search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மூச்சுக் காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை நிறுத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - கார்த்தி
    X

    மூச்சுக் காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை நிறுத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - கார்த்தி

    தூத்துக்குடியில் மூச்சுக் காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்தியிருக்கும் கொடூரத்தை மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்று நடிகர் கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை பதிவு செய்து வரும் நிலையில், நடிகர் கார்த்தி அவரது டுவிட்டர் பக்கத்தில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கார்த்தி கூறியிருப்பதாவது, 

    `ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதி வழியில் போராடிய அப்பாவி பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பது தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை தங்கள் வாழ்வை அழித்துவிடுமோ என்கிற அச்சத்தில் போராடிய மக்களுக்கு, அரசும் அதிகாரிகளும் உறுதுணையாகத்தான் நின்றிருக்க வேண்டும். ஆலைக் கழிவால் உயிருக்கு ஆபத்து எனப் போராடிய மக்களின் உயிரை அரசின் நடவடிக்கையே பறித்திருப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது; நேர்மையற்றது.



    எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல், தன்னெழுச்சியாகத் திரண்ட மக்களைக் கொஞ்சமும் ஈவு இரக்கமற்று சுட்டுக் கொன்றிருப்பது, நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது. மக்களைக் காப்பதுதானே காவல் துறையின் முதல் கடமை. அப்படியிருக்க, காவல் துறையினரே பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் குருவி சுடுவதுபோல் சுட்டு வீழ்த்தி இருப்பது எந்த விதத்தில் நியாயம்? மனசாட்சி கொண்ட எவருடைய மனதையும் உலுக்கக்கூடிய கொடூரத்தை அரசே செய்திருப்பது மன்னிக்க
    முடியாதது.

    மண்ணுக்கும் மக்களுக்குமான போராட்டத்தில் உயிர்விட்ட ஒவ்வொருவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன், சுற்றுச் சூழலைக் காக்க உயிர்விட்ட அத்தனை பேரையும் அவர்களுடைய தியாகத்தையும் நாளைய வரலாறு கல்வெட்டுக் கணக்காக நினைவில் வைத்திருக்கும். அதேநேரம் நல்ல மூச்சுக்
    காற்றுக்காகப் போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்தியிருக்கும் கொடூரத்தை மக்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள், நடந்த பெரும் துயரத்துக்கு அரசு உடனடியாக பொறுப்பேற்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட 
    மக்களின் துயரங்களுக்குத் தீர்வாக நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட அத்தனை பேரின் குடும்பங்களும் அந்தத் துயரத்திலிருந்து மீளவும், சிக்கலின்றி வாழவும் அரசு
    உடனடியாக அவர்களின் தேவை அறிந்து ஓடோடிப் போய் உதவ வேண்டும். போராடுவது மக்களின் அடிப்படை உரிமை. அதனை அடக்கவும் ஒடுக்கவும் காட்டுகிற அக்கறையை அதற்கான தீர்வுக்கு இனியாவது அரசு காட்ட வேண்டும். மக்கள் போராட்டக் களத்துக்கே வரக் கூடாது என அரசு நினைப்பது தவறு. மக்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கிற நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டுமே
     தவிர, அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுகிற அராஜகங்களை ஒருபோதும் செய்யக்கூடாது.' என்று கார்த்தி கூறியிருக்கிறார். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest  #Karthi
    Next Story
    ×