என் மலர்
ஆசிரியர் தேர்வு
- அந்தப் பெண் சுடிதார் மற்றும் சால்வை அணிந்திருந்தார். அவரது கணவர் டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்திருந்தார்.
- குறைந்த உடையில் வந்த பலரை உள்ளே அனுமதித்ததாக தம்பதியினர் குற்றம்சாட்டினர்.
டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்திய பாணி உடை அணிந்து கணவருடன் சென்ற பெண் உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
டெல்லியின் பிதாம்புரா மெட்ரோ நிலையம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் இருந்து வீடியோவை நேரடியாக ஒளிபரப்பிய தம்பதியினர், ஹோட்டல் நிர்வாகம் தங்களை அவமதித்ததாகக் குற்றம் சாட்டினர்.
அந்தப் பெண் சுடிதார் மற்றும் சால்வை அணிந்திருந்தார். அவரது கணவர் டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்திருந்தார்.
அந்த உடை பொருத்தமற்றது என்றும், உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது என்றும் உணவக மேலாளர் தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனம் இந்திய கலாச்சாரத்தையும் ஒரு இந்தியப் பெண்ணையும் அவமதித்ததாகவும், அதே நேரத்தில் குறைந்த உடையில் வந்த பலரை உள்ளே அனுமதித்ததாகவும் தம்பதியினர் குற்றம்சாட்டினர்.
சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இதன் பின்னர் ஓட்டல் முதலாளி மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கிடையே இதுகுறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
- வன்முறையை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் அது நன்மை செய்வதாகத் தோன்றினால், அந்த நன்மை தற்காலிகமானது. அது செய்யும் தீமை நிரந்தரமானது.
- ஒருபோதும் திரும்பி வராத ஒரு குழந்தைக்காக எந்த பெற்றோரும் வலியில் காத்திருக்கக்கூடாது.
சுதந்திரத்திற்கான போராட்டத்தின் இரண்டு உலகளாவிய சின்னங்களான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் மகாத்மா காந்தியின் பேரக்குழந்தைகள் காசாவுக்காக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
மார்ட்டின் லூதர் கிங் III ஒரு பிரபலமான அமெரிக்க சிவில் உரிமை செயல்பாட்டாளர். அவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் கொரெட்டா ஸ்காட் கிங்கின் மூத்த மகன். ராஜ்மோகன் காந்தி ஒரு வரலாற்றாசிரியர். அவரது தந்தைவழி தாத்தா மகாத்மா காந்தி.
இந்த மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், இருவரும் காசாவில் அமைதிக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

இடது-மார்ட்டின் லூதர் கிங் III, வலது-ராஜ்மோகன் காந்தி
"இன்று நாங்கள் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் மகாத்மா காந்தியின் வழித்தோன்றல்களாக மட்டுமல்லாமல், காசாவில் நடந்து வரும் மனிதாபிமான பேரழிவால் காயமடைந்த ஒரு மனித குடும்பத்தின் உறுப்பினர்களாகவும் பேசுகிறோம்.
வன்முறை, இடப்பெயர்ச்சி மற்றும் வறுமையின் துயர புயலில் சிக்கிய அப்பாவி பொதுமக்களின், குறிப்பாககாசா குழந்தைகளின் அழுகை எங்கள் இதயங்களை கனமாக்குகிறது - மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தியின் வாரிசுகள் கூட்டறிக்கை
மேலும், பணயக்கைதிகளாக உள்ள அன்புக்குரியவர்களின் இஸ்ரேலிய குடும்பங்களின் ஆழ்ந்த வலியை நாங்கள் உணர்கிறோம். அவர்களின் வலி எங்களுடையது.
அந்த வேதனையில், மகாத்மா காந்தியின் வார்த்தைகளை நாம் மறந்துவிடக் கூடாது: 'வன்முறையை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் அது நன்மை செய்வதாகத் தோன்றினால், அந்த நன்மை தற்காலிகமானது. அது செய்யும் தீமை நிரந்தரமானது'
தொடர்ச்சியான வன்முறை நீதியைக் கொண்டுவராது. அது துன்பத்தை மட்டுமே அதிகரிக்கிறது' - இந்த உண்மையை நாங்கள் எதிரொலிக்கிறோம். மேலும் இரத்தக்களரிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க அவசரமாகவும் அன்புடனும் அழைப்பு விடுக்கிறோம்.
