என் மலர்
இந்தியா

காதலன் உள்பட 4 சிறுவர்களுடன் சேர்ந்து தாயை கொன்ற 17 வயது சிறுமி - காரணம் இதுதான்
- உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார்
- காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள சர்க்கிள் மாரம்மா கோவில் பகுதியில் வசித்து வந்த 36 வயது பெண்ணுக்கு 17 வயதில் மகள் இருக்கிறாள். இவர், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு அவர் படிப்பை நிறுத்தி விட்டார். கணவரை பிரிந்து வாழ்ந்த 36 வயது பெண், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26-ந்தேதி அந்த பெண் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பெண்ணின் தங்கையின் தகவலின் பேரில் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். ராமநகர் மாவட்டம் கக்கலிபுராவில் பாட்டி வீட்டில் இருந்த அந்த சிறுமியை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது தனது காதலன், நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்ததாக அந்த சிறுமி கூறினார். அதைத்தொடர்ந்து, காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
அவர்கள் 4 பேருக்கும் 18 வயதாகவில்லை என்பதும், அவர்களும் சிறுவர்கள் என்பதும், இதில் ஒரு சிறுவனுக்கு 13 வயது தான் ஆவதும் தெரிந்தது. இதையடுத்து 17 வயது சிறுமி, காதலன் உள்பட 5 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுமி, தன்னுடன் படித்த வாலிபரை தான் காதலித்துள்ளார். தனது மகள், அந்த வாலிபரை காதலிப்பது நேத்ராவதிக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மகள், தனது நண்பர்களுடன் சேர்ந்து தாயாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை படுக்கை அறைக்கு இழுத்து சென்று, கழுத்தில் சேலையால் கட்டி உடலை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறுமி உள்பட 5 பேரையும் கைது செய்துள்ளனர்.






