என் மலர்
இந்தியா

புகார் கொடுக்க பெற்றோருடன் வந்த இடத்தில் போலீஸ் நிலையத்தில் பயமின்றி பாட்டு பாடிய சிறுவன்
- அனைத்து போலீசாரும் கைகுலுக்கி பாராட்டினர்.
- கேரள காவல்துறையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்திலும் வீடியோ வெளியிடப்பட்டது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது மஞ்சேஸ்வரம் போலீஸ் நிலையம். இங்கு சம்பவத்தன்று போலீஸ் அதிகாரி சலாம் மற்றும் போலீசார் பணியில் இருந்தனர். அப்போது அங்கு ஒரு குடும்பத்தினர், புகார் மனு கொடுக்க வந்தனர்.
அந்த குடும்பத்தில் யூ.கே.ஜி. படிக்கக்கூடிய ஒரு சிறுவனும் இருந்தான். புகார் கொடுக்க வந்தவர்களிடம் புகார் மனுவை எழுதித் தருமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அவர்களும் போலீஸ் நிலையத்தில் அமர்ந்து மனு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சிறுவன், போலீஸ் அதிகாரி அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி சென்றான்.
பின்பு போலீஸ் அதிகாரி சலாமிடம், "நான் ஒரு பாட்டு பாடலாமா?" என்று கேட்டான். அதற்கு அவரும் சிறுவன் "ஜானி ஜானி எஸ் பாப்பா" என்ற பாடலைத்தான் பாடப்போகிறான் என்று நினைத்து படிக்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் அந்த சிறுவன், "ஒரு பனானா ஒரு பூ தருமோ" என்ற பாடலை தகுந்த ராகத்துடன் மிகவும் அழகாக பாடினான்.
அவன் பாடியதை கேட்டு போலீஸ் அதிகாரி மட்டுமின்றி, அங்கிருந்த மற்ற போலீசாரும் ஆச்சரியமடைந்தனர். அவனது பாட்டை போலீஸ் நிலையத்தில் இருந்த அனைவரும் மிகவும் ரசித்து கேட்டனர். பின்பு அவனை அனைத்து போலீசாரும் கைகுலுக்கி பாராட்டினர்.
போலீஸ் நிலையத்தில் சீருடையில் பணியில் அனைத்து போலீசாரின் முன்னிலையிலும் எந்தவித பதட்டமோ, அச்சமோ இல்லாமல் சிறுவன் பாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. போலீஸ் நிலையத்தில் போலீசாரின் முன்னிலையில் அவன் பாடிய வீடியோவை, போலீஸ் அதிகாரி சலாம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.
மேலும் கேரள காவல்துறையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்திலும் அந்த வீடியோ வெளியிடப்பட்டது. அதனை பார்த்த பலரும் சிறுவன் பாட்டு பாடும் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். இதனால் சிறுவன் பாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரவாகி இருக்கிறது.






