேர்ச்சியும் பெற்றார்.

    சீர்காழியில் மகள்களோடு தந்தை தேர்வு எழுதியதை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

    மாரிமுத்து நெடுஞ்சாலைத் துறையில் பதவி உயர்வு பெற வேண்டி தேர்வு எழுதிய நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்ட முதுநிலை பட்டியல் அடிப்படையிலும் கல்வித் தகுதி அடிப்படையிலும் தற்போது திறன்மிகு உதவியாளர் சாலை ஆய்வாளர் பதவி உயர்வு பெற்றுள்ளார். தற்போது மாரிமுத்து மயிலாடுதுறை உட்கோட்டத்தில் சாலை ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார்.

    9-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் மாரிமுத்து தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பு, தன்னம்பிக்கையால் அடுத்தடுத்து தேர்வு எழுதி வெற்றி பெற்று தனது பிள்ளைகளையும் பட்டதாரிகளாக ஆக்கி தானும் பதவி உயர்வு பெற்றுள்ளதை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
    • 11-ந்தேதிக்குள் பரிசீலிக்க வாய்ப்பு இல்லை.

    சென்னை:

    டாஸ்மாக் ஊழியர்கள் 21 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது அந்த கோரிக்கைகள் மீது முன்னுரிமை கொடுத்து தீர்வு காண வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    ஆனால் அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி இருப்பதாக கூறி கோரிக்கைகளை 11-ந்தேதிக்குள் பரிசீலிக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

    இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் வருகிற 11-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • சரவண பெருமாள் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
    • கோமதி ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்ச்செல்வியின் அம்மா பாப்பாத்தியுடன் காரில் சென்று தனலட்சுமி வீட்டை தேடி உள்ளார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 77). இவருக்கு 2 மகன்கள். இதில் ஒரு மகன் இறந்துவிட்ட நிலையில் சரவண பெருமாள் என்கிற ஒரு மகன் மட்டும் உள்ளார்.

    இந்த நிலையில் சரவண பெருமாள் வரப்பாளையம் பகுதியை சேர்ந்த வேறு சமூகத்து பெண்ணான தமிழ்ச்செல்வி (41) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு தாயாரை விட்டு பிரிந்து வரப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே தனலட்சுமி தனது மகனிடம் மருமகள் தமிழ்ச்செல்வியை விட்டு பிரிந்து வந்தால் உனக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தருவதாகவும், சொத்தில் பங்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் சரவண பெருமாள் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனிடையே தனது மாமியாரின் திட்டதை அறிந்த தமிழ்ச்செல்வி என்னிடம் இருந்து எனது கணவரையே பிரிக்க முடிவு செய்கிறாயா? உன்னையே நான் தீர்த்துக்கட்டுகிறேன் என தானும் ஒரு திட்டத்தை வகுத்தார்.

    மாமியாரை கொலை செய்து விட்டால் சொத்து முழுவதும் தனக்கு கிடைத்துவிடும். தனது கஷ்டம் தீர்ந்து விடும் என கருதிய தமிழ்ச்செல்வி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். தனது தாயார் பாப்பாத்தியுடன் சேர்ந்து தமிழ்ச்செல்வி திட்டம் தீட்டி வந்த நிலையில், தனது கணவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஊசி போட அடிக்கடி வீட்டுக்கு வரும் திருச்செங்கோடு ராஜா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த நர்சிங் உதவியாளராக வேலை செய்து வந்த கோமதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழ்ச்செல்வி, கோமதியிடம் 'மக்களை தேடி மருத்துவம்' திட்ட முகாமின் நர்சாக நடிக்க செய்து, தனலட்சுமி வீட்டுக்கு சென்று உடல் நிலையை பரிசோதிப்பது போல் நடித்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் தனக்கு வரும் சொத்தில் ஒரு பெரும் தொகையை தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

