என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Witchcraft"

    • இளம்பெண்ணுக்கு சில மாந்திரீக பூஜைகள் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்.
    • இளம் பெண்ணின் உடலில் பல இடங்களில் தீயால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் கொரட்டி குன்னல் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது55). இவரது மகன் அகில்(26). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து அகில் குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் அகிலின் மனைவிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் தீயசக்திகள் புகுந்துவிட்டதாக அகிலின் குடும்பத்தினர் கருதினர். ஆகவே அவர்கள் பத்தினம்திட்டா பெரும்துருத்தி மடச்சிரா பகுதியை சேர்ந்த சிவதாஸ் (54) என்ற மந்திரவாதியை நாடினர்.

    அப்போது அவர் இளம்பெண்ணுக்கு சில மாந்திரீக பூஜைகள் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து மாந்திரீக பூஜை செய்வதற்கான எற்பாடுகளை அகிலின் குடும்பத்தினர் செய்தனர். பின்பு அவர்களது வீட்டுக்கு வந்த மந்திரவாதி சிவதாஸ் மாந்திரீக பூஜை செய்தார்.

    இளம்பெண்ணை ஒரு இடத்தில் அமரவைத்து தொடர்ந்து 10 மணி நேரம் பூஜை செய்துள்ளார். அந்த பூஜையின் போது இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து குடிக்க செய்துள்ளனர். மேலும் பீடி சாம்பலை விழுங்கச் செய்திருக்கின்றனர்.

    அது மட்டுமின்றி இளம் பெண்ணின் உடலில் பல இடங்களில் தீயால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இந்தநிலையில் இளம்பெண்ணை பார்க்க அவரது தந்தை வந்துள்ளார். அவரிடம் தன்னை கணவர் குடும்பத்தினர் மாந்திரீக பூஜை என்ற பெயரில் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கிய விவரத்தை தெரிவித்தார்.

    அவர் அதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி இளம்பெண்ணின் கணவர் அகில், மாமனார் தாஸ், மந்திரவாதி சிவதாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த விவகாரத்தில் அகிலின் தாய்க்கும் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந் துள்ளது. தலைமறைவாகி விட்ட அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • 'AirDroid Kid' என்ற ரகசிய செயலியை ரகசியமாக இன்ஸ்டால் செய்வார்.
    • பாலியல் தொழிலாளர்கள் உட்பட பல பெண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபட செய்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட்டில், 29 வயது சாமியார் ஒருவர்  கைது செய்யப்பட்டார்.

    குற்றம் சாட்டப்பட்டவர் பிரசாத் என்ற தாதா பீம்ராவ் தம்தார் (29) 'தெய்வீக சக்திகள்' இருப்பதாக கூறி பலரை, குறிப்பாக கருத்தரிக்க சிரமப்படும் பெண்களை ஏமாற்றினார்.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, போலி பாபா பீம்ராவ் ஆன்மீகம் என்ற போர்வையில் பாவ்தான் பகுதியில் செயல்பட்டார். தெய்வீக சக்திகளைப் பெற்றதாகக் கூறி, பக்தர்களிடம் "நீங்கள் நான்கு முதல் ஐந்து மாதங்களில் இறந்துவிடுவீர்கள்" என்று அவர்களை ஏமாற்றி, மனதளவில் பலவீனப்படுத்தினார்.

    புனித மாந்திரீகம் செய்வதாகக் கூறி, பக்தர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் தொலைபேசிகளைக் கேட்பார். பின்னர் அவர் 'AirDroid Kid' என்ற ரகசிய செயலியை ரகசியமாக இன்ஸ்டால் செய்வார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் GPS ஆகியவற்றை தொலைவிலிருந்து போலி பாபா அணுக முடிந்தது.

    இந்த செயலியைப் பயன்படுத்தி, போலி பாபா பக்தர்களை அழைத்து, அவர்களின் உடைகள், இருப்பிடம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக விவரிப்பார். இதன் அவர் மீதான அவர்களின் நம்பிக்கையை மேலும் வளர்ப்பார்.

    அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, மரணத்திலிருந்து தப்பிக்க ஒரு தீர்வாக காதலி அல்லது பாலியல் தொழிலாளியுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு சில இளம் ஆண் பக்தர்களுக்கு பாபா அறிவுறுத்தினார்.

    அவர்களின் மொபைல் போன்களை குறிப்பிட்ட கோணங்களில் வைக்க சொல்லி, அந்தரங்க தருணங்களை தொலைபேசி கேமரா மூலம் பார்த்து பதிவு செய்து அதை ரசியுள்ளார் பாபா.

    இளம் பக்தர்களில் ஒருவர் தனது தொலைபேசி தொடர்ந்து சூடாகி வருவதைக் கவனித்தார். அவர் அதை ஒரு நண்பரிடம் கொடுத்தார், அவர் அதை மடிக்கணினியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து சந்தேகத்திற்கிடமான மறைக்கப்பட்ட செயலியைக் கண்டுபிடித்தார்.

    யாரோ ஒருவர் தொலைபேசியை ரிமோட் மூலம் இயக்குவது உறுதி செய்யப்பட்டது. பாபா மட்டுமே சமீபத்தில் தனது தொலைபேசியைக் கையாண்டதாக பாதிக்கப்பட்டவர் நினைவு கூர்ந்தார். இதன்மூலம் ஏற்பட்ட சந்தேகத்தில் அவர் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் பாபா மீது 3 புகார்கள் வந்தன. 

    போலி பாபா தாம்தார் கைது செய்யப்பட்டு, பாரதிய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் மகாராஷ்டிரா நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, அகோரி நடைமுறைகள் மற்றும் சூனியம் தடுப்புச் சட்டம், 2013 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • பொதுநல மனுவை தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
    • அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு எதிராக ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

    சூனியம் மற்றும் மாய மந்திரம் போன்ற மனிதாபிமானமற்ற செயல்களைத் தடை செய்வதற்கான சிறப்புச் சட்டத்தை உருவாக்கும் முன்மொழிவை கேரள இடதுசாரி அரசு கைவிட்டுள்ளது.

    இதுபோன்ற செயல்களைத் தடைசெய்யும் சட்டத்தை கொண்டு வரவில்லை என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தியது.

    சூனியத்தைத் தடைசெய்ய அரசாங்கம் ஒரு சிறப்புச் சட்டத்தை உருவாக்குகிறதா இல்லையா என்பது குறித்து விளக்கம் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் தலைமையிலான அமர்வு விசாரித்தது. சூனியம் போன்ற செயல்களைத் தடைசெய்ய ஒரு வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இருப்பினும், வரைவு குறித்து அமைச்சரவையில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு, ஜூலை 5, 2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மசோதாவைத் தொடர வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

     இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்பதால், நீதிமன்றம் ஒரு மனு மூலம் அத்தகைய சட்டத்தை இயற்றுமாறு மாநிலத்திற்கு உத்தரவிட முடியாது என்றும் அரசு மேலும் கூறியது.

    இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட போதிலும், இந்த நடைமுறைகளைத் தடுக்க சட்டம் தவிர வேறு ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்க முன்மொழிகிறதா என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

    • மோப்ப நாய்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் அவை மாந்திரீகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றன.
    • அதுமட்டுமின்றி, மற்றுமொரு இளைஞரையும் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதாகவும் கூறினார்.

    பீகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி நடத்தப்பட்ட சடங்கில் முதியவரில் தலை துண்டிக்கப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த யுக்வல் யாதவ் (65) கடந்த வாரம் காணாமல் போனார். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே அவர் வசித்து வந்த கிராமத்தின் பக்கத்துக்கு கிராமத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெக்கப்பட்டது. சம்பவ இடத்தில் யுக்வலின் செருப்புகள் கிடந்தன. மோப்ப நாய்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் அவை மாந்திரீகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றன.

    அங்கிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், யுக்வலை அவர்கள் கொலை செய்தது தெரிய வந்தது. சுதிர் பாஸ்வான் என்பவர் குழந்தை பாக்கியம்வேண்டி, மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனுடன் சேர்ந்து பூஜை நடத்தினார்.

    ஒரு மனிதரின் தலையைத் துண்டித்து, அவரின் தலையை ஹோலிகா தஹான் தீயில் எரித்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மாந்திரீகர் கூறியுள்ளார்.

    எனவே அவர்கள் சேர்ந்து யுக்வலை கடத்தி கொலை செய்துள்னர். அதுமட்டுமின்றி, மற்றுமொரு இளைஞரையும் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதாகவும் அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து, கொலையில் ஈடுப்பட்ட சுதிர் பாஸ்வான் மற்றும் மாந்திரீகரின் சீடர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • மாலத்தீவில்இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்
    • அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

    இந்தியப் பெருங்கடலில் அமைத்துள்ள தீவு நாடான மாலத்தீவில், மாலத்தீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபாராக பதவியேற்பட்டார். மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முய்சு சீன ஆதரவாளராக பார்க்கப்படுகிறார்.

    இந்நிலையில் அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் மூலம் பில்லி சூனியம் வைக்க முயன்றதாக அவரது கட்சியைச் சேர்த்த 2 அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    மாலத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் சேர்ந்து அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி சூனியம் வைக்க முயன்றதால் அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

     

    முகமது முய்சு மாலத்தீவு தலைநகர் மாலேவில் மேயர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே நகர சபை உறுப்பினர்களாக ஷாம்னாஸ் சலீம் மற்றும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் அவருடன் பணியாற்றிய நிலையில் தற்போது அவர்கள் இவ்வாறு செய்ததற்கான காரணம் தெரியாவரவில்லை. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நால்வரும் 7 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அதிபர் முய்சு சமீபத்தில் இந்திய பிராமராக மோடி பதிவேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    • ஹைட்டியின் மிகவும் ஏழ்மையான மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும்.
    • அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு தெருவில் எரிக்கப்பட்டது

    மகனுக்கு 'பில்லி சூனியம்' வைத்ததாக . 200 பேரை படுகொலை செய்து தெருவில் போட்டு எரித்த கேங் லீடர்

    கரீபிய தீவுகளில் அமைந்துள்ள ஒரு நாடு ஹைதி. இந்த நாட்டின் தலைநகராக - போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்ளது. போர்ட்-ஓ-பிரின்ஸ் இல் Cite Soleil என்ற துறைமுக பகுதி மக்கள்தொகை மிகுந்த குடிசைப் பகுதியாகும். ஹைதியின் மிகவும் ஏழ்மையான மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பல கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

     

     

    அதில் வார்ஃப் ஜெர்மி என்ற கும்பலை சேர்ந்த தலைவன் மோனல் மிகானோ பெலிக்ஸ் என்பவன் இந்த கொலைகளுக்கு உத்தரவிட்டுள்ளான். பெலிக்ஸ் உடைய மகன் சமீபத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் வெளியிடத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரு பாதிரியாரை அணுகியுள்ளான்.

     

    பெலிக்ஸ் மகனுக்கு அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் [voodoo practitioners] பில்லி சூனியம் [voodoo] வைத்துள்ளதாகக் கூறி அவர்களைக் கொல்ல பெலிக்ஸுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெலிக்ஸ் அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் கொலை செய்ய தனது கும்பலுக்கு உத்தரவிட்டுள்ளான். அதன்படி அந்த கும்பல் ஆண்கள் பெண்கள் என சுமார் 200 பேர் வரை கத்தியால் கொன்று குவித்துள்ளனர்.

     

    Cité Soleil இன் Wharf Jérémie பகுதியில் டிசம்பர் 6-8 க்கு இடையி ல் 127 வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படக் குறைந்தது 184 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இந்த படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதி அரசும் நேற்று இந்த படுகொலைகளை உறுதிசெய்துள்ளது.

    மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் வோல்கர் டர்க், கும்பல் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற வன்முறைகள் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

     

    100 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு தெருவில் எரிக்கப்பட்டதாகவும் அப்பகுதியிலிருந்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டுறவு (CPD) அமைப்பு தெரிவித்துள்ளது.

