என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்துக்களும் நக்சல்களாக உள்ளனர். பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.

    டெல்லி கடந்த திங்கள்கிழமை நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு பரவிய வதந்திகளுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்த் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா ஒரு கூட்டத்தை கூட்டினார்.

    கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா, "மக்கள் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றார். சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை மக்கள் நம்பக்கூடாது.

    பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் மதம் இல்லை. முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று நினைப்பது தவறு. இதுபோன்றவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர்.

    இந்து சமூகத்தை சேர்ந்தவர்களும் நக்சல்களாக உள்ளனர். கடற்படையில் பல பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். ராணுவத்திலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு. எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.

    இந்த நாற்காலி எனக்கு தாய் போன்றது. நான் 34 ஆண்டுகளாக பாகுபாடு இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.  

    மாணவனாக இருந்தபோது நான் கண்டு வியந்த போலீஸ் அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் காவல் துறையில் சேர்ந்தேன்." என்று பேசினார்.

    மேலும் காவல் நிலையத்திற்குள் ஏழைகள் சுரண்டப்படும் போக்கு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    நரேந்திர குமார் இவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் களப் பணியில்(Field of duty) இருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.
    • பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    பாட்னா:

    243 உறுப்பினா்களை கொண்ட பீகாா் சட்டசபைக்கு நடைபெற்ற தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    இந்த கூட்டணியில் 89 இடங்களுடன் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 85 தொகுதிகளும், லோக் ஜனசக்திக்கு (ராம் விலாஸ் பஸ்வான்) 19 இடங்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 5 தொகுதிகளும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு 4 இடங்களும் கிடைத்தன.

    ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் 'இந்தியா' கூட்ட ணிக்கு பலத்த அடி விழுந்தது. இந்த கூட்டணியால் 34 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ராஷ்டிரிய ஜனதாதளம் 25, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1 இடங்களை கைப்பற்றின.

    தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களிலும் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும், ஐ.ஐ.பி. ஒரு இடத்தையும் பிடித்தன.

    தேர்தலில் பா.ஜ.க.வைச் சோ்ந்த துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்திரி, விஜய் குமாா் சின்கா உள்பட மாநில மந்திரிகள் 25 போ் (பா.ஜ.க. 15, ஐக்கிய ஜனதா தளம் 10) மீண்டும் போட்டியிட்டனா். இவா்களில், ஐக்கிய ஜனதா தளத்தின் சுமித்குமாா் சிங் தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றனா்.

    இதற்கிடையே பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் டெல்லியிலும், பாட்னாவிலும் பேச்சுவார்த்தையை தொடங்கின. பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    ஐக்கிய ஜனதா தள செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    நிதிஷ்குமாரை மீண்டும் முதல்-மந்திரியாக்க பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சம்மதித்துள்ளன. இதுகுறித்து அமித்ஷா கூறும்போது, "பீகார் மக்கள் நல்ல ஆட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து இருக்கிறார்கள். மாநில மக்கள் நிதிஷ்குமார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்" என்றார்.

    புதிய ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக நிதிஷ்குமார் நாளை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன் பிறகு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்படுவார். அதை தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்க அவர் கவர்னரை சந்தித்து உரிமை கோருவார்.

    நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவியேற்கும் விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ஒருவர் தெரிவித்தார். 19-ந்தேதி சர்வ அமாவாசை (நல்ல நாள்) என்பதால் அன்றே அவர் பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.

    தற்போது அமைய இருக்கும் புதிய ஆட்சியில் கூட்டணியில் உள்ள மற்ற 3 கட்சிகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மந்திரிசபையில் இடம் பெறுவதில் ஆர்வத்துடன் இருப்பதாக லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பஸ்வான் நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு தெரிவித்தார். கடந்த அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. மட்டுமே இடம் பெற்றன.

    பா.ஜ.க.வில் 15 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தில் 12 பேரும், லோக் ஜனசக்தி கட்சியில் 6 பேரும், இந்துஸ் தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் சார்பில் ஒரு வரும் மந்திரிகள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகாரில் 10-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.

    முதன்முதலில் அவர் 2000-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்றார். இந்த அரசு மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் அடுத்த 7 நாட்களில் கவிழ்ந்தது. ஓராண்டுக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆர்.ஜே.டி. கட்சி சார்பில் லல்லுவின் மனைவி ராப்ரி தேவி மீண்டும் முதல்-மந்திரி ஆனார். அதன்பிறகு 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிதிஷ்குமார் முதல்-மந்திரி ஆனார்.

    கடந்த 2010-ம் ஆண்டு நிதிஷ்குமார் 3-வது முறை முதல்-மந்திரி ஆனார். கடைசி 2 ஆட்சியிலும் நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க. முழு ஆதரவு அளித்தது. பின்னர் 2014-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து நிதிஷ்குமார் பிரிந்தார். லல்லுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்தவர் 2015-ம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்றார்.