    இதற்கு உடன்பட்ட கோமதி ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்ச்செல்வியின் அம்மா பாப்பாத்தியுடன் காரில் சென்று குச்சிபாளையத்தில் இறங்கி தனலட்சுமி வீட்டை தேடி உள்ளார். வீடு அடையாளம் காணப்பட முடியாத நிலையில் அருகில் இருந்தவரிடம் விசாரித்த போது தனலட்சுமியின் பேத்தி கீர்த்தியை அடையாளம் காட்டியுள்ளனர்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வயதானவர்களை வீட்டுக்கே சென்று உடல்நிலை பரிசோதித்து மருந்து கொடுக்க வந்துள்ளதாகவும், தனலட்சுமிக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியதால் கீர்த்தி அவரை தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு பரிசோதிப்பது போல் நடித்து தனலட்சுமிக்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும், அதனால் ஊக்க மருந்து தருகிறேன். இதை குடித்தால் சரியாகி விடும் என கூறி வீட்டில் இருந்த அனைவருக்கும் கோமதி குளிர்பானத்தை கொடுத்துள்ளார் .

    ஏற்கனவே திட்டமிட்டு அடையாளம் செய்து வைத்திருந்த விஷம் கலந்த குளிர்பானத்தை தனலட்சுமிக்கு வழங்கியுள்ளார். இதனை குடித்த தனலட்சுமி கசப்பதாக கூறியதை அடுத்து அப்படித்தான் இருக்கும் என சமாதானப்படுத்திவிட்டு வேகமாக வந்த கோமதி, பாப்பாத்தி இருந்த காரில் ஏறி ஊருக்கு சென்று விட்டார்.

    சற்று நேரத்தில் தனலட்சுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் கீர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாட்டி தனலட்சுமியை கீர்த்தி அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்து விட்டு கோமதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நீங்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததால் தனலட்சுமி மயக்கம் அடைந்து விட்டார் என கோமதியிடம் கூறியபோது சற்று நேரத்தில் சரியாகும் என கூறிய கோமதி போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

    இதில் சந்தேகம் அடைந்த கீர்த்தி இது குறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் 'மக்களை தேடி மருத்துவ முகாமில்' கோமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளாரா?, அவர் குச்சிபாளையம் செல்ல பணிக்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்த போது அவ்வாறு ஒருவர் பணியில் இல்லை என்பதும், குச்சிபாளையத்துக்கு யாரும் அனுப்பப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் போலி நர்சு கோமதியை பிடித்து விசாரித்த போது அவர் முழு உண்மைகளையும் போலீசாரிடம் தெரிவித்தார். தமிழ்செல்வியும், அவரது அம்மா பாப்பாத்தியும், திட்டமிட்டு கொடுத்தபடி பணத்துக்கு ஆசைப்பட்டு வெள்ளை கோர்ட்டு, பழைய ஐ.டி. கார்டு ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டு நர்ஸ் போல நடித்து தனலட்சுமி வீட்டுக்கு சென்று அவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்தார்.

    இதன்பேரில் சொத்துக்கு ஆசைப்பட்டு மாமியாருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மருமகள் தமிழ்ச்செல்வி, அவரது தாயார் பாப்பாத்தி, அவருக்கு உடந்தையாக இருந்த கோமதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேரும் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • கூட்டுறவுத் துறை அமைச்சர் தனது துறையோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம்.
    • மழைநீர் வடிகால் என்ற பெயரில், ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்களும், முதலமைச்சரும், மேயரும்.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு, சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். நீங்கள் வெளியிட்ட தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில், கடந்த 2021 – 2022 முதல், 2023 – 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகிறீர்கள். மீதமுள்ள தொகையை தள்ளுபடி செய்தீர்களா இல்லையா என்பது குறித்து, அரசின் கொள்கைக் குறிப்பில் குறிப்பிடப்படவில்லையென்றால், பொதுமக்களுக்கு எப்படித் தெரியும்?

    அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறுதி, ஆட்சிக்கு வந்த பின்னர், தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை. குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகைகளை கொண்டு போய் வங்கியில் வைத்துக் கடன் வாங்குங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறித்தான் தேர்தல் பிரசாரமே செய்தார். அப்போது தேவைப்படாத கடன் தள்ளுபடிக்கான தகுதி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்டதைத்தான், உங்கள் வாக்குறுதியை நம்பிக் கடனாளியாக நிற்கும் பொதுமக்களின் சார்பாக நாங்கள் கேள்வியாக முன்வைக்கிறோம்.

    எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, பல பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர், கண்துடைப்புக்காக சிறிய அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதனைப் பல கோடி செலவில் விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் ஆட்சியால், இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா ?

    கூட்டுறவுத் துறை அமைச்சர் தனது துறையோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். பேரிடர் மேலாண்மைத் துறைக்குச் சென்றுவிட்டார். ஒரு வகையில் அதுவும் நல்லதுதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களை மழைவெள்ளத்தில் தத்தளிக்க வைக்கும் தி.மு.க. அரசின் மீதுள்ள பொதுமக்களின் கோபத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இதனை எடுத்துக் கொள்கிறேன்.

    மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை நிதியை ஒதுக்கவில்லை என்று, தங்கள் கையாலாகாதத்தனத்துக்கு, மத்திய அரசைக் குறை கூறி தனது அறிக்கையை நிறைவு செய்திருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். கடந்த பத்து ஆண்டுகளாக, ஒவ்வொரு முறையும் டிசம்பர் மாதம் பருவமழையின்போது, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், சென்னையின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான். என்ன செய்திருக்கிறீர்கள் சென்னைக்கு? ஒரு ஆண்டிலாவது, பருவமழையைக் கண்டு அஞ்சாமல் சென்னை மக்களால் வாழ முடிகிறதா? அதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தொகுதியான கொளத்தூர் தொகுதி ஒவ்வொரு முறையும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, கடந்த பதினைந்து ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறார்? மழை நாட்களில் மட்டும் நாடகமாடுவதை விட்டுவிட்டு, நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?

    மழைநீர் வடிகால் என்ற பெயரில், ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்களும், முதலமைச்சரும், மேயரும். இத்தனை ஆண்டுகள், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கணக்கு காட்டிவிட்டு, ஒவ்வொரு முறையும் மழையின் மீது பழியைப் போட்டு, பேரிடர் நிவாரண நிதி தரவில்லை என்று கூற வெட்கமாக இல்லையா?

    தென்மாவட்டங்கள் நிலைமை இன்னும் மோசம். தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவில் அறிவிக்கப்பட்டிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மழை வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட நகைச்சுவை அரங்கேறியது இந்த டிஸாஸ்டர் மாடல் ஆட்சியில்தானே. பேரிடர் வரும்போதெல்லாம், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் எங்கு இருக்கிறார் என்பதைத் தேட, தனிக் குழுவே அமைக்கும் நிலைதானே இருந்து வருகிறது. பருவமழைக்கு முன்னர், நீர்நிலைகளையும், மழை நீர் வடிகால்களையும் தூர்வார வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளோம். விவசாய நிலங்கள் எல்லாம் வெள்ளக்காடாக மாறுவதே, நீர் நிலைகளைத் தூர்வாராமல் புறக்கணிப்பதால்தான் என்பதையும் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஆனால், அதற்கு உரிய நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மழையால் விவசாயிகளுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும்படி நடந்துவிட்டு, அதன்பின்னர், நிவாரணம் என்ற பெயரில் நாடகமாடுவது ஏன்?

    ஆட்சிக்கு வந்து ஆறு, ஏரி, குளம் என நீர்நிலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்து, அப்பாவி மக்களை மழைவெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, வருடம் ஒரு மாதம், பேரிடர் நிவாரண நிதி என்று திமுகவினர் ஒப்பாரி வைப்பதால், பொதுமக்களுக்கு என்ன பலன்? இத்தனை ஆண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை எந்தெந்த வழிகளில் செலவிட்டீர்கள், இன்னும் என்னென்ன செலவுகளுக்காக நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று தெளிவாக மத்திய அரசிடம் கேட்க முதலமைச்சரை எது தடுக்கிறது? மழை வந்த இரண்டாம் நாளே, குத்துமதிப்பாக இத்தனை ஆயிரம் கோடி நிவாரண நிதி வேண்டும் என்று கேட்பது உங்கள் அரசியல் நாடகத்திற்காக தான் என்பதை மக்கள் அறிவார்கள்.

