என் மலர்
இந்தியா
- வழக்குகளை அவசரமாக பட்டியலிட குறிப்பிடுவதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
- அசாதாரண சூழ்நிலைகளில் வாய்மொழி கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும்- தலைமை நீதிபதி.
இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நேற்று பதவியேற்றார். சூர்யா காந்த் அடுத்த 15 மாதங்கள் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவர் பிப்ரவரி 9, 2027 அன்று 65 வயதை எட்டும்போது பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.
பதவி ஏற்ற முதல் நாளிலேயே 17 வழக்குகளை விசாரித்துள்ளார். அத்துடன், வழக்குகளை வாய் மொழியாக தெரிவிக்கக்கூடாது. வழக்குகளை அவசரமாக பட்டியலிட குறிப்பிடுவதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மரண தண்டனை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் வாய்மொழி கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
நேற்று ஜனாதிபதி மாளிகையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, முறையாக தலைமை நீதிபதியாக பொறுப்பெற்றுக் கொண்டார். அதன்பின் மதியம் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். இரண்டு மணி நேரத்தில் 17 வழக்குகளை விசாரித்தார்.
மதியம் உச்சநீதிமன்றம் வருகை தந்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பாரம்பரிய நீதிமன்ற அறை எண் ஒன்றில் நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு தலைமை தாங்கினார்.
- காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது.
- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து காங்கிரஸ் போய்விட்டது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 202 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.
இதைப்போன்று கர்நாடகாவிலும் பாஜக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்க காத்திருக்கிறார்கள் என பாஜக தலைவர் ஆர். அசோகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆர். அசோகா கூறியதாவது:-
காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது. இந்த மோசமான காங்கிரஸ் போக வேண்டும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து அது போய்விட்டது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்கியதுபோன்று, கர்நாடகாவிலும் அதிகாரம் வழங்க மக்கள் தயாராகிவிட்டனர். கர்நாடக மாநில மக்கள் பட்டனை அழுத்த தயாரிவிட்டனர். தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அசோகா தெரிவித்தார்.
கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருந்துள்ள நிலையில், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.
- பிரிவு 370 ரத்து, பேச்சு சுதந்திரம் மற்றும் குடியுரிமை உரிமைகள் குறித்த தீர்ப்புகளில் அவர் பங்கு வகித்தார்.
- பாதுகாப்பு என்ற போர்வையில் எதையும் செய்ய அரசாங்கத்திற்கு சுதந்திர அனுமதி கிடைக்காது.
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நேற்று பதவியேற்றார். சூர்யா காந்த் அடுத்த 15 மாதங்கள் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவர் பிப்ரவரி 9, 2027 அன்று 65 வயதை எட்டும்போது பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.
அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிப்ரவரி 10, 1962 அன்று பிறந்த சூர்யகாந்த், ஒரு சிறிய நகரத்தில் ஒரு வழக்கறிஞராக தொடங்கி நாட்டின் நீதித்துறையின் மிக உயர்ந்த பதவியை எட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளில் ஒரு பகுதியாக சூர்யகாந்த் இருந்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பணியாற்றிய காலத்தில், பிரிவு 370 ரத்து, பேச்சு சுதந்திரம் மற்றும் குடியுரிமை உரிமைகள் குறித்த தீர்ப்புகளில் அவர் பங்கு வகித்தார். காலனிய கால தேசத்துரோகச் சட்டத்தை நிறுத்தி வைத்த அமர்வில் அவர் ஒரு பகுதியாக இருந்தார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் உட்பட வழக்கறிஞர் சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட பெருமையும் நீதிபதி சூர்யகாந்துக்கு உண்டு.
1967 ஆம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக தீர்ப்பை ரத்து செய்த ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் ஒரு பகுதியாக இருந்தார். இந்த உத்தரவு பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய வழி வகுத்தது.
