search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
    X

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நார்த்தம்பட்டி ஏரியில் சீமை கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

    ஏரிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

    • சீமை கருவேல மரங்கள் 150 அடிக்கு கீழ் சென்று தண்ணீரை உறிஞ்சுவதால் ஏரிகளில் தண்ணீர் நிற்பதில்லை.
    • கோடை வெயில் கடுமையாக இருப்பதால் அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள தண்ணீர் வற்றி போய்விட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மலைக் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். மேலும் இம்மாவட்டத்தில் விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது.

    இம்மாவட்டத்தில் வாணியாறு அணை, தொப்பையாறு அணை, பஞ்சப்பள்ளி அணை, நாகவதி அணை, சின்னாறு அணை, உள்ளிட்ட ஏழு அணைகள் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் போதிய பருவ மழை பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும், ஏரி, குளங்களும் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. கடுமையான வறட்சி நிலவியது.

    இது குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பிரதாபன் கூறும்போது:-

    தருமபுரி மாவட்டத்தில் சிறு குரு விவசாயிகள் அதைச் சார்ந்த விவசாய தொழிலாளர்கள் என 70 சதவீதம் பேர் உள்ளனர்.

    விவசாயத்திற்கு மானாவாரி பூமி அதிகமாக உள்ளது. இங்கு ஏரிகளில் வரும் மழை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு நிலத்தடிநீராக கிணறுகள் மூலம் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். நேரடி பாசனமும் பெற்று வருகின்றனர்.

    ஆனால் தருமபுரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டாக பெய்த பருவமழையை சரியாக தேக்கி வைக்கவில்லை. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 78 ஏரிகளும் உள்ளாட்சித் துறைக்கு கீழ் வரக்கூடிய 456 ஏரிகள் குளம் குட்டைகள் எல்லாம் தண்ணீர் தேங்கவில்லை.

    இதற்கு காரணம் ஏரி அதற்கு வரும் கால்வாய்கள் அனைத்திலும் சீம கருவேல மரங்கள் கடந்த 20 ஆண்டுகளாக வளர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது.

    இதற்கிடையே குடிமராமத் பணிகள் செய்தாலும் உடனடியாக மீண்டும் வளர்ந்து விடுகிறது. இந்த சீமை கருவேல மரங்கள் 150 அடிக்கு கீழ் சென்று தண்ணீரை உறிஞ்சுவதால் ஏரிகளில் தண்ணீர் நிற்பதில்லை. அதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    கோடை வெயில் கடுமையாக இருப்பதால் அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள தண்ணீர் வற்றி போய்விட்டது. பல்வேறு நீர்த்தேக்கங்களில் கூட தண்ணீர் குறையும் சூழ்நிலை உள்ளது.

    அதனால் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் சீமை கருவேல மரங்களை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே வரும் பருவ மழையில் விவசாயிகள் பயனடையும் வகையில் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×