என் மலர்
கேரளா
- பூனையின் நகக்கீறல் காரணமாக சிறுமி இறந்திருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பரிசோதனை முடிவு வந்தால் தான், சிறுமி எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியை சேர்ந்த தம்பதி அஷ்ரப்-சஜினா. இவர்களது மகள் ஹன்னா பாத்திமா. 11 வயது சிறுமியான அவள், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.
சிறுமியின் வீட்டில் ஒரு பூனை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று அந்த பூனையின் நகம் பட்டு சிறுமி ஹன்னா பாத்திமா காயமடைந்தார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறுமிக்கு ரேபிஸ் தடுப்பூசி முதல் தவணை அடூர் தாலுகா ஆஸ்பத்திரியில் போடப்பட்டது.
பந்தளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமிக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு வீடு திரும்பிய சிறுமி ஹன்னா பாத்திமாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமி மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
அங்கு உடல்நிலை மேலும் மோசமானதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டாள். அங்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் சிறுமி ஹன்னா பாத்திமா திடீரென இறந்தாள். பூனையின் நகக்கீறலுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், சிறுமி இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேபிஸ் பாதித்து அவர் இறந்திருக்கக்கூடும் என்ற கருதப்படுகிறது. ஆனால் பூனையின் நகக்கீறல் காரணமாக சிறுமி இறந்திருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே டெங்கு அல்லது நிபா பாதிப்பு காரணமாக சிறுமி ஹன்னா பாத்திமா இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிறுமி எப்படி இறந்தார்? என்பதை கண்டறிய அவரது உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன. பரிசோதனை முடிவு வந்தால் தான், சிறுமி எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.
- படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர வைக்கப்பட்டு இருப்பார்கள்.
- கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசு 6 மாநிலங்களில் ஆரம்ப கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல்படுத்த அறிவுறுத்தியது.
இயக்குனர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கேரளாவில் கிராமப்புரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பள்ளி தேர்தலை மையமாக கொண்டு இந்த படம் இயக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் இடையேயான நட்புறவு, மகிழ்ச்சிகள், அவ்வப்போது ஏற்படும் மோதல்கள் ஆகியவை அழகாக படமாக்கப்பட்டு உள்ளன.
வழக்கமாக பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்சுகளில் வரிசை வரிசையாக உட்கார வைக்கப்படுவது வழக்கம். முதல் வரிசை, 2-ம் வரிசை, 3-ம் வரிசை என தொடர்ந்து பெஞ்சுகள் போடப்பட்டு இருக்கும். முதல் வரிசையை போல கடைசி வரிசையும் இருக்கும். படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர வைக்கப்பட்டு இருப்பார்கள்.
இத்தகைய வரிசை முறை என்பது மாணவர்கள் மத்தியில் வேறுபாடுகளை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது. அந்த வேறுபாடுகளை மாற்றும் நோக்கத்துடன் இந்த படத்தில் பள்ளி வகுப்பறையில் அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்பட்டு காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளது. அரைவட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்தும் கருத்து இந்த படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த படம் வெளியான பிறகு மாணவர்களின் பெஞ்ச் இருக்கை அமைப்பு தொடர்பான காட்சிகளுக்கும், அது வலியுறுத்தும் கருத்துக்கும் வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் உள்ள காட்சிகளின்படி இதுவரை கேரளாவில் உள்ள 6 பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்ச் இருக்கை முறை அரைவட்ட வடிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது இனி கடைசி பெஞ்ச் இல்லை என்கிற நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து படத்தை இயக்கிய வினேஷ் விஸ்வநாத் கூறியதாவது:-
கேரளாவில் உள்ள பல பள்ளிகளால் எனது படத்தில் உள்ள வகுப்பறை பெஞ்ச் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 6 பள்ளிகள் ஏற்கனவே இதை அறிமுகப்படுத்தி உள்ளன. இன்ஸ்டாகிராம் வழியாக நாங்கள் அதை பற்றி அறிந்தோம். நான் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தொடக்கப்பள்ளியில் படித்தபோது அப்படித்தான் அமர்ந்திருந்தேன். இந்த காட்சியை படத்தில் வைத்தபோது பள்ளிகளில் இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. இந்த படத்தை வெளியிட பல வகையிலும் சிரமங்களை சந்தித்தோம். கிட்டத்தட்ட ஒரு வருட தாமதத்துக்கு பிறகு படத்தை வெளியிட்டு உள்ளோம். படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் தியேட்டர்களில் கொஞ்ச நாட்களே ஓடியது. பின்னர் 7 மாதங்கள் கழித்து ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு உள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் வலக்கம் ஆர்.வி.வி. மேல்நிலைப்பள்ளி முதன்முதலாக இத்தகைய பெஞ்ச் மாற்றத்தை அமல்படுத்தியது. இந்த பள்ளியை கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் நிர்வகிக்கிறார். அவர் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இந்த படம் வெளியாவதற்கு 7 மாதங்களுக்கு முன்பே அவருக்கு படத்தை போட்டு காட்டினோம். அவருக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. அவரது பள்ளியில் பெஞ்ச் முறையில் மாற்றம் செய்திருப்பது அவரது உறவினர் ஒருவர் மூலம் எனக்கு தெரியவந்தது. படம் வெளியானபோது அதை வெளிப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் படத்தின் கிளைமாக்ஸ் அதுதான். ஓ.டி.டி.யில் வெளியான பிறகே நாங்கள் அதை பிரபலப்படுத்தினோம்.
