என் மலர்tooltip icon

    டெல்லி

    • இந்தியாவில் இதுவரை 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.
    • கணக்கெடுப்பின் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிகவும் முக்கியமானது. இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை சமூகம் வாரியாக ஆராய்ந்து செயல்படுத்த முடியும்.

    இந்தியாவில் இதுவரை 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. 16-வது கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக, நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு மேம்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடித்து விவரங்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த கணக்கெடுப்புக்கான கேள்விகள் தயாராகி உள்ளன. மொத்தம் 31 கேள்விகள் அதில் அடங்கி இருப்பதாக தெரிகிறது. குடும்பத்தலைவர், வீடு, நிலம் உள்ளிட்ட கேள்விகளுடன் செல்போன் இருக்கிறதா? வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன? கழிவறை வசதி இருக்கிறதா? என்பன போன்ற கேள்விகளும் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.

    கணக்கெடுப்பை ஓராண்டுக்குள் முடித்து, அதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறை பணிகளை நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, கணக்கெடுப்பின் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த 2 வேலைகளும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு செய்யப்பட்டு விடும்.

    மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகூட சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்துள்ளது. ஆனால் அரசு இதுபற்றி எந்த முடிவையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

    மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி எல்லையை மறுவரையறை செய்வது, தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மக்கள்தொகை கட்டுப்பாட்டை முறையாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. ஆனால் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த முறை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தாமதம் ஆகிவிட்டதால், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2035-ம் ஆண்டு, அதற்கு அடுத்து 2045-ம் ஆண்டு என சுழற்சி முறையில் மாற்றம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

    • போலி வக்கீல்களை கண்டறிந்து நீக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • முழுமையான விசாரணை மூலம் கடந்த 2019 முதல் ஆயிரக்கணக்கான போலி வக்கீல்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய பார் கவுன்சில் தனது கண்ணியம் மற்றும் நிபுணத்துவத்தை பராமரிக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதில் போலி வக்கீல்களை கண்டறிந்து நீக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை டெல்லியில் 107 போலி வக்கீல்களை கவுன்சிலில் இருந்து நீக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'போலி வக்கீல்கள் மற்றும் சட்ட நடைமுறையின் தரத்தை பேணாதவர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையையும், சட்ட அமைப்பையும் நெறிமுறையற்ற நடைமுறைகளிலிருந்து பாதுகாக்க இந்திய பார் கவுன்சில் தொடர்ந்து முயன்று வருகிறது' என குறிப்பிட்டு இருந்தது.

    மேலும் அறிக்கையில், 'முழுமையான விசாரணை மூலம் கடந்த 2019 முதல் ஆயிரக்கணக்கான போலி வக்கீல்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் போலியான சான்றிதழ்கள் மற்றும் பதிவு செய்யும் போது தவறான தகவல்களை வழங்கியவர்கள் ஆவர். மேலும், தீவிரமான வக்கீல் பணிகளில் தோல்வி, பார் கவுன்சிலின் சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு இணங்காதது போன்றவையும் காரணமாகும்' என்றும் கூறப்பட்டு உள்ளது. இதில் டெல்லியில் மட்டுமே 107 போலி வக்கீல்களை நீக்கி இருப்பதாகவும், அவர்களின் பெயரையும் பார் கவுன்சில் ஸ்ரீமாந்தோ சென் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

    • பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
    • டெல்லி வக்பு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார், குழுவின் தலைவரிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சட்டத்திருத்த மசோதாவில் சர்ச்சைகள் இருக்கும் என்பதால், பாராளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

    இதையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, தேஜஸ்வி சூர்யா, நிஷிகாந்த் துபே உள்பட பலர் இடம் பிடித்துள்ளனர்.

    தலைநகர் டெல்லியில் வக்பு வாரிய திருத்தச் சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

    அந்த வகையில் இன்றும் இந்த குழுவின் கூட்டம் நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அசாதுதின் ஒவைசி, ஆம் ஆத்மி பிரதிநிதி சஞ்சய் சிங், திமுகவின் முகமது அப்துல்லா, காங்கிரஸின் நசீர் உசேன், முகமது ஜாவேத், சமாஜ்வாதி கட்சியின் மொஹிபுல்லா நட்வி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்..

