என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
    • வீடியோ காட்சிகள் வைரலாகி காண்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

    பெங்களூரு பாகலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஷி பூஜாரி. இவர், கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். ராஷி பூஜாரி தனது வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஜீகுகூவா என்ற இனத்தை சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வந்தார். கல்லூரிக்கு சென்ற பின்பு நாய்களை கவனித்து கொள்வதற்காக புஷ்பலதா என்ற வேலைக்கார பெண்ணை ராஷி பூஜாரி நியமித்திருந்தார்.

    அதாவது அந்த நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது, சரியான நேரத்திற்கு சாப்பாடு கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை புஷ்பலதா செய்து வந்தார். அதன்படி, கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி ராஷி பூஜாரியின் 2 நாய்களையும், புஷ்பலதா நடைபயிற்சிக்கு தனித்தனி கயிறுகளில் கட்டி அழைத்து சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து புஷ்பலதா வீட்டுக்கு சென்றார்.

    அப்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ஒரு நாய் இறந்து விட்டதாக ராஷி பூஜாரியிடம் புஷ்பலதா கூறினார். தான் ஆசையாக வளர்த்த நாய் செத்து விட்டதால் ராஷி பூஜாரி மிகுந்த வேதனை அடைந்து கண்ணீர்விட்டு அழுதார். இருப்பினும், புஷ்பலதா மீது சந்தேகம் அடைந்த அவர், காவலாளியிடம் தனது நாய் மாடியில் இருந்து விழுந்து இறந்ததை பார்த்தீர்களா? என்று ராஷி பூஜாரி விசாரித்தார். அப்போது நாய் எதுவும் கீழே விழவில்லை என்று காவலாளி தெரிவித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ராஷி பூஜாரி, குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு நாயை லிப்டில் வைத்து புஷ்பலதா கையில் பிடித்து தூக்கி கீழே ஓங்கி அடித்தார். இதில் அந்த நாய் பரிதாபமாக செத்து போய்விட்டது. இதையடுத்து செத்துப்போன நாயை கயிற்றுடன் தரதரவென இழுத்து செல்வதும், மற்றொரு நாயை அவர் அழைத்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. அதை பார்த்து ராஷி பூஜாரி அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து வேலைக்கார பெண் தனது நாயை கொடூரமாக அடித்துக் கொன்று விட்டதாக கூறி, அந்த வீடியோ காட்சிகளையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி காண்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

    அதே நேரத்தில் புஷ்பலதா மீது பாகலூர் போலீஸ் நிலையத்தில் ராசி பூஜாரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பலதாவை அதிரடியாக கைது செய்தனர். கைதான புஷ்பலதா தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும், அவர் பெங்களூருவில் வசித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாய் இல்லாத ஜீவனை ஈவு இரக்கமின்றி அடித்துக் கொன்ற புஷ்பலதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



    • சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லியார்ஜுன கார்கே இதுபற்றி பேசினார்களா?.
    • அவர்கள் பேசுவதை தவிர்த்து, மற்றவர்கள் பேசுவதற்கு மதிப்பு கிடையாது.

    கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். இந்த மாதத்துடன் அவருடைய இரண்டரை கால முதல்வர் பதவி முடிவடைகிறது. அதன்பின் டி.கே. சிவக்குமார் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. ஆனால், காங்கிரஸ உயர்மட்ட தலைவர்கள் இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர்.

    இந்த நிலையில், காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் முடிவுதான் பைனல் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

    மக்கள் பேசலாம். ஆனால், உயர்மட்டம் யார்?. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லியார்ஜுன கார்கே இதுபற்றி பேசினார்களா?. மக்களை விட நீங்கள்தான் (செய்தியாளர்கள்) இது பற்றி அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உயர்மட்ட தலைவர்கள் இது தொடர்பாக முடிவு செய்வார்கள். அவர்கள் பேசுவதை தவிர்த்து, மற்றவர்கள் பேசுவதற்கு மதிப்பு கிடையாது.

    பெங்களூருவில் அதிகமான பீகார் மக்கள் உள்ளனர். அவர்கள் எங்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்போம்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    • சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் நாயைக் கண்டுபிடித்தனர்.
    • நாயின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதாக தெரிவித்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சிக்கநாயக்கனஹள்ளி பகுதியில் தெருநாய் ஒன்று இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டிய கொட்டகையில் நாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெல்லந்தூரைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் புகார் அளித்தார்.

    அவர் தனது புகாரில், அக்டோபர் 13 ஆம் தேதி கொட்டகையில் ஒரு கும்பலால் தெரு நாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் தான் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் விலங்கு வதை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்குனர்.

    சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் நாயைக் கண்டுபிடித்தனர். நாயின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனைக்கு பின் உண்மை வெளிவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

    • டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • இந்தியா ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இந்தியா ஏ அணிக்கும், தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோர்டான் ஹென்மான் 71 ரன்னும், ஜுபைர் ஹம்சா 66 ரன்னும், ரூபின் ஹென்மான் 54 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், குமுர் பிரார், மானவ் சுதார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியா ஏ அணி 234 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆயுஷ் மாத்ரே 65 ரன்னும், ஆயுஷ் பதோனி 38 ரன்னும், சாய் சுதர்சன் 32 ரன்னும் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா ஏ அணி சார்பில் பிரனீலா சுப்ராயன் 5 விக்கெட்டும், லூதோ சிப்மலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி 199 ரன்னில் ஆல் அவுட்டானது.

    இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டும், அன்ஷு ல் காம்போஜ் 3விக்கெட்டும், குமுர் பிரார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    32 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த ரஜத் படிதார்- ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடி 87 ரன்களை சேர்த்தது.

    ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 90 ரன்னில் வெளியேறினார். ஆயுஷ் பதோனி 34 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் மானவ் சுதார், அன்ஷுல் காம்போஜ் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது தனுஷ் கோட்டியானுக்கு வழங்கப்பட்டது.

    • கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.
    • ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக் கைது செய்யப்பட்டார்.

    பெங்களூருவில் உயிர்காக்கும் வாகனமான ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து 2 உயிர்களை பிரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று இரவு பெங்களூரு நகரில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சிவப்பு சிக்னல் காரணமாக சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற 40 வயது இஸ்மாயில் மற்றும் அவரது மனைவி சமீன் பானு ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    உடனடியாக போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

    • கர்நாடக அரசு தனது வருமானத்தில் இருந்து ரூ.4.5 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
    • வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் சிந்திக்க கற்றுக்கொள்கிறார்கள்.

    நேற்று நவம்பர் 1 கர்நாடகா மாநிலம் உருவாகி 70 ஆண்டுகள் நிறைவை ஒட்டி நடந்த விழாவில் அம்மாநில முதல்வர் சித்தராமையா உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், இந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கு அதிக மானியங்களை ஒதுக்கும் பாஜக அரசு மற்ற இந்திய மொழிகளை புறக்கணிக்கிறது.

    மொழியைப் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை

    கர்நாடக அரசு தனது வருமானத்தில் இருந்து ரூ.4.5 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்குகிறது. ஆனால் அதில் ஒரு சிறிய பங்கை மட்டுமே மத்திய அரசு திரும்பி தருகிறது.

    இந்தியை திணிக்கும் மத்திய அரசு, கன்னடத்தை மாற்றாந்தாய்  மனப்பான்மையுடன் நடத்துகிறது.

    ஆங்கிலமும் இந்தியும் குழந்தைகளின் திறமைகளைப் பலவீனப்படுத்தும். பள்ளிகளில் பிள்ளைகளுக்கு தாய்மொழியில் கற்பிக்க வேண்டும்.

    வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் சிந்திக்க கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது. என்று தெரிவித்தார்.  

    • 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.
    • அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.

    கர்நாடகாவில் தாய் தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பேட்டபுரா பகுதியை சேர்ந்தவர் அபியா பானு (25 வயது). இவரது கணவர் சயது முசவீர் பெங்களூரில் உள்ள ஒரு மாலில் பணிபுரிகிறார்.

    இவர்களுக்கு 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.

    மூத்த மகள் பாத்திமா பிறந்த நிலையில் 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் பானு மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் கணவன்-மனைவி இடையேயும் இதுதொடர்பாக சச்சரவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை 2 பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தாய் பானு, அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.

    மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.  

    • பெலகாவி விவகாரத்தில் சமரசம் என்பது கிடையாது.
    • அது கர்நாடகாவின் நிலம். கர்நாடகாவின் ஒரு பகுதி. யாரும் இதை மறுக்க முடியாது.

    கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பிரச்சினை மாநில மகாஜன் கமிட்டி மூலம் முடிவடைந்துள்ளது என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

    பெலகாவி விவகாரத்தில் சமரசம் என்பது கிடையாது. மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் அணுகியுள்ளது. ஆனால், மகாஜன் அறிக்கை இறுதியானது. நாங்கள் பெலகாவியை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஏனென்றால், அது கர்நாடகாவின் நிலம். கர்நாடகாவின் ஒரு பகுதி. யாரும் இதை மறுக்க முடியாது.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இருநாட்டு எல்லைப் பகுதியில் மராத்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி பெலகாவி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி. மகாஜன் கமிட்டி பெலகாவி கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதி எனத் தெரிவித்துள்ளது. ஆனால், மகாராஷ்டிரா அதை ஏற்க மறுக்கிறது.

    • உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார்
    • காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.

    பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள சர்க்கிள் மாரம்மா கோவில் பகுதியில் வசித்து வந்த 36 வயது பெண்ணுக்கு 17 வயதில் மகள் இருக்கிறாள். இவர், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு அவர் படிப்பை நிறுத்தி விட்டார். கணவரை பிரிந்து வாழ்ந்த 36 வயது பெண், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26-ந்தேதி அந்த பெண் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து அப்பெண்ணின் தங்கையின் தகவலின் பேரில் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். ராமநகர் மாவட்டம் கக்கலிபுராவில் பாட்டி வீட்டில் இருந்த அந்த சிறுமியை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது தனது காதலன், நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்ததாக அந்த சிறுமி கூறினார். அதைத்தொடர்ந்து, காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.

    அவர்கள் 4 பேருக்கும் 18 வயதாகவில்லை என்பதும், அவர்களும் சிறுவர்கள் என்பதும், இதில் ஒரு சிறுவனுக்கு 13 வயது தான் ஆவதும் தெரிந்தது. இதையடுத்து 17 வயது சிறுமி, காதலன் உள்பட 5 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுமி, தன்னுடன் படித்த வாலிபரை தான் காதலித்துள்ளார். தனது மகள், அந்த வாலிபரை காதலிப்பது நேத்ராவதிக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதன் காரணமாக ஆத்திரமடைந்த மகள், தனது நண்பர்களுடன் சேர்ந்து தாயாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை படுக்கை அறைக்கு இழுத்து சென்று, கழுத்தில் சேலையால் கட்டி உடலை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறுமி உள்பட 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

    • செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.
    • மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார்.

    பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ஆனந்த். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூ.1.85 லட்சத்திற்கு ஒரு செல்போனை ஆர்டர் செய்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் அவர் ஆர்டர் செய்த செல்போன் கூரியர் மூலமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், கூரியர் நிறுவன ஊழியரும், நேற்று முன்தினம் பிரேம் ஆனந்த் வீட்டுக்கு வந்து ஒரு பார்சலை கொடுத்துவிட்டு சென்றார். உடனே அவரும், தான் ஆசையாக ஆர்டர் செய்த செல்போன் வந்ததாக நினைத்து பார்சலை பிரித்து பார்த்தார்.

    அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த பார்சலில் செல்போன் பாக்சுக்குள் செல்போனுக்கு பதில் ஒரு பளிங்கு கல் இருந்தது. ரூ.1.85 லட்சம் மதிப்பிலான செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்ததால் கோபம் அடைந்த பிரேம் ஆனந்த் உடனடியாக கூரியர் ஊழியரின் செல்போனுக்கு அழைத்தார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.

    செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.

    இந்த மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஆர்.வி பொறியியல் கல்லூரி இணைந்து தயாரிப்பு
    • ஸ்ரீ சத்யத்மதீர்த்த சுவாமிஜி ஓட்டுநர் இல்லாத காரில் பயணம் செய்தார்.

    விப்ரோ நிறுவனம், இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஆர்.வி பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து உருவாக்கிய ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூருவில் இயக்கப்பட்டது

    ஆர்.வி. பொறியியல் கல்லூரிக்கு சென்ற ஆன்மீகத் தலைவர் உத்தராதி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சத்யத்மதீர்த்த சுவாமிஜி ஓட்டுநர் இல்லாத காரில் பயணம் செய்தார்.

    ஓட்டுநர் இல்லாத கார் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்றும் அடுத்த சில மாதங்களில் இந்த கார் முறையாக அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஓட்டுநர் இல்லாமல் கார் இயக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. 

    • அவர் தனது நிறுவன முதலாளியிடம் இதை தெரிவித்தார்.
    • தனியார் கல்லூரியில் டிப்ளமோ மாணவரான குமார் பகுதிநேரமாக டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரேசிலிய பெண்ணை பாலியல் தொல்லை தந்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூருவில் மாடலிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரேசிலிய இளம் பெண், மூன்று சக ஊழியர்களுடன் நிறுவனத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

    கடந்த சனிக்கிழமை, அந்தப் பெண் ஒரு பிரபலமான செயலி மூலம் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்திருந்தார்.

    பொருட்களை எடுத்து வந்த டெலிவரி ஊழியர் குமார் (21) வாசலில் வைத்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டார். பயந்துபோன அந்த பெண் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டு தப்பினார். இந்த சம்பவம் குறித்து அப்பெண் உடன் வசிக்கும் மற்றொரு பெண்ணிடம் கூறினார். அவர் தனது நிறுவன முதலாளியிடம் இதை தெரிவித்தார்.

    இதையடுத்து, முதலாளி கார்த்திக் விநாயக் அளித்த புகாரின் பேரில், ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குமாரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

    பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ மாணவரான குமார் பகுதிநேரமாக டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிகெட் வீராங்கனைகளிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்துகொண்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.    

    ×