என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.
    • பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    அமெரிக்கக் கடற்படையின் ரகசியங்களைச் சீனாவிற்கு விற்ற 25 வயது முன்னாள் கடற்படை வீரர் ஜின்ச்சாவ் வெய் என்பவருக்கு அமெரிக்க மத்திய நீதிமன்றம் 200 மாதங்கள் (சுமார் 17 ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்துள்ளது.

    சான் டியாகோவில் உள்ள USS Essex என்ற போர்க்கப்பலில் பணியாற்றி வந்த வெய், 2022-ஆம் ஆண்டு முதல் சீன உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    வெய் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடுகளைச் சீனாவிற்கு வழங்கியுள்ளார்.

    இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.

    அமெரிக்கக் கடற்படையின் தாக்குதல் திறன்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து அனுப்பியுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சமாக வெய் பெற்றுள்ளார்.

    பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "வெய் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காகத் தனது சக வீரர்களின் உயிரையும், நாட்டின் பாதுகாப்பையும் பணயம் வைத்துள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றம்" என்று கூறி 200 மாதங்கள் சிறை தண்டனை விதித்தனர். 

    சீன வம்சாவளியை சேர்ந்த வெய்-க்கு 2022-ஆம் ஆண்டு அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தபோதுதான் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

    குடியுரிமை விண்ணப்பம் பரிசீலனையில் இருந்தபோதே அவர் ராணுவ ரசிகசியங்களை கசிய விட்டுள்ளார். வெய் போலவே  ஜாவோ என்ற மற்றொரு அமெரிக்க கடற்படை வீரரும் சீனாவுக்கு உளவு பார்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தார். இந்த தொடர் சம்பவங்கள் அமெரிக்க ராணுவத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.  

    • போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
    • அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி னால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது. மேலும் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

     இந்த நிலையில் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது என்று தெரிவித்து உள்ளார்.

    ஈரானுடன் சீனா மிக அதிகளவில் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் இந்த வரி அமலுக்கு வரும்போது சீனா அதிகம் பாதிக்கப்படும்.

    அதேபோல் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி போன்ற நாடுகளும் ஈரானுடன் கணிசமான அளவுக்கு வர்த்தகம் செய்கின்றன. இதனால் டிரம்ப்பின் இந்த உத்தரவால் இந்தியா உள்பட இந்த நாடுகளும் பாதிக்கப்படக் கூடும்.

    ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும்போது, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம். எங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் தயாராக இருக்கிறோம்.

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அதேவேளையில் தேவை ஏற்பட்டால் போரிடவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

    ஏற்க்கனவே ஈரான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்த பொருளாதார தடைகளே, ஈரானின் தற்போது நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    • பாலியல் குற்றவாளி உடன் பில் கேட்ஸிற்கு இருந்த தொடர்பும் இந்த விவாகரத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று மெலிண்டா கூறியுள்ளார்.
    • ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ் இருக்கும் புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    உலகின் முன்னணி பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் 27 ஆண்டுகளாக மனைவி மெலிண்டா கேட்ஸ் உடன் வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் 2021இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

    2000 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இருந்து இல் 2024 மெலிண்டா விலகி தனியாக ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார்.

    2021ல் ஒப்புக்கொண்ட விவாகரத்து ஒப்பந்தப்படி மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.

    இந்தநிலையில், மைக்ரோசாப்ட் உரிமையாளரான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார்.

    ஏற்கனவே ரூ.41,700 கோடியை மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் வழங்கிய நிலையில், இறுதியாக தற்போது ரூ.71,100 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மெலிண்டாவுக்கு பில் கேட்ஸ் மொத்தமாக 1.05 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளார். சமீபத்திய வரி தாக்கல் அறிக்கைகளின்படி இது தெரியவந்துள்ளது.

    இதுவே உலகின் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்து என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை பெண்கள் முன்னேற்றத்துக்கு செலவழிக்க போவதாக மெலிண்டா கூறியுள்ளார். 

    சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு போகப்பொருளாக மாற்றிய பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸிற்கு இருந்த தொடர்பும் இந்த விவாகரத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று மெலிண்டா கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.

    ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ் இருக்கும் புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    • வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது
    • வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

    இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில், வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் தாம் தான் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் டிரம்ப் என்று குறிப்பிட்டுள்ள விக்கிபீடியா பக்கத்தை பகிர்ந்துள்ளார். 

    • தகவல் அறிந்ததும் போலீசார் தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி கைது செய்தனர்.
    • டாரிக்கா எம் மூர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடந்து வரு கிறது.

    அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் செடார்ப்ளப் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 7 வயது சிறுமி உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றார்.

    முதலில் தந்தை உள்பட 3 பேரை கொன்ற அவர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் வேறு ஒரு இடத்தில் சிறுமி மற்றும் தனது 2 சகோதரர்களை சுட்டுக் கொன்றார். தகவல் அறிந்ததும் போலீசார் தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் 24 வயதான டாரிக்கா எம் மூர் என்பது தெரியவந்தது. அவர் தனது குடும்பத்தி னருடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    டாரிக்கா எம் மூர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்கு முன்பு அவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.
    • ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் கைது செய்துள்ள நிலையில், அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.

    இந்நிலையில் புதினை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "அதற்கான அவசியம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.

    அவருடன் எப்போதும் ஒரு சிறந்த உறவை வைத்திருக்கவே விரும்பினேன். ஆனால் தற்போதைய நிலைமை ஏமாற்றமளிக்கிறது. உக்ரைன்-ரஷிய போரைத் தடுக்க முடியாததில் எனக்கு வருத்தம் உண்டு" என்று கூறினார்.

    ரஷியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், பல ரஷிய வீரர்கள் போரில் கொல்லப்படுவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப் , இந்தப் போரை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார்.

    உக்ரைனில் செய்த போர் குற்றங்களுக்காக ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த நேரத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன்.
    • சர்வதேச விதிகள் எனக்குப் பொருந்தாது.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தான் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், வரலாற்றில் தன்னை விட நோபல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர் யாரும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

    நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய போர் வெடிக்கும் சூழல் இருந்தது.

    எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த நேரத்தில் நான் தலையிட்டுப் போரை நிறுத்தினேன்.

    வரலாற்றில் நோபல் அமைதிப் பரிசுக்கு என்னைப் போல தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை. ஆனால், ஒபாமா எந்த ஒரு பணியும் செய்யாமலே நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார்.

    இதுவரை சுமார் 8 பெரிய போர்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்துள்ளேன். அவற்றில் சில 25 முதல் 36 ஆண்டுகள் வரை நீடித்தவை" என்று தெரிவித்தார்.

    அதேநேரம், சர்வதேச விதிகள் எனக்குப் பொருந்தாது என்று கூறியுள்ள டிரம்ப் , வெனிசுலா மற்றும் ஈரான் விவகாரங்களிலும் தான் தலையிடுவேன் என்று தெரிவித்தார்.

    வெனிசுலா அதிபரைக் கடத்தியதற்கு மத்தியில் டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கேட்பது பேசுபொருளாகி வருகிறது. 

    • ICE அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒரு Legal Observer ஆக இருந்து வந்தார்.
    • டிரம்ப், ICE அதிகாரிக்கு ஆதரவாக பேசியது மேலும் கோபத்தை தூண்டியுள்ளது.

    டொனால்டு டிரம்ப் ஆளுகையின் கீழ் அமெரிக்காவில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் மீது கடுமையான அடக்குமுறை இருந்து வருகிறது.