அதைத்தொடர்ந்து மேலும் 5 பள்ளிகள் இந்த மாற்றங்களை செய்துள்ளன. மேலும் பல பள்ளிகள் இருக்கை முறையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளியில் இத்தகைய இருக்கை முறை மாற்றம் என்பது புதியது அல்ல. கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசு 6 மாநிலங்களில் ஆரம்ப கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல்படுத்த அறிவுறுத்தியது. ஆனால் அப்போது பள்ளி நிர்வாகத்தினர் யாரும் அதை அமல்படுத்த முன்வரவில்லை. இப்போது திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, கேரளாவில் உள்ள பள்ளிகளில் இத்தகைய மாற்றம் அமலுக்கு வர தொடங்கியுள்ளது.
- இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
- பேருந்தை இயக்கும் ஷிபு தாமஸ் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்று வரும் பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை சார்ந்த ஓட்டுநர்கள் வராத நிலையில், தற்காலிக பணியாளர்கள் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசு பேருந்நு ஓட்டும் ஓட்டுநர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவிலிருந்து கொல்லம் செல்லும் பாதையில் பேருந்து சென்று கொண்டிருக்கிறது. அப்போது பேருந்தை இயக்கும் ஷிபு தாமஸ் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தாக்குதலின்போது ஏற்படும் காயங்களில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்திருப்பதாக கூறுகிறார்.
- அவரது வருகையின் நோக்கம் என்ன? அவர் இங்கு யாரை சந்தித்தார்?
- கேரள சுற்றுலா அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் சமயத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்கு ரகசியங்களை வழங்கிய குற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்நிலையில் கடந்த காலங்களில், கேரள சுற்றுலாத் துறையின் விளம்பர நிகழ்வுகளுக்கு ஜோதி மல்ஹோத்ராவை அழைத்தது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது,
"பாகிஸ்தானுடன் தொடர்புள்ள ஒருவருக்கு கேரளாவில் ஏன் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது? அவரது வருகையின் நோக்கம் என்ன? அவர் இங்கு யாரை சந்தித்தார்?" என்று பாஜக தலைவர்கள் ஆளும் பினராயி விஜயன் அரசிடம் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் கேரள சுற்றுலா அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஜோதி மல்ஹோத்ராவைத் தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்திற்கு நேரடித் தொடர்பு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். சுற்றுலா பிரச்சாரத்திற்காக பணியமர்த்தப்பட்ட ஒரு நிறுவனம் நாடு முழுவதிலுமிருந்து பல பிரபலங்களை அழைத்ததாகவும், ஜோதி மல்ஹோத்ரா அவர்களில் ஒருவர் என்றும் அவர் கூறினார்.
உளவு குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த விளம்பர நிகழ்வு நடந்ததாக அவர் கூறினார்.
- கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 பிரபல யூடியூபர்களுக்கு மாநில சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்தது தெரியவந்துள்ளது.