அனைத்து பணயக்கைதிகளும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் - உணவு, தண்ணீர், மருந்து - காசா மக்களை தடையின்றி அல்லது தாமதமின்றி சென்றடைய வேண்டும்.
காசாவின் குழந்தைகள் எங்கள் குழந்தைகள். பயத்திலும் அமைதியிலும் வைக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் எங்கள் குடும்பம்.
எந்தக் குழந்தையும் பசியை அறியக்கூடாது. ஒருபோதும் திரும்பி வராத ஒரு குழந்தைக்காக எந்த பெற்றோரும் வலியில் காத்திருக்கக்கூடாது. இந்தக் கொடுங்கனவு விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.
சர்வதேச சமூகம் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது. உலக தலைவர்கள் சிவில் சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும் . நல்லிணக்கத்திற்கான பாதை நீண்டதாக இருக்கும். ஆனால் அது இரக்கம் மற்றும் ஒழுக்கத்தின் முதல் படிகளுடன் தொடங்குகிறது. பிரிவினை, வெறுப்பு மற்றும் விரக்தியைத் தாண்டி நாம் உயர முடியும்.
உறுதியான இதயங்களுடனும் திறந்த கரங்களுடனும், ஒரு நியாயமான அமைதி அவசியம் மட்டுமல்ல, சாத்தியமானதும் ஆகும்" என்று தெரிவித்துள்ளனர்.
- சீரான தொடக்கம் கிடைத்த போதிலும் கருண் நாயர் ஒரு அரை சதம் மட்டும் அடித்தார்.
- இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது யூ டியூப் சேனலில் பேசியதாவது:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் மோசமாக செயல்பட்டதாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு தொடர்ந்து சீரான தொடக்கம் கிடைத்த போதிலும், ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் அவருக்கு 2-வது வாய்ப்பு கொடுத்துள்ளது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
குறிப்பாக, லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் போட்டியை வென்று தர அற்புதமான வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் அவரால் அதை செய்ய முடியவில்லை. நல்ல அடித்தளம் அமைத்து ஆடும்போது, திடீரென தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்து விடுகிறார். ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் பவுன்சர் பந்து அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. அது அவரை பதற்றம் அடைய செய்ததைப் பார்க்க முடிந்தது. அதனால் அவரது செயல்பாட்டுக்கு 10க்கு 4 மார்க் வழங்குகிறேன்.
இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன். அவர் சில இடங்களில் ஏற்றம் காண வேண்டும் என்றாலும் திறமையான வீரராக தெரிகிறார். அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் அவர் அனைத்து டெஸ்டிலும் விளையாடி இருந்தால், விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கும்.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், உங்களது அணி தோல்வியை தழுவும்போது, அணியில் இருந்து கழற்றிவிடப்படுவீர்கள். மீண்டும் அணிக்கு திரும்புவீர்கள் என அனைத்தும் நடக்கும். ஆனால் அதன் பிறகு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது கடினம். ஆனால் ஒரு வீரராக தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால், நம்மால் நிறைய சாதிக்க முடியும் என அவர் நினைப்–பார். எனக்கு எப்போதும் முன்வரிசையில் களம் இறங்கும் இடதுகை பேட்ஸ்மேன்களைப் பிடிக்கும். சிறப்பாக பேட்டிங் செய்வதற்கான திறன் சுதர்சனிடம் இருக்கிறது. அதனால் தான் அவருக்கு 5 மார்க் கொடுத்தேன் என தெரிவித்தார்.
- மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- இந்நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று வானொலியில் மக்களிடம் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியே மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் நிகழ்ச்சி. பிரதமர் மோடியின் பேச்சு நாடு முழுவதும் மக்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மத்திய அரசுக்கு ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மாநிலங்களவையில் மத்திய மந்திரி எல்.முருகன் எழுத்துப்பூர்வமான அளித்துள்ள பதில் மூலம் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
மன் கீ பாத் நிகழ்ச்சி கூடுதல் செலவுகள் இல்லாமல், தற்போதுள்ள வசதிகளைப் பயன்படுத்தி ஆகாஷ்வாணியால் தயாரிக்கப்படுகிறது என மந்திரி எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- தி ஹண்ட்ரட் தொடரில் ரஷித் கான் இந்த சாதனையை படைத்தார்.