    ICE - குடிவரவு அதிகாரிகள் ஏகபோக அதிகாரம் பெற்று சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை, 37 வயதான ரெனி நிக்கோல் குட் என்ற பெண், ICE அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மின்னிசோட்டாவை சேர்ந்த, மூன்று குழந்தைகளுக்குத் தாயான ரெனி அமெரிக்க குடிமகள் ஆவார். அவர் ICE அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒரு Legal Observer ஆக இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவம் நடந்த அந்த தினம், ரெனி ICE அதிகாரி அழுத்தத்தை புறக்கணித்து தனது காரில் இருந்து இறங்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி ரெனியின் முகத்திலேயே 3 முறை சுட்டுள்ளார். இதில் ரெனி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    ரெனி தனது காரை அதிகாரிகள் மீது மோத முயன்றதாகவும் அதிகாரி விளக்கம் அளித்தார்.

    ஆனால் இந்தச் சம்பவம் மினியாபோலிஸ் நகரில் பெரும் போராட்டங்களை வெடிக்கச் செய்துள்ளது.

    இந்த விவகாரம் குறித்து பேசிய டிரம்ப், ICE அதிகாரிக்கு ஆதரவாக பேசியது மேலும் கோபத்தை தூண்டியுள்ளது. அப்பெண் தனது காரை ICE அதிகாரி மீது ஏற்ற முயன்றுள்ளார் என்றும் இது தீவிர இடதுசாரிகளின் அணுகுமுறை என்றும் சாடினார்.

    மின்னிசோட்டா நகர மேயர் ஜேக்கப் ஃப்ரே, இது பச்சைப் பொய் என்றும் ICE அதிகாரிகள் மினியாபோலிஸை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    வீடியோ ஆதரங்களின்படி அப்பெண் காரை திருப்ப முயன்றபோது அதிகாரி ஓடி வந்து சுடுவது பதிவாகி உள்ளது.

    ஆனால் அவர் இடிக்க முயன்றதற்கான ஆதாரம் இல்லை. இது அரசு பயங்கரவாதம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்களிடையே இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒப்பந்தத்திற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
    • இந்தியாவுக்கான வரியை 500% வரை உயர்த்தும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

    பிரதமர் மோடி டிரம்ப்புக்கு போன் செய்து பேசாததே அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தடைபட காரணம் என அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார்.

    ஹோவர்ட் லட்னிக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஒப்பந்தத்திற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.

    அதிபர் டிரம்ப் தான் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்பவர். மோடி அவரை அழைக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் இந்தியா அதற்குத் தயக்கம் காட்டியது. இறுதி கட்டத்தில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை தொலைபேசியில் அழைத்து பேசத் தயங்கியதே ஒப்பந்தம் தள்ளிப்போகக் காரணம்." என்று தெரிவித்தார்.

    தற்போது இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரை வரி விதிக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகாததால், இந்திய ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து இந்த அதிக வரியைச் சுமக்க வேண்டியுள்ளது.

    இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கான வரியை 500% வரை உயர்த்தும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.  

    • உதவி வந்து கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டை அயதுல்லாவிடம் இருந்து மீட்டெடுங்கள்.
    • அமெரிக்கா, வெனிசுலாவிற்குள் புகுந்து அதன் அதிபர் மதுரோவைக் கைது செய்ததைச் சுட்டிக்காட்டினார்.

    ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு வன்முறையைக் கையாண்டால், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உச்ச தலைவரைக் கொல்லவும் தயங்கமாட்டார் என்று அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.

    பாக்ஸ் நியூஸ் நேர்காணலில் பேசிய கிரஹாம், "அயதுல்லாவுக்கு  நான் சொல்வது இதுதான். சிறந்த வாழ்க்கைக்காகப் போராடும் உங்கள் சொந்த மக்களையே நீங்கள் தொடர்ந்து கொன்று கொண்டிருந்தால், டொனால்ட் டிரம்ப் உங்களைக் கொன்றுவிடுவார்" என்று மிகக் தெரிவித்தார்.  

