என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு முகாம்
- நவம்பர் 24-ந்தேதிக்குப் பிறகு உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
- சென்னை மாநகராட்சியில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி செல்லப் பிராணிகளான நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி உள்ளது. சென்னையில், செல்லப்பிராணிகளுக்கு நவம்பர் 23-ந்தேதிக்குள் உரிமம் பெற வேண்டும் என்றும் நவம்பர் 24-ந்தேதிக்குப் பிறகு உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 3 ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னையில் உள்ள சிகிச்சை மையங்களில் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி தொடங்கியது. மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரிகளும், மருத்துவ பணியாளர்களும் வீதிவீதியாக சென்று தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 625 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 483 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
செல்லப்பிராணிகளுக்காக உள்ள 6 சிகிச்சை மையங்களில் தினமும் காலை 8 மணி முதல் 3 மணி வரையில் உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் செலுத்துதல், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் முகாம் நடைபெறுகிறது.






