என் மலர்tooltip icon

    இந்தியா

    • கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.
    • நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டோம்.

    நேற்று நடந்த மாணவரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.

    நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.

    மேலும், அவ்வகுப்பில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து நம்பிக்கையளிக்கும் விதமாக உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    • தனது சக ஊழியர்களுடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தார்.
    • உயிரிழந்த விகல் தனி ஆளாக வேலை செய்து, மனைவி, 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களை காப்பாற்றி வந்தார்.

    அரியானாவில் 30 வயது டெலிவரி ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    டெலிவரி ஊழியர் விகல் சிங், அரியானா மாநிலம் பரிதாபாத்தின் சத்புரா கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் கடையில் டெலிவரி பாய் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், அவர் தனது சக ஊழியர்களுடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார். சக ஊழியர்கள் உடனடியாக அவரை தூக்கி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். முதல் பார்வையில், அவர் மாரடைப்பால் இறந்ததாக நம்பப்படுகிறது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    உயிரிழந்த விகல் தனி ஆளாக வேலை செய்து, மனைவி, 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களை காப்பாற்றி வந்தார்.

    ஊர் மக்களின் போராட்டத்தை அடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்குவதாக நிறுவனம் அறிவித்தது. இது தவிர, இறுதிச் சடங்குகளுக்காக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    • பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.

    இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    ஆனால் கடந்த வருடம் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற அவர், தாத்தா தேவகௌடா அறிவுரையை ஏற்று மே 31 தேதி நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

    வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது.

    அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது பிரஜ்வால் கண்ணீர் விட்டார். அவர் அழுது கொண்டே நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததாகத் தெரிகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரஜ்வாலுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும். 

    • விவசாயிகள் கள் இறக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
    • கல்வி கற்று விட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    விவசாயிகள் கள் இறக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் அதை சீமான் மிகைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. கால்நடைகள் வளர்ப்பதும் பனை ஏறுவதும் கேவலமா? என சீமான் கேட்கிறார் அந்த தொழில்களை யாரும் கேவலம் என கூறவில்லை.

    எங்களின் கொள்கை சமூக நீதி கொள்கை, சமத்துவக் கொள்கை தாழ்ந்து கிடக்கும் மனிதர்களை உயர்த்த வேண்டும் என்கிற கொள்கை. அனைவரும் கல்வி கற்க வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.

    அவர்கள் கல்வி கற்று விட்டு எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்நுட்பங்கள் வந்துள்ளது. அந்த தொழில் நுட்பங்களின் பயன்களையும் அவர்கள் பெற வேண்டும்.

    ஆனால் சீமான் பேசுவதை பார்க்கும்போது மக்களை மீண்டும் மனு ஸ்மிருதி காலத்திற்கு அழைத்து சென்று குலத்தொழிலை செய்ய வேண்டும் என்கிற தொனியில் உள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    சமூகத்திற்கு கல்வி அடிப்படையாக தேவை என நம் தலைவர்கள் வழிகாட்டி உள்ளார்கள். கல்வி கற்று விட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம்.

    சிபில் ஸ்கோர் விவகாரத்தை நிவர்த்தி செய்து வருகிறோம். கடன் வாங்குவதற்கு முனைப்பு காட்டுவது போல் கடனை திருப்பி செலுத்துவதற்கும் முனைப்பு காட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு மங்களூர், பெரியநெசலூர், காட்டுமயில், கழுதூர், சிறுப்பாக்கம், கொத்தனூர், வேப்பூர், தியாகதுருவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் இருந்து விவசாயிகள் 3,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஆடிப்பெருக்கு நாளைமறுநாள் (3-ந்தேதி) கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது. வாரச்சந்தையில் சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    இதில் கொடிஆடு, கருப்பாடு, வெள்ளாடு, ஜமுனா பூரி, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளாடு உள்ளிட்ட 8 விதமான ஆட்டுரகங்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. கடந்த வாரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமான நிலையில், ஆடிப்பெருக்கையொட்டி இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அவை வெளியானால் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள இடம் இருக்காது.
    • ஓய்வு பெற்றாலும் அவர்களை விட்டுவிட மாட்டோம் என்று ராகுல் எச்சரித்தார்.

    பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக தங்களிடம் 100 சதவீதம் தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைச் செய்கிறது என்றும் இது தொடர்பாக 'அணு குண்டு' போன்ற ஆதாரங்கள் இருப்பதாகவும், அவை வெளியானால் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள இடம் இருக்காது என்றும் தெரிவித்தார். 

    கடந்த ஆண்டு நடந்த மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் முறைகேடுகள் நடந்ததாக சந்தேகம் எழுந்ததாகவும், இந்த சந்தேகம் மகாராஷ்டிராவில் மேலும் வலுவடைந்ததாகவும் அவர் கூறினார்.

    மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

    தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகள், உயர் பதவியில் இருந்து கீழ் நிலை வரை, இந்த முறைகேடுகளில் ஈடுபடுவர்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்றாலும் அவர்களை விட்டுவிட மாட்டோம் என்று ராகுல் எச்சரித்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து உடனடியாக ஒரு சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அ.தி.மு.க.வை 8 பேர்தான் நடத்தி வருகிறார்கள்.
    • விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை விட்டு கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

    அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    பாரதிய ஜனதா திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுத்த காய்களை நகர்த்தி வருகிறது. பல விஷயங்களில் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருக்கிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகளில் இருந்து அவர் விலகி செல்கிறார். அ.தி.மு.க.வை 8 பேர்தான் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள பல மூத்த தலைவர்களுக்கு பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தது பிடிக்கவில்லை. தமிழகத்தில் 14 சதவீதம் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளை இழந்து விடுவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமியும் முதலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று தான் சொல்லி இருந்தார். ஆனால் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதும் பாரதிய ஜனதா பதறி விட்டது.

    அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் இடையே ரகசிய பேச்சு நடந்தது எனக்கு தெரியும். விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் வரை விட்டு கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் விஜய் கட்சியினர் முதல்-மந்திரி பதவியை விட்டு தரவேண்டும் என்றனர். ஆனால் அதை அ.தி.மு.க. ஏற்கவில்லை. என்றாலும் பேச்சுவார்த்தை முடியாமல் தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருந்தது. இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் அ.தி.மு.க.வுக்கும் விஜய் கட்சிக்கும் கூட்டணி வந்தால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தனர். அந்த பயத்தில்தான் அமித்ஷா அவசரம் அவசரமாக சென்னைக்கு வந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலமாக அறிவித்தார்.

    பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தால் அ.தி.மு.க. வுக்கு தான் பாதிப்பு ஏற்படப் போகிறது. இது அ.தி.மு.க.வில் உள்ள பல மூத்த தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பதற்கு முன்பு 2 ஆண்டுகள் நாகலாந்து மாநிலத்தில் கவர்னராக இருந்தார்.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் அவர் கவர்னர் பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுவார் என்று அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுவதும் பிறகு அது வதந்தி என்று அறிவிக்கப்படுவதும் வழக்கமாகி விட்டது. அந்த வகையில் நேற்று முதல் சமூக வலை தளங்களில் கவர்னர் ரவி மாற்றப்படுவார் என்று புதிய தகவல் பரவி வருகிறது.

    தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பதற்கு முன்பு 2 ஆண்டுகள் நாகலாந்து மாநிலத்தில் கவர்னராக இருந்தார். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவர் கவர்னர் பதவியில் இருக்கிறார்.

    வருகிற செப்டம்பர் மாதம் வந்தால் அவர் தொடர்ச்சியாக கவர்னர் பதவியில் இருப்பது 6 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு சமமாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் அவர் கவர்னர் பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனால்தான் அவர் எந்த நேரத்திலும் மாற்றப்படுவார் என்று அடிக்கடி தகவல் பரவுகிறது. தற்போதும் அதன் அடிப்படையில்தான் தகவல் பரவி இருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

    கவர்னர் ஆர்.என்.ரவி துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படலாம் என்றும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை கவர்னர் மாளிகை அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்தனர்.

    கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது ஆகஸ்டு 15 சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் சுதந்திர தினத்தன்று விருந்து தொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.

    • வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி.
    • கூட்டணி பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்து விட முடியாது.

    மதுரை:

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என்று சொல்லுகிறார்கள். இதுபோன்ற மக்களின் எழுச்சி எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது சுற்றுப்பயணத்திலும் பார்க்க முடிந்தது. அது போன்ற கூட்டம் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் திரளாக வருவதை பார்க்கும் போது அடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.

    இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு எட்டு மாதங்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் பெரிய பெரிய கட்சிகள் யாரும் எதிர்பார்க்காத கட்சிகள் வரும் என்று பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். எனவே கூட்டணி முக்கியமல்ல, மக்கள்தான் எஜமானர்கள். அவர்களது உணர்வுகளை வாக்குகளாக மாற்றுவதற்காக மிகச்சிறப்பான முறையில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. வேறு எந்த இயக்கத்திலும் இதுபோல பூத் கமிட்டி அமைக்கப்படவில்லை.

    எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. சீட் பேரம், தொகுதி பேரம் எல்லாம் நடக்கும். தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாட்டில் கூட கூட்டணி பிரியும். எனவே கூட்டணி பற்றி எல்லாம் இப்போது முடிவு செய்து விட முடியாது.

    1967-ல் பேரறிஞர் அண்ணா யாரும் எதிர்பாராத வகையில் கொள்கையில் முரண்பட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தார். எனவே கூட்டணியை விட மக்களின் ஆதரவு முக்கியம். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் உங்களை எல்லாம் வழி நடத்தியவர் ஓ.பன்னீர் செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மூன்று முறை சந்தித்துள்ளார். அவரை பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா? என்று ஒரு நிருபர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி கேட்டார். அப்போது ஆவேசம் அடைந்த செல்லூர் ராஜூ, ஒரு தலைவரைப் பற்றி பாவமா இல்லையா என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தவறானதாகும். அவர் மூன்று முறை அல்லது நான்கு முறை யாரையாவது சந்திக்கட்டும். அது பற்றி எல்லாம் இப்போது பேசுவதற்கு இல்லை என்று காட்டமாக பதில் அளித்தார்.

    • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
    • இதனால், அவை நடவடிக்கைகள் பாதித்தன.

    கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வந்தனர் .

    இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு பாரளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின.

    அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதித்தன.

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 2 மணிவரையும், மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. 

    • தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உள்ளதாக கூறுகின்றனர்.
    • தமிழ்நாட்டில் 70 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பி உள்ளனர்.

    கோவில்பட்டி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் மேற்கொண்டுள்ளார்.

    இன்று கோவில்பட்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். காலையில் செண்பகவல்லி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவில்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ பேரவை போதகர்களை சந்தித்தார். பின்னர் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    அதனைத்தொடர்ந்து தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது அச்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

    கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும். கோவில்பட்டியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதே போல் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் தமிழக பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுகளில் கடலை மிட்டாயை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.



    இதனை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    சிறு, குறு தொழில்கள் அதிகமாக செயல்பட்டால் தான் அதிகளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும், நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    இந்தியாவில் சிறு, குறு தொழில்களில் தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது. எப்போதெல்லாம் இந்த தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, பிரச்சனைகள் வருகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் அதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த தொழிலுக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்திருந்தது.

    இதனை குறைக்க சிறு, குறு தொழில் துறையினர் எங்களிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று 12 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை செய்தோம். தமிழகத்தில் முன்பு தீக்குச்சி இறக்குமதிக்கு 5 சதவீதம் மாநில அரசு வரி இருந்தது. இதனை ரத்து செய்ய கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 5 சதவீத வரியையும் ரத்து செய்தார்.

    தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உள்ளதாக கூறுகின்றனர். இந்த தொழிலை காக்க பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால் இந்த அரசு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் இதுகுறித்து கொண்டு சென்றதாக கூறியுள்ளார்கள். அ.தி.மு.க. சார்பில் மத்திய அரசிடம் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடலை மிட்டாய் என்றாலே கோவில்பட்டி தான் என்கிற அளவுக்கு இங்குள்ள கடலை மிட்டாய்கள் தரமானது என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். மற்ற பகுதிகளில் கோவில்பட்டி கடலை மிட்டாய் என போலியாக லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு கோவில்பட்டியில் உள்ள கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் லேபிள் தயாரித்து சோதனை முறையில் அதனை நடைமுறைபடுத்தலாம்.