    இதில் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அவர் மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பினார். 2020-ம் ஆண்டு மறுபடியும் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022-ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி

    ஆர்.ஜே.டி., காங்கிரசின் மெகா கூட்டணி சார்பில் முதல்-மந்திரியானார்.

    இதற்கிடையில் 2024-ம் ஆண்டு மே 24-ந்தேதி முதல் 278 நாட்கள் ஜே.டி.யு. ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்-மந்திரியாக இருந்தார்.

    ஜனவரி 2024-ம் ஆண்டு நிதிஷ்குமார் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பா.ஜ.க.வுடன் இணைந்து 9-வது முறையாக முதல்-மந்திரி ஆனார். தற்போது 10-வது முறையாக முதல்-மந்திரி பொறுப்பேற்க உள்ளார்.

    • வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பழைய புதிய வாக்காளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
    • தி.மு.க.-பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களை மிரட்டி ஆள் மாறாட்டம் செய்து பணி செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசியதாவது:-

    மக்களின் ஜனநாயக ஆணிவேரை அசைத்து பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

    வாக்காளர்களின் பெயர்களை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் கூறி வருகிறார்கள்.போலியான காரணங்களை கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்குரிமையை நீக்கி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.

    அதே நேரத்தில் ஒரே நபரின் பெயரை பல இடங்களில் சேர்ப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் ஆட்சியாளர் கள் குறுக்கு வழியில் வெல்வதற்கு துடிக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பழைய புதிய வாக்காளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். தொடர்பாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளால் முறையான பதில் அளிக்க முடியவில்லை.

    5 ஆண்டுக்கு ஒருமுறை தலைவிதியை நிர்ணயிக்கும் வாக்குகளை நாம் யாருக்கு போட வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து வந்தார்கள். ஆனால் இன்று யார் ஓட்டு போட வேண்டும் என்பதையே அதிகார வர்க்கம் தீர்மானிக்கும் நிலை உள்ளது.

    எனவே இதனை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும். தி.மு.க.-பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களை மிரட்டி ஆள் மாறாட்டம் செய்து பணி செய்து வருகிறார்கள். இதன் மூலமாக இளம் வாக்காளர்கள் முதல் அனைவருக்குமான வாக்குரிமையும் பறிபோகும் சூழல் உள்ளது.

    எனவே நாம் அனைவரும் வாக்குகளையும் உறுதி செய்து 2026 தேர்தலில் அனைவரும் ஓட்டு போடுவதற்கான உரிமையை பெற்றுத் தர வேண்டும். இதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்று 2026 தேர்தலில் நமது தலைவர் முதலமைச்சராவது உறுதி.

    இவ்வாறு ஆனந்த் பேசினார்.

    • தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    • குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன்.

    தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் அதை வெளிப்படுத்த ஒரு வழி தேவைப்படுகிறது. அதே போல், அதி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இயல்பாகவே நாம் தான் வன்னியர்களுக்கான சமூகநீதி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். எனவே, நமது பாட்டாளி சொந்தங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நாம் நடத்தவிருக்கும் 'வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தின்' நோக்கங்களை விளக்கும் துண்டறிக்கைகளை அனைத்துக் கட்சியினரிடமும் கொடுத்து, குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்புவதற்காக நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது. நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும். பாட்டாளிகளை அடைக்க தமிழ்நாட்டின் சிறைகள் போதாது என்று அஞ்சும் அளவுக்கும், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக்கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் டிசம்பர் 17-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 19-ந்தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வருகிற 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

    கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வருகிற 18-ந்தேதி தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 19-ந்தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 20-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உமரின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
    • உமர் சட்ட விரோத நிதிகள் மூலம் ரூ.20 லட்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டெல்லி செங்கோட்டை யில் கடந்த 10-ந்தேதி கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர். காரில் வெடிபொருட்கள் நிரப்பி தற்கொலை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் முகமது பலியானார்.

    ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த உமர், அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். பரிதாபாத்தில் இருந்து 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்தது.

    இதற்கிடையே உமரின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. டாக்டர் உமர், டெல்லியில் குண்டுவெடிப்புக்கு ஒரு நாள் முன்பு வரை அரியானாவின் நூஹ் நகரில் வாடகை அறையில் தங்கி இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

    அப்போது அவர் பல செல்போன்களைப் பயன்படுத்தி உள்ளார் என்று தெரிவித்தனர். அவரது நெருங்கிய கூட்டாளி டாக்டர் முசாம்மில் ஷகீல்லை போலீசார் பிடித்ததை அறிந்ததும் உமர் பரிதாபாத்தில் உள்ள அல்-பலாஹ் மருத்துவக் கல்லூரியை விட்டு வெளியேறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, அல் பலாஹ் பல்கலைக் ழகத்தில் தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீடு பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. முழு வீடும் தரைமட்டமானதை அடுத்து, கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்ததும், டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருப்பதும் தெரியவந்தது.

    டாக்டர் உமர் சட்ட விரோத நிதிகள் மூலம் ரூ.20 லட்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பல ஹவாலா வியாபாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் உமர் அரியானாவின் நூஹ் நகரில் உள்ள ஒரு சந்தையில் பணம் கொடுத்து அதிக அளவில் உரங்களை வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 9மிமீ தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கண்டு பிடிக்கப்படவில்லை.

    பறிமுதல் செய்யப்பட்ட 3 தோட்டாக்களில் ஒன்று மட்டும் வெற்று ஷெல் ஆகும். இந்த 9 மிமீ தோட்டாக்கள் பொதுவாக பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்றன.

    இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த அனைத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஆயுதங்களிலும் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர்களின் தோட்டாக்கள் சரியாக இருந்தது.

    எனவே குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்கள் பாதுகாப்பு படையினர், போலீசாருக்கு சொந்தமானவை அல்ல என்பது உறுதியானது. இதையடுத்து இந்த தோட்டாக்கள் யாருடையது? என்றும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தோட்டாக்கள் எப்படி வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் மேலும் முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. குண்டு வெடிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பரிதாபாத் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பழைய டெல்லி வரை உமரின் பயணத்தின் புதிய தெளிவான படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    டெல்லி-என்.சி.ஆரில் உள்ள பல மாவட்டங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சோதனைச் சாவடி களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் இருந்த காட்சிகள் மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.

    • புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.
    • வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் சுட்டெரித்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வந்தது.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15-ந் தேதி முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. அவ்வப்போது மழையும் பெய்தது.

    இதனிடேயே வங்கக்கடலில் அக்டோபர் 27-ந் தேதி மோந்தா புயல் உருவானது. இந்த புயல் புதுச்சேரியை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்தது. ஆனால் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது.

    இருப்பினும், புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை சுற்றி உள்ள தமிழக பகுதிகளில் கன மழை பெய்தது. புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களில் வெள்ள நீர் நிரம்பியது.

    அதே நேரம் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பெய்த கனமழையால் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.

    இந்த மாத தொடக்கத்தில் மழை இல்லை. பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்தது. ஆனால் இடையில் சில நாட்கள் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது.

    இன்று அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. அதோடு வானம் இருண்டு காணப்படுகிறது.

    இதனிடையே பருவமழையின் தொடர்ச்சியாக இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) கனமழை மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் காற்று மணிக்கு 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும்படியும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.

    • கடந்த வருடம் 10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது.
    • வேளாண்மைத் துறை அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி பயிர் காப்பீடு செய்திடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது, விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை 26.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்நாள் வரை, 6.27 லட்சம் விவசாயிகளால் 15 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 57 சதவீதமாகும். இதே நாளில் கடந்த வருடம் 10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுது றை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி 2025 நவம்பர் 15-ந் தேதி என அறிவிக்கை செய்யப்பட்டது.

    எனினும் பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நெல் நடவு பணிகள் தாமதமானதாலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கிணங்க சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 2025 நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    முதலமைச்சரின் துரித நடவடிக்கையின் பேரில் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் செய்யும் விவசாயிகளின் நன்மையை கருதி பயிர் காப்பீடு செய்யும் காலக்கெடுவானது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே வேளாண்மைத் துறை அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி பயிர் காப்பீடு செய்திடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    எனவே, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடு துறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 30-ந்தேதிக்குள் பதிவு செய்து பயனடையுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நவம்பர் 24-ந்தேதிக்குப் பிறகு உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
    • சென்னை மாநகராட்சியில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    சென்னை மாநகராட்சி செல்லப் பிராணிகளான நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி உள்ளது. சென்னையில், செல்லப்பிராணிகளுக்கு நவம்பர் 23-ந்தேதிக்குள் உரிமம் பெற வேண்டும் என்றும் நவம்பர் 24-ந்தேதிக்குப் பிறகு உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 3 ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னையில் உள்ள சிகிச்சை மையங்களில் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.

    தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி தொடங்கியது. மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரிகளும், மருத்துவ பணியாளர்களும் வீதிவீதியாக சென்று தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.

    சென்னை மாநகராட்சியில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 625 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 483 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

    செல்லப்பிராணிகளுக்காக உள்ள 6 சிகிச்சை மையங்களில் தினமும் காலை 8 மணி முதல் 3 மணி வரையில் உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் செலுத்துதல், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.

    திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் முகாம் நடைபெறுகிறது. 

    • பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.
    • ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம்.

    தேசிய பத்திரிகை தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.

    ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம்.

    பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து அதன் தோல்விகள், ஊழல்களை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டுகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவானந்தா சாலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின்பேரில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், SIR நடவடிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
    • பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.

    அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×