- கேரள இடது முன்னணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
திருவனந்தபுரம்:
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கும், டெல்லியில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருந்ததும், அதன்மூலமாக பல முறை பாகிஸ்தானுக்கு சென்று வந்ததும், அந்த நாட்டுக்கு உளவு வேலை பார்த்ததும் தெரியவந்தது. அவரைத்தொடர்ந்து பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே யூடியூபர் ஜோதி, கேரள அரசுக்கு பிரசாரம் செய்த பரபரப்பு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மாநில அரசு அளித்த பதிலில், 'கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கில் 41 பிரபல யூடியூபர்களுக்கு மாநில சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்தது தெரியவந்துள்ளது. அவர்களின் பயணம், தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான செலவை கேரள சுற்றுலாத்துறை ஏற்றுக்கொண்டது.
அவ்வாறு வந்தவர்கள் கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வீடியோக்களை எடுத்து வெளியிட்டனர். அதில் ஜோதி மல்கோத்ராவும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த செய்தி கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் கூறியதாவது:-
கேரள சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை அது. சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பலர் அழைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக ஜோதி மல்ஹோத்ராவும் அழைக்கப்பட்டார். அனைத்தும் வெளிப்படையாகவும், நல்ல நோக்கத்துடனும் செய்யப்பட்டன.
கேரளாவில் உள்ள இடது முன்னணி அரசு உளவு பார்க்க உதவும் அரசு அல்ல. அரசு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நடந்த நிகழ்வு முழுக்க முழுக்க கேரள சுற்றுலாத்துறையின் பிரசாரத்துக்கானது. உளவாளி என்று தெரிந்தே அரசு ஒருவரை அழைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
எனினும், கேரள இடது முன்னணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. ஒருவரின் பின்னணி பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் ஒரு அரசு எவ்வாறு அவருக்கு அழைப்பு விடுக்கலாம் என அவை கேள்வி எழுப்பி உள்ளன.
இதுகுறித்து பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், "பாரத மாதாவுக்கு தடை விதிப்பார்கள். ஆனால், பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பார்களா?. சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ், முதல்-மந்திரி பினராயி விஜயனின் மருமகன். அவரை பதவி நீக்கம் செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
கேரள அரசை விமர்சித்துள்ள பா.ஜ.க.வுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. சந்தோஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கேரள அரசா ஜோதியை பாகிஸ்தானுக்கு அனுப்பியது?. மத்திய அரசின் உளவுத்துறை செயலிழந்து விட்டது. தங்கள் மீதுள்ள குறையை மறைக்க மற்றவர்கள் மீது பழி சுமத்துவதா?' என்று கூறியுள்ளார்.
- எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 9,169 நாய்கடி வழக்குகள் பதிவாகி உள்ளது.
- தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே தெருநாய் கடி பாதிப்பு அதிகரிக்க காரணமாகும்.
கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கிறது. தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், நாய் கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கேரளாவில் கடந்த 5 மாதங்களில் 1,65,136 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டிருப்பதும், 17 பேர் ரேபிஸ் நோய் தாக்கி இறந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சமூக ஆர்வலர் ராஜூ என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பெற்ற தகவல்களில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில் கூறப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 9,169 நாய்கடி வழக்குகள் பதிவாகி உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான நாய்கடி சம்பவங்கள் பதிவாகியிருக்கிறது.
கடந்த 5 மாதங்களில் நாய்கடி இறப்புகளை பொறுத்தவரை அதிகபட்சமாக ஆலப்புழாவில் 4, கொல்லம் மற்றும் மலப்புரத்தில் தலா 3, பாலக்காடு மற்றும் பத்தினம்திட்டாவில் தலா 2, எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரத்தில் தலா ஒன்று என மொத்தம் 17 பதிவாகி உள்ளது.
தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே தெருநாய் கடி பாதிப்பு அதிகரிக்க காரணமாக இருக்கிறது. கொச்சி நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்க தெருநாய்களுக்கு பொதுமக்கள் உணவு அளிப்பது முக்கியமான காரணமாக இருக்கிறது என்று மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
மேலும் சில நபர்கள் உள்ளூர் ஓட்டல்கள மற்றும் இறைச்சி கூடங்களில் இருந்து பெறப்படும் இறைச்சி கழிவுகளை தெர வில் உள்ள நாய்களுக்கு உணவளிப்பதால் நிலைமை மேலும் மோசமடைவதா வும் அவர் கூறினார்.
