search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமை கருவேல மரங்கள்"

    • சின்னாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டது.
    • தண்ணீர் தேக்கத்தின் காரணமாக சீமை கருவேல மரங்கள் அழுகி உயிரிந்துள்ளன.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கொளகத்தூர் சோழவராயன் ஏரி 450 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த கன மழையால் சின்னாறு அணையில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது.

    இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் விவசாயமும் தற்போது செழிப்படைந்து உள்ளது. தண்ணீர் நிரம்புவதற்க்கு முன்பு ஏரியில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றபடாமல் இருந்தது. தற்போது தண்ணீர் தொடர் தேக்கத்தின் காரணமாக ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்கள் அனைத்தும் அழுகி உயிரிந்துள்ளன.இந்த மரங்கரளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • சீமை கருவேல மரங்கள் 150 அடிக்கு கீழ் சென்று தண்ணீரை உறிஞ்சுவதால் ஏரிகளில் தண்ணீர் நிற்பதில்லை.
    • கோடை வெயில் கடுமையாக இருப்பதால் அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள தண்ணீர் வற்றி போய்விட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மலைக் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். மேலும் இம்மாவட்டத்தில் விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது.

    இம்மாவட்டத்தில் வாணியாறு அணை, தொப்பையாறு அணை, பஞ்சப்பள்ளி அணை, நாகவதி அணை, சின்னாறு அணை, உள்ளிட்ட ஏழு அணைகள் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் போதிய பருவ மழை பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும், ஏரி, குளங்களும் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. கடுமையான வறட்சி நிலவியது.

    இது குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பிரதாபன் கூறும்போது:-

    தருமபுரி மாவட்டத்தில் சிறு குரு விவசாயிகள் அதைச் சார்ந்த விவசாய தொழிலாளர்கள் என 70 சதவீதம் பேர் உள்ளனர்.

    விவசாயத்திற்கு மானாவாரி பூமி அதிகமாக உள்ளது. இங்கு ஏரிகளில் வரும் மழை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு நிலத்தடிநீராக கிணறுகள் மூலம் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். நேரடி பாசனமும் பெற்று வருகின்றனர்.

    ஆனால் தருமபுரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டாக பெய்த பருவமழையை சரியாக தேக்கி வைக்கவில்லை. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 78 ஏரிகளும் உள்ளாட்சித் துறைக்கு கீழ் வரக்கூடிய 456 ஏரிகள் குளம் குட்டைகள் எல்லாம் தண்ணீர் தேங்கவில்லை.

    இதற்கு காரணம் ஏரி அதற்கு வரும் கால்வாய்கள் அனைத்திலும் சீம கருவேல மரங்கள் கடந்த 20 ஆண்டுகளாக வளர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது.

    இதற்கிடையே குடிமராமத் பணிகள் செய்தாலும் உடனடியாக மீண்டும் வளர்ந்து விடுகிறது. இந்த சீமை கருவேல மரங்கள் 150 அடிக்கு கீழ் சென்று தண்ணீரை உறிஞ்சுவதால் ஏரிகளில் தண்ணீர் நிற்பதில்லை. அதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    கோடை வெயில் கடுமையாக இருப்பதால் அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள தண்ணீர் வற்றி போய்விட்டது. பல்வேறு நீர்த்தேக்கங்களில் கூட தண்ணீர் குறையும் சூழ்நிலை உள்ளது.

    அதனால் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் சீமை கருவேல மரங்களை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே வரும் பருவ மழையில் விவசாயிகள் பயனடையும் வகையில் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரோட்டோரங்களில் அதிக அளவு வளர்ந்து மண் வளம், நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
    • சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை.

    உடுமலை:

    சீமை கருவேல மரங்களால் மண்ணுக்கும், நிலத்தடி நீர் மட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டு வந்தது.இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில் மண்ணுக்கு தீங்கு ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி குளம், குட்டைகள், நீர் நிலைகள் மற்றும் கிராமப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதே போல் ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம், அமராவதி மற்றும் உடுமலை வனச்சரக பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கும், வனப்பகுதி மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உடுமலை - சின்னாறு ரோடு மற்றும் உடுமலை - கல்லாபுரம் ரோடு பகுதிகளில் அதிக அளவு காணப்பட்டது.

