என் மலர்tooltip icon

    டெல்லி

    • அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு இந்த ஆண்டுடன் 75 ஆண்டு நிறைவடைகிறது.
    • இந்த சிறப்பு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அரசியல் சாசனம் கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் அது 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அமலுக்கு வந்தது. அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட நவம்பர் 26-ந் தேதியை கடந்த 2015-ம் ஆண்டு முதல் அரசியல் சாசன தினமாக மத்திய அரசு அனுசரித்து வருகிறது. முன்னதாக அது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.

    அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு இந்த ஆண்டுடன் 75 ஆண்டு நிறைவடைகிறது. இதை கொண்டாடும் வகையில் வருகிற நவம்பர் 26-ந்தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த இடத்தில்தான் அரசியல் நிர்ணய சபையால் அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

    • இந்தியாவில் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 12 நாளில் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலால் அவசர அவரமாக தரையிறக்கப்படுகின்றன.

    கடந்த 12 நாட்களில் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை தொடர்ந்து விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. சமூக வலைதள பக்கங்கள் மூலம் இந்த மிரட்டல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறன.

    இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வெளியான பதிவுகளை 72 மணி நேரத்திற்குள் சமூக வலைதள நிறுவனங்கள் நீக்கவேண்டும். அவ்வாறு நீக்கவில்லை என்றால் ஐ.டி. சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • அய்யப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி நடைபெறும்

    சபரிமலை:

    2024-ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்கிறார்கள். மறுநாள் (16-ம் தேதி) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.

    டிசம்பர் மாதம் 26-ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்படும்.

    நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வரும்போது, இருமுடி தனியாக வைக்கப்பட்டு பயணிகள் மட்டும் விமானத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், நடப்பு சீசனையொட்டி சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருட்களை எடுத்துச்செல்ல மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.

    பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இந்த சலுகை நடப்பு மண்டல மகர விளக்கு பூஜை சமயத்தில் மட்டுமே பொருந்தும் எனவும், மாத பூஜை காலங்களில் இந்த சலுகை கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது முதல் ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
    • துபாயில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை வாங்கியுள்ளனர்

    அதிக ஓடிடி தளங்களின் வருகையால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருவதால் மற்றொரு ஓடிடி தளத்துடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டது. அதன்படி அம்பானியின் ரிலையன்ஸ் நடத்தும் ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    இந்த இரண்டு தளங்களும் இணைந்தால் அதற்கு ஜியோ ஹாட்ஸ்டார் என்று பெயர் வைக்கப்படும். ஹாட்ஸ்டார் ஜியோ சினிமாவுடன்தான் இணையும் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்த டெல்லியை சேர்ந்த மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் ஒருவர் ஜியோ ஹாட்ஸ்டார் [Jio- hotstar.com] என்ற இணையதள முகவரியை [domain] முன்கூட்டியே கண்டது வருடமே வாங்கி வைத்தார்.

    இந்த முகவரியை சொந்தமாக்கினால் மட்டுமே தற்போது ஒருங்கிணைத்து ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உருவாக்க உள்ள ஓடிடி அந்த பெயரில் செயல்பட முடியும். இந்நிலையில் அந்த முகவரியை அவர் ரிலையன்ஸிடம் நல்ல விலைக்கு விற்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அந்த முகவரிக்கு ரூ.1 கோடி வரை அந்த டெவலப்பர் விலை வைத்திருந்தார் என்ற தகவல்களும் வெளியாகின.

     

    இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் துபாயை சேர்ந்த இருவருக்கு டெல்லி டெவலப்பர் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த இருவரும் குழந்தைகள் என்பது இந்த விவகாரத்தை அதிக சுவாரஸ்யமாகியுள்ளது. துபாயில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜைனம் மற்றும் ஜீவிகா என்ற சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை ரூ.1 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

    இவர்கள் இருவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்குக் கல்வி ரீதியாக உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் வாங்கி உள்ள ஜியோ ஹாட்ஸ்டார் இணைய முகவரியை அதற்கு பயன்படுத்த உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

    • 'என்னை மன்னித்து விடுங்கள், என்னால் இதை செய்ய முடியவில்லை'
    • தேர்ச்சி பெறவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சிறுமி தாயிடம் ஏற்கனவே கூறியுள்ளார்.

    பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் JEE நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஜாமியா நகரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி சமீபத்தில் நடந்த JEE நுழைவுத் தேர்வில் கலந்துகொண்டுள்ளார்.

    தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் தேர்ச்சி பெறாததால் விரக்தியில் இருந்த மாணவி, 'என்னை மன்னித்து விடுங்கள், என்னால் இதை செய்ய முடியவில்லை, என்னால் JEE பரீட்சையை ஜெயிக்க முடியவில்லை' என்று தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீடு உள்ள 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    அவர் மாடியில் இருந்து குதித்து கீழே விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படடுத்தி வருகிறது.

    இதுதொடர்பாக வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகிறனர். தான் இந்த பரீட்ச்சையில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று உயிரிழந்த சிறுமி தனது தாயிடம் ஏற்கனவே கூறியிருந்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.

    • யமுனை நதியில் பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் குளித்து வழிபாடு நடத்தினார்.
    • அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.

    மிகவும் அசுத்தமான யமுனை நதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு குளித்து வழிபாடு நடத்திய பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள யமுனை நதி கடுமையாக மாசடைந்துள்ளதற்கு ஆம் ஆத்மி அரசு தான் காரணம் என்று கூறி டெல்லி பாஜக தலைவர் விரேந்தர் சச்சுதேவ் யமுனை நதிக்கரையில் நீராடினார்.

    பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விரேந்தர் சச்சுதேவ், "யமுனை நதியை சுத்தம் செய்ய மத்திய அரசு வழங்கிய 8,500 கோடி ரூபாய்க்கு ஆம் ஆத்மி அரசு கணக்கு காட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சச்தேவா குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரப் பரத்வாஜ், "டெல்லி நகரத்தின் யமுனை நதிக்கரையில் எந்த தொழிற்சாலைகளும் இல்லை. அரியானாவில் உள்ள பானிபட் மற்றும் சோனிபட் வடிகால்களில் இருந்து தான் தொழிற்சாலை கழிவுகள் யமுனை நதியில் கலக்கிறது. டெல்லி பாஜக தலைவர் அரியானா அரசாங்கத்துடன் பேசி சோனிபட் மற்றும் பானிபட் ஆகியவற்றிலிருந்து தொழிற்சாலை கழிவுகளை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

    • இருவருக்கும் இடையை அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி காதலன் சஞ்சு மற்றும் அவரும் உதவி ஒருவரை கைது செய்துள்ளனர்.

    டெல்லயில் கர்ப்பமாக இருந்த இளம்பெண்ணை அவரது காதலன் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    19 வயதான சோனி இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்தார். அவருக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் மற்றும் காதலன் சஞ்சு ஆகியோர் சேர்ந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தனர்.

    இந்த நிலையில், சோனி 7 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் அதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காதலனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சுவோ திருமணம் செய்துகொள்ள தயாராக இல்லை என்றும் குழந்தையை கருக்கலைப்பு செய்துவிடலாம் எனவும் கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையை அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து சோனியை கொலை செய்ய முடிவு செய்த சஞ்சு, கடந்த திங்கட்கிழமை சோனியை அரியானாவின் ரோஹ்தக் நகருக்கு அழைத்து சென்று கொன்று புதைத்துள்ளார். அவருக்கு நண்பர்கள் இரண்டு பேர் உதவி செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி காதலன் சஞ்சு மற்றும் அவரும் உதவி ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    • வருமானத்தை அதிகரிக்கும், சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் நவீன தீர்வுகள் மற்றும் புதிய திட்டங்கள்தான் தற்போதைய தேவை.
    • திறமைக்கு ஏற்ப தகுதியைப் பெற்று, கடின உழைப்பின் ஒவ்வொரு அடியும் வெற்றியின் ஏணியில் ஏற்றி விடும் சமுதாயம் தேவை.

    புதுடெல்லி:

    மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அஜித் என்பவரின் சலூனுக்கு சென்று முடி திருத்தம் செய்து கொண்டார்.

    அப்போது அந்த சலூன் கடைக்காரரிடம் பேசி அவரது குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.

    இதை வீடியோவாக பதிவு செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் மத்திய அரசையும் அவர் சாடியுள்ளார்.

    இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

    எதுவும் மீதி இல்லை. அஜித் பாயின் இந்த வார்த்தைகளும், கண்ணீரும் இந்தியாவில் இன்று கடின உழைப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர பிரிவினரின் கதையை சொல்கிறது.

    முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைப்பவர்கள், குயவர்கள், தச்சர்கள் வரை வருமானச்சரிவு மற்றும் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு காரணமாக உழைக்கும் வர்க்கத்தினரின் சொந்த கடை, வீடு மற்றும் சுயமரியாதை போன்ற கனவுகள் திருடப்பட்டு உள்ளன.

    எனவே வருமானத்தை அதிகரிக்கும், சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் நவீன தீர்வுகள் மற்றும் புதிய திட்டங்கள்தான் தற்போதைய தேவை.

    திறமைக்கு ஏற்ப தகுதியைப் பெற்று, கடின உழைப்பின் ஒவ்வொரு அடியும் வெற்றியின் ஏணியில் ஏற்றி விடும் சமுதாயம் தேவை.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியும் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, ராகுல் காந்தியின் நடவடிக்கையை பாராட்டி உள்ளது.




    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் கைப்பற்றினார்.

    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்து வருகி து. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கான்வே 76 ரன்கள் அடித்தார்.

    இந்தியா சார்பில் சுழற்பந்து வீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. பிளென்டெல் 30 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போது, நியூசிலாந்து 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 30 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 1006 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 23 வயதாகும் முன்னரே ஒரு வருடத்தில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

    மேலும் சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 5-வது வீரர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இதற்கு முன்னர் கார்பீல்ட் சோபர்ஸ், கிரேம் சுமித், டி வில்லியர்ஸ் மற்றும் அலெஸ்டர் குக் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நவம்பர் 8-ம் தேதி தொடங்குகிறது.
    • காயத்தால் மயங்க் யாதவ், ஷிவம் துபே, ரியான் பராக் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நவம்பர் 8-ம் தேதி டர்பனில் தொடங்க உள்ளது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக மயங்க் யாதவ், ஷிவம் துபே மற்றும் ரியான் பராக் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

    தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் விபரம்:

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரமன் தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைசாக், ஆவேஷ் கான், யாஷ் தயாள்.

    • அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும்.
    • அன்மோல் பிஷ்னோய் மீது 2022ம் ஆண்டில் 2 குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்தது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிராவில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பல் பொறுப்பேற்றது.

    எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளே இருந்தவாறே குற்றச்செயல்களை அரங்கேற்றி வருகிறார்.

    இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும், லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரருமான அன்மோல் பிஷ்னோய் குறித்த தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

    அன்மோல் பிஷ்னோய் மீது 2022ம் ஆண்டில் 2 குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் அன்மோல் தேடப்பட்டு வருகிறார்.

    • பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சர்பராஸ் கான், துருவ் ஜுரல், அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்

    ஹர்ஷித் ரானா மற்றும் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் அறிமுகமாகின்றனர்.

    ரிசர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது

    புஜாரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

    ×