நாட்டின் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உளவு பார்க்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கை விசாரித்த அமர்வில் நீதிபதி சூர்யகாந்தும் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் சட்டவிரோத கண்காணிப்பு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சைபர் நிபுணர்கள் குழுவை அமைத்தார்.
அந்த வழக்கில், "பாதுகாப்பு என்ற போர்வையில் எதையும் செய்ய அரசாங்கத்திற்கு சுதந்திர அனுமதி கிடைக்காது" என்று அவர் அங்கம் வகித்த அமர்வு தெரிவித்த கூற்று பிரபலமானது.
2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு முடிவை உறுதி செய்த அமர்வில் காந்த் இருந்தார் .
2020 ஆம் ஆண்டில், அவரது அமர்வு காலவரையற்ற இணைய இடைநிறுத்தம் அனுமதிக்கப்படாது என்றும் இணைய அணுகல் பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதி என்றும் தீர்ப்பளித்தது.
2023 ஆம் ஆண்டு ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்த தீர்ப்பில் வழங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்தார்.
டிசம்பர் 2023 இல், 370வது பிரிவை ரத்து செய்து ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியதை உறுதி செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் காந்த் ஒரு பகுதியாக இருந்தார்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் (OROP) திட்டத்தை உறுதி செய்த தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்தார்.
2024 நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் முழு தேர்வையும் ரத்து செய்ய மறுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்த உத்தரவிட்டார்.
கடைசியாக பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிடுமாறு நீதிபதி சூர்யகாந்த் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முன் நவம்பர் 22 நிகழ்வில் பேசிய சூர்யகாந்த், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 90,000 வழக்குகளை குறைப்பதே தலைமை நீதிபதியாக இருக்கும் காலத்தில் தனக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய வழக்குகள் உள்ளன.
- 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.
கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.
பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்
இந்நிலையில் பீகாரில் பொறுப்பேற்ற 24 அமைச்சர்களில் 11 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை வெளியிட்டுள்ளது.
24 அமைச்சர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
24 அமைச்சர்களில் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் மற்றும் தேர்தல் முறைகேடுகள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
இதில் பாஜகவைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஜேடியுவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும், லோக் சக்தியின் 2 அமைச்சர்களும், இந்துஸ்தானி அவாமியின் ஒரு அமைச்சரும் குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
அதேபோல் 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
- மகன்கள் ஒரு வருடம் முன் வீட்டை விட்டு விரட்டியதால் ஜான்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
- இறுதிச் சடங்குகள் செய்யாமலேயே, உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில், வீட்டில் திருமணம் நடப்பதால் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தாயின் உடலை 4 நாட்கள் ப்ரீசரில் வைத்திருக்க மகன் அறிவுறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரியான பூவல் குப்தா என்பவரின் மனைவி ஷோபா தேவி, நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
மகன்கள் ஒரு வருடம் முன் வீட்டை விட்டு விரட்டியதால் ஜான்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அவர் வசித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, முதியோர் இல்ல ஊழியர்கள் ஷோபா தேவியின் மகன்களுக்குத் தகவல் தெரிவித்தனர். முதலில் இளைய மகனிடம் பேசியபோது, அவர் தனது அண்ணனிடம் கலந்தாலோசித்த பிறகு பதிலளிப்பதாகக் கூறியுள்ளார்.
பின்னர் அவர் முதியோர் இல்லத்தை திரும்ப அழைத்து, "இப்போது வீட்டில் திருமணம் நடக்கிறது. இந்த நேரத்தில் உடலைக் கொண்டு வந்தால் துரதிர்ஷ்டவசமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு நான்கு நாட்கள் கழித்து வந்து உடலை எடுத்துக்கொள்கிறேன். அதுவரை உடலை டீப் ஃப்ரீசரில் வைத்திருங்கள்" என்று அண்ணன் சொல்ல சொன்னதாக கூறியுள்ளார்.
முதியோர் இல்லத்தின் ஊழியர்கள் நேரடியாக மூத்த மகனிடம் பேசியபோதும், அப்போதும் அதையே கூறியுள்ளார்.