    இந்த கூட்டத்தில் டெல்லி வக்பு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார், குழுவின் தலைவரிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இது மற்ற உறுப்பினர்களுக்கு பகிரப்பட்ட நிலையில் அதை படித்தவுடன் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதுதொடர்பாக வெளிநடப்பு செய்த எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், அஸ்வினி குமார் தாக்கல் செய்த அறிக்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பல்வேறு அம்சங்கள் இதில் இல்லை. டெல்லி அரசுக்குத் தெரியாமல் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதைக் கண்டித்தே வெளிநடப்பு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    • பாபர் மசூதி- ராமர் கோவில் தீர்ப்புக்கு முன்னர் தான் கடவுளிடம் வேண்டியதாக கூறினார்.
    • இந்த சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என்ற பலர் யோசிக்கின்றனர்.

    தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தனிப்பட்ட விஷயங்கள் மூலம் தான் வகிக்கும் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக சந்திரசூட் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டது நீதித்துறையின் நடுநிலைமை மீதான நம்பகத் தன்மையை முற்றிலுமாக மக்கள் இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

    மேலும் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தான் 2018 இல் வழங்கிய தீர்ப்பு குறித்து சமீபத்தில் பேசிய அவர், அந்த தீர்ப்புக்கு முன்னர் தான் கடவுளிடம் வேண்டியதாகவும் அதன்படி கடவுளிடம் வேண்டினால் அவர் வழிகாட்டுவார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது வீட்டின் விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து சந்திரசூட் தற்போது பேசியுள்ளார்.

     

    டெல்லியில் நடந்த லோக்சட்டா கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசூட், இதுபோன்ற சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என்ற பலர் யோசிக்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்களுடன் நிகழும் சந்திப்பின்போது தொடர்புடைய வழக்குகள் மற்றும் நீதித்துறை சார்ந்த விஷயங்கள் பேசப்படாது.

    நீதித்துறை மீது அரசியல் தலைவர்கள் வைத்துள்ள மரியாதை அவர்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. நீதித்துறைக்கான நிதியை நீதிபதிகள் ஒதுக்குவதில்லை. அரசுகள் தான் ஓதுகின்றன. நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதிகளுக்கான வீடுகளுக்கு அரசு நிதி தேவை. இதற்கு தலைமை நீதிபதிகள் மாநில முதலமைச்சர்களை சந்திக்க வேண்டி உள்ளது.

    நானும் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக இருந்துள்ளேன். அப்போது நான் முதல்வர் வீட்டுக்கு செல்வதும் முதல்வர் எனது வீட்டுக்கு வருவதும் சகஜமாக நடக்கும். இந்த சந்திப்புகளை நேரில் சந்திக்காமல் கடிதம் மூலம் நடத்த முடியாது. இந்த சந்திப்புகளின்போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து முதல்வர் எந்த கேள்வியும் கேட்கமாட்டார் எனவே நீதித்துறை பணிகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று பேசியுள்ளார். சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10 ஆம் தேதி முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிப் என்ற இளைஞர் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய ராயல் என்பீல்டு பைக்கில் வந்துள்ளார்.
    • தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை அவரது தந்தையுடன் சேர்த்து போலீசார் கைது செய்தனர்.

    டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய பைக்கில் வந்த இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கோவப்பட்ட இளைஞர் தடுத்த போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை அவரது தந்தையுடன் சேர்த்து போலீசார் கைது செய்தனர்.

    ஆசிப் என்ற இளைஞர் ராயல் என்பீல்டு பைக்கில் வந்துள்ளார். போலீசார் அவரது பைக்கை சோதனை செய்தபோது விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சரை அவர் பொருத்தியுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.

    உடனே ஆசிப் அவரது தந்தை ரியாசுதீனுக்கு போன் செய்து வரவழைத்து பைக்கை எடுத்துச்செல்ல முயன்றுள்ளார். இதனை அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது ரியாசுதீன் போலீசை பிடிக்க ஆசிப் அவரை தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த சில போலீசாரையும் அவர் தாக்கியுள்ளார்.