    இம்மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் காணப்படுவதில்லை. வன எல்லை பகுதிகள் மற்றும் ரோட்டோரங்களில் அதிக அளவு வளர்ந்து மண் வளம், நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.மேலும் யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதோடு சீமைக்கருவேல மரக்காடுகளுக்கும், வழக்கமான புற்கள், செடி, கொடிகள் கூட முளைக்காமல் பசுமை இழந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.வனச்சூழல் காக்கும் வகையில் உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில் கடந்த 2020ம் ஆண்டு சிறப்பு நிதியின் கீழ் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது.

    உடுமலை - மூணாறு ரோட்டின் இரு பகுதிகளிலும் சுமார் 5 ஹெக்டர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றி சாய்க்கப்பட்டது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளதால் மரங்களை அகற்ற முடியாது. பறவைகள், நுண்ணுயிரினங்களின் பெருக்கத்திற்கு பயன் அளிக்கும் வகையில் மக்கும் வகையில் அப்படியே விடப்பட்டது. தொடர்ந்து சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில் மீண்டும் அமராவதி மற்றும் உடுமலை வனச்சரக பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. வனப்பகுதிகளை காக்கும் வகையில் சிறப்புத்திட்டமான கேம்பா திட்டத்தின் கீழ், சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதிகளில் தலா 16 ஹெக்டர் என்ற அடிப்படையில் 32 ஹெக்டர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றும் பணி துவங்கியுள்ளது.உடுமலை வனச்சரக பகுதியில் உடுமலை- சின்னாறு ரோட்டிலுள்ள மரங்களும், அமராவதி வனச்சரகத்தில் அமராவதி நகர்- கல்லாபுரம் ரோட்டில் நவால் ஓடை மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள சீமைக்கருவேல மரங்கள், கனரக எந்திரங்கள் வாயிலாக அகற்றப்படுகிறது.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    வனப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் முதல் முறையாக ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில் கடந்த 2020ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளதால் மரங்களை வெட்டி வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லக்கூடாது. அதே பகுதியில் மக்கி, மண்ணுக்கு உரமாக்கப்படுகிறது.

    பரிசோதனை அடிப்படையில் முதற்கட்டமாக சிறப்பு நிதியின் கீழ் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில் கேம்பா திட்டத்தின் கீழ் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது என்றனர்.

    வன எல்லை பகுதிகளில் வனம் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காணப்பட்ட சீமை கருவேலன் மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.இம்மரங்கள் அகற்றப்படும் பகுதியில் வனத்துறை சார்பில் மீண்டும் மலைப்பகுதிகளில் காணப்படும் மரங்கள், மண்ணின் மரபு சார்ந்த நாட்டு மரக்கன்றுகள் மற்றும் வன விலங்குகளுக்கு உகந்த மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

    • சீமை கருவேலம் மரங்கள் மீண்டும் அடர்ந்தும், படர்ந்தும் காணப்படுகிறது.
    • பொதுமக்களின் குடிநீர் தேவைகள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    கிருஷ்ணாபுரம்,

    மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் தேங்கி நிற்கும் வகையில் நீர்நிலைகளான ஏரிகள், குளங்கள், குட்டைகள், தடுப்பணைகள் போன்றவற்றை அரசு ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் அருகிலுள்ள அணைகள், ஆறுகள் ஆகியவற்றின் வலது மற்றும் இடது புற வாய்க்கால்கள் மூலமும் நீர் நிலைகளுக்கு சில பகுதிகளில் தண்ணீர் விடும் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நீர் நிலைகளில் உள்ள நீர் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். இதனால் அந்தந்த நீர் நிலைகளில் சுற்றி உள்ள விவசாய நிலங்களும் அருகில் உள்ள கிராமங்களும் விவசாய பணிகளுக்கும், குடிநீருக்கும் போதிய அளவில் தண்ணீர் கிடைத்து வரும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேறி வருகின்ற சூழ்நிலை உள்ளது.