    நாடு செழித்தால் தான் உற்பத்தி பெருகும். தமிழ்நாட்டில் 70 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பி உள்ளனர். இதற்காகத்தான் அ.தி.மு.க. ஆட்சியில் நீர்மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. ஆட்சி அதனை கிடப்பில் போட்டு விட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தாமிரபரணி-வைப்பாறு திட்டம் நிறைவேற்றப்படும்.

    இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவு விளைவிக்கப்படுவதாக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார். தமிழகத்தில் 3 எத்தனால் தொழிற்சாலைகள் தொடங்க திட்டமிடப்பட்டு 2 தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கி உள்ளது. இதற்கு 40 டன் மக்காச்சோளம் தேவைப்படும். இதற்கு வருங்காலத்தில் தினமும் எத்தனால் தொழிற்சாலைக்கு 12 ஆயிரம் டன் மக்காச்சோளம் தேவைப்படும். இதனால் அதன் விற்பனையும் அதிகரிக்கும்.

    அதேபோல் பருத்தியும் அதே அளவு விளைவிக்கப்படுகிறது. தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழில் சிறக்க அ.தி.மு.க. துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • துணை ஜனாதிபதி பதவியை ஜெகதீர் தன்கர் ராஜினாமா செய்த நிலையில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • துணை ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவோர் ஆக. 7-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந்தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது டெல்லி அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.

    துணை ஜனாதிபதியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்ற ஜெகதீப் தன்கருக்கு அந்த பதவி காலம் 2027 ஆகஸ்டு 10-ந்தேதி வரை இருந்தது. ஆனால் அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    உயிரிழப்பு, ராஜினாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் துணை ஜனாதிபதி பதவி இடம் காலியாக நேரிட்டால் கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டப்பிரிவு 68 (2)-ல் குறிப்பிட்டுள்ளது. இந்த விதியின்படி அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தொடங்கியது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம் பிடித்துள்ள எம்.பி.க்களை உள்ளடக்கிய வாக்காளர் பட்டியலை இறுதி செய்ததாக தேர்தல் ஆணையம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் தேதி இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. அதன்படி அன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

    வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஆகஸ்டு 21-ந்தேதி கடைசி நாளாகும். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மனு செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை 22-ந்தேதி நடைபெறும். 25-ந்தேதி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து போட்டி இருக்கும்பட்சத்தில் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நடைபெறும். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்படும். சில மணி நேரத்துக்குள் முடிவு வெளியாகும். அன்றே அதாவது செப்டம்பர் 9-ந்தேதி நாட்டின் புதிய துணை ஜனாதிபதி யார்? என்பது தெரிந்து விடும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால் துணை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சி சார்பில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் களம் இறக்கப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    துணை ஜனாதிபதி தேர்தல் 2025-க்கான இறுதி செய்யப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை கொண்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதன்பிறகு வாக்காளர் பட்டியலை உறுப்பினர்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் என்பது அரசமைப்புச் சட்டத்தின்பிரிவு 66(1)-ன் கீழ் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி ஒற்றை மாற்று வாக்குமூலம் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும. அதன்படி வேட்பாளரின் பெயருக்கு எதிரே தனது விருப்பத் தேர்வை வாக்காளர் குறிக்க வேண்டும்.

    விதிகளின்படி துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் இந்திய குடிமகனாகவும், 35 வயதை பூர்த்தி செய்தவராகவும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதி உடையவராகவும் இருக்க வேண்டும். 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது.

    அதன்படி தற்போது இரு அவைகளையும் சேர்த்து எம்.பி.க்களின் எண்ணிக்கை 782 ஆக உள்ளது. தற்போது இந்த உறுப்பினர்கள் அனை வரும் வாக்களிக்கும் நிலையில் துணை ஜனாதிபதியாக வெற்றி பெறும் வேட்பாளர் குறைந்தபட்சம் 391 வாக்குகளை பெற வேண்டும்.

    மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ), 542 உறுப்பினர்களில் 293 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் தற்போதுள்ள 240 உறுப்பினர்களில் 129 பேரின் ஆதரவு உள்ளது. நியமன எம்.பி.க்களின் ஆதரவும் என்.டி.ஏ.வுக்கு கிடைத்தால் மொத்தம் 422 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்ப டும் துணை ஜனாதிபதி 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்தாலும் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வரை அவர் அந்த பதவியில் தொடரவும் அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

    ×