    எல்லாவற்றுக்கும் மேல், தமிழத்துக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறுவதற்காக, தமிழக மக்களால் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் கேட்டிருக்கிறார்களா? கேன்டீன் செல்வதற்காகவே டெல்லி வரை செல்கிறார்கள் என்று பொதுமக்கள் கேலி செய்யும் அளவில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது.

    இப்படி, ஒதுக்கப்பட்ட நிதியையும், சிலை வைக்கிறோம், பெயர் வைக்கிறோம் என்று வீணடித்துவிட்டு, பாராளுமன்றத்தில் மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் பொறுப்பையும் தவறவிட்டு, ஆண்டில் 11 மாதங்கள் நீங்கள் விளம்பர நாடகமாடிக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா?

    அமைச்சர் பெரியகருப்பனுக்கு நான் பணிவன்புடன் கூறிக்கொள்வதெல்லாம், உங்கள் துறையிலேயே இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் நள்ளிரவில் பதிலளித்தாலும், நண்பகலில் பதிலளித்தாலும், உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும். இது ஒவ்வொரு துறை அமைச்சருக்கும் பொருந்தும். அதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது தெரிய வந்தது.
    • பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் வழியாக பெங்களூரு செல்லும் ரெயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கை, கால் உடைந்த நிலையில் அந்த கர்ப்பிணி மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை நேற்று பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது தெரிய வந்தது.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தின் எதிரொலியாக, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஐஜி ஏ.ஜி. பாபு ஆய்வு நடத்தினார்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    • தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை காட்டிலும் அந்த பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.
    • ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நடந்த இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    திருப்பூரில் இருந்து சித்தூருக்கு கடந்த 6-ந் தேதி ரெயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.

    அப்போது ஹேமராஜ் என்ற கொடூரனால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார்.

    இதில் கர்ப்பிணி கை, கால் முறிவு ஏற்பட்டது. பலத்த படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து 4 மாத சிசு நேற்று உயிரிழந்தது.

    இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு வயிற்றில் உயிரிழந்த சிசுவை அகற்றுவதற்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

    தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை காட்டிலும் அந்த பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஒவ்வொரு பிரச்சனையாக தொடர்ந்து உடலில் ஏற்படுவதால் சிறப்பு மருத்துவ வல்லுனர் குழுவினர் அப்பெண்ணை பரிசோதித்தனர்.

    அவர்களின் ஆலோசனைக்கு பிறகு அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதாலும், பெண்ணின் நலன் கருதியும் தற்போது அரசு மருத்துவமனையில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் அரசு செய்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நடந்த இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் ரெயில்வே போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • உலகில் 6 நாடுகள் மட்டுமே விண்வெளியில் சாதனை படைத்துள்ளது.
    • குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்:

    விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ விண்வெளித்துறை துணை இயக்குனர் கிரகதுரை கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இஸ்ரோ அனுப்பும் அனைத்து ராக்கெட்களையும் ஆன்லைனில் பார்க்கும்படி ஒளிபரப்பு செய்து வருகிறோம். உலகில் 6 நாடுகள் மட்டுமே விண்வெளியில் சாதனை படைத்துள்ளது. அதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

    குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், தொழில், கல்வி உள்பட எல்லா துறைகளிலும் ஆராய்ச்சி செய்து தரவுகளை திரட்ட வேண்டும். அதை ஆய்வு செய்து தீர்வு கொடுத்தால்தான் இந்தியா 2047-ல் வளர்ந்த நாடாக மாறும். இதை சாத்தியமாக்குவது மாணவர்கள் கையில் உள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளது.