    இந்த நிலையில் நீர் நிலைகளில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் உள்ளதால் நீர் நிலையில் உள்ள நீரினை சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் உறிந்து கொள்கிறது.

    இதனால் நீர்நிலைகள் உள்ள நீர்கள் மிக வேகமாக குறைந்து விடும் சூழல் உள்ளதால் நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.

    இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நீர் நிலைகளில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. பல நீர்நிலைகளில் அகற்ற படாமலேயே உள்ளது.

    குறிப்பாக கிருஷ்ணாபுரத்தில் 141 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரிக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு தற்போதுதான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த பெரிய ஏரியில் சீமை கருவேல மரங்களும் கருவேல மரங்களும் அடர்ந்து காணப்படுவதால் ஏரியில் உள்ள தண்ணீர் வெகுவாக உறிஞ்சி உள்ளதால் கிருஷ்ணாபுரம் பெரிய ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

    மேலும் சீமை கருவேல மரங்களை அகற்றிய நீர்நிலைகளிலும் அதை முறையாக பராமரிக்காத காரணத்தால் மீண்டும் சீமை கருவேலம் மரங்கள் மீண்டும் அடர்ந்தும், படர்ந்தும் காணப்படுகிறது.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுவதால் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் நீர்நிலை பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
    • கடந்த ஓராண்டில் 1,175 டன் அளவிலான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்ப–ட்டு 177 கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது.

    வல்லம்:

    தஞ்சை அருகே வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக 34-வது ஆண்டுவிழா நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணி தலைமை வகித்தார். இதில் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தஞ்சை மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேலுசாமி வரவேற்றார். பதிவாளர் ஸ்ரீவித்யா நன்றி கூறினார்.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் பின்னர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் நீர்நிலை பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் மண்ணை மலடாக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ எடுக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என முதல்-அமைச்சர் தெளிவாக அறிவித்து–ள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க முடியாது.

    தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 1,175 டன் அளவிலான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்ப–ட்டுள்ளது. பிளாஸ்டிக் தயாரிக்கும் 177 கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது. ரூ.105 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தினால் தமிழகத்தில் 20 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு மக்களிடம் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வீரமணி அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா அல்லது முக்கோண தலைமையா என்று பேசுவதை தாண்டி, முதலில் தாங்கள் அடமானம் வைத்த பொருளை மீட்க வேண்டும். முதலில் தங்களுடைய தலைமையை உறுதி செய்யும் முன்பாக, தங்களுடைய கட்சியை மீட்க வேண்டும். அதுதான் தமிழ் மானம் விரும்பக் கூடியவர்களும், தாய் கழகத்துக்கும் உள்ள விருப்பமாகும் என்றார்.

    • சாத்தான்குளம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
    • முட் செடிகள் இல்லாத சாத்தான்குளமாக மாற்றிட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூ ராட்சியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது

    சாத்தான்குளம் பேரூராட்சியில் 15-வார்டு பகுதிகள் உள்ளன. அனைத்து பகுதியில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை மு ழுவதுமாக அழிக்கும் நோக்கத்தோடு சாத்தான்குளம் பேரூராட்சி நிர்வாகமும் - சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றமும் இணைந்து அதனை அகற்றும் பணிநேற்று தொடங் கப்பட்டது.

    முதற்கட்டமாக சாத்தான்குளம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது. இப்பணிக்கு சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜோசப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற தலைவர் மலையாண்டி பிரபு முன்னிலை வகித்தார்.

    முதற்கட்டமாக அரசுக்கு சொந்தமான இடங்களில் முட் செடிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. படிப்படியாக அனைத்து பகுதியிலும் முட்செடி களையும் அகற்றி முட் செடிகள் இல்லாத சாத்தான்குளமாக மாற்றிட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் நிர்வாகிகள் அய்யா குட்டி, முத்து இசக்கி, முத்துராமலிங்கம், வீரபுத்திரன், 11-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாராஜன், ஜமாத் தலைவர் மகதூம், சுகாதார மேற்பார்வையாளர் தங்கமுத்து ,சாத்தான்குளம் நகர தி.மு.க. துணைத் செயலாளர் மணிகண்டன், நகர பொருளாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×