என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tanker trucks"

    • இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
    • கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது.

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ேராலியம் ஆகியவை மூலம் வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு வினியோகத்தில் ஈடுபட்டுள்ளன.


    சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் பாட்டலிங் மையங்களுக்கு ஏற்றி செல்லும் பணியில் நாடு முழுவதும் 24 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் 2025-30-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    புதிய ஒப்பந்தத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளை குறைவாக கேட்டு இருப்பதோடு 21 டன் எடை கொண்ட கியாஸ் மற்றும் 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்கிற விதியை அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    மேலும் 2 அச்சு லாரிகளை குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் , வாடகை நிர்ணயம் செய்வதில் பழைய முறையையே கடை பிடிக்க வேண்டும் என கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் எண்ணை நிறுவனங்கள் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை ஏற்பது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சந்தித்து சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்பிறகும் புதிய கட்டுப்பாடுகளில் பெரிய தளர்வு ஏதும் அறிவிக்கப்பட வில்லை. இதனால் விரக்தி அடைந்த கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    அதன்படி தென் மண்டல அளவில் இயக்கப்படும் 6 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளையும் ஆங்காங்கே நிறுத்தி இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் கிடங்குகளில் இருந்து கியாஸ் சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் பிளாண்ட்களுக்கு கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் விரைவில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. உடனடியாக இதில் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் செந்தில் கூறியதாவது-

    புதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 2 அச்சு லாரிகள் புறக்கணிப்பு, கிளீனர் இல்லையென்றால் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அபராதம், சிறிய விபத்து என்றாலும் 2 ஆண்டுகளுக்கு தடை என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இடம் பெற்றிருந்தன.

    மேலும் 3 அச்சு லாரிகளுக்கு 25 சதவீதம், 2 அச்சு லாரிகளுக்கு 75 சதவீதம் தொழில் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது மட்டும் எங்களுக்கு சாதகமாக உள்ளது. புதிய டேங்கர் லாரிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதற்கு 60 லட்சம் வரை செலவாகும்.

    இதன் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறியும் கடந்த 24-ந் தேதி வரை விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. புதிய ஒப்பந்தத்தால் நாங்கள் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும், இதனால் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

    இதனால் எண்ணை நிறுவனங்களின் தென் மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை, கொச்சி, பாலக்காடு, விசாகப்பட்டினம், மங்களூரு, எடியூர், சரளப்பள்ளி, தூத்துக்குடி உள்பட 10 இடங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து லாரியில் கியாஸ் எடுத்து செல்லும் பணியில் ஈடுபடும் 6 ஆயிரம் டேங்கர் லாரிகளும் இன்று காலை முதல் இயங்கவில்லை.

    இதில் தினசரி 1500 கியாஸ் டேங்கர் லாரிகளில் கியாஸ் எடுத்து செல்லும் பணிகள் முடங்கி உள்ளதால் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் வரை வேலை நிறுத்தம் தொடரும். இந்த வேலை நிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    இதற்கிடையே இன்று மாலை மும்பையில் இருந்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கோவைக்கு வருகிறார்கள். அவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறோம், அதில் சுமூக முடிவு ஏற்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம், போராட்டம் தொடர்ந்தால் ஒரு வாரத்திற்கு பிறகு கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும்.

    இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.
    • கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரையில் தனியார் கியாஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பைப் மூலம் கியாஸ் கொண்டுவரப்பட்டு சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு டேங்கரில் கியாஸ் நிரப்பிய லாரி ஒன்று மீஞ்சூர்-மணலி நெடுஞ்சாலையில் வெள்ளிவாயில் சாவடி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரியில் உள்ள டேங்கரில்இருந்து திடீரென கியாஸ் கசிந்து வெளியேறத் தொடங்கியது.

    சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு இறங்கினார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

    மேலும் வாகனங்கள் திரும்பி செல்ல முடியாததால் அதில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். மேலும் லாரியில் இருந்து வெளியேறிய கியாசை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.மேலும் அத்திப்பட்டு, மணலி புதுநகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு கேஸ் நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்கள் டேங்கரில் இருந்து கியாஸ்கசிவு ஏற்பட்ட பகுதியை சரிசெய்தனர். இதன்பின்னர் கியாஸ் ஏற்றிய லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதனால் மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ×