என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாந்திரீக பூஜை"

    • இளம்பெண்ணுக்கு சில மாந்திரீக பூஜைகள் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்.
    • இளம் பெண்ணின் உடலில் பல இடங்களில் தீயால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் கொரட்டி குன்னல் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது55). இவரது மகன் அகில்(26). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து அகில் குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் அகிலின் மனைவிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் தீயசக்திகள் புகுந்துவிட்டதாக அகிலின் குடும்பத்தினர் கருதினர். ஆகவே அவர்கள் பத்தினம்திட்டா பெரும்துருத்தி மடச்சிரா பகுதியை சேர்ந்த சிவதாஸ் (54) என்ற மந்திரவாதியை நாடினர்.

    அப்போது அவர் இளம்பெண்ணுக்கு சில மாந்திரீக பூஜைகள் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து மாந்திரீக பூஜை செய்வதற்கான எற்பாடுகளை அகிலின் குடும்பத்தினர் செய்தனர். பின்பு அவர்களது வீட்டுக்கு வந்த மந்திரவாதி சிவதாஸ் மாந்திரீக பூஜை செய்தார்.

    இளம்பெண்ணை ஒரு இடத்தில் அமரவைத்து தொடர்ந்து 10 மணி நேரம் பூஜை செய்துள்ளார். அந்த பூஜையின் போது இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து குடிக்க செய்துள்ளனர். மேலும் பீடி சாம்பலை விழுங்கச் செய்திருக்கின்றனர்.

    அது மட்டுமின்றி இளம் பெண்ணின் உடலில் பல இடங்களில் தீயால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இந்தநிலையில் இளம்பெண்ணை பார்க்க அவரது தந்தை வந்துள்ளார். அவரிடம் தன்னை கணவர் குடும்பத்தினர் மாந்திரீக பூஜை என்ற பெயரில் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கிய விவரத்தை தெரிவித்தார்.

    அவர் அதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி இளம்பெண்ணின் கணவர் அகில், மாமனார் தாஸ், மந்திரவாதி சிவதாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த விவகாரத்தில் அகிலின் தாய்க்கும் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந் துள்ளது. தலைமறைவாகி விட்ட அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார்.
    • உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்த பின்னர் மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தியதால், திருமணமான 4 மாதத்தில் உமா மகேஸ்வரி கணவரை பிரிந்து தாயார் தனலெட்சுமியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை மாரிமுத்து தனது நண்பர்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றார். இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது தாய் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், போலீசாரிடம் உமாமகேஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்தார். தொடர்ந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்தார். பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார். அவருடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார் தெரிவித்துள்ளார்.

    கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுகிறார். உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×