- லண்டன் அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - ஓவல் இன்விசிபில் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த லண்டன் ஸ்பிரிட் 18.4 ஓவரில் 80 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக டர்னர் 21 ரன்கள் அடித்தார்.
ஓவல் சார்பில் ரஷித் கான், சாம் கர்ரன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்தது.
இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். இவர் 478 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அதன்பின், இலக்கை நோக்கி ஆடிய ஓவல் அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- அண்ணா, காமராஜர் போன்றோர் நாட்டு மக்களுக்காக உழைப்பைக் கொடுத்தவர்கள்.
- மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
விருதுநகர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சாத்தூரை அடுத்து விருதுநகர் பாவாலி சாலையில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் எழுச்சியுரை நிகழ்த்தினர். அப்போது அவர் பேசியதாவது:
விருதுநகர் மண், கர்மவீரர் காமராஜர் பிறந்த மண். இந்திய அளவில் இந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருந்தலைவர். இந்த மண்ணில் பேசுவது எனது பாக்கியம். அவர் எந்தக் கட்சி என்றாலும், நல்லது செய்தால் மக்களிடம் புகழ் நீடிக்கும். எம்ஜிஆர், அம்மா இன்றும் வாழ்வதற்குக் காரணம் மக்களுக்குச் சேவை செய்தார்கள்.
அண்ணா, காமராஜர் போன்றோர் நாட்டு மக்களுக்காக உழைப்பைக் கொடுத்தவர்கள். மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவரை திமுக எம்.பி. ஒருவர் அவதூறாகப் பேசியது கண்டனத்துக்குரியது. அதை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கக் கூட இல்ல. அப்படிப்பட்ட கட்சி தமிழ்நாட்டுக்குத் தேவையா? தன்னலமற்ற தலைவர்கள் யாரையும் கொச்சைப்படுத்துவது சரியல்ல. திமுகவுக்கு அப்படிப்பட்ட பண்பு கிடையாது. அதனால் காற்றில் கரைவது போல திமுக கரையும்.
எம்ஜிஆர், அம்மா ஆட்சிக் காலத்திலும் புதிய கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். இந்த விருதுநகரிலும் 400 கோடி மதிப்பீட்டில் ஒன்று கொடுத்தோம். இந்திய வரலாறிலேயே ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி வேறு எங்கும் கொண்டுவரப்படவில்லை. இதைப் பெருமையோடு சொல்கிறோம். 50 மாத திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவரமுடியவில்லை. அதுக்குத் திறமை வேண்டும். திறமையில்லாத முதல்வர் ஆள்கிறார்.
67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 5 பொறியியல் சுல்லூரி, வேளாண்மை கல்லூரி என ஏராளமான கல்லூரிகளைத் திறந்தோம். அதனால், இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2011ல் 100க்கு 32 பேர் உயர்கல்வி படித்தார்கள். இன்று நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெருமையை அதிமுக உருவாக்கிக் கொடுத்தது.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இரண்டு முறை உலக முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. திமுக அரசும் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். எவ்வளவு முதலீடுகள் ஈர்த்தீர்கள், எவ்வளவு வேலைவாய்ப்பு என்று வெள்ளை அறிக்கை கேட்டும் கிடைக்கவில்லை.
விலைவாசி உயராமல் அதிமுக பார்த்துக்கொண்டது. எந்த மாநிலத்தில் விலை குறைவாக விற்கிறதோ, அங்கு வாங்கி இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்தோம். கொரோனா காலத்தில் கூட விலைவாசி ஏறாமல பார்த்துக்கொண்டோம். விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். ரேஷன் கடையில் விலையில்லாமல் பொருட்கள் கொடுத்தோம்.
நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றது திமுக, அதன் ரகசியம் தெரியும் என்று உதயநிதி சொன்னார். எல்லாம் பொய். நீட் தேர்வை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று முதல்வர் கையை விரித்துவிட்டார். இதைத்தான் நாங்களும் குறிப்பிட்டோம். ஆனால் பொய்யைத் திருப்பித் திருப்பி சொல்லி ஆட்சி அமைத்த பிறகு ரத்துசெய்ய முடியாது என்று பொய் சொல்லும் முதல்வர் தேவையா?
சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. சகோதரர்களின் சண்டையைத் தடுக்கச் சென்ற காவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டார். சப் இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலை. கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். காவலருக்கே இந்த நிலை என்றால் மக்கள் பாதுகாப்பை சிந்தித்துப் பாருங்கள். போதைக்கு அடிமையாகி என்ன செய்வதென்று தெரியாமல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 20 நாளில் 11 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது எவ்வளவு பெரிய கேவலம்.? இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? பலமுறை எச்சரிக்கை கொடுத்தேன். ஸ்டாலின் கண்டுகொள்ளவே இல்லை. ஏனென்றால் விற்பனை செய்வதே திமுககாரர்கள். திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினே இதை சொல்லிவிட்டார். கட்சிக்காரர் செய்வதை அவரே ஒப்புகொண்டார். நாங்கள் சொல்லலை, அவர் சொன்னதையே திருப்பிச் சொல்கிறேன்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக்கடையில் நகை வாங்குவதுபோல வீசி நகையை திருடிவிட்டுச் சென்றனர். பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை. நான் உண்மை மட்டுமே பேசுகிறேன். ஸ்டாலினைப் பொறுத்தவரை குடும்பத்தினர் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக கம்பெனி நடத்துகிறார். மக்களை பார்க்கவில்லை, குடும்பத்தைப் பற்றித்தான் கவலைப்படுகிறார். நாட்டு மக்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு தில்லு இல்லை. விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு தொழிற்சாலைக்கு கட்டணம் உயர்த்திவிட்டதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
விருதுநகரில் மண் வீடாக இருந்து காலியிடமான பகுதிக்கு சொத்து வரி 56-ல் இருந்து 1,107 ரூபாயாக உயர்த்திவிட்டனர். வீடு கட்ட அனுமதி வாங்க அதிமுக ஆட்சியில் 1000 சதுரடிக்கு 37,000 ரூபாயாக இருந்தது. இன்று 74,000 ரூபாய் கட்ட வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. எனவே இப்போது யாராலும் வீடு கட்ட முடியாது. அதனால் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்தோம், பொங்கல் தொகுப்பு கொடுத்தோம். விலையில்லா வேட்டி, சேலை கொடுத்தோம். திமுக ஆட்சியில் கொடுக்கவில்லை, அதிமுக ஆட்சி அமைந்ததும் வேட்டி, சேலை கொடுக்கப்படும். அதேபோல தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை கொடுப்போம். சந்தோஷமாகக் கொண்டாடலாம்.
உங்களுடன் ஸ்டாலின் என்று 46 பிரச்சனைகள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார். அப்படியென்றால் கடந்த நான்காண்டுகள் என்ன செய்தீர்கள். இன்னும் 7 மாதத்தில் என்ன செய்வார்கள்? தேர்தல் வருவதால் நாடகம் ஆடுறார். இதேபோல் தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது புகார் பெட்டி திட்டம் கொண்டுவந்து ஏமாற்றினார். ஏற்கனவே போட்ட மனுக்கள் என்ன ஆனது? உங்கள் ஆசையைத் தூண்டி வாக்குகள் பெறுவதற்கு தந்திரமாக செயல்படுகிறார்.
விருதுநகர் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெயில்வே சாலை கொடுத்தோம். கூட்டுக்குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டினோம், அதை திமுக செயல்படுத்தவில்லை. தார்சாலைகள், காமராஜருக்கு மணிமண்டபம், விருதுநகரில் காமராஜர் படித்த பள்ளியில் கல்வி திருவிழா, சங்கரலிங்க நாடார் மணிமண்டபம் என பல திட்டங்கள் நிறைவேற்றினோம்
இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின் என தெரிவித்தார்.
- உடல்நலக் குறைவால் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று உயர்நீதிமன்றத்திற்கு நேரில் வரவில்லை.
- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு நேரில் வந்தார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது. தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை இன்று விசாரித்தார்.
அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "5 நிமிடத்தில் இந்த வழக்கை என்னால் முடித்துவிட முடியும். இருப்பினும் இருதரப்பு நலன் கருதி இன்று மாலை 5.30 மணிக்கு அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருவரையும் நீதிபதி அறைக்கு அழைத்து வரமுடியுமா? வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவரிடம் தனித்தனியாகப் பேசப் போகிறேன்; உடனடியாக ராமதாசை புறப்படச் சொல்லுங்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு வருகை புரிந்து அவர் முன்பு ஆஜர் ஆனார். ஆனால் உடல்நலக் குறைவால் ராமதாஸ் இன்று உயர்நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை. இருப்பினும் காணொலி வாயிலாக நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் பேச்சுவார்த்தையில் ராமதாஸ் கலந்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அன்புமணி தலைமையில் நாளை நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டார்.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
- கேரளாவில் 1 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடைப்பெறுகிறது. படத்தின் ப்ரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50000 மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர் வாசலில் வரிசையில் நின்று அடித்து பிடித்து டிக்கெட் புக் செய்து வருகின்றனர். 1 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேல் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டிலும் டிக்கெட் முன்பதிவு இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- எனது நண்பர் அதிபர் புதினுடன் மிகவும் சிறப்பான மற்றும் விரிவான உரையாடலை நடத்தினேன்.
- உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
ரஷியாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார்
இதற்கிடையே ரஷியா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் புதின் இந்தியா வர உள்ள தகவலை நேற்று உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் இன்று, ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதுதொடர்பாக மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், எனது நண்பர் அதிபர் புதினுடன் மிகவும் சிறப்பான மற்றும் விரிவான உரையாடலை நடத்தினேன்.
உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். எங்கள் இருதரப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம்.
மேலும் இந்தியா-ரஷியா சிறப்பு வாய்ந்த மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமரை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.
- சீண்டிப் பார்ப்பவர்களுக்கு 1 அங்குலம் இடம் கொடுத்தால் அவர்கள் 1 மைல் தூரம் செல்வார்கள்
ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்று சீனா அதிகாரபூர்வ அழைப்பு விடுத்துள்ளது.
2020 ஆம் ஆண்டு இந்திய சீன வீரர்கள் மோதிக்கொண்ட கல்வான் மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
SCO உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வரும் இந்தியப் பிரதமரை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பேசுகையில், "இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனா தியான்ஜினில் SCO உச்சிமாநாட்டை நடத்தும். SCO தியான்ஜின் உச்சிமாநாட்டிற்காக சீனா, பிரதமர் மோடியை வரவேற்கிறது.
அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியுடன், தியான்ஜின் உச்சிமாநாடு ஒற்றுமை, நட்பு மற்றும் பலனளிக்கும் முடிவுகளின் சங்கமமாக இருக்கும்.
SCO அதிக ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் உயர்தர வளர்ச்சியின் புதிய கட்டத்தில் நுழையும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தை சீனா விமர்சித்தது. "நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு 1 அங்குலம் இடம் கொடுத்தால் அவர்கள் 1 மைல் தூரம் செல்வார்கள்" என இந்தியாவுக்கான சீன தூதர் Xu Feihong தெரிவித்திருந்தார்.
- ஒரு மாதிரி தொந்தரவு செய்யும் கதாபாத்திரத்தில் படம் முழுக்க என்னை ‘டார்ச்சர்' செய்வார்.
- ஒரு கட்டத்தில் இனி அவருடன் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்தேன்.
கொஞ்சல் பேச்சு, துருதுரு நடிப்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை லைலா தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய அவர், கார்த்தியின் 'சர்தார்' படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நுழைந்தார். விஜய்யுடன் 'தி கோட்' படத்தில் நடித்திருந்தார்.
இந்தநிலையில் லைலா குறித்து நடிகர் ஷாம் பகிர்ந்த விஷயம் வைரலாகி வருகிறது.

அவர் கூறுகையில், எனக்கு பிடிக்காத நடிகை லைலா தான் என்று சொல்லலாம். 'உள்ளம் கேட்குதே' படத்தில் ஒரு மாதிரி தொந்தரவு செய்யும் கதாபாத்திரத்தில் படம் முழுக்க என்னை 'டார்ச்சர்' செய்வார்.
இதனால் ஒரு கட்டத்தில் இனி அவருடன் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால் நிஜத்தில் அவர் மிகவும் ஜாலியான ஆள். நல்ல மனம் கொண்ட நடிகை என்றார்.
- பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்க உள்ளார்.
- கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.
சென்னை:
சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. சந்திக்க தயாராகி வருகிறது. இதையொட்டி கட்சிக்கு புதிய நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கட்சியின் சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டம் வரும் 10-ந்தேதி தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்க உள்ளார். மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.
மாநிலத்தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள், தேசிய தலைவர்களின் தமிழக வருகை மற்றும் சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணி ஆற்றுவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது.






