என் மலர்
இந்தியா
- பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
- நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபாவளி பண்டிகை ஆர்டர் பரபரப்பாக மாறியிருந்தது. வழக்கம் போல் தீபாவளிக்கு பின் பனியன் ஆர்டர்கள் மந்தமாகியது.
அதன்பின் தைப்பொங்கல் பண்டிகையில் இருந்து மாதாந்திர விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கின. நவம்பர் -டிசம்பர் மாதங்களுக்கு பிறகு ஜனவரி மாத இறுதியில் இருந்து தான், பின்னலாடை நிறுவனங்களின் இயக்கம் சீராகியுள்ளது.
திருப்பூரில் தயாரிக்கப்படும் பருத்தி நூலிழை டி-சர்ட்டுகள், கோடைகாலத்துக்கு ஏற்றவை. அத்துடன், பெண்களுக்கான இரவு நேர ஆடைகளும் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. அதன்படி நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர் விசாரணை சாதகமாக மாறியுள்ளது. வடமாநிலங்களில் போட்டியாக உற்பத்தி நிலையங்கள் துவங்கினாலும் கோடை கால பயன்பாட்டுக்கான பருத்தி பின்னலாடைகள் திருப்பூரில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் இருந்து ஆர்டர் வர தொடங்கி உள்ளது.
இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
தீபாவளிக்கு பின் பொங்கல் பண்டிகை வரை திருப்பூர் ஆடை விற்பனை மிக மந்தமாக இருந்தது. அதன்பின் அன்றாட விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கியது. கோடை தொடங்கி விட்டதால் வடமாநிலங்களில் இருந்து தற்போது தான் ஆர்டர் வந்துள்ளது. ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளை, அனுப்பி வைக்கும் பணி வேகமெடுத்துள்ளது.
கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் பின்னல் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர். அதற்காக பின்னல் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் விற்பனை வேகமெடுத்து வருகிறது. ஜூன் மாதம் பள்ளி சீருடை ஆர்டர் துவங்கும் வரை கோடைகால ஆர்டர்கள் கை கொடுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரம்ஜான் பண்டிகைக்காக ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் வழக்கமான வர்த்தகர்கள் வந்து கொள்முதல் செய்து சென்றுள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கொண்டாடப்படும் யுகாதி பண்டிகைக்காக, அம்மாநில வியாபாரிகளும் மொத்த கொள்முதல் செய்து சென்றனர். கோடை காலம் தொடங்கிவிட்டதால் திருப்பூரில் தயாரிக்கப்படும் 'பைன்' 'டி-சர்ட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது என ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
- பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
- கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
ஈரோடு:
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
அந்தப் போஸ்டரில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் பெறாத பார் மூலம் 40 ஆயிரம் கோடி ஊழல் போன்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோல் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
- போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே 4 பேர் கைது.
- மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் 5 பேர் இலங்கை சென்றுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
இதனை கண்டித்து கடந்த மாதம் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருவோடு ஏந்தியும், கஞ்சி காய்ச்சியும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது ராமேசுவரம் வந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, போராட்டத் தில் ஈடுபட்ட மீனவர்களை நேரடியாக சந்தித்து பேசினார்.
மேலும் மத்திய, மாநில அரசுகளிடம் பேசி மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து சென்றார்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை மேலும் 11 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதிச்சீட்டு பெற்று 400 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இன்று அதிகாலையில் அவர்கள் வடக்கு கடல் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினரை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டனர்.
இருந்தபோதிலும் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெர்சிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த பாம்பனை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 38), சவேரியார் அடிமை (35), முத்துகளஞ்சியம் (27), எபிரோன் (35), ரஞ்சித் (33), இன்னாசி (25), கிறிஸ்து (45), ஆர்னாட் ரிச்சே (36), ராமே சுவரத்தை சேர்ந்த பாலா (38), தங்கச்சிமடத்தை சேர்ந்த யோவான்ஸ் நானன் (36), அந்தோணி சிசோரியன் (43) ஆகிய 11 பேரையும் சிறைபிடித்தனர்.
