என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு தேவை: மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி
    X

    சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு தேவை: மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி

    • பா.ஜ.க.வின் அலட்சியத்தால் பல கோடி செலவில் கட்டப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை தரைமட்டமானது.
    • இதற்கு ஒன்றிய பா.ஜ.க பொது இடங்களை பராமரிக்கத் தவறுவதே காரணம் என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா ரெயில் நிலையத்தில் உ.பி.யின் கோரக்பூர் நோக்கிச் செல்லும் ரெயில் வந்தடைந்தது. அப்போது அந்த ரெயிலில் பயணிகள் ஏற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தோர் பாபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது:

    ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் திறப்புவிழாக்களும், ஆரம்பர விளம்பரங்களும் மட்டுமே வெற்றி பெறுகின்றன. வளர்ச்சியும், கட்டமைப்பு முன்னேற்றமும் தோல்வி அடைந்தே வருகிறது.

    இதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டாகவே பாந்த்ரா ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அமைந்துள்ளது.

    பெரும் பாலங்களும், நடைமேடைகளும், சிலைகளும் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. அதன் ஆயுள் காலம் சில மாதங்களாகவே இருக்கிறது. இதற்கு ஒன்றிய பா.ஜ.க பொது இடங்களை பராமரிக்கத் தவறுவதே காரணம்.

    ஒன்றிய பா.ஜ.க.வின் அலட்சியத்தால் பல கோடி செலவில் கட்டப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை 9 மாதங்களில் தரைமட்டமானது.

    இதே நிலை தான், பா.ஜ.க ஆட்சியில் எழுப்பப்பட்ட மற்ற கட்டமைப்புகளுக்கும்.

    இதுபோன்ற நிலை இங்கு நீடிப்பது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியும்.

    மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள் எழுப்பப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×