    இதனையடுத்து, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது உள்ளிட்ட பல பிரிவுகளில் தந்தை, மகன் மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இளைஞர் தாக்கியதில் காயமடைந்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • நடப்பாண்டில் 4 மாதங்களில் 7.40 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளது.
    • பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியாக எச்சரித்தும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


    வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகவும், வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்றும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும், போதை பொருள் அடங்கிய பார்சல் வந்து இருப்பதா கவும் கூறி பல வகைகளில் சைபர் கிரைம் கும்பல் அப்பாவி மக்களிடம் பணத்தை அபேஸ் செய்து வருகின்றன.

    இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி நன்கு படித்தவர்களும் ஏமாந்து பணத்தை இழந்து வருகின்றனர். ஏமாற்றுபவர்கள் புது வகையான டெக்னிக்கல் யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடு கின்றனர்.

    சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது.

    எந்த புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது வீடியோ மூலம் விசாரணைக்கு தொடர்பு கொள்ளாது. அவ்வாறு யாரேனும் தொடர்பு கொண்டு பேசினால் உடனடியாக போலீசாருக்கு தெரி விக்க வேண்டும். டிஜிட்டல் மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று நேற்று நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிபேசி யுள்ளார்.

    பிரதமர் மோடியே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவுக்கு ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது.

    இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 7.40 லட்சம் ஆன்லைன் மோசடி புகார்கள் பதிவாகியுள்ளது. இதில் ரூ.120 கோடி வரை மோசடி கும்பல் பறித்துள்ளனர். ஆன்லைன் மோசடி கும்பல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே தொடர்பு கொள்கின்றனர்.

    இந்தியாவை குறிவைத்து மியான்மர், லாவோஸ், கம்போடியாவில் இருந்து ஏராளமான மோசடி கும்பல் போன் மற்றும் தகவல் தொடர்பு மூலம் மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 நாடுகளில் இருந்து மட்டும் 46 சதவீதம் அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.


    ஆன்லைன் மோசடிகளில் சபலபுத்திக்காரர்களை குறி வைத்து இனிமையான குரலில் பேசி காதல் செய்யலாம் என்றும் டேட்டிங்கிகுக்கு அழைத்தும் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளது. ரூ.13.23 கோடி வரை காதல் மற்றும் டேட்டிங் மோசடிகள் நடந்துள்ளது.

    குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் சம்பாதிக்கலாம் என்றும், பணம் குறுகிய காலத்திலேயே இரட்டிப்பாகும் என்றும் ஒரு கும்பல் மோசடி செய்து வருகிறது. அந்த வகையான மோசடிகளில் ரூ.222.53 கோடி மோசடி நடந்துள்ளது.

    ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக கூறிதான் அதிகளவில் மோசடி நடந்துள்ளது. இந்த வகையில் ரூ.1776 கோடி வரை மோசடி நடந்துள்ளது.

    தற்போது புதிய வகையாக உங்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. போதை பொருட்கள், சட்ட விரோதமான பொருட்கள் கொண்ட பார்சல்களை நீங்கள் அனுப்பியுள்ளீர்கள் என்று வீடியோ அழைப்பு மூலமும் மோசடி நடக்கிறது.

    அமலாகத்துறையில் இருந்து பேசுவதாகவும் போலீசார் சீருடை அணிந்து பேசுவது போலவும் மோசடி செய்து பணத்தை பறிக்கின்றனர்.

    கடந்த 2023-ம் ஆண்டு 15.56 லட்சம் ஆலைன் மோசடி புகார்களும், 2022-ம் ஆண்டு 9.65 லட்சம் புகார்களும், 2021-ம் ஆண்டு 4.52 லட்சம் புகார்களும் வந்துள்ளது.

    தற்போது நடப்பாண்டில் 4 மாதங்களில் 7.40 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆலைன் மோசடி புகார் அதிகரித்தே வருகிறது.