தெருநாய்கள் மூலமாக மக்களுக்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், தெரு நாய்கள் பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு விரைவில் கேரளா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
- குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
- வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் அவரது தைரியத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் புகுந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். ரோஷ்னி ராஜநாகத்தை பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் அவரது தைரியத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
வனத்துறை அதிகாரி ரோஷ்னி கடந்த 8 வருடங்களாக கிட்டத்தட்ட 800 பாம்புகளை பிடித்துள்ளார். ஆனாலும் 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்தது ரோஷ்னிக்கு இதுவே முதல்முறையாகும்.
- அவரது மூத்த மகன் இறந்த நிலையில் அவரது இளைய மகன் பலத்த காயமடைந்தார்.
- கள் இல்லாததால், அந்த வழக்கும் அப்போது மூடப்பட்டதும் கண்டறியப்பட்டது.
கேரளாவின் கொய்கோட்டைச் சேர்ந்த முகமது அலி (53) என்ற நபர் தான் 40 வருடங்களுக்கு முன் செய்த 2 கொலைகளை ஒப்புக்கொண்டு மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அண்மையில் விபத்து ஒன்றில் அவரது மூத்த மகன் இறந்த நிலையில் அவரது இளைய மகன் பலத்த காயமடைந்தார். மேலும் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்துள்ளன. தனது கடந்த கால குற்றங்களே இதற்குக் காரணம் என்று அவர் நம்பினார். எனவே தொடர் குற்றவுணர்வின் காரணமாக அவர் காவல்துறையை அணுகி உண்மையைச் சொன்னார்.
1986 ஆம் ஆண்டு, முகமது அலி (அப்போது 14 வயது) அடிக்கடி தன்னைத் துன்புறுத்தி வந்த 20 வயது இளைஞனை ஒரு நாள் உதைத்து கால்வாயில் தள்ளினார். அலி பயந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து அவர் திரும்பி வந்தபோது, அந்த இளைஞர் தண்ணீரில் இறந்து கிடந்தார். அப்போது யாரும் புகார் அளிக்க முன்வராததால், போலீசார் அதை ஒரு சாதாரண மரணமாகப் பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
பின்னர், 1989 ஆம் ஆண்டு வெள்ளாயில் கடற்கரையில் மற்றொரு நபரைக் கொன்றதாகவும் முகமது அலி ஒப்புக்கொண்டார். அந்த நேரத்தில் அங்கு அடையாளம் தெரியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதும் ஆதாரங்கள் இல்லாததால், அந்த வழக்கும் அப்போது மூடப்பட்டதும் கண்டறியப்பட்டது. இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான பழைய கோப்புகளை போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
- பொறியாளர்கள் குழு ஏர்பஸ் A400M அட்லஸ் விமானத்தில் பிரிட்டனில் இருந்து வந்துள்ளது.
- எதிரி ரேடார்களுக்குத் தெரியாத மிக ரகசிய ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று வாரங்களாக தார் சாலை ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் அதிநவீன F-35B ஸ்டெல்த் போர் விமானம், இறுதியாக ஹேங்கருக்கு மாற்றப்பட்டது.
ஒரு டோவிங் வாகனத்தில் விமானம் ஹேங்கருக்கு இழுத்துச் செல்லப்பட்டது. சமீபத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போர் விமானம் திருவனநாதபுர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போதிருந்து, பிரிட்டிஷ் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதை சரிசெய்ய முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் மற்றொரு பொறியாளர்கள் குழு ஏர்பஸ் A400M அட்லஸ் விமானத்தில் பிரிட்டனில் இருந்து வந்துள்ளது. விமானத்தை இங்கு பழுதுபார்ப்பது சாத்தியமா அல்லது அதை பிரித்து C-17 குளோப்மாஸ்டர் ராணுவ போக்குவரத்து விமானத்தில் இங்கிலாந்த்து எடுத்துச் செல்ல வேண்டுமா என்பதை குழு முடிவு செய்யும்.
110 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த ஜெட் விமானம், எதிரி ரேடார்களுக்குத் தெரியாத மிக ரகசிய ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கசிந்தால், இராணுவ ரகசியங்கள் அம்பலமாகும் என்றும் ஆபத்து ஏற்படும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
- ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண காவல்துறையின் உதவியை நாடியுள்ளோம்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.
இந்த நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த வைரஸ் தொடர்பாக மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேறு யாருக்கேனும் இந்த அறிகுறி உள்ளதா என கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 26 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "நிபா வைரஸ் பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றை பலப்படுத்தியுள்ளோம். நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண காவல்துறையின் உதவியை நாடியுள்ளோம். மக்களுக்கு உதவ ஹெல்ப் லைன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.
- C-17 குளோப்மாஸ்டர் எனப்படும் பெரிய போக்குவரத்து விமானத்தில் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும்.
- இருப்பினும், F-35 விமானத்தின் இறக்கைகள் சுமார் 11 மீட்டர் என்றாலும், C-17 சரக்கு இருப்பு அகலம் 4 மீட்டர் மட்டுமே.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் F-35B போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதை சரிசெய்ய பிரிட்டனைச் சேர்ந்த 40 பொறியாளர்கள் கொண்ட குழுவின் முயற்சிகள் தோல்வியடைந்தன. இரண்டு வாரங்களாக சிக்கலைத் தீர்க்க முடியாததால், விமானத்தை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்புவதே சிறந்தது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, போர் விமானம் C-17 குளோப்மாஸ்டர் எனப்படும் பெரிய போக்குவரத்து விமானத்தில் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும்.
இருப்பினும், F-35 விமானத்தின் இறக்கைகள் சுமார் 11 மீட்டர் என்றாலும், C-17 சரக்கு இருப்பு அகலம் 4 மீட்டர் மட்டுமே. இதனால் விமானத்தை நேரடியாக உள்ளே ஏற்றுவது சாத்தியமில்லை. எனவே, அதன் இறக்கைகளைப் பிரித்து விமானத்தை பாகங்களாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானத்தின் இறக்கைகளைப் பிரிப்பது மிகவும் சிக்கலான செயல்முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், இவ்வாறு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில், அமெரிக்காவிலும் தென் கொரியாவிலும் F-35 விமானங்களின் இறக்கைகள் இதேபோன்ற முறையில் அகற்றப்பட்டு வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த செயல்முறை ஒரு சில நாட்களில் முடிக்கப்பட்டு, விமானம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- திருமணமான பெண், பொய் வாக்குறுதி கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு ஆண் மீது புகார்.
- ஒரு திருமணமான பெண் வேறொரு நபருடன் உடல் உறவில் ஈடுபடும்போது முழு சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருமண வாக்குறுதி அடிப்படையில் பாலியல் உறவுக்கு பிறகு திருமணமான பெண் புகார்: கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு/ Married woman cannot claim she was coerced into sex on false promise of marriage Kerala High Court
திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருமணம் செய்த பெண் ஆண் ஒருவர் மீது குற்றம் சுமத்த முடியாது என கேரள மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்பபை வழங்கியுளளது.
திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், 2.5 லட்சம் ரூபாய் கடன் பெற்ற பிறகு தனது போட்டோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாக, ஆண் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் அடிப்படையில் போலீசார் பொய் வாக்குறுதி அளித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த நபர் மீது போலீசார் கடுமையான பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பிரிவின் கீழ் அவருக்கு 10 வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும்.
வழக்குப்பதிவு செய்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். தனக்கு ஜாமின் வழங்கக்கோரி கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "திருமண வாக்குறுதியின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளைக் கருத்தில் கொள்ளும்போது, நீதிமன்றம் இந்த நேரத்தில் அந்த உறவு சம்மதத்துடன் நடந்ததா? இல்லையா? என்பது குறித்து ஒரு முடிவுக்கு வருவது கடினம் என்பது கவனிக்கப்படுகிறது.
குறிப்பாக ஒரு திருமணமான பெண் வேறொரு நபருடன் உடல் உறவில் ஈடுபடும்போது முழு சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பினரும் தங்களுடைய முந்தைய திருமணம் பற்றி அறிந்திருந்தால், அவர்களுக்கிடையேயான பாலியல் உடலுறவு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியுடன் நடந்ததாகக் கூற முடியாது" எனத் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த உத்தரவு இந்த வழக்கிற்கு மட்டுமே பொருந்தும். ஒவ்வொரு வழக்கின் உண்மை மற்றும் சூழ்நிலை கருத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நபருக்கு ஜாமின் வழங்கியது.