    தன் சொந்த மக்களையே கொன்று உலகை அச்சுறுத்தும் அயதுல்லா ஒரு மதவாத நாஜி ஆவார். உதவி வந்து கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டை அயதுல்லாவிடம் இருந்து மீட்டெடுங்கள் என்று ஈரான் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

    அமெரிக்கா, வெனிசுலாவிற்குள் புகுந்து அதன் அதிபர் மதுரோவைக் கைது செய்ததைச் சுட்டிக்காட்டிய கிரஹாம், டிரம்ப் வெறும் எச்சரிக்கையோடு நின்றுவிட மாட்டார் என்பதை ஈரான் உணர வேண்டும் என்றார்.

    டாலருக்கு எதிரான ரியால் மதிப்பு குறைவால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து ஈரானில் கடந்த சில வாரங்களாக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    இதில் இதுவரை 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஈரான் அரசு அமைதியான போராட்டக்காரர்களைக் கொன்றால், அமெரிக்கா அவர்களைக் காப்பாற்ற களமிறங்கும்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்த மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் ராணுவம், "அமெரிக்கா ஏதாவது தவறு செய்தால், எங்களின் பதில் மிகவும் தீர்க்கமானதாக இருக்கும்; ஆக்கிரமிப்பாளர்களின் கைகளை நாங்கள் வெட்டுவோம்" என்று எச்சரித்தது.

    • ஸ்ரீதர் வேம்புவின் விவாகரத்து வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
    • கலிபோர்னியாவில் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது.

    உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு. இவருக்கு பிரமிளா என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அவர் கலிபோர்னியாவில் வசித்து வந்தபோது மனைவி பிரமிளாவை பிரிவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார்.

    இவர்களது விவாகரத்து வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே, ஜோஹோ நிறுவன சி.இ.ஒ ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும், தன்னையும் 2020ம் ஆண்டு நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரமிளா குற்றச்சாட்டினார்.

    மேலும், கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த காலத்திலேயே ஜோஹோ நிறுவனத்தில் அவர் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் அறிவுசார் சொத்துகளை தனக்கு தெரியாமலேயே அவரது சகோதரி, சகோதரியின் கணவர் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும், விவாகரத்துக்கு பிறகு தனக்கு சொத்தில் சரிபாதியை ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்க்வே ஸ்ரீதர் வேம்பு இவ்வாறு செய்ததாகவும் இந்தியா திரும்பிய பிறகு ஸ்ரீதர் வேம்பு ஒரு முறை கூட என்னையும், மகனையும் பார்க்க வரவில்லை என்றும் பிரமிளா குற்றம்சாட்டியுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கலிபோர்னியாவில் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது. ஆனால், வேம்பு அவரது உறவினர்கள் பெயர்களில் சொத்துகளை மாற்றி, மனைவி பிரமிளாவையும் அவரது மகனையும் நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாக பிரமிளா சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர்.

    இந்நிலையில், கலிபோர்னியா நீதிமன்றம் விவாகரத்து வழக்கில் ஸ்ரீதர் வேம்புவை தனது மனைவியின் உரிமைகளை பாதுகாக்க $1.7 பில்லியன் மதிப்பிலான (சுமார் ரூ.15,000 கோடி) பத்திரம் (bond) தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கலிபோர்னியா சட்டப்படி, திருமணத்திற்கு பிறகு உருவான சொத்துகள் இருவரின் உரிமையாகப் பகிரப்பட வேண்டும் என்ற விதியின் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    • போதைப் பொருள் கடத்துவதாகக் கூறி வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
    • வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.

    வாஷிங்டன்:

    வெனிசுலா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

    இதையடுத்து, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகக்கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.

    இந்நிலையில், வட அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இந்தக் கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானது என தகவல் வெளியானது. அந்தக் கப்பலில் ரஷிய தேசிய கொடி பொருத்தப்பட்டிருந்ததாகவும், கப்பல் ரஷியாவுக்கு சென்றுகொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×