என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 298 ரன்கள் குவித்தது.
    • ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 78 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார்.

    நவி மும்பை:

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நவி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 298 ரன்கள் குவித்தது. தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா சிறப்பான ஆட்டததை வெளிப்படுத்தினர்.

    ஸ்மிருதி மந்தனா 58 பந்தில் 8 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 78 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்னும், ஹர்மன்பிரித் கவுர் 20 ரன்னும், அமன்ஜோத் கவுர் 12 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    6வது விக்கெட்டுக்கு இணைந்த தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியில் மிரட்டியது. தீப்தி சர்மா அரை சதம் கடந்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ் 24 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. தீப்தி சர்மா 58 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தபோது இறத்தல் வந்தது.
    • 1984 சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பைப் போலவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இன்று காலை 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது.

    விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தபோது ஐதராபாத் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. 

    விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் இந்தத் தாக்குதல் 1984 சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பைப் போலவே இருக்கும் என்றும், ஐஎஸ்ஐ இந்த தாக்குதலைத் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    உஷாரான விமான நிலைய அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவிக்கவே விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டு சோதனை நடந்தது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவரவே விமானம் மீண்டும் ஐதராபாத் புறப்பட்டு சென்றது. 

    ஆகஸ்ட் 2, 1984 அன்று சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில்  மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    புதுடெல்லி:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    கடந்த 30-ம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

    உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முயற்சியில் இருப்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    • பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள MMRDA மைதானத்தில் பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்த இசை நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான வித்யா பாலன், மலைக்கா அரோரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 80 மொபைல் போன்கள் திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் ஏழு முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளனர்.

    சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வெப் சீரிஸ் நடிக்க ஆள் தேவை என்ற விளம்பரம் செய்து பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றியுள்ளார்.
    • யூடியூபர் ரோகித்தை மும்பை காவல்துறை சுட்டுக்கொன்றது.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஆக்டிங் ஸ்டூடியோவில் குழந்தைகளை பணயமாக பிடித்து வைத்து மிரட்டியவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    ஆக்டிங் ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தவரும் யூடியூபருமான ரோகித்தை மும்பை காவல்துறை சுட்டுக்கொன்றது.

    வெப் சீரிஸ் நடிக்க ஆள் தேவை என்ற விளம்பரம் செய்து பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றி அழைத்து வந்து பயணக்கைதிகளாக வைத்து மிரட்டினார் ரோகித் ஆர்யா.

    இந்நிலையில், பள்ளிக் குழந்தைகள் 17 பேரை பணய கைதிகளாகப் பிடித்து வைத்து மிரட்டியவரை காவல்துறை சுட்டுக்கொன்றுள்ளது.

    • 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர்.
    • விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர்.

    மும்பையை அடுத்த தானே நகரில் உள்ள வாக்ளே எஸ்டேட் பகுதியில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அந்த பகுதியில் பணியில் இருந்த 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர். பின்னர் 2 போலீசாரும் தாங்கள் வந்த ஸ்கூட்டரில் ஏறி அங்கிருந்து கிளம்ப தொடங்கினர். அப்போது போக்குவரத்து போலீஸ்காரர் ஓட்டிய ஸ்கூட்டரில் நம்பர் பிளேட் தெளிவில்லாமல், எண்கள் அழிந்து இருந்ததை வாலிபர் கண்டார்.

    சட்டம் அனைவருக்கும் ஒன்று தானே!, பொதுமக்களுக்கு ஒரு நீதி, அதிகாரத்தில் உள்ள போலீசாருக்கு ஒரு நீதியா? என பொங்கி எழுந்த வாலிபர் அந்த போலீஸ்காரரிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அவர் அலட்சியமாக ஸ்கூட்டரில் கிளம்பி சென்றார். உடன் இருந்த போலீஸ்காரரும் பின்னால் அமர்ந்து பயணித்தார். கடுப்பான வாலிபர் ஸ்கூட்டரை துரத்தி சென்று, அதை பின்னால் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார். பின்னர் விதிமுறையை மீறிய உங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என போலீசாருடன் அந்த வாலிபர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே போலீசாரை நோக்கி தனது செல்போனில் வீடியோவும் எடுக்க தொடங்கினர். இதை வேடிக்கை பார்த்தவர்களும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர். இந்த விவகாரம் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதுகுறித்து தானே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாலிபருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இரு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மேல் விசாரணை நடந்து வருகிறது என்றார். இருப்பினும் வாலிபருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பையும், பொதுமக்கள் மத்தியில் விறுவிறுப்பையும் எகிற செய்துள்ளது.



    • எங்கள் நகரத்தை கைப்பற்ற முயன்றால், அவர்களுக்கான கல்லறை எங்கள் மண்ணிலேயே கட்டப்படும்
    • அரசியல் ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வெளியாட்களிடம் மும்பை வீழ்ந்துவிடாது

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனகோண்டா பாம்பு என்று விமர்சித்துள்ளார்.

    மும்பையில் புதிதாக பாஜக அலுவகம் அமைக்க சட்டவிரோதமாக நிலம் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில் மும்பையின் வோர்லியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய தாக்கரே, "புதிய பாஜக அலுவலகம் அமைக்க மின்னல் வேகத்தில் நிலத்தைக் கைப்பற்றப்பட்டது.

    அனகோண்டா தன் பாதையில் உள்ள அனைத்தையும் விழுங்குவது போல, இவர்கள் மும்பையையும் முழுமையாக விழுங்க நினைக்கிறார்கள்" என்று அமித் ஷாவையும், பாஜகவையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.

