என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • உத்தர பிரதேசத்தில் யானை ஒன்றை ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • யானை திருடு போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ராஞ்சி:

    சாதாரணமாக ஒரு பொருளைத் திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய அளவிலேயே சிறிய பொருட்களை மட்டுமே திருடுவார்கள். ஆனால் தற்போது ஒட்டகம், பஸ் போன்ற உருவத்தில் பெரியவற்றையும் திருடிச் செல்கிறார்கள் பலே திருடர்கள்.

    இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் மிகப் பெரிய யானையையே ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:

    உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் நரேந்திர குமார் சுக்லா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஜெயமதி என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அங்குள்ள பலாமு மாவட்டத்தின் சுகூரில் யானையுடன் அவர் தங்கி இருந்தார்.

    இந்நிலையில், அந்த யானை மாயமானது. இதுதொடர்பாக மேதினி நகர் போலீசில் நரேந்திர குமார் சுக்லா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யானையை தேடி வந்தனர்.

    பீகார் மாநிலம் சப்ராவில் ஒரு கும்பல் பெண் யானை ஒன்றை ரூ.27 லட்சத்துக்கு விற்றதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த யானையை மீட்டனர். அதே நேரம் யானையை திருடி விற்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு உள்நாட்டு கலவரம் வெடித்தது.
    • பிரதமர் அஷ்ரப் கனியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு உள்நாட்டு கலவரம் வெடித்தது. இதில் பிரதமர் அஷ்ரப் கனியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர்.

    இதைத் தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கடுமையான கட்டுப்பாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதும் இணைய சேவை திடீரென முடங்கியது. இதனால் அங்கு இணைய சேவையை பயன்படுத்தும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    தலைநகர் காபூலில் இணைய சேவை வழங்கும் நிறுவனம் சார்பில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள ஒளியியல் இழைகள் (ஆப்டிகல் பைபர் ஒயர்கள்) சேதப்படுத்தப்பட்டதே இதற்கு காரணம் என முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆளும் தலிபான் அரசின் தலையீடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
    • நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, செக் நாட்டின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜாஸ்மின் பவுலினி 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-7 (4-7), 6-1 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • அனைத்து மாநிலங்களுக்கும் வரிபகிர்வு நிதியாக ரூ.1,01,603 கோடியை மத்திய அரசு விடுவிப்பு.
    • ம.பி-க்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வாக ரூ.4,144 கோடியை மத்திய அரசு விடுவித்து அறிவித்துள்ளது.

    பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் வரிபகிர்வு நிதியாக ரூ.1,01,603 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

    அதிகபட்சமாக பாஜக ஆளும் உபிக்கு ரூ.18,227 கோடி, பீகாருக்கு ரூ.10,219 கோடி, ம.பி-க்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தெலங்கானாவிற்கு ரூ.2136 கோடி, கர்நாடகாவிற்கு 3,705 கோடி, கேரளாவிற்கு 1956 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சமாக கோவாவிற்கு ரூ.392 கோடி விடுக்கப்பட்டுள்ளது.

    • மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது
    • இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.

    ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன் என்று நக்வி தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய அவர், "கோப்பையை பெற BCCI ஆர்வமாக இருந்தால் ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்" என்று கூறினார்.

    அதே சமயம் பிசிசிஐ-யிடம் நான் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலுக்கு நக்வி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

    தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை திரைப்படத்தை இயக்கினார்.

    பிறகு, தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இப்படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

    கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

    இப்படம் வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேரே இஷ்க் மே படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது
    • கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

    இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பிலிப்பைன்ஸ் உடன் இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து மிகவும் வருத்தமடைந்தேன். காயடைந்தோர் குணமடைய வேண்டுகிறேன். இந்த கடினமான நேரத்தில் பிலிப்பைன்ஸ் உடன் இந்தியா துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.

    • ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
    • படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதி.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

    இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    மாத இறுதி நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் விற்பனையானது.

    இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,890-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880

    29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160

    28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    26-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-09-2025- ஒரு கிராம் ரூ.161

    29-09-2025- ஒரு கிராம் ரூ.160

    28-09-2025- ஒரு கிராம் ரூ.159

    27-09-2025- ஒரு கிராம் ரூ.159

    26-09-2025- ஒரு கிராம் ரூ.153

    • இவ்விரு அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 100 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • 23-ல் இந்தியாவும், 30-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. 47 போட்டி ‘டிரா ’ ஆனது.

    ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.