    அனைத்து மாநிலத்திலும் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஆலைன் மோசடி குறையவில்லை. அதிகரித்துதான் வருகிறது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இல்லா விட்டால் ஆன்லைன் மோசடியை குறைக்க முடியாது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • டெல்லியில் மட்டும் சுமார் ரூ.75,000 கோடி வர்த்தகம் நடைபெறும்.
    • சீனா 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பை சந்திக்கும் எனவும் சிஏஐடி தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தீபாவளி மற்றும் தொடர்புடைய பண்டிகைகளுக்காக மக்கள் தயாராகி வருகின்றனர்.

    இந்திய வர்த்தகர்கள் தங்கள் வணிகங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்த முடிந்த அளவு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

    ரக்ஷாபந்தன், நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் அதிகரித்த விற்பனையைத் தொடர்ந்து, இந்த தீபாவளிக்கு இந்தியா முழுவதும் சுமார் ரூ. 4.25 லட்சம் கோடி வர்த்தகத்தை வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

    டெல்லியில் மட்டும் சுமார் ரூ.75,000 கோடி வர்த்தகம் நடைபெறும் என அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) கணித்துள்ளது.

    இந்தியாவில் பண்டிகைக் காலங்களில் சீனப் பொருட்கள் விற்பனைக்கு தடையில் இருப்பதால், இந்த முறை சீனா 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பை சந்திக்கும் எனவும் சிஏஐடி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் எம்.பி.யும், சி.ஏ.ஐ.டி.யின் பொதுச் செயலாளருமான பிரவீன் கண்டேல்வால் கூறியதாவது:-

    தீபாவளி மற்றும் பிற பண்டிகைக் காலத்தை முன்னிட்டு டெல்லி மற்றும் நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    நாட்டின் பெருநகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்கள் முழுவதும் உள்ள கடைகளில் வண்ணமயமான விளக்குகள், ரங்கோலிகள் மற்றும் பிற அலங்கார பொருட்கள் பண்டிகை சூழ்நிலையை உருவாக்கவும், சந்தைகளுக்கு அதிக மக்களை ஈர்க்கும் வகையில் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து, வியாபாரிகள் பரிசுப் பொருட்கள், ஆடைகள், நகைகள், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் போன்கள், அலங்காரப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், பூஜைப் பொருட்கள், ரங்கோலி, சிலைகள் மற்றும் படங்கள் போன்ற பல்வேறு பொருட்களை ஸ்டாக் செய்யத் தொடங்கியுள்ளனர்.

    வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வர்த்தகர்கள் பல்வேறு தள்ளுபடிகளும், சலுகைகளையும் பரிசீலித்து வருகின்றனர். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' அல்லது தீபாவளி சிறப்பு தள்ளுபடிகள் போன்ற சலுகைகள் வழங்கப்படலாம்.

    தீபாவளியின் போது எதிர்பார்க்கப்படும் அதிக கூட்டத்தை கருத்தில் கொண்டு, வர்த்தகர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டுக்காக காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்திடம் இருந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்ய கோரப்பட்டுள்ளது. வர்த்தக சங்கங்கள் கூடுதல் தனியார் பாதுகாப்பு காவலர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

    டெல்லி மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சந்தைகள் தீபாவளிக்கு முழுமையாக தயாராகிவிட்டோம். மின்வணிகத்தால் ஏற்படும் சவால்களுக்குப் போட்டியாக புதிய உத்திகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். இந்த பண்டிகைக் காலத்தில் கணிசமான வணிகத்தை அடையத் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார்.
    • பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 2 நாள் பயணமாக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். தூதரக அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்தப் பயணத்தின்போது பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து குஜராத்தின் வதோதரா நகரில் அமைக்கப்பட்டுள்ள சி295 விமான ஆலையை மோடியும், பெட்ரோ சான்செசும் இணைந்து திறந்து வைக்கிறார்கள்.