    மேலும் பாஜக தலைவர்களை ஆப்கானியப் படையெடுப்பாளரான அஹமது ஷா அப்தாலியுடன் ஒப்பிட்ட தாக்கரே, "உண்மையான அப்தாலிகள் மீண்டும் வந்துள்ளனர்.

    இந்த முறை அவர்கள் டெல்லி மற்றும் குஜராத்திலிருந்து வந்துள்ளனர். ஆனால், அவர்கள் எங்கள் நகரத்தை கைப்பற்ற முயன்றால், அவர்களுக்கான கல்லறை எங்கள் மண்ணிலேயே கட்டப்படும்" என்று எச்சரித்தார்.

    அரசியல் ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வெளியாட்களிடம் மும்பை வீழ்ந்துவிடாது என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.  

    • ஜனநாயகத்தில் வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று அரசு வாக்காளர்களை தேர்வு செய்கிறது.
    • மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்.

    மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா (UBT) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று அரசு வாக்காளர்களை தேர்வு செய்கிறது. மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். அது விசாரணையை சந்திக்க வேண்டும்.

    பாஜக தன்னிறைவு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், பாஜக இன்னும் தன்னிறைவு பெறவில்லை. ஏனென்றால், அது கட்சிகளை பிரித்து வாக்குகளை திருடிக் கொண்டிருக்கிறது. பாஜக தன்னைத்தானே தேசபக்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் போலிக் கும்பல். வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்யும்வரை, மகாராஷ்டிராவில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்திற்கு சொல்லிக் கொள்கிறேன்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.
    • மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் சதாரா மாவட்டம் பால்டன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

    4 நாட்களுக்கு முன்பு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதியுள்ளார்.

    பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வீட்டு உரிமையாளர் பிரசாந்த் பங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    போலியான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டதாக பெண் டாக்டரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இது தற்கொலை இல்லை என்றும் பிரேத பரிசோதனையை மாற்ற டாக்டர் ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • மழை காரணமாக போட்டி 27 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    மும்பை:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், நவி மும்பையில் இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 28-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 27 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 27 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் ராதா ராணி 3 விக்கெட்டும், ஸ்ரீ சரணி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. மழை காரணமாக 27 ஓவரில் 126 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    இந்திய அணி 8.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஸ்மிருதி மந்தனா 34 ரன்னும், அமன்ஜோத் கவுர் 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதன்மூலம் இந்திய அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என மொத்தம் 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 7வது இடம் பிடித்தது.

    • 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
    • தலைமறைவான எஸ்.பி. கோபால் கைது செய்யப்பட்டார்.

    மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் கடந்த வியாழன் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

    அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.

    தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்தது.

    DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

    தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

     இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    அதில், காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தினர். பலரை மருத்துவ பரிசோதனைகளுக்கு கூட அழைத்து வராமல் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழுத்தம் தந்தனர். அதற்கு சம்மதிக்காததால் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

    இந்த வழக்கில் குற்றமசாட்டப்பட்டு தலைமறைவான எஸ்.பி. கோபால் நேற்று கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மகாராஷ்டிராவின் சதாராவில் டாக்டர் சம்பதா முண்டே துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டது, எந்தவொரு நாகரிக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் ஒரு சோகம்.

    மற்றவர்களின் துன்பத்தைத் தணிக்க விரும்பிய ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவர், ஊழல் அமைப்பிற்குள் குற்றவாளிகளின் சித்திரவதைக்கு பலியானார்.

    குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த அப்பாவிப் பெண்ணுக்கு எதிராக மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளனர்.

    அறிக்கைகளின்படி, பாஜகவுடன் தொடர்புடைய சில செல்வாக்கு மிக்க நபர்கள் அவரை ஊழலுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதிகாரத்தால் பாதுகாக்கப்பட்ட குற்றவியல் சித்தாந்தத்தின் மிகவும் இழிவான உதாரணம் இது. இது தற்கொலை அல்ல, அமைப்பு ரீதியான கொலை.

    அதிகாரம் குற்றவாளிகளைக் காப்பாற்றும்போது, யார் நீதியை எதிர்பார்க்க முடியும்? டாக்டர் சம்பதாவின் மரணம் இந்த பாஜக அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் இரக்கமற்ற தன்மையை அம்பலப்படுத்துகிறது.

    நீதிக்கான இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்கும் இனி பயம் இல்லை, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.  

    • மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • குழந்தைகளை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராகுல் சவான். இவருக்கு திருமணம் முடிந்து இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. அவர்களுக்கு இரண்டு வயது ஆகிறது.

    சம்பவத்தன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு டிராவல் மேற்கொண்டுள்ளார் ராகுல் சவான். அப்போது ராகுல் சவானுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    தகராறு அதிகமான மனைவி கோபத்தில் வாகனத்தில் இருந்து இறங்கி, தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ராகுல் சவானுக்கு கடுங்கோபம் ஏற்பட்டுள்ளது. மனைவி மீதான கோபம் தன்னுடைய குழந்தைகள் மீது திரும்பியுள்ளது. இரட்டை பெண் குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இதனால் இரண்டு குழந்தைகளையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு வைத்து பெற்ற குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    பின்னர் நேராக வாஷிம் காவல் நிலையம் வந்து, தன்னுடைய இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று இரண்டு குழந்தைகள் உடலை மீட்டனர்.

    உடலின் சில பகுதிகள் எரிந்த நிலையில் உள்ளது. சாட்சிகளை அழிக்க உடலுக்கு தீவைத்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடற்கூறு ஆய்விற்குப் பிறகுதான் இரண்டு குழந்தைகளும் எப்படி கொல்லப்பட்டனர் என்பது தெரியவரும்.

    தந்தையே இரட்டை குழந்தைகளை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×