செய்திகள்

நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை - டொனால்ட் ட்ரம்ப்

Published On 2018-07-21 21:48 GMT   |   Update On 2018-07-21 21:48 GMT
முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பேசிக்கொண்டதாக கைப்பற்றப்பட்ட டேப் குறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார். #DonaldTrump
வாஷிங்டன் :

நியூயார்க்கில் உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹெனின் அலுவலகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் எப்.பி.ஐ சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டேப் ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொண்ட பதிவு உள்ளது என தகவல் வெளியாகியது. 

அந்த டேப் பதிவில், டிரம்புடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறும் கரென் மெக் டொகல் எனும் முன்னாள் ப்ளே பாய் மாடலுக்கு பணம் அளிப்பது தொடர்பாக, டிரம்ப் மற்றும் கொஹென் பேசிக் கொண்டது பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

இந்நிலையில், ஊடகங்கள் தெரிவிக்கும் கொஹெனின் ஆடியோ டேப் போலியானது என இந்த விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது :- 

ஒரு வழக்கறிஞரின் அலுவலகத்தை அரசாங்கமே உடைக்கும் என்பது வியப்பாக உள்ளது, அந்த வழக்கறிஞர் அவருடைய வாடிக்கையாளரை பற்றி முற்றிலும் கேள்விப்படாத & ஒருவேளை சட்டவிரோதமான ஒரு விஷயத்தை டேப் செய்தார் என்பது அதைவிட வியப்பாக உள்ளது. இதில், நல்ல செய்தி என்பது உங்களின் மனம் கவர்ந்த அதிபர் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது தான்.

இவ்வாறு ட்ரம்ப் தன் மீதான ஊடகங்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். #DonaldTrump
Tags:    

Similar News