search icon
என் மலர்tooltip icon
    • சீமை கருவேல மரங்கள் 150 அடிக்கு கீழ் சென்று தண்ணீரை உறிஞ்சுவதால் ஏரிகளில் தண்ணீர் நிற்பதில்லை.
    • கோடை வெயில் கடுமையாக இருப்பதால் அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள தண்ணீர் வற்றி போய்விட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மலைக் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். மேலும் இம்மாவட்டத்தில் விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது.

    இம்மாவட்டத்தில் வாணியாறு அணை, தொப்பையாறு அணை, பஞ்சப்பள்ளி அணை, நாகவதி அணை, சின்னாறு அணை, உள்ளிட்ட ஏழு அணைகள் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் போதிய பருவ மழை பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும், ஏரி, குளங்களும் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. கடுமையான வறட்சி நிலவியது.

    இது குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பிரதாபன் கூறும்போது:-

    தருமபுரி மாவட்டத்தில் சிறு குரு விவசாயிகள் அதைச் சார்ந்த விவசாய தொழிலாளர்கள் என 70 சதவீதம் பேர் உள்ளனர்.

    விவசாயத்திற்கு மானாவாரி பூமி அதிகமாக உள்ளது. இங்கு ஏரிகளில் வரும் மழை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு நிலத்தடிநீராக கிணறுகள் மூலம் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். நேரடி பாசனமும் பெற்று வருகின்றனர்.

    ஆனால் தருமபுரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டாக பெய்த பருவமழையை சரியாக தேக்கி வைக்கவில்லை. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 78 ஏரிகளும் உள்ளாட்சித் துறைக்கு கீழ் வரக்கூடிய 456 ஏரிகள் குளம் குட்டைகள் எல்லாம் தண்ணீர் தேங்கவில்லை.

    இதற்கு காரணம் ஏரி அதற்கு வரும் கால்வாய்கள் அனைத்திலும் சீம கருவேல மரங்கள் கடந்த 20 ஆண்டுகளாக வளர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது.

    இதற்கிடையே குடிமராமத் பணிகள் செய்தாலும் உடனடியாக மீண்டும் வளர்ந்து விடுகிறது. இந்த சீமை கருவேல மரங்கள் 150 அடிக்கு கீழ் சென்று தண்ணீரை உறிஞ்சுவதால் ஏரிகளில் தண்ணீர் நிற்பதில்லை. அதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    கோடை வெயில் கடுமையாக இருப்பதால் அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள தண்ணீர் வற்றி போய்விட்டது. பல்வேறு நீர்த்தேக்கங்களில் கூட தண்ணீர் குறையும் சூழ்நிலை உள்ளது.

    அதனால் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் சீமை கருவேல மரங்களை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே வரும் பருவ மழையில் விவசாயிகள் பயனடையும் வகையில் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எனக்கு பள்ளி பருவம் முதலே காதல் இருந்தது.
    • திருமணத்திற்கு பிறகும், எனக்கு அவருடன் கள்ளக்காதல் இருந்தது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த 19.03.2023 அன்று எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது43) என்பது தெரியவந்தது.

    ரியல் எஸ்டேட் அதிபரான பிரகாசுக்கு, லட்சுமி (36) என்ற மனைவி உள்ளார். இதையடுத்து அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்பது போல கூறிய லட்சுமி பின்னர் போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் தனது கணவரை தானே அடித்துக்கொலை செய்ததாகவும், தனது கள்ளக்காதலன் சின்னராஜ் உதவியுடன் உடலை சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு சென்று எரித்ததையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து லட்சுமி, அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான லட்சுமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் பிரகாசுக்கும் திருமணம் நடந்தது. எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் போதையில் வந்து அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    கடந்த 18.03.2023 அன்றும் குடித்து விட்டு என்னிடம் வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். அப்போது நான் வீட்டில் இருந்த கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். அதில் அவர் இறந்தார்.

    இதையடுத்து உடலை அங்கிருந்து மறைக்க முடிவு செய்தேன். இதற்காக எனது கள்ளக்காதலன் சின்னராஜூக்கு (38) போன் செய்தேன். சின்னராஜ் சரக்கு வேன் டிரைவர் ஆவார். அவருடன் எனக்கு பள்ளி பருவம் முதலே காதல் இருந்தது.

    திருமணத்திற்கு பிறகும், எனக்கு அவருடன் கள்ளக்காதல் இருந்தது. உடலை எரித்தோம் நான் போன் செய்து அழைத்ததும் சின்னராஜ் எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் எனது கணவரின் உடலை அங்கிருந்து எடுத்து சரக்கு வாகனத்தில் போட்டு சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு வந்தோம். ஆள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்ததும் அங்கு உடலை கொண்டு சென்று தீ வைத்து எரித்து விட்டு வந்து விட்டோம்.