இதையடுத்து, ஊழியர்கள் மற்ற உறவினர்களைத் தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் ஷோபா தேவியின் மகன்களை சம்மதிக்க வைத்து உடலை பெற்று வந்தனர்.
ஆனால், மூத்த மகன் தாய்க்கு இறுதிச் சடங்குகள் செய்யாமலேயே, உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளனர்.
- ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
- மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தில் ( SIR ) அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி , நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ( BLOக்கள் ) கொல்கத்தாவின் தெருக்களில் இன்று பேரணி நடத்தினர் .
BLOக்கள் , மத்திய கொல்கத்தாவின் கல்லூரித் தெருவிலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர். BLO அதிகார ரக்ஷா குழுவின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.
இந்த மாத தொடக்கத்தில் SIR தொடங்கப்பட்டதிலிருந்து மேற்குவங்கத்தில் மூன்று பெண் BLOக்கள் இறந்துள்ளனர். அவர்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக ஆளும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலும் BLOக்கள் தற்கொலை மற்றும் திடீர் மரணங்கள் பதிவாகி உள்ளது.
கடந்த வாரம், ஜெய்ப்பூரில் 45 வயதான முகேஷ் ஜாங்கிட் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். SIR தொடங்கியதிலிருந்து அவர் தொடர்ந்து ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஹரி ஓம் பர்வா (34), கடந்த வாரம் மயங்கி விழுந்து இறந்தார். SIR நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய BLO அதிகார ரக்ஷா குழுவின் அதிகாரி, "குறுகிய காலத்தில் பணியை முடிக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற பணிகள் பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும்," என்று கூறினார்.
தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்காவிட்டால் அல்லது BLOக்கள் எழுப்பிய கவலைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், தொடர்ச்சியான போராட்டத்தை தொடங்குவோம் என்று BLO குழு எச்சரித்துள்ளது.
இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, BLOக்கள் மனிததன்மையற்று அதிக வேலை வாங்கப்படுவதாக கூறி SIR செயல்முறையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த செயல்முறையால் இதுவரை நாடு முழுவதும் 16 BLOக்கள் இறந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம்" என்று தெரிவித்துள்ளார்.
- மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் அதிமுக இழந்துள்ளது.
- அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும்.
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் அரங்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
அப்போது பேசிய அவர்," டிசம்பர் 15ம் தேதி அன்று நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்.
தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு, தொடர் தோல்வி ஆகியவற்றால் மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் அதிமுக இழந்துள்ளது" என்றார்.
மேலும், அதிமுக ஒன்றிணையாவிட்டால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும் என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
- எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை நான் ஏற்றுக் கொள்வேன்.
- டி.கே. சிவக்குமாரும் ஏற்றுக்கொள்வார்- சித்தராமையா.
கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையே டி.கே. சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர். நேற்று 6 எம்.எல்.ஏ.-க்கள் டெல்லி சென்றுள்ளனர். இவர்கள் மேலிட தலைவர்களை சந்தித்து டி.கே. சிவக்குமாரை முதலமைச்சராக்க வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது.
முதலமைச்சர் மாற்றம் பேச்சு வலுத்துவரும் வரும் நிலையில் சித்தராமையாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறும்போது "நாங்கள் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம். அவர்கள் நான் தொடர்ந்து முதலமைச்சராக தொடர வேண்டும் என்றால், நான் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பேன். இறுதியாக எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை நான் ஏற்றுக் கொள்வேன். டி.கே. சிவக்குமாரும் ஏற்றுக்கொள்வார்" என்றார்.
இந்த நிலையில் சித்தராமையாவின் ஸ்டேட்மென்ட் எங்களுக்கு வேத வாக்கு போன்றது என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
சித்தராமையா ஒருமுறை சொன்னால் அது எங்களுக்கு வேத வாக்கு. சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் சொத்தது. அரசில் அவரது வழிகாட்டுதலின்படி எல்லோரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
- கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்திருந்தேன்.
- புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்!
வடசென்னை வளர்ச்சிக்கு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மருத்துவமனைகள், முதல்வர் படைப்பகங்கள், குடியிருப்புகள், புதிய பேருந்து நிலையங்கள் என #வடசென்னை-யின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து நாம் ஆற்றி வரும் பணிகளில் மற்றுமொரு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்!
1967-இல் முத்தமிழறிஞர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்திருந்தேன். இன்று மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். விரைந்து பணிகளை முடித்த அமைச்சர் சேகர்பாபு, @CMDA_Official-க்குப் பாராட்டுகள்!
"வடக்கும் தெற்கும் ஒருசேர வளரும் சென்னையின் சீரான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு உறுதிசெய்யும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குரூப் 1 முதன்மை தேர்வில் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- பத்து தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற வீதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
குரூப் 1 முதன்மை தேர்வில் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
பத்து தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற வீதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கிராப் மூலம் பதிவு செய்யப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
- ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு.
- தனியார் குடியிருப்பு வளாகங்கள் உள்ளே வாக்குச் சாவடிகள் அமைக்க பரிந்துரை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கு வங்கத்திலும் நடைபெற்று வருகிறது. மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்முறையை கடுமையாக கண்டித்து வருகிறது.
இருந்தபோதிலும், நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதால் தேர்தல் ஆணையம் பணியை தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு விசயங்கள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு மம்தா பானர்ஜி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். "மாநில தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு SIR தொடர்பான பணிகள் அல்லது தேர்தல் தொடர்பான பணிகளுக்கு ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் பங்க்ளா சகாயத கேந்திரா (BSK) ஸ்டாஃப்களை ஈடுபடுத்தக் கூடாது என கடிதம் எழுதியுள்ளார்.
அதே நேரத்தில், தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் ஒரு வருட காலத்திற்கு 1,000 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் 50 மென்பொருள் உருவாக்குநர்களை பணியமர்த்துவதற்கான முன்மொழிவு கோரிக்கையை (RfP) வெளியிட்டுள்ளது. மேலும், தனியார் குடியிருப்பு வளாகங்கள் உள்ளே வாக்குச் சாவடிகள் அமைக்க பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக தலையிட வேண்டும் என மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
- 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு.
- முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
பவாரியா கொள்ளையர்களால் அதிமுக எம்எல்ஏ சுதர்சமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், குற்றவாளிகள் மூவருக்கான தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்களுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொன்ற பவாரியா கொள்ளையர்கள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக்கிற்கு வாழ்நாள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் ஜெகதீஷ், அசோகிற்கு தலா 4 ஆயுள் தண்டனையும், குற்றவாளி ராகேஷிற்கு 5 ஆயுள் தண்டனையும் நீதிமன்றம் விதித்தது.
ஜெகதீஷ் மற்றும் அசோகிற்கு தலா ரூ.40,000, ராஷே்க்கு ரூ.50,000 அபராதம் விதித்து சென்னை முதன்னை நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
மேலும், மூன்று பேருக்கும் மூன்று பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டில் கும்மிடப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் நுழைந்து அவரைக் கொன்று கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் தானாகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து எம்எல்ஏ சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
சுதர்சனத்தை கொன்று அவரது மனைவி, மகன்களை தாக்கி 62 சவரவன் தங்க நகைகளை பவாரியா கொள்ளையர்கள் திருடி சென்றனர். சுதர்சனத்தை கொன்ற பவாரியா கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
பிடிபட்ட 9 பேரில் 3 பெண்கள் ஜாமினில் தலைமறைவான நிலையில் 2 பேர் சிறையில் உயிரிழந்தனர். இதில், மீதமுள்ள 4 பேரில் மூன்று பேரான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதர்சனத்தை கொன்று கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் பின்னணியை வைத்து உருவானதே தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.