    பிரதமர் மோடி-பெட்ரோ சான்செஸ் சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பா.ஜ.க.வின் அலட்சியத்தால் பல கோடி செலவில் கட்டப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை தரைமட்டமானது.
    • இதற்கு ஒன்றிய பா.ஜ.க பொது இடங்களை பராமரிக்கத் தவறுவதே காரணம் என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா ரெயில் நிலையத்தில் உ.பி.யின் கோரக்பூர் நோக்கிச் செல்லும் ரெயில் வந்தடைந்தது. அப்போது அந்த ரெயிலில் பயணிகள் ஏற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தோர் பாபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது:

    ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் திறப்புவிழாக்களும், ஆரம்பர விளம்பரங்களும் மட்டுமே வெற்றி பெறுகின்றன. வளர்ச்சியும், கட்டமைப்பு முன்னேற்றமும் தோல்வி அடைந்தே வருகிறது.

    இதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டாகவே பாந்த்ரா ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அமைந்துள்ளது.

    பெரும் பாலங்களும், நடைமேடைகளும், சிலைகளும் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. அதன் ஆயுள் காலம் சில மாதங்களாகவே இருக்கிறது. இதற்கு ஒன்றிய பா.ஜ.க பொது இடங்களை பராமரிக்கத் தவறுவதே காரணம்.

    ஒன்றிய பா.ஜ.க.வின் அலட்சியத்தால் பல கோடி செலவில் கட்டப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை 9 மாதங்களில் தரைமட்டமானது.

    இதே நிலை தான், பா.ஜ.க ஆட்சியில் எழுப்பப்பட்ட மற்ற கட்டமைப்புகளுக்கும்.

    இதுபோன்ற நிலை இங்கு நீடிப்பது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியும்.

    மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள் எழுப்பப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • டிஜிட்டல் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • காத்திருத்தல், சிந்தித்தல், நடவடிக்கை எடுத்தல் என்ற மந்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் வானொலியில் உரை யாற்றி வருகிறார். இன்று 115-வது நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-


    ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியா சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. இன்று மன் கி பாத்தில், தைரியமும் . தொலைநோக்கு பார்வையும் கொண்ட 2 பெரிய ஹீரோக்கள் பற்றி நான் விவாதிக்கிறேன். அவர்களின் 150-வது பிறந்தநாளை கொண்டாட நாடு முடிவு செய்துள்ளது.

    சர்தார் படேலின் 150-வது பிறந்தநாள் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் நவம் பர் 15 முதல் தொடங்குகிறது. இந்த 2 பெரிய மனிதர்களுக்கும் வெவ்வேறு சவால்கள் இருந்தன, ஆனால் நாட்டின் ஒற்றுமை'தான் அவர்களின் பார்வையாக ஒரே மாதிரியாக இருந்தது.

    இந்த பண்டிகை காலத்தில், ஆத்மநிர்பர் பாரதத்தின் இந்த பிரச்சாரத்தை நாம் அனைவரும் வலுப்படுத்துவோம். இந்தியாவை நாம் தன்னிறைவு கொண்டதாக மாற்றுவது மட்டுமின்றி, புதுமைகளின் உலகளாவிய சக்தியாக நம் நாட்டை நிலைநிறுத்த வேண்டும்.

    இளைஞர்கள் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அசல் இந்திய உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள். அவை உலகம் முழுவதும் கண்காணிக்கப்படுகின்றன. அனிமேஷன் துறை இன்று மற்ற தொழில்களுக்கு பலம் கொடுக்கும் ஒரு தொழிலாக உருவாகியுள்ளது.

    உலக அனிமேஷன் தினம் அக்டோ பர் 28 அன்று (நாளை) கொண்டாடப்படும். உலக ளாவிய அனிமேஷன் அதிகார மையமாக இந்தியாவை மாற்ற நாம் உறுதி அளிக்க வேண்டும்.

    தன்னம்பிக்கை என்பது நமது கொள்கையாக மட்டும் மாறவில்லை. அதுவே நமது ஆர்வமாகவும் மாறிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சில சிக்கலான தொழில்நுட்பங்கள் உருவாகின்றன என்று யாராவது சொன்னால் பலர் அதை நம்பமாட்டார்கள். பலர் அதை கிண்டல் செய்வார்கள்.

    ஆனால் இன்று அதே மக்கள் நாட்டின் வெற்றியைக் கண்டு வியக்கிறார்கள். தன்னிறைவு பெற்ற இந்தியா, அனைத்து துறைக ளிலும் அதிசயங்களைச் செய்து வருகிறது.

    ஒரு காலத்தில் செல்போன்களை இறக்குமதி செய்த இந்தியா, இப்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாறியுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை அதிகம் வாங்கும் நாடாக இருந்த இந்தியா இன்று 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

    விண்வெளி தொழில்நுட்பத்தில், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

    சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியம். இது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது. காத்திருத்தல், சிந்தித்தல், நடவடிக்கை எடுத்தல் என்ற மந்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்.

    சைபர் மோசடி விவகாரத்தை சமாளிக்க மாநிலங்களுடன் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன. டிஜிட்டல் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது வீடியோ மூலம் விசாரணைக்கு தொடர்பு கொள்ளாது. இதுபோன்ற குற்றத்தை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

    • விமான நிலையம் பகுதியில் 324 ஆகவும், அஷர்தாம் பகுதியில் 261 ஆகவும் காற்றின் தர குறியீடு பதிவானது.
    • நகரின் சில பகுதிகளில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு நிலவி வருகிறது. இந்த நிலையில் காற்று மாசு கடுமையாக இருந்தது. ஆனந்த் விஹார் பகுதியில் இன்று காலை காற்றின் தர குறியீடு 405-யை தாண்டியது. இது மிகவும் மோசமான அளவு ஆகும். விமான நிலையம் பகுதியில் 324 ஆகவும், அஷர்தாம் பகுதியில் 261 ஆகவும் காற்றின் தர குறியீடு பதிவானது.

    ஒட்டுமொத்தமாக காற்றின் தரக் குறியீடு 352 ஆக இருந்தது. நகரின் சில பகுதிகளில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது. இந்த காற்று மாசுவால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதி அடைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

    • 2015-ம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழை முன்னெப்போதும் இல்லாதது.
    • சதுப்பு நில இழப்பை சந்திக்கும் இடம் சென்னை மட்டும் அல்ல.

    புதுடெல்லி:

    ஈர நிலங்கள் என்பது சதுப்பு நிலங்கள், கழிமுகப் பகுதி, உவர் அல்லது உப்பு குறைந்த, அலையின் ஆழம் 6 மீட்டருக்கு மேல் இருக்காத கடல் நீர் உள்ள பகுதிகள் என வரையறுக்கப்படுகிறது.

    இந்த வரையறை அனைத்து ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர்நிலைகள், பிற முக்கிய நீர்நிலைகளை உள்ளடக்கியது. வளி மண்டலத்தில் இருந்து கார்பனை சேமித்து, ஆழமற்ற நீரில் இருந்து மாசுகளை நீக்கி நீரை சுத்திகரித்தல், கார்பன் வரிசைப்படுத்துதல் மூலம் காலநிலை நிலைமைகளை ஈரநிலங்கள் கட்டுப்படுத்த உதவுகின்றன.

    இந்த நிலையில் உலக வனவிலங்கு நிதியம் வெளியிட்ட அறிக்கையில், ஈர நிலங்களின் இழப்பு, வறட்சி மற்றும் வெள்ளம் தொடர்பான கவலைக்குரிய முக்கியமான பகுதிகளை தெரிவித்துள்ளது.

    இதில் வங்காள விரிகுடாவில் சென்னையில் உள்ள விரைவான நகர்ப்புற விரிவாக்கம் ஈரநிலங்களின் பரப்பளவில் 85 சதவீத சரிவை ஏற்படுத்தியது. இது ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளால் வழங்கப்படும் முக்கிய சேவைகளை மோசமாக பாதித்தது. சுருங்கும் ஈரநிலங்களும் நகரத்தை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கக்கூடியதாக மாற்றியது.

    2015-ம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழை முன்னெப்போதும் இல்லாதது. ஈரநிலங்கள் சுருங்கி வருவதால் இயற்கையான வடிகால் வழிகள் இழக்கப்பட்டு நகரின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சதுப்பு நில இழப்பை சந்திக்கும் இடம் சென்னை மட்டும் அல்ல.

    இப்பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. சதுப்பு நிலங்கள் சுருங்குவதால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து அவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளையும் அரசாங்கங்கள் செய்து வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×