    உடலை எரித்ததால் போலீசார் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தோம். ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கைதான அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் லட்சுமியை சேலம் பெண்கள் சிறையிலும், சின்னராஜை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

    • 2-ம் கட்டமாக 4 ஏக்கர் அளவில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
    • கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், தடங்கம் உரக்கிடங்கில் பயோ மைனிங் சிஸ்டம் முறைப்படி குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரி நகராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தடங்கம் உரக்கிடங்கில் பயோ மைனிங் முறைப்படி குப்பைகளை பிரித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றது.

    சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் 40 வருடங்களுக்கு மேலாக கொட்டப்பட்டிருந்த கழிவுகளை முதல் கட்டமாக 5 ஏக்கர் அளவில் குப்பைகள் அகற்றப்பட்டது. 2-ம் கட்டமாக 4 ஏக்கர் அளவில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். மேலும், இந்த நிகழ்வினை அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காண்பித்து விவரங்களை தெரிந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும், இப்பணிகள் முடிந்தவுடன் மேற்கூறிய பகுதிகளில் அடர்வன காடுகள் உருவாக்கிட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    தமிழக அரசு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்கப்படுவதாகவும் அதை மாற்றி ஒரே விதமாக ஊதிய வழங்கக் கோரியும், 37 வருடங்களாக தினக்கூலியாக வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தர பணி வழங்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு உடனடியாக சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மேலும் கலையரசன், முருகன், முருகன், மாது, மாதேஷ், சக்திவேல், முருகன், நாகராஜ் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் சனத்குமார் நதியை தூய்மைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி நகர பகுதியை ஒட்டியுள்ள சனத்குமார் நதியின் ஆற்றுப்படுக்கை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தண்ணீர் செல்லும் பாதை முழுவதும் தடம் தெரியாமல் இருந்து வருகிறது.

    தற்போது இந்த நதியில் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    அதே போல் ஆற்று படுக்கையில் குப்பைகளை கொட்டுவதால் கழிவு நீர் தொட்டியாக மாறி நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, ஆறு மற்றும் குளங்களை தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் வத்தல்மலை என்ற மலையில் இருந்து தான் சனத்குமார் நதி உருவாகி வருகிறது.

    இந்த நதியில் இலளிகம், மாதேமங்கலம், அன்னசாகரம், அதியமான் கோட்டை, உள்ளிட்ட ஏரிகள் மற்றும் கோடிக்கரை வழியாக வருகின்ற தண்ணீர்தான் சனத்குமார் நதியாக செல்கிறது.

    தற்பொழுது சனத்குமார் நதி சாக்கடை கால்வாயாக மாறி உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் சனத்குமார் நதியை தூய்மைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி நகரப் பகுதியில் இருந்து செல்லும் சாக்கடை தண்ணீரையும், இலக்கியம்பட்டி பஞ்சாயத்தில் இருந்து வரும் சாக்கடை தண்ணீரையும் நேரடியாக சனத்குமார் நதியில் இணைத்துள்ளார்கள்.

    எனவே நகராட்சியும் பஞ்சாயத்து நிர்வாகமும் சாக்கடை கால்வாயில் வரும் கழிவு நீரை தனி கால்வாய் அமைத்து தூய்மைப்படுத்திய பின்னர் சனத்குமார் நதியில் விட வேண்டும்.

    சனத்குமார் நதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மனமுடைந்த காணப்பட்ட கோவிந்தன் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஏரிகரை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது50). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட கோவிந்தன் கடந்த 5-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கோவிந்தனின் உறவினர் மாது என்பவர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி வி.ஜ.பி. நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது64). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆரோக்கியசாமி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கண் ஆபேரேசன் செய்து வந்து வீட்டில் இருந்துவந்தார். இதன் காரணமாக அவருக்கு மேலும் உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது.

    இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் ஆண்ட்ரூஸ் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளியில் சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி இருப்பதும் தெரிந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி லெனின் குமார் மீது கடந்த மாதம் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சிறுமியின் பெற்றோர் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் அண்மையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஊருக்கு வந்த சிறுமியின் தாய், சிறுமியை டாக்டரிடம் அழைத்து சென்றார்.

    டாக்டர் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இது பற்றி சிறுமியிடம் விசாரித்தனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லெனின்குமார் என்கிற பார்த்திபன் (வயது 30). கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததுடன், இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி இருப்பதும் தெரிந்தது.

    லெனின்குமார் குன்னூரில் சிறை வார்டனாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் அரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி லெனின் குமார் மீது கடந்த மாதம் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.