மேலும் அந்த படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் பறிமுதல் செய்துகொண்ட இலங்கை கடற்படையினர், அவர்கள் மீது எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 11 பேரிடம் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை மீன்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 11 பேரும் ஒரு விசைப்படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
பின்னர் ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என என இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை சந்திக்கவும் இரு நாட்டு நல்லெண்ண அடிப்படையில் ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் 5 பேர் இலங்கை சென்றுள்ளனர்.
நேற்று யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து பேசிய நிலையில் இன்று மீண்டும் 11 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
- அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- தமிழகத்தின் நலனுக்காக அவர் முன் வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டி உள்ளார். அவர் பேசிய வீடியோவில்,
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு வடிவமாக பார்க்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2 மணி நேரத்துக்கு மேலாக தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி இருப்பது பற்றி பல கருத்துகள் எழுந்துள்ளன.
தமிழகத்தின் நலனுக்காக அவர் முன் வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி உள்ளார்.
- சுற்றுலா பயணிகள் வருகை இன்று அதிகரித்து காணப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
தமிழக காவிரி கரையோர பகுதிகளில் மழையின்மையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாகவும் கர்நாடகா அணைகளில் இருந்து அவ்வப்போது வெளியேற்றப்பட்ட நீராலும் தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 2000 கன அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 3 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 4000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் செல்லக்கூடிய தண்ணீரின் வேகம் சற்று அதிகரித்து உள்ளது.
கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதாலும், தற்போது நீர்வரத்து அதிகரிப்பாலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை இன்று அதிகரித்து காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து கோட்டமடுவு வரை பரிசலில் சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
- தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்ற தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு (2026) இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ் நாட்டில் 8 எம்.பி. இடங்கள் வரை குறையும் அபாயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதேபோன்று வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
இதையடுத்து தொகுதி மறு சீரமைப்பை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் 24 கட்சிகள், அமைப்புகள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டாலும் இது தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்ய காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இது தொடர்பான கருத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை தெளிவான தகவல்களை வெளியிடவில்லை. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வெளியாகும் யூகத்தின் அடிப்படையிலான தகவல்களுக்கு மத்திய அரசு உரிய விளக்கங்களை தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.
தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை மக்கள் தொகை பற்றிய புதிய கணக்கெடுப்பு நடத்தும் வரை மேற்கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- அ.தி.மு.க.வின் தூணாக விளங்கியவர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள திருத்து பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன் (வயது 76). அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக இருந்து வந்த இவர், 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
சமீப காலமாக கருப்பசாமி பாண்டியனுக்கு வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு இருந்து வந்தாலும், கட்சி பணிகளை திறம்பட மேற்கொண்டு வந்தார். கடந்த 1 வாரமாக உடல்நிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை திருத்து கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கருப்பசாமி பாண்டியன் மகனும், அ.தி.மு.க. மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணை செயலாளருமான வி.கே.பி. சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, நெல்லை மாநகர் மாவட்ட செயலா ளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செய லாளர் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதன்பின்னர் எடப் பாடி பழனிசாமி நிருபர் களிடம் கூறியதாவது:-
போற்றுதலுக்கும், மிகுந்த மரியாதைக்கும் உரிய கருப்பசாமி பாண்டியன் தென் மாவட்டங்களில் முத்திரை பதித்தவர். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவரது காலத்தில் இருந்து கட்சியில் இருக்கிறார். கட்சியை உயிராக நேசித்த வர். தென் மாவட்ட மக்களிடம் மிகவும் மரியாதைக் குரியவராக இருந்தவர்.
எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். மாவட்ட செயலராக இருந்தவர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் துணை பொதுச் செயலாளராக திறம்பட பணியாற்றியவர்.
