என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • ஸ்மிருதி மந்தனா 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
    • பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3 இடம் சரிந்து 7வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான வீராங்கனைகள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது.

    அதன்படி, பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (735 புள்ளி) 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் பிரண்ட் (731 புள்ளி) 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (725 புள்ளி) உள்ளார்.

    ஹர்மன்பிரீத் கவுர் 12வது இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் மாற்றமில்லை. இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (795 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (725 புள்ளி) 2ம் இடத்திலும், மேஹன் ஸ்கட் (691 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவின் தீப்தி சர்மா 3 இடங்கள் சரிந்து 7வது இடத்தில் உள்ளார்.

    ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா தொடர்ந்து 4வது இடத்திலேயே நீடிக்கிறார்.

    • எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.
    • நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கிச் செல்கிறது என்றார்.

    மும்பை:

    காங்கிரஸ் எம்.பி.யான பிரணிதி ஷிண்டே மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை இன்று சந்தித்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடியின் பிறந்தநாள் எங்களுக்கு கருப்பு நாள்.

    நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கி செல்கிறது. எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகிறது.

    எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன.

    பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மோடிக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

    விவசாயிகளின் போராட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

    பாகிஸ்தானுடன் சண்டை போடும் அதே வேளையில், அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறோம்.

    இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

    சோலாப்பூர் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.

    கடந்த 4 ஆண்டாக சோலாப்பூர் நகராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது ஜனநாயகப் படுகொலை என தெரிவித்தார்.

    • வடகொரிய மக்களின் வாழ்க்கை நிலை வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே உள்ளது.
    • வடகொரியாவின் அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.

    இந்நிலையில், Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளது.

    சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தைத் தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தலங்களுக்கு வடகொரியா உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதனையடுத்து சுற்றுலா தலங்களில் வேலை பார்க்கும் வழிகாட்டிகள் 3 மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
    • மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சமையல் கியாசுக்கு மத்திய அரசு 5 சதவீதம்தான் வரி விதிக்கிறது. ஆனால், மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், 'சமையல் கியாஸ் ஜி.எஸ்.டி. வரியின் கீழ் வருகிறது. மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது. எனவே வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிராஜ் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • சிறந்த வீராங்கனைக்கான விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர் காஸ்ட் வென்றுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வென்றார்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ், ஐந்து போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.

    அதேபோல், சிறந்த வீராங்கனைக்கான விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர் காஸ்ட் வென்றுள்ளார்.

    • வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது.
    • இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

    2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம் வழங்கியது.

    வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்ததால் இணையதளம் முடங்கியது. இதனால் இன்றுவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழக்கமாக ஜூலை 31, 2025 அன்று முடிவடையும்.

    ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அவர்களால் மட்டுமே அந்த நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியும்.
    • இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருக்கும்.

    ரெயில் டிக்கெட் முன்பதிவு முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மோசடியைத் தடுக்கவும் ரெயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

    அக்டோபர் 1, 2025 முதல், பொது முன்பதிவு திறந்த முதல் 15 நிமிடங்களில் டிக்கெட் பதிவு செய்வோர் ஆதாரை கட்டாயமாக இணைந்திருக்க வேண்டும். அவர்களால் மட்டுமே அந்த இடைப்பட்ட நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியும்.

    தற்போது, தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமாகும். இப்போது இந்தக் கொள்கை பொது ஒதுக்கீட்டு டிக்கெட்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக, நவம்பர் 15 ஆம் தேதி பயணிக்க பொதிகை எக்ஸ்பிரஸில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பினால், விதிகளின்படி, முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே, அதாவது செப்டம்பர் 16 காலை 8 மணிக்கு தொடங்கும். புதிய விதியின்படி, ஆதார் சரிபார்ப்பை முடித்த IRCTC பயனர்கள் மட்டுமே 8.00 முதல் 8:15 வரை, அதாவது முதல் 15 நிமிடங்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

    ஆதார் இணைப்பு இல்லாத வாடிக்கையாளர்கள் அந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது. இந்த நேரத்தில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், சரிபார்க்கப்பட்ட பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
    • 2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.

    எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    தேவாவின் இசையில் படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி; கட்டிப்புடிடா, ரேக்கவீனா, ஒரு பொண்ணு ஒண்ணு, மேகம் கருக்குது உட்பட ஆறு பாடல்களும் ஹிட் ஆகின.

    2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக குஷி அமைந்தது.

    இந்நிலையில் குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

    • அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
    • அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் விலாசம் இல்லாமல் தொலைந்து விடுவார்கள்.

    சென்னை வடபழனியில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்பு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

    மாநிலத்திற்கு 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கொண்டு வந்து அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது.

    திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் 67 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு சிறந்த உயர்கல்வி வழங்கப்பட்டது.

    அதிமுக ஆட்சியில் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் தான் உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.

    சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, டிஜிபி அலுவலகம் முன் ஒருவர் தாக்கப்படுகிறார். அவர் மீதே வழக்கு தொடரப்படுகிறது.

    திமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களும் தாக்கப்படுகிறார்கள்.

    முன்னாள் டிஜிபி போதைப்பொருள் ஒழிப்பதற்கு 2.0, 3.0 என பெயர் வைத்துவிட்டு கடைசியில் ஓ போட்டு சென்றுவிட்டார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார் என்பது கண்டுபிடிக்கப்படும்.

    திமுக ஆட்சி அமைந்த உடன் முறையாக விசாரித்து டாஸ்மாக் ஊழல் முழுமையாக வெளிக்கொண்டு வரப்படும்.

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என செய்திகள் வந்துள்ளது. ஆனால், ரூ.40,000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது.

    அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்பான திட்டங்களை திமுக அரசு கைவிட்டு விட்டார்கள். தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், அம்மா உணவு போன்ற திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.

    அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு நிறுத்திய திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

    அதிமுக ஆட்சியில் ரூ.60,000 கோடி முதலீடுகளை ஈர்த்தோம். மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்றாரா? அல்லது தொழில் தொடங்க சென்றாரா? என வரும் காலங்களில் தெரியும்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜகதான்; அந்த நன்றியை மறக்காமல், நன்றியோடு இருக்கிறோம்.

    ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். அதிமுகவை இம்மியளவு கூட யாராலும் அழிக்க முடியாது.

    கட்சி அலுவலகத்தை உடைத்தவர்கள் மற்றும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களை மீண்டும் கட்சியில் எப்படி சேர்க்க முடியும்?

    அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் நடு ரோட்டில் தான் நிற்பார்கள். அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் விலாசம் இல்லாமல் தொலைந்து விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 'கூலி' திரைப்படத்தை பற்றி அமீர் கான் விமர்சித்து பேசியதாக தகவல்.
    • அமீர் கான் தான் செய்யும் அனைத்து வேலைகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர்.

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தை பற்றி அமீர் கான் விமர்சித்து பேசியதாக வெளியாகும் நேர்காணல் முற்றிலும் தவறானது என அமீர் கான் தரப்பு சார்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அமீர் கான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அமீர் கான் கூலி திரைப்படம் குறித்து எந்த நேர்காணலும் வழங்கவில்லை என்பதை திட்டவட்டமாகக் கூற விரும்புகிறது.

    சமூக ஊடகங்களில் ஒரு போலி நேர்காணல் வலம் வருகிறது. அதில் அமீர் கான் கூலி திரைப்படத்தை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அது ஒரு போலி நேர்காணல். 

    அமீர் கான் தான் செய்யும் அனைத்து வேலைகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர். மேலும், அவர் தனது படைப்புகளைப் பற்றி எளிதாகப் பேசுவதில்லை.

    உண்மை என்னவென்றால், அமீர் கான் இன்னும் கூலி படத்தைப் பார்க்கவில்லை. அமீர் கான் படத்தைப் பார்க்கும் போது தான் உடன் இருக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆசைப்படுகிறார். ஆனால், ஒரு சில காரணங்களால், அது இன்னும் நடக்கவில்லை.

    கூலியின் வெற்றி, சம்பந்தப்பட்ட அனைவரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கடின உழைப்பைப் பற்றி நிறைய பேசுகிறது.

    அந்த நேர்காணலும் அத்தகைய செய்திகளும் தவறானவை என்பதை நினைவில் கொள்ளவும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடைசி நேரத்தில் குஜராத் 36-38 என்ற கணக்கில் பின்தங்கிய இருந்தது.
    • அதன்பின் 37-40 எனத் தோல்வியடைந்தது.

    புரோ கபடி லீக் 2025 சீசனின் 33ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்டத்தில் ஹரியானா அணி 25-20 என 5 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றது.

    2ஆவது பாதி நேர ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் அபாரமாக விளையாடினர். இதனால் போட்டி பரபரப்பாக சென்றது. இரு அணிகளுக்கும் இடையில் 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. கடைசி நேரத்தில் ஹரியானா ரெய்டர்கள் ஷவம் பட்டாரே, ஸ்ரீதர் கடம், வினய் ஆகியோர் தலா ஒரு புள்ளி எடுக்க 40-37 என ஹரியானா வெற்றி பெற்றது. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் குஜராத் 17-15 என முன்னிலைப் பெற்றும் பயனில்லை.

    • 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
    • 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல்.

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

    மாணவர்கள் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருந்தால் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மாணவர்கள் 5 பாடப்பிரிவுடன் கூடுதலாக 2 பிரிவுகளில் பாடங்களை கற்று தேர்வில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், 12ம் வகுப்பில் கூடுதலாக ஒரு பாடப்பிரிவை இணைத்து படிக்க வேண்டும் எனபுதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டது.

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×