    அதில் லெனின் குமாரின் உறவினர்கள் சிலர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். சிறுமி பலாத்காரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கில் லெனின்குமாரை கைது செய்ய வேண்டும். அவரை பணி நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    • தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
    • சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும், மாதத்தின் மூனறாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைதேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுய விவரத்துடன் கலந்து கொண்டு, பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 கடைகளில் கலப்பட டீத்தூள், சோப்புத்தூள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூளகிரி,

    மும்பையை சேர்ந்தவர் மணிமாறன். பிரபல தனியார் நிறுவன அதிகாரி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    அதில் பிரபல நிறுவனத்தின் பெயரில் கலப்பட டீத்தூள் மற்றும் சோப்புதூள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. சூளகிரி பகுதியில் 4 கடைகளில் கலப்பட டீத்தூள், சோப்புத்தூள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அதிகாரி மணிமாறன் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து, 4 கடைகளில் இருந்தும் ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள டீத்தூள், சோப்புத்தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

    இதுதொடர்பாக சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த கவுதம்ராஜ் (வயது24), சிவா (23), ஏனுசோனை முனிராஜ் (44), அட்டரகானப்பள்ளி நாகராஜ் (38) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 50 மாணவ-மாணவிகளுக்கு மலர் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் தோட்டக்கலை மற்றும் மலர்கள் சாகுபடி பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து இந்திய-இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தின் கீழ் தளியில் செயல்பட்டு வரும் கொய்மலர் மகத்துவ மையத்தில் ஓசூர் மற்றும் தளி சுற்றியுள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 50 மாணவ-மாணவிகளுக்கு மலர் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி கலந்து கொண்டு தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள், மலர்கள் சாகுபடி, உர மேலாண்மை, அலங்கார செடிகள் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்து பயிற்சி அளித்தார்.

    அப்போது மாணவ-மாணவிகள் தோட்டக்கலை மற்றும் மலர்கள் சாகுபடி பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தனர். இந்த பயிற்சியில் தோட்டக்கலை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கள்ள மதுபானங்களும் விற்பனை செய்யப்படுவதாக பாதிக்கப்படும் மற்றும் அடிமையாகி உள்ள குடிமகன்கள் தெரிவிக்கின்றனர்.
    • கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தை சீர்குலைக்கும் வகையில் இரவு, பகல் என எந்நேரமும் நடைபெற்று வருகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலையம் மற்றும் தொப்பூர் காவல் நிலையம் அதன் எல்லைக்குட்பட்ட இடங்களில் அதிகளவு கிராமப் பகுதிகளாகவே உள்ளன. இந்த இரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் 200-க்கும் மேற்பட்ட சந்துக்கடைகளும் செயல்பட்டு வந்தன.

    இந்நிலையில் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக பதிவேற்ற பின்பு அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த 73 சந்து கடைகள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது கிராம பகுதியில் சந்து கடைகள் மற்றும் கள்ளமதுபானம் இல்லாத பகுதியாக மாற்றிவிட்டார்.

    இந்நிலையில் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் சர்வ சாதாரணமா சந்து கடைகள் காலை முதல் இரவு முழுவதும் செயல்பட்டு வருகிறது.

    தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மானியதஹள்ளி, உம்மியம்பட்டி, சனி சந்தை உள்ளிட்ட மூன்று இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தாலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கிராமங்களில் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது.

    மேலும் அதிகாலை நேரங்களிலேயே விற்பனை செய்யப்படுவதால் கிராம பகுதியில் கூலி வேலைக்கு செல்பவர்கள் விவசாய பணியில் மேற்கொள்ளபவர்கள் அனைவரும் காலை நேரத்திலேயே மதுவை வாங்கி குடிக்க தொடங்கி மதுபானத்திற்கு அடிமையாகி விடுவதால் பணிக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு காலையிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு மாறியுள்ளனர்.

    மேலும் அதியமான் கோட்டை மற்றும் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு சில சந்து கடைகளில் மட்டும் அரசு மதுபான கடைகளில் விற்பனைக்கே வராத புதிய பெயர்களுடன் கள்ள மதுபானங்களும் விற்பனை செய்யப்படுவதாக பாதிக்கப்படும் மற்றும் அடிமையாகி உள்ள குடிமகன்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனால்தான் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சந்து கடைகளுக்கு மூடு விழா நடத்தப்பட்டுள்ளதாகவும் மதுபிரியர்கள் கூறுகின்றனர்.

    தமிழக அரசு கள்ளச்சாராயம் மற்றும் கள்ள மதுபானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இது போன்ற செயல்களும் தருமபுரி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொடர்ந்து கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தை சீர்குலைக்கும் வகையில் இரவு, பகல் என எந்நேரமும் நடைபெற்று வருகிறது. இவை தடுக்கப்படுமா முற்றிலும் ஒழிக்கப்படுமா என்பது பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சாலைகளில் தினம் தோறும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் அருந்துவதற்காக செல்கின்றன.
    • அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்துக்கொள்கின்றனர்.

    ஒகேனக்கல்,

    கோடை காலம் தொடங்கியிலிருந்து வனப்பகுதியில் வாழும் ஏராளமான வன உயிரினங்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களிலும் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள சாலைகளிலும் வலம் வருகின்றன.

    இந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் தினம் தோறும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் அருந்துவதற்காக செல்கின்றன. இதனிடையே பண்ணப்பட்டி காடு என்ற பகுதியில் வெளியேறிய ஒற்றை காட்டு யானை, சாலைகளில் நடந்து செல்வதால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்துக்கொள்கின்றனர்.

    இந்த ஆண் யானையை பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளை கடந்து செல்வதற்கு அச்சத்துடன் செல்லும் சூழல் ஏற்படுகின்றன.

    ×