அ.தி.மு.க.வின் தூணாக விளங்கியவர். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது என்னை நேரில் சந்தித்து எங்களுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் உங்களுக்கு துணையாக நிற்பேன் எனக் கூறி எனக்கு வலிமை சேர்த்தவர். அவ ருடைய நினைவெல்லாம் கட்சிதான். அவருடைய இழப்பு அ.தி.மு.க.விற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கும், உற்றார்-உறவினருக்கும், தென் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அப்போது அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், துணைச்செய லாளர் வீரபெருமாள், முன்னாள் எம்.பி.க்கள் முத்துகருப்பன், சவுந்தர் ராஜன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கர லிங்கம், பொருளாளர் ஜெயபாலன், துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், அணி செயலாளர்கள் ஜெயலலிதா பேரவை ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்றம் பால் கண்ணன் மற்றும் திரளான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
- கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ேராலியம் ஆகியவை மூலம் வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு வினியோகத்தில் ஈடுபட்டுள்ளன.

சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் பாட்டலிங் மையங்களுக்கு ஏற்றி செல்லும் பணியில் நாடு முழுவதும் 24 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் 2025-30-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
புதிய ஒப்பந்தத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளை குறைவாக கேட்டு இருப்பதோடு 21 டன் எடை கொண்ட கியாஸ் மற்றும் 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்கிற விதியை அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மேலும் 2 அச்சு லாரிகளை குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் , வாடகை நிர்ணயம் செய்வதில் பழைய முறையையே கடை பிடிக்க வேண்டும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் எண்ணை நிறுவனங்கள் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை ஏற்பது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சந்தித்து சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகும் புதிய கட்டுப்பாடுகளில் பெரிய தளர்வு ஏதும் அறிவிக்கப்பட வில்லை. இதனால் விரக்தி அடைந்த கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி தென் மண்டல அளவில் இயக்கப்படும் 6 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளையும் ஆங்காங்கே நிறுத்தி இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதனால் கிடங்குகளில் இருந்து கியாஸ் சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் பிளாண்ட்களுக்கு கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் விரைவில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. உடனடியாக இதில் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் செந்தில் கூறியதாவது-
புதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 2 அச்சு லாரிகள் புறக்கணிப்பு, கிளீனர் இல்லையென்றால் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அபராதம், சிறிய விபத்து என்றாலும் 2 ஆண்டுகளுக்கு தடை என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இடம் பெற்றிருந்தன.
மேலும் 3 அச்சு லாரிகளுக்கு 25 சதவீதம், 2 அச்சு லாரிகளுக்கு 75 சதவீதம் தொழில் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது மட்டும் எங்களுக்கு சாதகமாக உள்ளது. புதிய டேங்கர் லாரிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதற்கு 60 லட்சம் வரை செலவாகும்.
இதன் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறியும் கடந்த 24-ந் தேதி வரை விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. புதிய ஒப்பந்தத்தால் நாங்கள் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும், இதனால் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.
இதனால் எண்ணை நிறுவனங்களின் தென் மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை, கொச்சி, பாலக்காடு, விசாகப்பட்டினம், மங்களூரு, எடியூர், சரளப்பள்ளி, தூத்துக்குடி உள்பட 10 இடங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து லாரியில் கியாஸ் எடுத்து செல்லும் பணியில் ஈடுபடும் 6 ஆயிரம் டேங்கர் லாரிகளும் இன்று காலை முதல் இயங்கவில்லை.
இதில் தினசரி 1500 கியாஸ் டேங்கர் லாரிகளில் கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முடங்கி உள்ளதால் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் வரை வேலை நிறுத்தம் தொடரும். இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையே இன்று மாலை மும்பையில் இருந்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கோவைக்கு வருகிறார்கள். அவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறோம், அதில் சுமூக முடிவு ஏற்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம், போராட்டம் தொடர்ந்தால் ஒரு வாரத்திற்கு பிறகு கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும்.
இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மார்க்கெட்டில் இருந்த துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- கடைகளில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமாக மவுண்ட்ரோடு பகுதியில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
காய்கறி கடை, துணிக்கடை, எலெக்ட்ரிக் பொருட்கள் கடை, பெயிண்ட் என என பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. குன்னூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இங்கு கடை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு 10 மணியளவில், வழக்கம் போல வியாபாரிகள் கடையில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடைகளை அடைத்து கொண்டிருந்தனர்.
அப்போது மார்க்கெட்டில் இருந்த துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடை முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் துணிக்கடையில் பற்றிய தீ அருகே உள்ள மற்ற கடைகளுக்கும் மளமளவென பரவியது. அந்த கடைகளிலும் தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
தீ விபத்து ஏற்பட்டதை பார்த்ததும், அங்கு இருந்த வியாபாரிகளும், பொதுமக்களும், அந்த இடத்தை விட்டு நகர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். கடைகளில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அவர்கள் தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவியதால் கட்டுப்படுத்த முடியவில்லை.
உடனடியாக குன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் வாகனங்களில் வேகமாக வந்து, மார்க்கெட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து ஊட்டி, கோத்தகிரி மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. ஓரளவு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தபோது, அங்குள்ள பெயிண்ட் கடையில் உள்ள பொருட்களில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, குன்னூர் சப்-கலெக்டர் சங்கீதா, நகராட்சி ஆணையர் இளம் பருதி, குன்னூர் டி.எஸ்.பி. ரவி, நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவை தாண்டி மார்க்கெட்டில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில், மார்க்கெட்டில் உள்ள துணி, பெயிண்ட், மளிகை கடை என 15-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் பல கோடி மதிப்பிலான பொருட்களும் எரிந்து தீக்கிரையானது.
இன்று காலையும் அதிகளவு புகை மூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் தீயணைப்பு துறையினர் அங்கேயே முகாமிட்டு அதனை கண்காணித்து வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் மார்க்கெட் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டு, அங்கு யாரும் செல்லாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட் பூட்டப்பட்டுள்ளதால் மார்க்கெட்டிற்கு வந்த சரக்கு லாரிகள் சாலைகளில் அணிவகுத்து நின்றது.
இந்த தீ விபத்து தொடர்பாக குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.65,480-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,560-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,235-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,880-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,560
25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480
24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720
23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
22-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-03-2025- ஒரு கிராம் ரூ.111
25-03-2025- ஒரு கிராம் ரூ.110
24-03-2025- ஒரு கிராம் ரூ.110
23-03-2025- ஒரு கிராம் ரூ.110
22-03-2025- ஒரு கிராம் ரூ.110
- பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
- உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி திருபுவனை கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் திறப்பதிற்கான அனுமதி பெற புதுவை நகர அமைப்பு குழுமத்தில் ஒருவர் விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நகர அமைப்பு உதவியாளர் குமாரவேலு, பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கால தாமதமாக அளித்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த பெட்ரோல் பங்க்கு அனுமதிக்கு விண்ணப்பித்தவர் லஞ்சம் வாங்கியது குறித்து ஆதாரத்துடன், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.
இது தொடர்பான அறிக்கை தலைமை செயலருக்கு அனுப்பட்டது. தலைமை செயலர் உத்தரவுப்படி, குமாரவேலு சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில், வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கோடை காலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மதுரை வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07191), வரும் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து புறப்பட்டு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரெயில் (07192), வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரையிலும் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரும் சிறப்பு ரெயில் (07189), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, ஈரோட்டில் இருந்து புறப்பட்டு நாந்தேட் செல்லும் சிறப்பு ரெயில் (07190), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* காச்சிக்குடாவில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் சிறப்பு ரெயில் (07435), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு காச்சிக்குடா செல்லும் சிறப்பு ரெயில் (07436), வரும் ஏப்ரல் 6-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
* ஐதராபாத் சார்லபள்ளியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வரும் சிறப்பு ரெயில் (07601), வரும் ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரையிலும் (வியாழக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில் (07602), வரும் ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






