என் மலர்
இந்தியா

ஆன்லைனில் ரூ.1¾ லட்சத்திற்கு ஆர்டர் செய்த செல்போன்... என்ஜினீயருக்கு பேரதிர்ச்சியாக வந்த பளிங்கு கல்
- செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.
- மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார்.
பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ஆனந்த். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூ.1.85 லட்சத்திற்கு ஒரு செல்போனை ஆர்டர் செய்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் அவர் ஆர்டர் செய்த செல்போன் கூரியர் மூலமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கூரியர் நிறுவன ஊழியரும், நேற்று முன்தினம் பிரேம் ஆனந்த் வீட்டுக்கு வந்து ஒரு பார்சலை கொடுத்துவிட்டு சென்றார். உடனே அவரும், தான் ஆசையாக ஆர்டர் செய்த செல்போன் வந்ததாக நினைத்து பார்சலை பிரித்து பார்த்தார்.
அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த பார்சலில் செல்போன் பாக்சுக்குள் செல்போனுக்கு பதில் ஒரு பளிங்கு கல் இருந்தது. ரூ.1.85 லட்சம் மதிப்பிலான செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்ததால் கோபம் அடைந்த பிரேம் ஆனந்த் உடனடியாக கூரியர் ஊழியரின் செல்போனுக்கு அழைத்தார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.
செல்போனுக்கு பதில் பளிங்கு கல்லை அனுப்பி வைத்தது ஆன்லைன் விற்பனை நிறுவனமா? அல்லது கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களா? என்பது தெரியவில்லை.
இந்த மோசடி குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