    முதற்கட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது. அதன்பின் மனிதனை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொறியியல் பிரிவுகளில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பி.எஸ்சி., இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர்.
    • தமிழகத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே பாரம்பரிய இடத்தில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் பதட்டம் அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்த போதிலும் அதில் 2 படகுகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சுற்றி வளைத்தனர். அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற படகுகளையும் விரட்டியடித்தனர்.

    இது எங்கள் நாட்டு எல்லை, இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறிய அவர்கள் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), நிகிதன் (16), ஜேசு பூங்காவனம் (42), அந்தோணி சந்தியா (19), கார்லோஸ் (21), நிஷாந்த் (38), டூவிஸ்டன் (21), அய்யாவு அந்தோணி டிமக் (34),

    மற்றும் சுதன் என்பவரது படகில் இருந்த அருளானந்தம் (43), கெலஸ்டின் (55), அந்தோணி ஆரோன் (38) என மொத்தம் 14 மீனவர்களையும் சிறைபிடித்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை இரணத்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாகவும், எல்லைதாண்டி மீன் பிடித்ததாகவும் இலங்கை நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 70-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அதிலும் கடந்த மாதம் 25-ந்தேதி ஒரே நாளில் 34 பேரை கைது செய்தனர். இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த 34 பேரில் 32 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் அவர்களுக்கு பல லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கைது நடவடிக்கை சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசு ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர்.

    இதில் ஏராளமான படகுகள் இயக்கப்படாமல் பழுதான நிலையில் உள்ளது. மேலும் அந்த படகுகளை தங்களது வாழ்வாதாரம் கருதி விடுவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. அதற்கு மாறாக தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் 29-ந்தேதி எல்லைதாண்டியதாக கைதான 4 மீனவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த படகு, அதில் இருந்த வலைகள், ஜி.பி.எஸ். கருவி, எந்திரங்கள், நங்கூரம் உள்ளிட்ட உபகரணங்களை ரூ.20 லட்சத்து 42 ஆயிரத்திற்கு இலங்கை அரசு நேற்று ஏலம் விட்டுள்ளது. இந்த தகவல் தமிழக மீனவர்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.

    • வகுப்புவாத, பிரிவினைவாத சிருலைவு சக்திகளுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.
    • தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பெற உள்ள வெற்றிக்கு அச்சாரம் இது என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட, தி.மு. கழசு வேட்பாளர் திரு. வி.சி. சந்திரகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட தொன்னூறாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்.

    இது தமிழகத்தில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுகிற ஆட்சியின் சாதனைகளுக்கு கிடைத்த பரிசாகும். வகுப்புவாத, பிரிவினைவாத சிருலைவு சக்திகளுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.

    தமிழகத்தில் சமீபகாலமாக மதநல்லிணக்கத்தையும், சமூகநீதியையும் சீர்குலைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிற பிற்போக்கு சக்திகளுக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு உரிய பாடத்தை வழங்கியிருக்கிறது. வெற்றி பெற்றுள்ள தி.மு. கழக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கும் நனர்நியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெற்ற வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பெறப் போகின்ற வெற்றிக்கு அச்சாரமாக அமைய இருக்கிறது. இத்தகைய வெற்றியை பெறுவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக அபார வெற்றி பெற்றதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து.
    • திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ள மற்றொரு 'பெரியார் விருது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மேலும், பெரியாரை சிறுமைப்படுத்துபவர்களை மக்கள் தண்டித்துள்ளனர் என்றும் நாதகவை அவர் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து தமிமுன் அன்சாரி கூறுகையில், " பெரியாருடைய மண்ணில் அவரை சிறுமைப்படுத்துபவர்களை ஒரு எல்லைக்கோட்டில் வைத்து மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.

    பெரியார் பிறந்து வளர்ந்த மண்ணில் திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ள மற்றொரு 'பெரியார் விருதாக' இதை கருதுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×