    கொலைக்கு உத்தரவிட்ட வார்ஃப் ஜெர்மி கும்பலுக்கு தலைமை தாங்கும் பெலிக்ஸ் தங்கள் நாட்டுக்குள் நுழைய அண்டை நாடான டொமினிகன் குடியரசு கடந்த 2022 இல் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

    • பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான் மூச்சுத்திணறலால் உயிரிழந்தாக இறந்ததை உறுதி தெரிய வந்தது.
    • உள்ளூர் சூனியக்காரரான நௌஷாத், அனீஷாவை கொலை செய்ய தூண்டியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்

    கேரளாவில் 6 வயது சிறுமியை சித்தி கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடனத்துள்ளது.

    கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஸ் கான் என்பவரின் மகள் முஸ்கான் [6 வயது]. அஜாஸ் கானின் இரண்டாவது மனைவி அனீஷா.

    சிறுமி முஸ்கான் டிசம்பர் 19 [வியாழன்] அன்று காலை தனது வீட்டில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் முஸ்கான் படுக்கையில் அசையாமல் படுத்திருப்பதாக அவரது தந்தை கருதிய நிலையில் இறுதியில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

    பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான் மூச்சுத்திணறலால் உயிரிழந்தாக இறந்ததை உறுதி தெரிய வந்தது. இதனையடுத்து நடந்த விசாரணையில் சித்தி அனீஷா சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.

    விசாரணையில், புதன்கிழமை இரவு கணவர் இல்லாதபோது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதை அனீஷா ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அனீஷாவின் மூட நம்பிக்கையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் கருதுகிறது.

    உள்ளூர் சூனியக்காரரான நௌஷாத், அனீஷாவை கொலை செய்ய தூண்டியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே நௌஷாத்திடம் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • அக்கம்பக்கத்தினர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பிடித்துச் சென்றனர்.
    • சிறுநீரை குடிக்கவும், நாய் மலத்தை சாப்பிடவும் வற்புறுத்தினர்.

    மகாராஷ்டிராவில் மூதாட்டி ஒருவர் சூனியம் செய்வதாக சந்தேகப்பட்டு அவரை கிராமத்தினர் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள ரெத்யகேடா கிராமத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி கடந்த டிசம்பர் 30 அன்று அக்கம்பக்கத்தினரால் இந்த சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

    வெளியூருக்கு வேலைக்கு சென்ற அவரின் மகனும் மருமகளும் ஜனவரி 5 அன்று திரும்பி வந்து மூதாட்டி இருந்த நிலை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    அந்த புகாரில், அக்கம்பக்கத்தினர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பிடித்துச்சென்று கட்டைகளால் அடித்தும், அறைந்தும் துன்புறுத்தி உள்ளனர். சூடான இரும்புக் கம்பிகளால் கைகளிலும் கால்களிலும் முத்திரை குத்தி உள்ளனர்.

    அவரை சிறுநீரை குடிக்கவும், நாய் மலத்தை சாப்பிடவும் வற்புறுத்தி இருக்கின்றனர். மேலும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அணிவகுத்து ஊர்வலாக அழைத்து சென்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரை உள்ளூர் காவல்துறை மறைக்க முயன்றதாக கூறி மூதாட்டியின் மகனும் மருமகளும் தற்போது அமராவதி காவல் நிலையத்தை அணுகியுள்ளனர்.

    இதுதொடர்பாக பேசிய அமராவதி காவல் கண்காணிப்பாளர் விஷால் ஆனந்த், கிராமம் வனப்பகுதியின் உள்பகுதியில் உள்ளதால், சம்பவத்தை சரிபார்க்க போலீஸ் அதிகாரி அனுப்பப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    புகார் அளிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட காவல்நிலையம் நடந்த சம்பவத்தை மறைக்க முயன்றதா என்றும் சரிபார்க்கப்படும். அது உறுதியாகும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். 

    ×