    ஆசிய கோப்பை முடிந்த அடுத்த 4 நாட்களில் இந்திய வீரர்கள் இந்த தொடரில் களம் காணுகிறார்கள். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    கடந்த ஜூன், ஜூலையில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் 4 சதம் உள்பட 754 ரன்கள் குவித்து வியப்பூட்டினார். ரவீந்திர ஜடேஜா, லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிம் அந்த தொடரில் கலக்கினர். தற்போது உள்ளூர் சூழலில் ஆடுவதால் இந்தியாவின் கை இன்னும் வலுவாக ஓங்கி நிற்கும். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லாமல் 2011-ம் ஆண்டுக்கு பிறகு உள்நாட்டில் இந்தியா விளையாடப்போகும் முதல் டெஸ்ட் இதுவாகும். அதனால் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்ட சுழல் ஜாலங்கள் மீது கவனம் திரும்பி இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் முழுமையாக ஆடிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதலாவது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 9 டெஸ்ட் தொடரை வரிசையாக கைப்பற்றி இருக்கும் இந்திய அணி, அந்த ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்புடன் காத்திருக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இரு மாதங்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் உதை வாங்கியது. இதில் ஒரு இன்னிங்சில் வெறும் 27 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்றது.

    இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி கண்டு 23 ஆண்டுகள் ஆகி விட்டது. கடைசியாக 2002-ம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது. இதே போல் இந்திய மண்ணில் எடுத்துக் கொண்டால், அந்த அணி டெஸ்டில் வென்று 31 ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கு தொடரை கைப்பற்றி 42 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்படி எல்லாமே வெஸ்ட் இண்டீசுக்கு எதிர்மறையான சாதனைகள் தெரிந்தாலும் கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தி வரலாறு படைத்ததை உத்வேகமாக எடுத்துக் கொண்டு சாதிக்க முயற்சிப்போம் என வெஸ்ட் இண்டீசின் பயிற்சியாளர் டேரன் சேமி கூறியுள்ளார். ஆடுகளம் சுழலுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால், அந்த அணி ஜோமல் வாரிகன், கேரி பியார் ஆகியோரை தான் மலைபோல் நம்பி உள்ளது. பேட்டிங்கில் தேஜ்நரின் சந்தர்பால், பிரன்டன் கிங், ஷாய் ஹோப், அலிக் அதானேஸ் உள்ளிட்டோர் கணிசமாக ரன் எடுத்தால் சவால் அளிக்கலாம்.

    இவ்விரு அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 100 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 23-ல் இந்தியாவும், 30-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. 47 போட்டி 'டிரா ' ஆனது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 46.67 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள இந்தியா தற்போதைய தொடரை முழுமையாக வென்று புள்ளி எண்ணிக்கையை உயர்த்தும் நோக்குடன் தயாராகி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி, முகமது சிராஜ், பும்ரா அல்லது பிரசித் கிருஷ்ணா.

    வெஸ்ட் இண்டீஸ்: தேஜ்நரின் சந்தர்பால், ஜான் கேம்ப்பெல் அல்லது கெவ்லோன் ஆண்டர்சன், அலிக் அதானேஸ், பிரன்டன் கிங், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிகன், கேரி பியார், ஜோகன் லெய்ன் அல்லது ஆண்டர்சன் பிலிப்ஸ்.

    காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கடந்த மாதம் ரூ.1,738-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.

    அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 16 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.1,754.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,738-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது. 

    • சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.
    • குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.

    நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர்.

    இந்நிலையில் தசரா (தசேன்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரியாக தேர்தெடுக்கப்பட்டார்.

    பருவமடைந்தவுடன், குமாரி ஒரு சாதாரண மனிதராகக் கருதப்படுவார் என்பது மரபு.

    எனவே 2017 ஆம் ஆண்டு குமாரியாகப் பதவியேற்ற முன்னாள் குமாரி திரிஷ்ணா சாக்யா (வயது 11) பேருவமடைந்ததன் காரணமாக ஆர்யதாரா சாக்யா புதிய குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    புதிய குமாரி ஆர்யதாரா சாக்யா காத்மாண்டுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    ஆர்யதாரா சாக்யாவின் தந்தை, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது தெய்வமாக கனவு கண்டதாகவும், தனது மகள் சிறப்புமிக்கவராக இருப்பார் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

    குமாரி தேர்வு செய்யப்படும் முறை

    2 முதல் 4 வயதுக்குள் உள்ள சிறுமிகள் குமாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    குமாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு பல கட்ட சோதனைகள் நடைபெறும். குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதைச் சோதனை செய்வர்.

    இறுதியாக சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.

    குமாரிகள் அரண்மனைக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்கப்படும்.

    குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.

    குமாரியின் கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லப்படுவார்.

    ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்கும். குராமரியாக இருந்து ஓய்வுபெற்ற பெண்களை திருமணம் செய்பவர் விரைவில் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்வர். 

    ×